Book of Common Prayer
இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.
20 தொல்லைகள் சூழ்ந்திருக்கையில் நீ கர்த்தரை நோக்கிக் கூப்பிடும்போது கர்த்தர் பதிலளிக்கட்டும்.
யாக்கோபின் தேவன் உன் பெயரை முக்கியமாக்கட்டும்.
2 அவரது பரிசுத்த இடத்திலிருந்து தேவன் உதவி அனுப்பட்டும்.
சீயோனிலிருந்து அவர் உனக்குத் துணை நிற்கட்டும்.
3 நீ அளித்த அன்பளிப்புகளை தேவன் நினைவுகூரட்டும்.
உன் பலிகளையெல்லாம் அவர் ஏற்றுக்கொள்ளட்டும்.
4 தேவன் உனக்குத் தேவையான எல்லாவற்றையும் தருவார் என நம்புகிறேன்.
உன் எல்லாத் திட்டங்களையும் நிறைவேற்றுவார் என நம்புகிறேன்.
5 தேவன் உனக்கு உதவும்போது நாம் மகிழ்வடைவோம்.
நாம் தேவனுடைய நாமத்தைத் துதிப்போம்.
நீ கேட்பவற்றை யெல்லாம் கர்த்தர் தருவார் என்று நான் நம்புகிறேன்.
6 கர்த்தர் தான் தேர்ந்தெடுத்த ராஜாவுக்கு உதவுகிறார் என இப்போது அறிகிறேன்.
தேவன் அவரது பரிசுத்த பரலோகத்தில் இருந்தார்.
அவர் தேர்ந்தெடுத்த ராஜாவுக்குப் பதில் தந்தார்.
அவனைப் பாதுகாக்க தேவன் தன் உயர்ந்த வல்லமையைப் பயன்படுத்தினார்.
7 சிலர் தங்கள் இரதங்களை நம்புகின்றனர்.
மற்றோர் தங்கள் வீரர்களை நம்புகின்றனர்.
ஆனால் நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தரை நினைக்கின்றோம்.
அவரின் நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுவோம்.
8 அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர்.
அவர்கள் யுத்தத்தில் மடிந்தனர்.
ஆனால் நாங்கள் வென்றோம்!
நாங்கள் வெற்றிபெற்றவர்கள்.
9 கர்த்தர் தாம் தேர்ந்தெடுத்த ராஜாவை மீட்டார்!
தேவன் தேர்ந்தெடுத்த ராஜா உதவி வேண்டினான். தேவன் பதில் தந்தார்!
இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.
21 கர்த்தாவே, உமது பெலன் ராஜாவை மகிழ்விக்கிறது.
நீர் அவனை மீட்கும்போது அவன் மிகவும் சந்தோஷமடைகிறான்.
2 நீர் ராஜாவுக்கு வேண்டியவற்றைக் கொடுத்தீர்.
ராஜா சிலவற்றைக் கேட்டான்.
கர்த்தாவே, அவன் கேட்டவற்றை நீர் கொடுத்தீர்.
3 கர்த்தாவே, நீர் உண்மையாகவே ராஜாவை ஆசீர்வதித்தீர்.
அவன் தலையில் பொற்கிரீடத்தைச் சூட்டினீர்.
4 தேவனே ராஜா உம்மிடம், ஆயுளைக் கேட்டான். நீர் அதை அவனுக்குக் கொடுத்தீர்.
நீர் அவனுக்கு என்றென்றும் நிலைத்துத் தொடரும் நீண்ட ஆயுளைக் கொடுத்தீர்.
5 வெற்றிக்கு நேராக நீர் ராஜாவை வழிநடத்தினீர்.
அவனுக்குப் பெரும் மேன்மையைத் தந்தீர்.
அவனுக்குப் பெருமையையும், புகழையும் தந்தீர்.
6 தேவனே, நீர் உண்மையாகவே என்றென்றைக்கும் தேர்ந்தெடுத்த ராஜாவை ஆசீர்வதித்தீர்.
உமது உயர்ந்த வல்லமையை உபயோகித்து ராஜாவைப் பாதுகாத்தீர்.
ராஜா உம்முகத்தைப் பார்க்கும்போது அது அவனை மகிழச் செய்யும்.
