Print Page Options
Previous Prev Day Next DayNext

Book of Common Prayer

Daily Old and New Testament readings based on the Book of Common Prayer.
Duration: 861 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 118

118 கர்த்தரே தேவன் என்பதால் அவரை மகிமைப்படுத்துங்கள்.
    அவரது உண்மை அன்பு என்றென்றைக்கும் தொடரும்!
இஸ்ரவேலே, இதைக்கூறு,
    “அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்!”
ஆசாரியர்களே, இதைக் கூறுங்கள்:
    “அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்!”
கர்த்தரைத் தொழுதுகொள்கிற ஜனங்களே, இதைக் கூறுங்கள்:
    “அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்!”

நான் தொல்லையில் உழன்றேன்.
எனவே உதவிக்காக கர்த்தரைக் கூப்பிட்டேன்.
    கர்த்தர் எனக்குப் பதிலளித்து என்னை விடுவித்தார்.
கர்த்தர் என்னோடிருப்பதால் நான் பயப்படமாட்டேன்.
    என்னைத் துன்புறுத்த ஜனங்கள் எதையும் செய்யமுடியாது.
கர்த்தர் எனக்கு உதவி செய்கிறவர்.
    என் பகைவர்கள் தோல்வியுறுவதை நான் காண்பேன்.
ஜனங்களை நம்புவதைக் காட்டிலும்
    கர்த்தரை நம்புவது நல்லது.
உங்கள் தலைவர்களை நம்புவதைக் காட்டிலும்
    கர்த்தரை நம்புவது நல்லது.

10 பல பகைவர்கள் என்னைச் சூழ்ந்திருக்கிறார்கள்,
    ஆனால் கர்த்தருடைய வல்லமையால் நான் அவர்களைத் தோற்கடிப்பேன்.
11 பகைவர்கள் பலர் என்னை மீண்டும், மீண்டும் சூழ்ந்துகொண்டார்கள்.
    கர்த்தருடைய வல்லமையால் நான் அவர்களைத் தோற்கடித்தேன்.
12 தேனீக்களின் கூட்டத்தைப்போல பகைவர்கள் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்.
    ஆனால் வேகமாக எரியும் பதரைப்போல் அவர்கள் சீக்கிரமாக அழிந்துபோனார்கள்.
    கர்த்தருடைய வல்லமையால் நான் அவர்களைத் தோற்கடித்தேன்.

13 என் பகைவர்கள் என்னைத் தாக்கி அழிக்க முயன்றனர்.
    ஆனால் கர்த்தர் எனக்கு உதவினார்.
14 கர்த்தர் எனக்குப் பெலனும் வெற்றியின் பாடலுமாயிருக்கிறார்.
    கர்த்தர் என்னைக் காப்பாற்றுகிறார்!
15 நல்லோரின் வீடுகளில் வெற்றியின் கொண்டாட்டத்தை நீங்கள் கேட்கமுடியும்.
    கர்த்தர் தமது மிகுந்த வல்லமையை மீண்டும் காட்டினார்.
16 கர்த்தருடைய கரங்கள் வெற்றியால் உயர்த்தப்பட்டன.
    கர்த்தர் தமது மிகுந்த வல்லமையை மீண்டும் காட்டினார்.

17 நான் வாழ்வேன், மரிக்கமாட்டேன்.
    கர்த்தர் செய்தவற்றை நான் கூறுவேன்.
18 கர்த்தர் என்னைத் தண்டித்தார்,
    ஆனால் அவர் என்னை மரிக்கவிடமாட்டார்.

19 நல்ல வாயிற்கதவுகளே, எனக்காகத் திறவுங்கள்,
    நான் உள்ளே வந்து கர்த்தரைத் தொழுதுகொள்வேன்.
20 அவை கர்த்தருடைய கதவுகள்,
    நல்லோர் மட்டுமே அவற்றின் வழியாகச் செல்ல முடியும்.
21 கர்த்தாவே, என் ஜெபத்திற்குப் பதிலளித்ததற்காக நான் உமக்கு நன்றிக் கூறுவேன்.
    நீர் என்னைக் காப்பாற்றியதற்காக நான் உமக்கு நன்றிக் கூறுவேன்.

