Book of Common Prayer
118 கர்த்தரே தேவன் என்பதால் அவரை மகிமைப்படுத்துங்கள்.
அவரது உண்மை அன்பு என்றென்றைக்கும் தொடரும்!
2 இஸ்ரவேலே, இதைக்கூறு,
“அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்!”
3 ஆசாரியர்களே, இதைக் கூறுங்கள்:
“அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்!”
4 கர்த்தரைத் தொழுதுகொள்கிற ஜனங்களே, இதைக் கூறுங்கள்:
“அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்!”
5 நான் தொல்லையில் உழன்றேன்.
எனவே உதவிக்காக கர்த்தரைக் கூப்பிட்டேன்.
கர்த்தர் எனக்குப் பதிலளித்து என்னை விடுவித்தார்.
6 கர்த்தர் என்னோடிருப்பதால் நான் பயப்படமாட்டேன்.
என்னைத் துன்புறுத்த ஜனங்கள் எதையும் செய்யமுடியாது.
7 கர்த்தர் எனக்கு உதவி செய்கிறவர்.
என் பகைவர்கள் தோல்வியுறுவதை நான் காண்பேன்.
8 ஜனங்களை நம்புவதைக் காட்டிலும்
கர்த்தரை நம்புவது நல்லது.
9 உங்கள் தலைவர்களை நம்புவதைக் காட்டிலும்
கர்த்தரை நம்புவது நல்லது.
10 பல பகைவர்கள் என்னைச் சூழ்ந்திருக்கிறார்கள்,
ஆனால் கர்த்தருடைய வல்லமையால் நான் அவர்களைத் தோற்கடிப்பேன்.
11 பகைவர்கள் பலர் என்னை மீண்டும், மீண்டும் சூழ்ந்துகொண்டார்கள்.
கர்த்தருடைய வல்லமையால் நான் அவர்களைத் தோற்கடித்தேன்.
12 தேனீக்களின் கூட்டத்தைப்போல பகைவர்கள் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்.
ஆனால் வேகமாக எரியும் பதரைப்போல் அவர்கள் சீக்கிரமாக அழிந்துபோனார்கள்.
கர்த்தருடைய வல்லமையால் நான் அவர்களைத் தோற்கடித்தேன்.
13 என் பகைவர்கள் என்னைத் தாக்கி அழிக்க முயன்றனர்.
ஆனால் கர்த்தர் எனக்கு உதவினார்.
14 கர்த்தர் எனக்குப் பெலனும் வெற்றியின் பாடலுமாயிருக்கிறார்.
கர்த்தர் என்னைக் காப்பாற்றுகிறார்!
15 நல்லோரின் வீடுகளில் வெற்றியின் கொண்டாட்டத்தை நீங்கள் கேட்கமுடியும்.
கர்த்தர் தமது மிகுந்த வல்லமையை மீண்டும் காட்டினார்.
16 கர்த்தருடைய கரங்கள் வெற்றியால் உயர்த்தப்பட்டன.
கர்த்தர் தமது மிகுந்த வல்லமையை மீண்டும் காட்டினார்.
17 நான் வாழ்வேன், மரிக்கமாட்டேன்.
கர்த்தர் செய்தவற்றை நான் கூறுவேன்.
18 கர்த்தர் என்னைத் தண்டித்தார்,
ஆனால் அவர் என்னை மரிக்கவிடமாட்டார்.
19 நல்ல வாயிற்கதவுகளே, எனக்காகத் திறவுங்கள்,
நான் உள்ளே வந்து கர்த்தரைத் தொழுதுகொள்வேன்.
20 அவை கர்த்தருடைய கதவுகள்,
நல்லோர் மட்டுமே அவற்றின் வழியாகச் செல்ல முடியும்.
21 கர்த்தாவே, என் ஜெபத்திற்குப் பதிலளித்ததற்காக நான் உமக்கு நன்றிக் கூறுவேன்.
நீர் என்னைக் காப்பாற்றியதற்காக நான் உமக்கு நன்றிக் கூறுவேன்.
22 கட்டிடம் கட்டுவோர் வேண்டாமெனத் தள்ளிய
கல்லே மூலைக்கு தலைக்கல்லாயிற்று.
23 கர்த்தரே இதைச் செய்தார்,
அது அற்புதமானதென நாங்கள் நினைக்கிறோம்.
24 இந்நாள் கர்த்தர் செய்த நாள்.
