Print Page Options
Previous Prev Day Next DayNext

Book of Common Prayer

Daily Old and New Testament readings based on the Book of Common Prayer.
Duration: 861 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 66-67

இராகத் தலைவனுக்கு, ஒரு துதிப்பாடல்.

66 பூமியிலுள்ள அனைத்தும் தேவனை நோக்கி மகிழ்ச்சியால் ஆர்ப்பரிக்கும்.
அவரது மகிமைமிக்க நாமத்தைத் துதியுங்கள்!
    துதிப்பாடல்களால் அவரைப் பெருமைப்படுத்துங்கள்!
அவரது வேலைப்பாடுகள் எவ்வளவு அதிசயமானவை என்று தேவனுக்குக் கூறுங்கள்!
    தேவனே, உமது வல்லமை மிகப்பெரியது!
உமது பகைவர்கள் குனிந்து வணங்குவார்கள்.
    அவர்கள் உம்மைக் கண்டு அஞ்சுவார்கள்.
உலகம் முழுவதும் உம்மை தொழுதுகொள்ளட்டும்.
    ஒவ்வொருவரும் உமது நாமத்தை துதித்துப் பாடட்டும்.

தேவன் செய்த காரியங்களைப் பாருங்கள்!
    அக்காரியங்கள் நம்மை வியக்கவைக்கும்.
தேவன் கடலை வறண்ட நிலமாக்கினார்.
    மகிழ்ச்சியுடைய அவரது ஜனங்கள் நதியைக் கடந்து போனார்கள்.
தேவன், அவரது மிகுந்த வல்லமையால் உலகத்தை ஆளுகிறார்.
    எல்லா இடங்களிலுமுள்ள ஜனங்களை தேவன் கண்ணோக்குகிறார்.
    ஒருவனும் அவரை எதிர்த்துப் போராட முடியாது.

ஜனங்களே, நம் தேவனைத் துதியுங்கள்,
    உரத்த குரலில் துதிப்பாடல்களை அவருக்குப் பாடுங்கள்.
தேவன் நமக்கு உயிரைத் தந்தார்.
    தேவன் நம்மைக் காப்பாற்றுகிறார்.
10 ஜனங்கள் வெள்ளியை நெருப்பிலிட்டுப் பரிசோதிப்பதைப்போல தேவன் நம்மைப் பரிசோதித்தார்.
11 தேவனே, நீர் எங்களைக் கண்ணியில் விழச் செய்தீர்.
    கனமான பாரத்தை நீர் எங்கள் மேல் வைக்கிறீர்.
12 எங்கள் பகைவர்கள் எங்கள்மீது நடக்க நீர் அனுமதித்தீர்.
    நெருப்பின் வழியாகவும் தண்ணீரின் வழியாகவும் நடக்குமாறு எங்களை வழி நடத்தினீர்.
    ஆனால் ஒரு பத்திரமான இடத்திற்கு எங்களை அழைத்து வந்தீர்.
13-14 எனவே நான் உமது ஆலயத்திற்குப் பலிகளைக் கொண்டுவருவேன்.
நான் தொல்லையில் சிக்குண்டபோது உதவிக்காக உம்மைக் கேட்டேன்.
    உமக்குப் பல பொருத்தனைகளைப் பண்ணினேன்.
இப்போது, நான் பொருத்தனைப் பண்ணினதை உமக்குக் கொடுக்கிறேன்.
15     நான் பாவப்பரிகார பலிகளை உமக்குக் கொடுக்கிறேன்.
நான் ஆட்டுக்கடாக்களோடு நறுமணப்பொருட்களைப் புகையிடுவேன்.
    நான் உமக்குக் காளைகளையும் செம்மறி ஆடுகளையும் தருவேன்.
16 தேவனைத் தொழுதுக்கொள்கிற எல்லா ஜனங்களே, வாருங்கள்.
    தேவன் எனக்குச் செய்தவற்றை உங்களுக்குக் கூறுவேன்.
17 நான் அவரிடம் ஜெபித்தேன், நான் அவரைத் துதித்தேன்.
18 என் இருதயம் தூய்மையாயிருந்தது.
    எனவே என் ஆண்டவர் நான் கூறியவற்றைக் கேட்டார்.
19 தேவன் நான் கூறியவற்றைக் கேட்டார்.
    தேவன் என் ஜெபத்தைக் கேட்டார்.
20 தேவனைத் துதியுங்கள்,
    தேவன் என்னிடம் பாராமுகமாக இருக்கவில்லை, அவர் என் ஜெபத்தைக் கேட்டார்.
    தேவன் அவரது அன்பை என்னிடம் காட்டியருளினார்.