7 ராஜா கர்த்தரை நம்புகிறான்.
உன்னதமான தேவனாகிய நீர் அவனை ஏமாற்றமாட்டீர்.
8 தேவனே, உமது பகைவர்க்கு உம் பெலனை உணர்த்துவீர்.
உம்மைப் பகைக்கிற அந்த ஜனங்களை உமது வல்லமை வெல்லும்.
9 கர்த்தாவே, நீர் ராஜாவோடு இருக்கும் போது, அவர் எல்லாவற்றையும் கொளுத்திவிடும் உலையைப்போல் இருப்பார்.
அவர் தன் பகைவர்களை அழிப்பார்.
10 அவரது பகைவர்களின் குடும்பங்கள் அழிக்கப்படும்.
அவர்கள் பூமியிலிருந்து அகற்றப்படுவார்கள்.
11 ஏனெனில் கர்த்தாவே, அந்த ஜனங்கள் தீயவற்றை உமக்கெதிராய் திட்டமிட்டார்கள்.
அவர்கள் தீயன செய்யத் திட்டமிட்டும் வெற்றி பெறவில்லை.
12 கர்த்தாவே, அந்த ஜனங்களை அடிமைகளைப் போலாக்கினீர்.
நீர் அவர்களைக் கயிறுகளால் கட்டினீர்.
அவர்களின் கழுத்துக்களைச் சுற்றி கயிறுகளால் வளைத்தீர்.
அடிமைகளைப் போல் உம்மைக் குனிந்து வணங்கச் செய்தீர்.
13 கர்த்தாவே, உமது மகத்துவத்தில் நீர் உயர்ந்திரும்.
கர்த்தருடைய மேன்மையைப் பாடல்களால் பாடி இசைப்போம்!
தாவீதின் துதிப் பாடல்களுள் ஒன்று.
110 கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி,
“என் வலது பக்கத்தில் அமரும், நான் உமது பகைவர்களை உமது ஆளுகையின் கீழ் வைப்பேன்” என்றார்.
2 உமது அரசு பெருக கர்த்தர் உதவுவார்.
உமது அரசு சீயோனில் ஆரம்பிக்கும்.
பிற நாடுகளிலும் நீர் உமது பகைவர்களை ஆளும்வரைக்கும் அது பெருகும்.
3 நீர் உமது படையை ஒன்று திரட்டும்போது,
உமது ஜனங்கள் தாங்களே விருப்பத்துடன் வருவார்கள்.
அவர்கள் சிறப்பு ஆடைகளை அணிவார்கள்.
அவர்கள் அதிகாலையில் சந்திப்பார்கள்.
அந்த இளைஞர்கள்
தரைமேல் உள்ள பனித்துளியைப்போல் உம்மைச் சுற்றி இருப்பார்கள்.
4 கர்த்தர் ஒரு வாக்குறுதி அளித்தார்.
அவர் மனம் மாறமாட்டார்.
“நீர் என்றென்றும் ஆசாரியராயிருப்பீர்.
மெல்கிசேதேக்கைப் போன்ற ஆசாரியராயிருப்பீர்.”
5 என் ஆண்டவர் உமது வலது பக்கம் இருக்கிறார்.
அவர் கோபமடையும்போது மற்ற ராஜாக்களைத் தோற்கடிப்பார்.
6 தேவன் தேசங்களை நியாயந்தீர்ப்பார்.
பூமி பிரேதங்களால் நிரப்பப்படும்.
தேவன் வல்லமையுள்ள நாட்டின் தலைவர்களை தண்டிப்பார்.
7 வழியின் நீரூற்றில் ராஜா தண்ணீரை பருகுகிறார்.
அவர் உண்மையாகவே அவரது தலையை உயர்த்தி, மிகுந்த ஆற்றலோடு காணப்படுவார்!
116 கர்த்தர் எனது ஜெபங்களைக் கேட்பதை
நான் நேசிக்கிறேன்.
2 நான் உதவிக்காகக் கூப்பிடும்போது அவர் எனக்குச் செவிகொடுப்பதை
நான் நேசிக்கிறேன்.
3 நான் மரித்தவன் போலானேன்!