22 கட்டிடம் கட்டுவோர் வேண்டாமெனத் தள்ளிய
    கல்லே மூலைக்கு தலைக்கல்லாயிற்று.
23 கர்த்தரே இதைச் செய்தார்,
    அது அற்புதமானதென நாங்கள் நினைக்கிறோம்.
24 இந்நாள் கர்த்தர் செய்த நாள்.
    இன்று நாம் களிப்போடு மகிழ்ச்சியாயிருப்போம்!

25 ஜனங்கள், “கர்த்தரைத் துதிப்போம்!
    கர்த்தர் நம்மைக் காப்பாற்றினார்!
26 கர்த்தருடைய நாமத்தால் வருகிற மனிதனை வரவேற்றுக்கொள்ளுங்கள்” என்றார்கள்.
    ஆசாரியர்கள், “நாங்கள் உங்களைக்
    கர்த்தருடைய வீட்டிற்கு வரவேற்கிறோம்!
27 கர்த்தரே தேவன், அவர் எங்களை ஏற்றுக்கொள்கிறார்.
    பலிக்காக ஆட்டுக்குட்டியைக் கட்டி, பலிபீடத்தின் கொம்புகளுக்கு சுமந்து செல்லுங்கள்” என்றார்கள்.

28 கர்த்தாவே, நீரே என் தேவன், நான் உமக்கு நன்றிக் கூறுகிறேன்.
    நான் உம்மைத் துதிக்கிறேன்.

29 கர்த்தர் நல்லவர், எனவே அவரைத் துதியுங்கள்.
    அவரது உண்மை அன்பு என்றென்றைக்கும் நிலைக்கும்.

சங்கீதம் 145

தாவீதின் ஜெபங்களுள் ஒன்று.

145 என் தேவனும் ராஜாவுமாகிய உம்மைத் துதிக்கிறேன்.
    உமது நாமத்தை நான் என்றென்றும் எப்போதும் போற்றுகிறேன்.
நான் ஒவ்வொரு நாளும் உம்மைத் துதிக்கிறேன்.
    நான் உமது நாமத்தை என்றென்றும் எப்போதும் துதிக்கிறேன்.
கர்த்தர் பெரியவர்.
    ஜனங்கள் அவரை அதிகம் துதிக்கிறார்கள்.
    அவர் செய்கிற பெருங்காரியங்களை நாம் எண்ணமுடியாது.

கர்த்தாவே, நீர் செய்யும் காரியங்களுக்காக ஜனங்கள் உம்மை என்றென்றும் எப்போதும் துதிப்பார்கள்.
    நீர் செய்யும் உயர்ந்த காரியங்களைக் குறித்து அவர்கள் சொல்வார்கள்.
உமது பெருமைக்குரிய தோற்றமும் மகிமையும் அற்புதமானவை.
    உமது அதிசயங்களைப் பற்றி நான் சொல்வேன்.
கர்த்தாவே, நீர் செய்யும் வியக்கத்தக்க காரியங்களைப்பற்றி ஜனங்கள் சொல்வார்கள்.
    நீர் செய்யும் மேன்மையான காரியங்களைப்பற்றி நான் சொல்வேன்.
நீர் செய்யும் நல்ல காரியங்களைப்பற்றி ஜனங்கள் சொல்வார்கள்.
    உமது நன்மையைப்பற்றி ஜனங்கள் பாடுவார்கள்.