இசைக்கருவிகளை இசைக்கும் இராகத் தலைவனுக்கு ஒரு துதிப் பாடல்.

67 தேவனே, என்னிடம் இரக்கம் காட்டி என்னை ஆசீர்வதியும்.
    தயவாய் எங்களை ஏற்றுக்கொள்ளும்!

தேவனே, பூமியிலுள்ள ஒவ்வொருவனும் உம்மைக் குறித்துத் தெரிந்துக்கொள்கிறான் என நம்புகிறேன்.
    நீர் எவ்வாறு ஜனங்களை மீட்கிறீரென்று ஒவ்வொரு தேசமும் பார்க்கட்டும்.
தேவனே, ஜனங்கள் உம்மைத் துதிக்கட்டும்!
    எல்லா ஜனங்களும் உம்மைத் துதிக்கட்டும்.
எல்லா தேசங்களும் களிக்கூர்ந்து மகிழட்டும்!
    ஏனெனில் நீர் ஜனங்களைத் தகுதியாக நியாயந்தீர்க்கிறீர்.
    நீர் ஒவ்வொரு தேசத்தையும் அரசாளுகிறீர்.
தேவனே, ஜனங்கள் உம்மைத் துதிக்கட்டும்.
    எல்லா ஜனங்களும் உம்மைத் துதிக்கட்டும்.
தேவனே, எங்கள் தேவனே, எங்களை ஆசீர்வதியும்.
    எங்கள் தேசம் நல்ல அறுவடையை எங்களுக்குக் கொடுக்கட்டும்.
தேவன் நம்மை ஆசீர்வதிக்கட்டும்.
    பூமியிலுள்ள எல்லா மனிதரும் தேவனுக்குப் பயந்து அவரை மதிக்கட்டும்.

சங்கீதம் 19

இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்

19 வானங்கள் தேவனுடைய மகிமையைக் கூறுகின்றன.
    தேவனுடைய கரங்கள் செய்த நல்ல செயல்களை ஆகாயங்கள் அறிவிக்கின்றன.
ஒவ்வொரு புதுநாளும் அந்தக் கதையை மேலும் கூறும்.
    ஒவ்வொரு இரவும் தேவனுடைய வல்லமையை மேலும் மேலும் உணர்த்தும்.
உண்மையில் பேச்சையோ, வார்த்தையையோ கேட்கமுடியாது.
    நாம் கேட்கவல்ல சத்தத்தை அவை எழுப்புவதில்லை.
ஆனால் அவற்றின் “குரல்” உலகமெங்கும் செல்கிறது.
    அவற்றின் “வார்த்தைகள்” பூமியின் இறுதியை எட்டுகின்றன.

    ஆகாயம் சூரியனின் வீட்டைப் போன்றிருக்கும்.
படுக்கையறையிலிருந்து வெளிவரும் மகிழ்ச்சியான மணமகனைப்போல் சூரியன் வெளிப்படும்.
    பந்தயத்திற்கு ஆசையாய் காத்திருக்கும் ஓட்ட வீரனைப் போல் சூரியன் வானத்தின் குறுக்கே தன் வழியில் செல்லும்.
ஆகாயத்தின் ஒருமுனையில் தொடங்கி அதன் மறுமுனை வரைக்கும் சூரியன் எங்கும் ஓடும்.
    அதன் வெப்பத்திற்கு எதுவும் தப்ப இயலாது. கர்த்தருடைய போதனைகளும் அப்படிப்பட்டவையே.