மரணக் கயிறுகள் என்னைச் சூழ்ந்துக்கொண்டன, கல்லறை என்னை மூடிற்று.
நான் அஞ்சிக் கலங்கினேன்.
4 அப்போது நான் கர்த்தருடைய நாமத்தைக் கூப்பிட்டேன்.
நான்: “கர்த்தாவே, என்னைக் காப்பாற்றும்!” என்று கூறினேன்.
5 கர்த்தர் நல்லவரும், இரக்கம் நிறைந்தவருமாவார்.
தேவன் தயவுள்ளவர்.
6 கர்த்தர் திக்கற்ற ஜனங்களைக் கவனித்துக்கொள்கிறார்.
நான் உதவியற்றவனானேன், கர்த்தர் என்னைக் காப்பாற்றினார்.
7 என் ஆத்துமாவே, நீ இளைப்பாறு!
கர்த்தர் உன்னைக் கவனித்துக்கொள்கிறார்.
8 தேவனே, நீர் என் ஆத்துமாவை மரணத்திலிருந்து காப்பாற்றினீர்.
நீர் என் கண்ணீரை நிறுத்தினீர்.
நான் விழாதபடி பார்த்துக்கொண்டீர்.
9 நான் உயிருள்ளோரின் தேசத்தில்
தொடர்ந்து கர்த்தருக்குச் சேவைசெய்வேன்.
10 “நான் அழிந்துபோனேன்!”
என்று கூறியபோதும் நான் தொடர்ந்து நம்பிக்கை வைத்தேன்.
11 நான் பயப்பட்டபோதும்
“மனிதர்கள் எல்லோரும் பொய்யர்களே!” என்றேன்.
12 நான் கர்த்தருக்கு எதைக் கொடுக்க முடியும்?
என்னிடம் இருக்கும் எல்லாவற்றையும் கர்த்தரே கொடுத்தார்.
13 அவர் என்னைக் காப்பாற்றினார்.
எனவே நான் அவருக்கு ஒரு பானங்களின் காணிக்கையை அளிப்பேன்.
நான் கர்த்தருடைய நாமத்தைக் கூப்பிடுவேன்.
14 நான் வாக்குறுதி அளித்தவற்றை கர்த்தருக்குக் கொடுப்பேன்.
இப்போது அவரது ஜனங்கள் எல்லோருக்கும் முன்பாக நான் போவேன்.
15 கர்த்தரைப் பின்பற்றுபவர்களில் ஒருவனின் மரணம் கர்த்தருக்கு மிக முக்கியமானது!
கர்த்தாவே, நான் உமது ஊழியர்களில் ஒருவன்!
16 நான் உமது பணியாள்.
உமது பணிப் பெண் ஒருத்தியின் பிள்ளைகளுள் ஒருவன் நான்.
கர்த்தாவே, நீரே என்னுடைய முதல் போதகர்.
17 நான் உமக்கு ஒரு நன்றியறிதலின் காணிக்கையைக் கொடுப்பேன்.
நான் கர்த்தருடைய நாமத்தைக் கூப்பிடுவேன்.
18 நான் வாக்குறுதி அளித்தவற்றை கர்த்தருக்குக் கொடுப்பேன்.
நான் இப்போது அவரது எல்லா ஜனங்களுக்கும் முன்பாகப் போவேன்.
19 நான் எருசலேமின் ஆலயத்திற்குப் போவேன்.
கர்த்தரைத் துதிப்போம்!
117 எல்லா தேசங்களே, கர்த்தரைத் துதியுங்கள்.
ஜனங்கள் எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள்.
2 தேவன் நம்மை அதிகமாக நேசிக்கிறார்!
என்றென்றைக்கும் தேவன் நமக்கு உண்மையாக இருப்பார்.
கர்த்தரைத் துதிப்போம்!