கர்த்தர் தயவும் இரக்கமுமுள்ளவர்.
    கர்த்தர் பொறுமையும் மிகுந்த அன்புமுள்ளவர்.
கர்த்தர் எல்லோருக்கும் நல்லவர்.
    தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றிற்கும் அவரது இரக்கத்தைக் காட்டுகிறார்.
10 கர்த்தாவே, நீர் செய்பவை யாவும் உமக்குத் துதிகளைக் கொண்டுவரும்.
    உம்மைப் பின்பற்றுவோர் உம்மை ஆசீர்வதிக்கிறார்கள்.
11 உமது அரசு எவ்வளவு மேன்மையானது என அவர்கள் சொல்வார்கள்.
    நீர் எவ்வளவு மேன்மையானவர் என்பதை அவர்கள் சொல்வார்கள்.
12 கர்த்தாவே, அப்போது பிறர் நீர் செய்யும் உயர்ந்த காரியங்களைப்பற்றி அறிந்துகொள்கிறார்கள்.
    உமது அரசு எவ்வளவு மேன்மையும் அற்புதமுமானது என்பதை அவர்கள் அறிந்துகொள்கிறார்கள்.
13 கர்த்தாவே, உமது அரசு என்றென்றும் தொடரும்.
    நீர் என்றென்றும் அரசாளுவீர்.

14 கர்த்தர் வீழ்ந்து கிடக்கின்ற ஜனங்களைத் தூக்கிவிடுகிறார்.
    கர்த்தர் தொல்லையில் சிக்குண்ட ஜனங்களுக்கு உதவுகிறார்.
15 கர்த்தாவே, தங்கள் உணவுக்காக எல்லா உயிரினங்களும் உம்மை நோக்கியிருக்கின்றன.
    அவற்றிற்குத் தக்க நேரத்தில் நீர் உணவளிக்கிறீர்.
16 கர்த்தாவே, நீர் உமது கைகளைத் திறந்து,
    ஒவ்வொரு உயிரினத்திற்கும் தேவையான எல்லாவற்றையும் கொடுக்கிறீர்.

17 கர்த்தர் செய்கின்ற எல்லாம் நல்லவையே.
    அவர் செய்பவை எல்லாம் அவர் எவ்வளவு நல்லவர் என்பதைக் காட்டும்.
18 கர்த்தரிடம் உதவி கேட்கிற ஒவ்வொருவனிடமும் அவர் நெருக்கமுள்ளவராயிருக்கிறார்.
    உண்மையாகவே அவரைத் தொழுதுகொள்கிற ஒவ்வொருவரிடமும் அவர் நெருக்கமுள்ளவராயிருக்கிறார்.
19 கர்த்தர் தம்மைப் பின்பற்றுவோர் விரும்புகின்றவற்றைச் செய்கிறார்.
    கர்த்தர் தம்மைப் பின்பற்றுவோருக்குச் செவிகொடுக்கிறார்.
    அவர்களின் ஜெபங்களுக்கு அவர் பதிலளித்து அவர்களைக் காப்பாற்றுகிறார்.
20 கர்த்தர் தம்மை நேசிக்கிற ஒவ்வொருவரையும் காப்பாற்றுகிறார்.
    ஆனால் கர்த்தர் தீயோரை அழிக்கிறார்.

21 நான் கர்த்தரைத் துதிப்பேன்!
    என்றென்றைக்கும் எப்போதும் அவரது பரிசுத்த நாமத்தை ஒவ்வொருவரும் துதிக்கவேண்டுமென நான் விரும்புகிறேன்.

நீதிமொழிகள் 1:20-33

நல்ல பெண்மணியான ஞானம்

20 கவனியுங்கள்! ஞானம் ஜனங்களுக்குப் போதிக்க முயற்சி செய்கிறாள். வீதிகளிலும் சந்தையிலும் நின்று அவள் (ஞானம்) சத்தமிடுகிறாள். 21 அவள் நெரிசலான தெருமுனைகளில் நின்று கூப்பிடுகிறாள். நகர வாசல் அருகில் நின்றுகொண்டு ஜனங்கள் தன்னைக் கவனிக்கும்படி முயற்சி செய்கிறாள்.