கர்த்தருடைய போதனைகள் குறையற்றவை.
    அவை தேவனுடைய ஜனங்களுக்குப் பெலனைக் (ஆற்றலை) கொடுக்கும்.
கர்த்தருடைய உடன்படிக்கை நம்பத்தக்கது.
    அறிவற்றோர் ஞானமடைவதற்கு அது உதவும்.
கர்த்தருடைய சட்டங்கள் நியாயமானவை.
    அவை ஜனங்களை சந்தோஷப்படுத்தும்.
கர்த்தருடைய கட்டளைகள் நல்லவை.
    வாழத்தக்க வழியை அவை ஜனங்களுக்குக் காட்டும்.

கர்த்தரைத் தொழுதுகொள்வது எப்போதும் வெளிச்சமாய் பிரகாசிக்கிற ஒளி போன்றது.
    கர்த்தருடைய நியாயத்தீர்ப்புகள் நல்லவை, செம்மையானவை. அவை முற்றிலும் சரியானவை.
10 கர்த்தருடைய போதனைகள் சுத்தமான பொன்னைக்காட்டிலும் பெருமதிப்புடையவை.
    தேனடையிலிருந்து வரும் உயர்ந்த தேனைக் காட்டிலும் அவை இனிமையானவை.
11 கர்த்தருடைய போதனைகள் அவர் வேலையாளை எச்சரிக்கின்றன.
    அவருக்குக் கீழ்ப்படிவதால் நல்லவை நிகழும்.

12 கர்த்தாவே, ஒருவனும் தன் எல்லா பிழைகளையும் காணமுடியாது.
    எனவே மறைவான பாவங்கள் நான் செய்யாதிருக்க உதவும்.
13 கர்த்தாவே, நான் செய்ய விரும்பும் பாவங்களிலிருந்து என்னை விலக்கும்.
    அப்பாவங்கள் என்னை ஆள அனுமதியாதிரும்.
நீர் உதவினால்
    நான் பாவங்களிலிருந்து விலகி தூயவனாய் இருக்க முடியும்.
14 என் வார்த்தைகளும் எண்ணங்களும் உமக்கு ஏற்றதாய் இருக்கட்டும்.
    கர்த்தாவே, நீர் என் பாறை. நீரே என்னை விடுவிப்பவர்.

சங்கீதம் 46

அலமோத் என்னும் கருவியில் வாசிக்கும்படி கொடுக்கப்பட்ட கோராகின் குடும்பத்தின் இராகத் தலைவனுக்கு, ஒரு பாடல்

46 தேவன் நம் வல்லமையின் ஊற்றாயிருக்கிறார்.
    தொல்லைகள் சூழ்கையில் நாம் அவரிடமிருந்து எப்பொழுதும் உதவி பெறலாம்.
எனவே பூமி நடுங்கினாலும்,
    மலைகள் கடலில் வீழ்ந்தாலும் நாம் அஞ்சோம்.
கடல் கொந்தளித்து இருள் சூழ்ந்தாலும்
    பர்வ தங்கள் நடுங்கி அதிர்ந்தாலும் நாம் அஞ்சோம்.

உன்னத தேவனுடைய பரிசுத்த நகரத்திற்கு,
    மகிழ்ச்சி அளிக்கிற ஓடைகளையுடைய நதி ஒன்று இருக்கிறது.
அந்நகரம் அழியாதபடி தேவன் அங்கிருக்கிறார்.
    சூரிய உதயத்திற்குமுன் தேவன் அதற்கு உதவுவார்.
தேசங்கள் பயத்தால் நடுங்கும்.
    கர்த்தர் சத்தமிடுகையில் அந்த இராஜ்யங்கள் விழும், பூமி சீர்குலையும்.
சர்வ வல்லமையுள்ள கர்த்தர் நம்மோடிருக்கிறார்.
    யாக்கோபின் தேவன் நமது பாதுகாப்பிடம்.

கர்த்தர் செய்யும் வல்லமை மிக்க காரியங்களைப் பாருங்கள்.
    அவர் பூமியின்மேல் செய்துள்ள பயத்திற்குரிய காரியங்களைப் பாருங்கள்.
பூமியில் எவ்விடத்தில் போர் நிகழ்ந்தாலும் கர்த்தர் அதை நிறுத்த வல்லவர்.
    வீரர்களின் வில்லுகளை அவர் முறித்து அவர்கள் ஈட்டிகளைச் சிதறடிக்கிறார்.
    இரதங்களை நெருப்பினால் அழிக்க தேவன் வல்லவர்.