மோசே மரணமடைதல்
34 மோசே நேபோ மலைமீது ஏறினான். மோசே மோவாபிலுள்ள யோர்தான் சமவெளியிலிருந்து பிஸ்காவின் உச்சிக்குச் சென்றான். இது எரிகோவிலிருந்து யோர்தான் ஆற்றுக்கு எதிர்புறத்தில் உள்ளது. கர்த்தர் மோசேக்கு கீலேயாத் முதல் தாண்வரையுள்ள அனைத்து நாடுகளையும் காட்டினார். 2 கர்த்தர் அவனுக்கு நப்தலி, எப்பிராயீம், மற்றும் மனாசேயின் நாடுகள் எல்லாவற்றையும் காட்டினார். அவர் அவனுக்கு மத்தியதரைக் கடல் வரையுள்ள யூதா நாடு முழுவதையும் காட்டினார். 3 கர்த்தர் மோசேக்கு பாலைவனத்தையும், பேரீச்ச மரங்களின் நகரம் என்னும் சோவார் முதல் எரிகோவரையுள்ள பள்ளத்தாக்கையும் காட்டினார். 4 கர்த்தர் மோசேயிடம், “நான் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருக்கு வாக்களித்த நாடு இதுதான். நான் அவர்களிடம் சொன்னேன் ‘நான் இந்த நாட்டை உங்கள் சந்ததிகளுக்குத் தருவேன். அந்த நாட்டை நீ பார்க்கும்படி செய்வேன். ஆனால் அங்கே உன்னால் போகமுடியாது’” என்று கூறினார்.
5 பின்னர் கர்த்தருடைய தாசனாகிய மோசே மோவாப் நாட்டில் மரித்தான். கர்த்தர் மோசேயிடம் இவை நிகழும் என்று சொல்லியிருந்தார். 6 கர்த்தர் மோசேயை மோவாபில் அடக்கம் செய்தார். இது பெத்பேயோருக்கு எதிர்புறத்தில் உள்ள பள்ளத்தாக்கிலே உள்ளது. ஆனால் இன்றுவரை மோசேயின் கல்லறை எங்கே இருக்கிறது என்று எவருக்கும் தெரியாது. 7 மோசே மரணமடையும்போது 120 வயதுடையவனாக இருந்தான். அவன் எப்பொழுதும்போல் பலமுள்ளவனாக இருந்தான். அவனது கண்கள் அப்பொழுதும் நன்றாக இருந்தது. 8 இஸ்ரவேல் ஜனங்கள் மோசேக்காக 30 நாட்கள் அழுதனர். அவர்கள் துக்ககாலம் முடியும்வரை மோவாபிலுள்ள யோர்தான் சமவெளியில் தங்கினார்கள்.
யோசுவா புதிய தலைவனாகுதல்
9 யோசுவாவின்மேல் மோசே தனது கைகளை வைத்து அவனைப் புதிய தலைவனாக நியமித்திருந்தான். பிறகு நூனின் குமாரனான யோசுவா ஞானத்தின் ஆவியால் நிரப்பப்பட்டான். எனவே இஸ்ரவேல் ஜனங்கள் யோசுவாவிற்குக் கீழ்ப்படியத் தொடங்கினார்கள். கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டிருந்தவற்றை எல்லாம் அவர்கள் செய்தனர்.
10 இஸ்ரவேல் மோசேயைப் போன்று இன்னொரு தீர்க்கதரிசியைப் பெறவில்லை. கர்த்தர் மோசேயை நேருக்கு நேர் தெரிந்து வைத்திருந்தார். 11 எகிப்து நாட்டில் அற்புதங்களைச் செய்வதற்கு கர்த்தர் மோசேயை அனுப்பினார். பார்வோன், அவனது அதிகாரிகள் மற்றும் எகிப்திலுள்ள அனைத்து ஜனங்களும் அந்த அற்புதங்களைப் பார்த்தனர். 12 மோசே செய்ததுபோன்று வேறு எந்த தீர்க்கதரிசியும் சகல வல்லமையும், பயங்கரமும் கொண்ட செயல்களைச் செய்யவில்லை. அவன் செய்ததை இஸ்ரவேலில் உள்ள எல்லா ஜனங்களும் பார்த்தனர்.