22 ஞானம் சொல்கிறதாவது, “நீங்கள் முட்டாள்கள், நீங்கள் தொடர்ந்து எவ்வளவுகாலம் முட்டாள்தனமாக செயல்படுவீர்கள்? நீங்கள் எவ்வளவு காலம் ஞானத்தைக் கேலிச் செய்வீர்கள்? நீங்கள் தொடர்ந்து எவ்வளவு காலத்துக்கு அறிவை வெறுப்பீர்கள்? 23 நீங்கள் எனது ஆலோசனைகளையும், போதனைகளையும் கேட்டிருக்க வேண்டும். எனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் நான் உங்களுக்குச் சொல்லியிருந்திருப்பேன். என் அறிவையெல்லாம் உங்களுக்கு வழங்கியிருந்திருப்பேன்.

24 “நான் சொல்வதைக் கவனிக்க நீங்கள் மறுத்துவிட்டீர்கள். நான் உதவ முயன்றேன். நான் கைகொடுக்க வந்தேன். ஆனால் என் உதவியை ஏற்க மறுத்துவிட்டீர்கள். 25 எனது அறிவுரைகளைக் கேட்காமல் நீங்கள் திரும்பிக்கொண்டீர்கள். என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ள மறுத்தீர்கள். 26 எனவே, உங்கள் துன்பத்தைக் கண்டு நான் சிரிப்பேன். உங்களுக்குத் துன்பம் வருவதைப் பார்த்து நான் மகிழ்ச்சி அடைவேன். 27 ஒரு கொடிய புயலைப்போன்று பெருந்துன்பம் உங்களுக்கு வரும். பெருங்காற்றைப்போன்று அது உங்கள் மேல் மோதும். உங்கள் துன்பமும் கவலைகளும் உங்கள் மேல் சுமையாக அழுத்தும்.

28 “இவையெல்லாம் நடக்கும்போது நீங்கள் என்னை உதவிக்காக அழைப்பீர்கள். ஆனால் நான் உதவிசெய்யமாட்டேன். என்னை நீங்கள் தேடுவீர்கள், ஆனால் உங்களால் என்னைக் கண்டு பிடிக்க முடியாது. 29 நீங்கள் என் அறிவை விரும்பாததால் நான் உதவி செய்யமாட்டேன். நீங்கள் கர்த்தருக்குப் பயப்படவும் அவரை மதிக்கவும், கனப்படுத்தவும் மறுத்தீர்கள். 30 நீங்கள் என்னுடைய அறிவுரைகளைக் கேட்க மறுத்தீர்கள். நான் உங்களுக்குச் சரியான பாதையைக் காட்டியபோது நீங்கள் கேட்கவில்லை. 31 நீங்கள் உங்கள் சொந்த வழியிலேயே செயல்களைச் செய்தீர்கள். நீங்கள் உங்கள் சொந்த ஆலோசனையைப் பின்பற்றினீர்கள். உங்கள் சொந்த செய்கைகளினால் வந்த விளைவுகளை நீங்கள் இப்பொழுது ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

32 “முட்டாள்கள் அறிவைப் பின்பற்ற மறுப்பதால் மரணமடைவார்கள். தங்கள் முட்டாள்தனமான பாதையில் தொடர்ந்து செல்வதில் அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். இது அவர்களை அழித்துவிடும். 33 ஆனால் எனக்குக் கீழ்ப்படிகிறவன் பாதுகாப்பாக இருப்பான். அவன் வசதியாக இருப்பான். அவன் தீமைக்குப் பயப்படவேண்டியதில்லை.”