10 தேவன், “நீங்கள் சண்டையிடுவதை நிறுத்தி அமைதியாயிருந்து நானே தேவன் என உணருங்கள்!
    நான் பூமியில் பெருமையுற்று தேசங்களில் வாழ்த்தப்படுவேன்” என்று கூறினார்.

11 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் நம்மோடிருக்கிறார்.
    யாக்கோபின் தேவன் நமது பாதுகாப்பிடம்.

யாத்திராகமம் 3:1-12

எரியும் புதர்

மோசேயின் மாமன் எத்திரோ என்ற

பெயருடையவன் ஆவான். (எத்திரோ மீதியானில் ஆசாரியனாக இருந்தான்) எத்திரோவின் ஆடுகளை மோசே கவனித்து வந்தான். ஒரு நாள், மோசே ஆடுகளைப் பாலைவனத்தின் மேற்குத் திசைக்கு அழைத்துச் சென்றான். மோசே ஓரேப் (சீனாய்) எனப்படும் தேவனின் மலைக்குப் போனான். மோசே மலையின்மேல், ஒரு எரியும் புதரில் கர்த்தருடைய தூதனைக் கண்டான். அது பின்வருமாறு நிகழ்ந்தது:

அழியாதபடி எரிந்துகொண்டிருந்த ஒரு புதரை மோசே கண்டான். மோசே புதரின் அருகே சென்று, அழியாதபடி அது எவ்வாறு எரிகிறது என்பதைப் பார்ப்பதற்குத் தீர்மானித்தான்.

புதரைப் பார்ப்பதற்கு மோசே வந்துகொண்டிருப்பதை கர்த்தர் கண்டார். எனவே, தேவன் புதரிலிருந்து, “மோசே, மோசே!” என்று கூப்பிட்டார்.

மோசே, “நான் இங்கே இருக்கிறேன்” என்றான்.

அப்போது கர்த்தர், “பக்கத்தில் நெருங்காதே. உனது செருப்புகளைக் கழற்று. நீ பரிசுத்த பூமியில் நின்றுகொண்டிருக்கிறாய். நான் உனது முற்பிதாக்களின் தேவன். நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனாகவும் இருக்கிறேன்” என்றார்.

தேவனைப் பார்ப்பதற்குப் பயந்ததால் மோசே முகத்தை மூடிக்கொண்டான்.

அப்போது கர்த்தர், “எகிப்தில் என் ஜனங்கள் படுகின்ற தொல்லைகளை நான் கண்டேன். எகிப்தியர்கள் அவர்களைத் துன்புறுத்தும்போது, அவர்களிடும் கூக் குரலை நான் கேட்டேன். அவர்கள் படும் வேதனையை நான் அறிவேன். நான் இப்போது இறங்கிப்போய், எகிப்தியரிடமிருந்து என் ஜனங்களை மீட்பேன். அந்நாட்டிலிருந்து தொல்லைகளில்லாமல் சுதந்திரமாக வாழத்தக்க ஒரு நல்ல நாட்டிற்கு அவர்களை அழைத்துச் செல்வேன். [a] அந்நாடு நல்ல பொருட்களால் நிரம்பியதாகும். கானானியர், ஏத்தியர், எமோரியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் போன்ற ஜனங்கள் அந்நாட்டில் வாழ்கிறார்கள். நான் இஸ்ரவேல் ஜனங்களின் கூக்குரலைக் கேட்டேன். எகிப்தியர்கள் அவர்கள் வாழ்க்கையைக் கடினமாக்கியதையும் கண்டேன். 10 நான், உன்னை இப்போது பார்வோனிடம் அனுப்புகிறேன். நீ போய் எனது ஜனங்களாகிய இஸ்ரவேலரை எகிப்திலிருந்து வெளியே வழிநடத்து!” என்றார்.

11 ஆனால் மோசே தேவனிடம், “நான் பெரிய மனிதன் அல்ல, நான் எவ்வாறு பார்வோனிடம் போய், இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து வெளியே வழிநடத்தக் கூடும்?” என்று கேட்டான்.