14 மக்கள் கர்த்தர் மீது விசுவாசம் வைப்பதற்கு முன்னர் அவர்கள் அவரிடம் நம்பிக்கை வைக்க வேண்டும். கர்த்தரிடம் அவர்கள் நம்பிக்கை வைப்பதற்கு முன்னால் அவரைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும். எனவே மக்கள் கர்த்தரைப்பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் அவர்களுக்கு மற்றவர்கள் செய்தியைப் பரப்பவேண்டும். 15 ஒருவன் சென்று அவர்களிடம் செய்தியைப் பரப்புவதற்கு முன்பு, அவன் அனுப்பப்பட வேண்டும். “நற்செய்தியைச் சொல்ல வருகின்றவர்களின் பாதங்கள் எவ்வளவு அழகாக இருக்கின்றன”(A) என்று எழுதப்பட்டிருக்கிறது.
16 நற்செய்தியை யூதர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதைப்பற்றி ஏசாயா, “ஆண்டவரே, அவர்களுக்கு நாங்கள் சொன்னதையெல்லாம் யார் விசுவாசிக்கிறார்கள்?”(B) என்று கேட்கிறார். 17 எனவே நற்செய்தியைக் கேட்பதன் மூலமே விசுவாசம் பிறக்கிறது. ஒருவன் கிறிஸ்துவைப் பற்றிக் கூறும்போது மக்கள் நற்செய்தியைக் கேட்கிறார்கள்.
18 ஆனால் “மக்கள் நற்செய்தியைக் கேட்டதில்லையா?” என்று நான் கேட்கிறேன். ஆமாம்.
“அவர்களின் சப்தங்கள் உலகம் முழுவதும் சென்றன.
அவர்களின் வார்த்தைகள் உலகின் கடைசிவரை பரவின”(C)
என்று எழுதப்பட்டது போல் அவர்கள் கேட்டார்கள்.
19 “இஸ்ரவேல் மக்கள் அதனைப் புரிந்துகொள்ளவில்லையா?” என்று மீண்டும் நான் கேட்கிறேன். ஆமாம். அவர்கள் புரிந்துகொண்டனர். முதலில் மோசே இதனைச் சொன்னார்.
“நீங்கள் பொறாமைப்படும் வகையில் அந்நாட்டுக்குரிமை இல்லாத மக்களைப் பயன்படுத்துவேன்.
உங்களுக்குக் கோபம் வரும் வகையில் புரிந்துகொள்ள இயலாத நாட்டு மக்களை உபயோகப்படுத்துவேன்.”(D)
20 ஏசாயாவும் தைரியத்தோடு தேவனுக்காக இதைச் சொன்னார்.
“என்னைத் தேடியலையாத மக்களால் கண்டு பிடிக்கப்பட்டேன்.
என்னை விசாரித்து வராதவர்களுக்கு என்னை வெளிப்படுத்தினேன்.(E)
21 இவ்வளவு நாட்களும்
“நான் அவர்களுக்காகக் காத்திருந்தேன்.
அவர்களோ எனக்குக் கீழ்ப்படிய மறுத்து விட்டார்கள்.
என்னைப் பின்பற்றவும் மறுத்துவிட்டனர்.”(F)
என்று யூத மக்களைப் பற்றி ஏசாயா வழியாக தேவன் கூறுகிறார்.
32 “அத்திமரம் நமக்கு ஒரு பாடத்தைப் போதிக்கிறது. அத்தி மரத்தின் கிளைகள் பசுமையடைந்து இலைகள் துளிர்விட்டு வளரும்பொழுது கோடை காலம் அருகில் உள்ளது என அறிகிறீர்கள்.
33 “அதே போலத்தான் நான் நடக்கப் போவதாகக் கூறிய செயல்களைப் பொறுத்தவரையிலும், அவை நடக்கும்பொழுது காலம் நெருங்கிவிட்டதை அறியலாம். 34 நான் உண்மையைச் சொல்கிறேன், இன்றைய மனிதர்கள் வாழும் காலத்திலேயே அவை அனைத்தும் நடக்கும். 35 உலகம் முழுவதும் வானமும் பூமியும் உள்ளாக அழியும். ஆனால் எனது வார்த்தைகள் அழியாது.
இயேசு வரும் வேளை
(மாற்கு 13:32-37; லூக்கா 17:26-30,34-36)
36 “அந்த நேரம் அல்லது நாள் எப்பொழுது வரும் என்பது யாருக்கும் தெரியாது. பரலோகத்திலிருக்கும் தேவ குமாரனும் தேவதூதர்களும் கூட அதை அறியமாட்டார்கள். பிதாவானவர் மட்டுமே அறிவார்.