இன்று நாம் களிப்போடு மகிழ்ச்சியாயிருப்போம்!
25 ஜனங்கள், “கர்த்தரைத் துதிப்போம்!
கர்த்தர் நம்மைக் காப்பாற்றினார்!
26 கர்த்தருடைய நாமத்தால் வருகிற மனிதனை வரவேற்றுக்கொள்ளுங்கள்” என்றார்கள்.
ஆசாரியர்கள், “நாங்கள் உங்களைக்
கர்த்தருடைய வீட்டிற்கு வரவேற்கிறோம்!
27 கர்த்தரே தேவன், அவர் எங்களை ஏற்றுக்கொள்கிறார்.
பலிக்காக ஆட்டுக்குட்டியைக் கட்டி, பலிபீடத்தின் கொம்புகளுக்கு சுமந்து செல்லுங்கள்” என்றார்கள்.
28 கர்த்தாவே, நீரே என் தேவன், நான் உமக்கு நன்றிக் கூறுகிறேன்.
நான் உம்மைத் துதிக்கிறேன்.
29 கர்த்தர் நல்லவர், எனவே அவரைத் துதியுங்கள்.
அவரது உண்மை அன்பு என்றென்றைக்கும் நிலைக்கும்.
தாவீதின் ஜெபங்களுள் ஒன்று.
145 என் தேவனும் ராஜாவுமாகிய உம்மைத் துதிக்கிறேன்.
உமது நாமத்தை நான் என்றென்றும் எப்போதும் போற்றுகிறேன்.
2 நான் ஒவ்வொரு நாளும் உம்மைத் துதிக்கிறேன்.
நான் உமது நாமத்தை என்றென்றும் எப்போதும் துதிக்கிறேன்.
3 கர்த்தர் பெரியவர்.
ஜனங்கள் அவரை அதிகம் துதிக்கிறார்கள்.
அவர் செய்கிற பெருங்காரியங்களை நாம் எண்ணமுடியாது.
4 கர்த்தாவே, நீர் செய்யும் காரியங்களுக்காக ஜனங்கள் உம்மை என்றென்றும் எப்போதும் துதிப்பார்கள்.
நீர் செய்யும் உயர்ந்த காரியங்களைக் குறித்து அவர்கள் சொல்வார்கள்.
5 உமது பெருமைக்குரிய தோற்றமும் மகிமையும் அற்புதமானவை.
உமது அதிசயங்களைப் பற்றி நான் சொல்வேன்.
6 கர்த்தாவே, நீர் செய்யும் வியக்கத்தக்க காரியங்களைப்பற்றி ஜனங்கள் சொல்வார்கள்.
நீர் செய்யும் மேன்மையான காரியங்களைப்பற்றி நான் சொல்வேன்.
7 நீர் செய்யும் நல்ல காரியங்களைப்பற்றி ஜனங்கள் சொல்வார்கள்.
உமது நன்மையைப்பற்றி ஜனங்கள் பாடுவார்கள்.
8 கர்த்தர் தயவும் இரக்கமுமுள்ளவர்.
கர்த்தர் பொறுமையும் மிகுந்த அன்புமுள்ளவர்.
9 கர்த்தர் எல்லோருக்கும் நல்லவர்.
தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றிற்கும் அவரது இரக்கத்தைக் காட்டுகிறார்.
10 கர்த்தாவே, நீர் செய்பவை யாவும் உமக்குத் துதிகளைக் கொண்டுவரும்.
உம்மைப் பின்பற்றுவோர் உம்மை ஆசீர்வதிக்கிறார்கள்.
11 உமது அரசு எவ்வளவு மேன்மையானது என அவர்கள் சொல்வார்கள்.
நீர் எவ்வளவு மேன்மையானவர் என்பதை அவர்கள் சொல்வார்கள்.
12 கர்த்தாவே, அப்போது பிறர் நீர் செய்யும் உயர்ந்த காரியங்களைப்பற்றி அறிந்துகொள்கிறார்கள்.
உமது அரசு எவ்வளவு மேன்மையும் அற்புதமுமானது என்பதை அவர்கள் அறிந்துகொள்கிறார்கள்.
13 கர்த்தாவே, உமது அரசு என்றென்றும் தொடரும்.
நீர் என்றென்றும் அரசாளுவீர்.
14 கர்த்தர் வீழ்ந்து கிடக்கின்ற ஜனங்களைத் தூக்கிவிடுகிறார்.