2 கொரி 5:11-21

தூண்டிவிடும் தேவ அன்பு

11 கர்த்தருக்குப் பயப்படுவது என்றால் என்ன பொருள் என நாம் அறிவோம். எனவே மக்கள் உண்மையை ஏற்றுக்கொள்ளும்படி உதவ நாங்கள் முயற்சி செய்கிறோம். உண்மையில் நாங்கள் யார் என்பது தேவனுக்குத் தெரியும். எங்களைப் பற்றி உங்கள் இதயங்களுக்கும் தெரியும் என்று நம்புகிறேன். 12 நாங்கள் மீண்டும் உங்களுக்கு எங்களை நிரூபித்துக்கொள்ள முயற்சி செய்யவில்லை. ஆனால் எங்களைப் பற்றி நாங்கள் சொல்லிக்கொண்டிருக்கிறோம். எங்களைக் குறித்து நீங்கள் பெருமைப்பட்டுக்கொள்வதற்கான காரணங்களையும் சொல்லியிருக்கிறோம். இப்போது வெளிப்படையாய்த் தெரியும் சில காரணங்களுக்காகத் தம்மைத்தாமே பாராட்டிக்கொள்ளும் சிலருக்குத் தெரிவிக்க உங்களிடம் ஒரு பதில் உள்ளது. ஒரு மனிதனின் இதயத்துக்குள் என்ன இருக்கிறது என்பதைப் பற்றிக் கவலை இல்லாதவர்கள் அவர்கள். 13 நாங்கள் பைத்தியம் என்றால் அதுவும் தேவனுக்காகத்தான். நாங்கள் தெளிந்த, சரியான புத்தி உள்ளவர்கள் என்றால் அதுவும் உங்களுக்காகத்தான். 14 கிறிஸ்துவின் அன்பு எங்களைத் தூண்டிவிடுகிறது. ஏனென்றால் ஒவ்வொருவருக்குமாக அவர் இறந்தார் என்பது, அனைவருமே இறந்துவிட்டதையே குறிக்கும் என்று நமக்குத் தெரியும். 15 கிறிஸ்து மக்கள் அனைவருக்காகவும் இறந்து போனதால், உயிரோடு இருக்கிறவர்கள் இனிமேல் தங்களுக்கென்று இராமல், தங்களுக்காக மரித்து எழுந்த கிறிஸ்துவுக்காக உயிர் வாழவேண்டும்.

16 எனவே, இந்த நேரத்திலிருந்து, நாங்கள் ஒருவரையும் மற்ற உலக மக்களைப் போன்று சரீரத்தில் அறியமாட்டோம். முன்பு நாங்களும் மற்றவர்களைப் போன்றே கிறிஸ்துவை சரீரத்தில் அறிந்திருந்தோம். இனிமேல் அவ்வாறு எண்ணவில்லை. 17 எவராவது கிறிஸ்துவுக்குள் இருந்தால் அவன் புதிதாகப் படைக்கப்பட்டவனாகிறான். பழையவை மறைந்தன. அனைத்தும் புதியவை ஆயின. 18 இவை அனைத்தும் தேவனிடமிருந்து வந்தன. கிறிஸ்துவின் மூலம் தேவன் அவருக்கும் நமக்கும் இடையில் சமாதானத்தை உருவாக்கினார். மக்களை சமாதானத்திற்குள் கொண்டு வந்து சேர்க்கும் பணியை எங்களுக்குக் கொடுத்திருக்கிறார். 19 தேவன் கிறிஸ்துவுக்குள் இருந்தார். அவருக்கும் உலகத்துக்கும் இடையில் சமாதானத்தை உருவாக்கினார் என்று சொல்கிறேன். கிறிஸ்துவுக்குள், தம் பாவங்கள் குறித்து குற்ற உணர்ச்சி கொண்ட மக்களை தேவன் குற்றவாளிகளாக நிறுத்துவதில்லை. இச்சமாதானச் செய்தியை மக்களுக்குத் தெரிவிக்கும் பொருட்டு எங்களுக்குக் கொடுத்தார். 20 எனவே, கிறிஸ்துவுக்காகப் பேச நாங்கள் அனுப்பப்பட்டிருக்கிறோம். எங்கள் மூலம் தேவன் உங்களை அழைக்கிறார். நாங்கள் கிறிஸ்துவுக்காகப் பேசுகிறோம். நீங்கள் அனைவரும் தேவனோடு சமாதானமாக இருக்க வேண்டுகிறோம். 21 கிறிஸ்துவிடம் பாவம் இல்லை. ஆனால் தேவன் நமக்காக அவரைப் பாவம் ஆக்கினார். நாம் கிறிஸ்துவுக்குள் தேவனுக்கு ஏற்றவர்களாக இருக்கவேண்டும் என்பதற்காக தேவன் இதைச் செய்தார்.