37 “நோவாவின் காலத்தில் நடந்ததைப் போலவே, மனித குமாரன் வரும்போதும் நடக்கும். 38 நோவாவின் காலத்தில் வெள்ளம் வருமுன்னர், மக்கள் குடித்துக்கொண்டும் சாப்பிட்டுக்கொண்டுமிருந்தார்கள். மக்கள் தம் பிள்ளைகளின் திருமணங்களை நடத்திக்கொண்டிருந்தார்கள். நோவா கப்பலில் ஏறுகிறவரைக்கும் மக்கள் அவற்றைச் செய்து கொண்டிருந்தார்கள். 39 நடந்துகொண்டிருந்ததை அம்மக்களில் யாரும் அறிந்திருக்கவில்லை. பின்னர், வெள்ளம் வந்து அவர்கள் அனைவரையும் அழித்துப்போட்டது.
“அதைப் போலவே மனிதகுமாரன் வரும்பொழுதும் நடக்கும். 40 இரண்டு ஆண்கள் வயலில் வேலை செய்துகொண்டிருக்க ஒருவன் விடப்பட்டு மற்றவன் எடுத்துச்செல்லப்படுவான். 41 எந்திரத்தில் மாவு அரைத்துக் கொண்டிருக்கும் பெண்கள் இருவரில், ஒருத்தி விடப்பட்டு மற்றவள் கொண்டுசெல்லப்படுவாள்.
42 “ஆகவே, எப்பொழுதும் ஆயத்தமாக இருங்கள். உங்கள் கர்த்தர் வருகிற நேரம் உங்களுக்குத் தெரியாது. 43 இதை, ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள், திருடன் வரும் நேரத்தை வீட்டுக்காரன் அறிந்திருந்தால், திருடனுக்காக வீட்டுக்காரன் காத்திருப்பான். மேலும் திருடன் வீட்டில் நுழையாதபடி எச்சரிக்கையுடன் இருப்பான். இதை நினைவில் கொள்ளுங்கள். 44 எனவே, நீங்களும் ஆயத்தமாக இருக்கவேண்டும். நீங்கள் எதிர்பார்க்காதபொழுது மனித குமாரன் வருவார்.
நல்ல வேலைக்காரரும் தீய வேலைக்காரரும்
(லூக்கா 12:41-48)
45 “புத்தியுள்ள நம்பிக்கைக்குரிய வேலையாள் யார்? தன் மற்ற வேலைக்காரர்களுக்குத் தக்க நேரத்தில் உணவளிக்கும் வேலைக்காரனை எஜமானன் நம்புகிறான். எஜமானனின் நம்பிக்கைக்குரிய அவ்வேலைக்காரன் யார்? 46 அவ்வேலைக்காரன் எஜமானன் வரும் நேரத்தில் தன் வேலையை சரியாகச் செய்கிறதைக் கண்டால் அவ்வேலைக்காரன் மகிழ்ச்சியடைகிறான். 47 நான் உண்மையைச் சொல்கிறேன். தனக்குரிய எல்லாவற்றையும் மேற்பார்வை செய்யும் பொறுப்பையும் அந்த வேலைக்காரன் வசம் ஒப்படைப்பான்.
48 “ஆனால், அவ்வேலைக்காரன் தீய எண்ணம் கொண்டு, தன் எஜமானன் விரைவில் வரமாட்டான் என எண்ணினால் என்ன ஆகும்? 49 உடன் வேலைக்காரர்களையெல்லாம் அடித்து உதைத்து எல்லா உணவையும் உண்டுவிட்டு தன்னைப் போன்றவர்களுடன் உண்டு குடிக்க முனைவான். 50 அவன் எதிர்ப்பாராத நேரத்தில் எஜமானன் வருவான். 51 பின்னர் அவ்வேலைக்காரனைத் தண்டிப்பான். மாயமானவர்களின் இடத்திற்கு அவனை அனுப்பி வைப்பான். அங்கே உள்ளவர்கள் கூக்குரலிட்டுக் கொண்டு வேதனையினால் பற்களைக் கடித்துக் கொண்டிருப்பார்கள்.
2008 by World Bible Translation Center