கர்த்தர் தொல்லையில் சிக்குண்ட ஜனங்களுக்கு உதவுகிறார்.
15 கர்த்தாவே, தங்கள் உணவுக்காக எல்லா உயிரினங்களும் உம்மை நோக்கியிருக்கின்றன.
அவற்றிற்குத் தக்க நேரத்தில் நீர் உணவளிக்கிறீர்.
16 கர்த்தாவே, நீர் உமது கைகளைத் திறந்து,
ஒவ்வொரு உயிரினத்திற்கும் தேவையான எல்லாவற்றையும் கொடுக்கிறீர்.
17 கர்த்தர் செய்கின்ற எல்லாம் நல்லவையே.
அவர் செய்பவை எல்லாம் அவர் எவ்வளவு நல்லவர் என்பதைக் காட்டும்.
18 கர்த்தரிடம் உதவி கேட்கிற ஒவ்வொருவனிடமும் அவர் நெருக்கமுள்ளவராயிருக்கிறார்.
உண்மையாகவே அவரைத் தொழுதுகொள்கிற ஒவ்வொருவரிடமும் அவர் நெருக்கமுள்ளவராயிருக்கிறார்.
19 கர்த்தர் தம்மைப் பின்பற்றுவோர் விரும்புகின்றவற்றைச் செய்கிறார்.
கர்த்தர் தம்மைப் பின்பற்றுவோருக்குச் செவிகொடுக்கிறார்.
அவர்களின் ஜெபங்களுக்கு அவர் பதிலளித்து அவர்களைக் காப்பாற்றுகிறார்.
20 கர்த்தர் தம்மை நேசிக்கிற ஒவ்வொருவரையும் காப்பாற்றுகிறார்.
ஆனால் கர்த்தர் தீயோரை அழிக்கிறார்.
21 நான் கர்த்தரைத் துதிப்பேன்!
என்றென்றைக்கும் எப்போதும் அவரது பரிசுத்த நாமத்தை ஒவ்வொருவரும் துதிக்கவேண்டுமென நான் விரும்புகிறேன்.
4 “நீங்கள் எகிப்து தேசத்திலிருந்த நாள் முதலாக நான் உன் தேவனாகிய கர்த்தராக இருக்கிறேன். நீங்கள் என்னைத் தவிர வேறு தெய்வங்களை அறியவில்லை. நானே உங்களை இரட்சித்தவர். 5 நான் உங்களை வனாந்தரத்திலேயே அறிவேன். நான் உங்களை வறண்ட நிலத்திலும் அறிவேன். 6 நான் இஸ்ரவேலர்களுக்கு உணவு கொடுத்தேன். அவர்கள் அந்த உணவை உண்டார்கள். அவர்கள் தம் வயிறு நிறைந்து திருப்தி அடைந்தார்கள். அவர்கள் வீண் பெருமை அடைந்தார்கள். அவர்கள் என்னை மறந்தார்கள்!
7 “அதனால்தான் நான் அவர்களுக்கு ஒரு சிங்கத்தைப் போலிருப்பேன். நான் சாலையில் காத்திருக்கிற சிறுத்தையைப் போன்று இருப்பேன். 8 நான் தன் குட்டிகளை இழந்த கரடியைப் போன்று அவர்களைத் தாக்குவேன். நான் அவர்களின் நெஞ்சைப் பிளப்பேன். நான் ஒரு சிங்கம் அல்லதுவேறொரு காட்டுமிருகம் தன் வேட்டையின் உணவைக் கிழித்துத் தின்பதுபோல் இருப்பேன்.”
தேவ கோபத்திலிருந்து இஸ்ரவேலை எவராலும் காப்பாற்ற முடியாது
9 “இஸ்ரவேலே, நான் உனக்கு உதவினேன். ஆனால் நீ எனக்கு எதிராகத் திரும்பினாய். எனவே, இப்போது நான் உண்னை அழிப்பேன். 10 உங்களது ராஜா எங்கே? அவன் உங்களது நகரங்கள் எதிலும் உங்களைக் காப்பாற்றமுடியாது. உங்களது நீதிபதிகள் எங்கே? நீ அவர்களுக்காக, ‘ஒரு ராஜாவையும் தலைவர்களையும் தாரும்’ என்று கேட்டாய். 11 நான் என் கோபத்திலே உங்களுக்கு ஒரு ராஜவைக் கொடுத்தேன். மிகவும் கோபமடைந்தபோது அவனை எடுத்துக்கொண்டேன்.