மாற்கு 10:35-45

சிறப்புச் சலுகை கேட்டவர்கள்

(மத்தேயு 20:20-28)

35 பிறகு செபெதேயுவின் குமாரர்களாகிய யாக்கோபும், யோவானும் இயேசுவிடம் வந்தார்கள். அவர்கள், “போதகரே நீங்கள் எங்களுக்காக ஏதேனும் செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்றனர்.

36 அவர்களிடம் இயேசு, “நான் உங்களுக்காக என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?” எனக் கேட்டார்.

37 “உங்கள் இராஜ்யத்தில் உங்களுக்கென்று மகிமை உள்ளது. எங்களில் ஒருவர் உங்கள் வலது பக்கத்திலும் இன்னும் ஒருவர் இடது பக்கத்திலும் இருக்க வாய்ப்புத்தர வேண்டும்” என்றனர்.

38 அதற்கு இயேசு, “நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என்பது உங்களுக்குப் புரியவில்லை. நான் ஏற்கப்போகும் பாடுகளை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா? நான் ஞானஸ்நானம் பெறும் விதத்திலேயே நீங்களும் பெற்றுக்கொள்ள முடியுமா?” என்று கேட்டார்.

39 அவர்கள், “ஆமாம், எங்களால் முடியும்” என்றனர். இயேசு அவர்களிடம், “நான் படப்போகும் துன்பங்களை எல்லாம் நீங்களும் படவேண்டியதிருக்கும். நான் பெறப்போகும் ஞானஸ்நானத்தை நீங்களும் பெறவேண்டியதிருக்கும். 40 எனக்கு வலது பக்கத்திலும், இடது பக்கத்திலும் இருக்கப்போகின்றவர்களை என்னால் தீர்மானிக்க முடியாது. அந்த இடத்திற்காகச் சிலர் இருக்கின்றார்கள். அவர்களுக்காகவே அந்த இடங்கள் தயார் செய்யப்பட்டிருக்கின்றன” என்றார்.

41 ஏனைய பத்து சீஷர்களும் இயேசு சொல்வதைக் கேட்டனர். அவர்களுக்கு யாக்கோபு மீதும், யோவான் மீதும் கோபம் ஏற்பட்டது. 42 இயேசு தன் சீஷர்களை எல்லாம் தம்மிடம் அழைத்தார். அவர்களிடம், “யூதர் அல்லாத மக்கள் ஆள்வோர்கள் எனக் கருதப்படுகின்றனர். இந்த ஆள்வோர்கள் தம் அதிகாரத்தை மக்கள்மீது செலுத்துவதையே பெரிதும் விரும்புகிறார்கள். அவர்களின் முக்கியத் தலைவர்கள் தம் அதிகாரத்தை மக்கள் மீது செலுத்துவதையே பெரிதும் விரும்புகிறார்கள் என்று நீங்கள் அறிவீர்கள். 43 ஆனால், நீங்கள் மேற்கொள்ளும் வழி இதுவாக இருக்கக் கூடாது. உங்களில் ஒருவன் பெரியவனாக விரும்பினால் அவன் ஒரு வேலைக்காரனைப்போல மற்றவர்களுக்குச் சேவைசெய்ய வேணடும். 44 உங்களில் ஒருவன் மிகவும் முக்கியஸ்தனாக விரும்பினால் அவன் அடிமையைப்போல உங்கள் எல்லாருக்கும் சேவை செய்ய வேண்டும். 45 இது போலவே, மனித குமாரன் பிறருடைய பணிவிடைகளைப் பெறுவதற்காக வரவில்லை. அவர் மற்றவர்களுக்குப் பணிவிடை செய்யவே வந்துள்ளார். அவர் பல மக்களைக் காப்பாற்றுவதற்காகத் தன் உயிரைத் தர வந்துள்ளார்” என்றார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center