12 தேவன், “நான் உன்னோடு இருப்பேன். எனவே நீ இதைச் செய்ய முடியும். நான் உன்னை அனுப்புகிறேன் என்பதற்கு இதுவே சான்றாகும்! ஜனங்களை எகிப்திலிருந்து வழிநடத்திய பிறகு, நீ வந்து இம்மலையின் மேல் என்னைத் தொழுவாய்!” என்றார்.

எபிரேயர் 12:18-29

18 நீங்கள் புதிய இடத்திற்கு வந்திருக்கிறீர்கள். உங்களால் தொடமுடிகிற இடமில்லை இது. நெருப்பு எரிவதும், அடர்த்தியான மேகங்களாலும் இருட்டாலும், புயலாலும் சூழ்ந்த மலையில்லை இது. 19 எக்காள சத்தத்தைக் கேட்டோ அல்லது கட்டளையிடும் ஒரு குரலைக் கேட்டோ நீங்கள் அந்த இடத்துக்கு வரவில்லை. வார்த்தைகளின் சத்தமும் எழும்பாது. அந்த சத்தத்தைக் கேட்டவர்கள் மீண்டும் தங்களுக்கு வார்த்தை சொல்லப்படாதபடிக்கு வேண்டிக்கொண்டார்கள். 20 ஏனென்றால் “ஒரு மிருகமாகிலும் அம்மலையைத் தொட்டால் கற்களால் அடிபட்டுச் சாக வேண்டியதிருக்கும்” [a]என்ற கட்டளையைக் கேட்க அவர்கள் விரும்பவில்லை. 21 “நான் பயத்தால் நடுங்குகிறேன்” [b]என்று மோசேயும் சொல்லத்தக்கதாக அந்தக் காட்சி அவ்வளவு பயங்கரமாக இருந்தது.

22 ஆனால் நீங்கள் அது போன்ற இடத்துக்கு வரவில்லை. இந்தப் புதிய இடத்தின் பெயர் சீயோன் மலை. தேவன் வசிக்கும் நகரத்திற்கு வந்திருக்கிறீர்கள். இது பரலோகமான எருசலேம். ஆயிரக்கணக்கான தேவதூதர்கள் மகிழ்ச்சியோடு கூடுகிற இடம். 23 இங்கே பரலோகத்தில் பெயரெழுதப்பட்ட முதற் பேறானவர்களின் சர்வ சங்கமாகிய சபை உள்ளது. எல்லோரையும் நியாயம் தீர்க்கிற நீதிபதியாக தேவன் இருக்கிறார். முழுமையாக்கப்பட்ட நீதிமான்களின் ஆவிகள் உள்ளன. 24 இயேசுவிடம் வந்திருக்கிறீர்கள். அவரே தம் மக்களுக்கு தேவனிடமிருந்து புதிய உடன்படிக்கையைக் கொண்டு வந்தவர். ஆபேலின் இரத்தம் பேசியதைவிட நன்மைகளைப் பேசுகிற, தெளிக்கப்பட்ட இயேசுவின் இரத்தமிருக்கும் இடத்துக்கு நீங்கள் வந்து சேர்ந்தீர்கள்.

25 எச்சரிக்கையாய் இருங்கள். தேவன் பேசும்போது கவனிக்கத் தவறாதீர்கள். பூமியில் எச்சரிக்கப்பட்டபோதும் கூட இஸ்ரவேல் மக்கள் இதுபோலத்தான் கவனிக்க மறுத்தார்கள். அதனால் அவர்களால் தப்பிக்க முடியாமல் போய்விட்டது. இப்போது பரலோகத்திலிருந்து தேவன் பேசுகிறார். அதைக் கவனிக்க மறுக்கிறவர்கள் முன்பைவிட மோசமான நிலையை அடைவார்கள். 26 அவருடைய பேச்சு அப்போது பூமியை அசைத்தது. இப்பொழுதோ அவர், “இன்னொருமுறை நான் பூமியை மாத்திரமல்ல, வானத்தையும் அசைப்பேன்” [c]என்று வாக்குறுதி அளித்திருக்கிறார். 27 “இன்னொரு முறை” என்பது என்னால் உருவாக்கப்பட்டவை எல்லாம் அழிக்கப்படும் எனப் பொருள்படும். அவை அசையத்தக்க பொருட்களே. அசைக்கக் கூடாத பொருட்களே என்றும் நிலைத்திருக்கும்.