12 “எப்பிராயீம் தனது குற்றங்களை மறைக்க முயன்றான்.
அவன் தனது பாவங்கள் இரகசியமானவை என்று எண்ணினான்.
ஆனால் அவற்றுக்காகத் தண்டிக்கப்படுவான்.
13 அவனது தண்டனை ஒரு பெண் பிரசவ காலத்தில் உணரும் வலியைப் போன்றது.
அவன் அறிவுள்ள குமாரனாக இருக்கமாட்டான்.
அவனது பிறப்புக்கான காலம் வரும்.
அவன் பிழைக்கமாட்டான்.
14 “நான் அவர்களைக் கல்லறையிலிருந்து காப்பாற்றுவேன்.
நான் அவர்களை மரணத்திலிருந்து காப்பாற்றுவேன்.
மரணமே, உனது நோய்கள் எங்கே?
கல்லறையே, உனது வல்லமை எங்கே?
நான் பழிவாங்கப் பார்க்கவில்லை.
தேவனுடைய ஞானம்
6 பக்குவமடைந்த மக்களுக்கே நாம் ஞானத்தைப் போதிக்கிறோம். ஆனால் நாம் போதிக்கும் இந்த ஞானம் இவ்வுலகத்திலிருந்து வருவதல்ல. இந்த உலகத்து ஆட்சியாளர்களின் ஞானமும் இதுவல்ல. அந்த ஆட்சியாளர்கள் தங்கள் அதிகாரத்தை இழந்து வருகின்றனர். 7 ஆனால் நாம் தேவனுடைய இரகசியமான ஞானத்தைப் பேசுகிறோம். மக்களிடமிருந்து இந்த ஞானம் மறைக்கப்பட்டுள்ளது. நமது மகிமைக்காக தேவன் இந்த ஞானத்தைத் திட்டமிட்டார். உலகம் தோன்றுவதற்கு முன்பே தேவன் இதைத் திட்டமிட்டார். 8 இந்த உலகத்தில் எந்த ஆட்சியாளனும் இந்த ஞானத்தைப் புரிந்துகொண்டிருக்கவில்லை. அவர்கள் அதனைப் புரிந்துகொண்டிருந்தால் மகிமையின் கர்த்தரை சிலுவையில் கொன்றிருக்கமாட்டார்கள். 9 ஆனால்,
“தேவன் தன்னை நேசிக்கும் மக்களுக்காகச்
செய்த ஏற்பாட்டை எந்த கண்ணும் பார்க்கவில்லை.
எந்தக் காதும் கேட்கவில்லை,
எந்த மனிதனும் எண்ணிப் பார்த்ததில்லை”(A)
என்று எழுதப்பட்டிருக்கிறது.
10 ஆனால், தேவன் இவற்றை ஆவியானவரின் மூலமாக எங்களுக்குக் காட்டியுள்ளார்.
ஆவியானவர் எல்லாவற்றையும் அறிவார். தேவனுடைய ஆழ்ந்த அந்தரங்கங்களையும் பரிசுத்த ஆவியானவர் அறிவார். 11 அதை இப்படி விளக்கலாம்: ஒருவர் அடுத்தவருடைய எண்ணங்களை அறிய முடியாது. அவனுக்குள்ளிருக்கிற அவனுடைய ஆவியே அறியும். அதுவே தேவனுக்கும் பொருந்தும். தேவனுடைய ஆவியானவர்தான் அந்த எண்ணங்களை அறிவார். 12 நாம் உலகின் ஆவியைக்கொண்டிருக்கவில்லை. நாம் தேவனிடமிருந்து அவரது ஆவியானவரைப் பெற்றோம். தேவன் நமக்குக் கொடுத்துள்ள பொருள்களை அறியுமாறு நாம் ஆவியானவரைப் பெற்றோம்.
13 நாம் இவற்றைப் பேசும்போது மனிதனுக்குள்ள ஞானத்தால் நாம் அறிவிக்கப்பட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துவதில்லை. பரிசுத்த ஆவியானவர் அறிவித்துள்ள வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோம். ஆன்மீகக் கருத்துகளை விளக்க ஆன்மீகமான சொற்களையே பயன்படுத்துகிறோம். 14 ஆன்மீக வாழ்க்கையில் ஈடுபடாத மனிதன் தேவனுடைய ஆவியானவரிடமிருந்து வரும் வார்த்தைகளை ஏற்றுக்கொள்வதில்லை. அவன் அவற்றை மடமையாகக் கருதுகிறான். அவன் ஆவியானவர் கருதுவனவற்றை புரிந்துகொள்ள முடியாது. ஏனெனில் அவை ஆன்மீகமாகவே புரிந்துகொள்ளப்படக் கூடும். 15 ஆனால், ஆன்மீக உணர்வுள்ளவனோ எல்லாவற்றைப் பற்றியும் நியாயம் தீர்க்கமுடியும். மற்றவர்கள் அவனை நியாயம் தீர்க்க முடியாது.
16 “யார் தேவனுடைய எண்ணத்தை அறிவார்?
யார் தேவனுக்கு அறிவுறுத்துவார்கள்?”(B)
என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் நமக்கு கிறிஸ்துவின் சிந்தனை இருக்கிறது.
ஏரோது இயேசுவைப்பற்றி அறிதல்
(மாற்கு 6:14-29; லூக்கா 9:7-9)
14 அப்போது கலிலேயாவின் மன்னனாயிருந்த ஏரோது இயேசுவைப்பற்றி மக்கள் பேசியவைகளைக் கேள்வியுற்றான். 2 எனவே, ஏரோது தன் வேலைக்காரர்களிடம், “இந்த மனிதனே உண்மையில் யோவான் ஸ்நானகன். மரணத்திலிருந்து அவன் மீண்டும் எழுந்திருந்திருக்க வேண்டும். அதனால் தான் அவனால் இத்தகைய அற்புதங்களைச் செய்ய முடிகிறது” என்று கூறினான்.
யோவான் ஸ்நானகனின் மரணம்
3 இதற்கு முன்னர், ஏரோது யோவானைக் கைது செய்திருந்தான். ஏரோது யோவானைச் சங்கிலியால் கட்டி சிறையிலிட்டிருந்தான். ஏரோதியாளின் நிமித்தம் யோவானை ஏரோது கைது செய்திருந்தான். ஏரோதுவின் சகோதரன் பிலிப்புவின் மனைவி ஏரோதியாள். 4 “நீ ஏரோதியாளை உன்னோடு வைத்திருப்பது சரியல்ல” என்று யோவான் ஏரோதுவிடம் கூறியதால் யோவானை ஏரோது கைது செய்தான். 5 யோவான் தீர்க்கதரிசியென மக்கள் நம்பியிருந்தார்கள். எனவே, யோவானைக் கொல்ல விரும்பிய ஏரோது பயந்தான்.
6 ஏரோதின் பிறந்த நாளன்று, ஏரோதியாளின் குமாரத்தி ஏரோதுவையும் அவன் நண்பர்களையும் மகிழ்விக்க நடனமாடினாள். அவள் நடனத்தால் ஏரோது மிக மகிழ்ந்தான். 7 எனவே, அவள் எதை விரும்பினாலும் தருவதாக வாக்களித்தான். 8 தன் குமாரத்தி எதைக் கேட்கவேண்டும் என்பதை ஏரோதியாள் முன்னமே அறிவுறுத்தியிருந்தாள். ஆகவே, அவள் ஏரோதுவிடம், “எனக்கு யோவான்ஸ்நானகனின் தலையை ஒரு தட்டில் வைத்துத் தாருங்கள்” என்று கூறினாள்.
9 இதனால் மன்னன் ஏரோது மிகுந்த துக்கம் கொண்டான். ஆனால் தன் குமாரத்தி எதை விரும்பினாலும் தருவதாக வாக்களித்திருந்தான். ஏரோதுவுடன் உணவருந்திக்கொண்டிருந்தவர்கள் அவன் வாக்குறுதியைக் கேட்டிருந்தார்கள். எனவே, அவள் விரும்பியதை நிறைவேற்ற ஏரோது கட்டளையிட்டான். 10 சிறையிலிருந்த யோவானின் தலையை வெட்டுவதற்கு அவன் ஆட்களை அனுப்பினான். 11 அவர்கள் யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்துக் கொண்டு வந்து அதை அவளிடம் கொடுத்தனர். பின்னர், அப்பெண் அத்தலையைத் தன் தாய் ஏரோதியாளிடம் எடுத்துச் சென்றாள். 12 யோவானின் சீஷர்கள் அவனது உடலைப் பெற்று அடக்கம் செய்தனர். பின், அவர்கள் இயேசுவிடம் சென்று நடந்ததைக் கூறினார்கள்.
2008 by World Bible Translation Center