28 அசைக்கப்பட முடியாத ஓர் இராஜ்யத்தை நாம் பெற்றுக்கொண்டிருப்பதால் நாம் நன்றி சொல்லவேண்டும். மிகவும் அச்சத்தோடும் மரியாதையோடும் கூடிய ஒப்புக்கொள்ளத்தக்க ஒரு வழியில் நாம் தேவனை வழிபடவேண்டும். 29 ஏனென்றால் நமது தேவன் அனைத்தையும் அழிக்கும் நெருப்பைப் போன்றவர்.

லூக்கா 10:17-24

சாத்தான் விழுதல்

17 எழுபத்திரண்டு மனிதர்களும் தங்கள் பயணத்தை முடித்துத் திரும்பியபோது மிக்க மகிழ்வோடு காணப்பட்டார்கள். அவர்கள், “ஆண்டவரே, உங்கள் பெயரைக் கூறியபோது பிசாசுகள்கூட எங்களுக்குக் கீழ்ப்படிந்தன” என்றார்கள்.

18 அம்மனிதர்களை நோக்கி இயேசு, “வானிலிருந்து மின்னலைப்போன்று சாத்தான் வீழ்வதை நான் கண்டேன். 19 கேளுங்கள். பாம்புகளையும், தேள்களையும் மிதிக்கிற வல்லமையை நான் உங்களுக்குக் கொடுத்தேன். பகைவனின் (பிசாசின்) வல்லமையைக் காட்டிலும் மிகுந்த வல்லமை உங்களுக்குக் கொடுத்தேன். உங்களை எதுவும் காயப்படுத்துவதில்லை. 20 ஆம், ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகின்றன. மகிழ்ச்சியாக இருங்கள். ஏன், உங்களுக்கு இந்த வல்லமை இருப்பதால் அல்ல, உங்கள் பெயர்கள் பரலோகத்தில் எழுதப்பட்டிருப்பதால் சந்தோஷப்படுங்கள்” என்று கூறினார்.

இயேசுவின் பிரார்த்தனை(A)

21 அப்போது பரிசுத்த ஆவியானவர் இயேசுவை மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாக்கினார். இயேசு: “பிதாவே, வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! உங்களுக்கு நன்றி. ஞானிகளிடமிருந்தும், அறிவுமிக்கவர்களிடமிருந்தும் இக்காரியங்களை நீங்கள் மறைத்ததால் உங்களை வாழ்த்துகிறேன். ஆனால் சிறு குழந்தைகளைப்போன்ற மக்களுக்கு இச்செயல்களை நீர் காட்டியுள்ளீர். ஆம், பிதாவே, நீர் உண்மையாகவே இதைச் செய்ய விரும்பியதால் இதனைச் செய்துள்ளீர்கள்.

22 “எனக்கு எல்லாவற்றையும் என் பிதா தந்துள்ளார். மகன் யார் என்பது பிதாவைத் தவிர வேறு எவருக்கும் தெரியாது. பிதா யார் என்பதை மகன் மட்டுமே அறிவார். மகன் அதனைத் தெரிவிக்கும்பொருட்டு தேர்ந்தெடுக்கும் மக்கள் மட்டுமே தந்தையைப்பற்றி அறிந்துகொள்வார்கள்” என்றார்.

23 பின் இயேசு சீஷர்களை நோக்கித் திரும்பினார். அவர்கள் அவரோடு தனித்திருந்தார்கள். இயேசு, “நீங்கள் இப்போது பார்க்கிற செயல்களைக் காணும்படியாக ஆசீர்வதிக்கப்பட்டுள்ளீர்கள். 24 நீங்கள் இப்போது பார்க்கிற காரியங்களைக் காணவேண்டுமென்று பல தீர்க்கதரிசிகளும், மன்னர்களும் விரும்பினார்கள் என்பதை நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆனால் அவர்கள் இக்காரியங்களைப் பார்க்கவில்லை. நீங்கள் இப்போது கேட்கிற செய்திகளைக் கேட்க வேண்டுமென்று பல தீர்க்கதரிசிகளும், அரசர்களும் விரும்பினார்கள். ஆனால் அவர்கள் இச்செய்திகளைக் கேட்கவில்லை” என்றார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center