Print Page Options
Previous Prev Day Next DayNext

Book of Common Prayer

Daily Old and New Testament readings based on the Book of Common Prayer.
Duration: 861 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 26

தாவீதின் பாடல்.

26 கர்த்தாவே, என்னை நியாயந்தீரும்.
    நான் தூய வாழ்க்கை வாழ்ந்ததை நிரூபியும்.
    கர்த்தரை நம்புவதை என்றும் நான் நிறுத்தியதில்லை.
கர்த்தாவே, என்னை சோதித்துப்பாரும்.
    என் இருதயத்தையும், மனதையும் கவனமாகப் பாரும்.
நான் எப்போதும் உமது மென்மையான அன்பைக் காண்கிறேன்.
    உமது உண்மைகளால் நான் வாழ்கிறேன்.
நான் பொய்யரோடும் மோசடிக்காரரோடும் ஒருபோதும் சேர்ந்ததில்லை.
    அவ்வகையான பயனற்ற ஜனங்களோடு ஒருபோதும் சேர்ந்ததில்லை.
அத்தீய கூட்டத்தாரை நான் வெறுக்கிறேன்.
    தீங்கு செய்யும் அக்கூட்டத்தாரோடு நான் சேரமாட்டேன்.

கர்த்தாவே, நான் தூய்மையானவன் என்று காண்பிக்க
    என் கைகளைக் கழுவிக்கொண்டு உமது பலிபீடத்திற்கு வருகிறேன்.
கர்த்தாவே, உம்மைத் துதித்துப் பாடல்களைப் பாடுகிறேன்.
    நீர் செய்த அற்புதமான காரியங்களைப்பற்றிப் பாடுகிறேன்.
கர்த்தாவே, உமது ஆலயத்தை நேசிக்கிறேன்.
    மகிமைபொருந்திய உமது கூடாரத்தை நேசிக்கிறேன்.

கர்த்தாவே, அந்தப் பாவிகளோடு என்னைச் சேர்க்காதேயும்.
    அக்கொலைக்காரர்களோடு என்னைக் கொல்லாதேயும்.
10 அந்த ஜனங்கள் பிறரை ஏமாற்றக் கூடும்.
    தீமை செய்வதற்கு அவர்கள் பணம் பெறக்கூடும்.
11 ஆனால் நான் களங்கமற்றவன்.
    எனவே, தேவனே, என்னிடம் தயவாயிருந்து என்னை மீட்டுக்கொள்ளும்.
12 நேர்மையான வழியில் நான் தொடர்கிறேன்.
    கர்த்தாவே, உம்மைப் பின்பற்றுவோர் சந்திக்கையில் நான் உம்மைத் துதிக்கிறேன்.

சங்கீதம் 28

தாவீதின் ஒரு பாடல்.

28 கர்த்தாவே, நீர் என் பாறை.
    உதவிக்காக உம்மை அழைத்துக்கொண்டிருக்கிறேன்.
என் ஜெபங்களுக்கு உமது காதுகளை மூடிக்கொள்ளாதிரும்.
    உதவி கேட்கும் என் கூக்குரலுக்கு நீர் பதிலளிக்காதிருந்தால் கல்லறைக்குச் சென்ற பிணத்தைக் காட்டிலும் நான் மேலானவனில்லை என எண்ணுவேன்.
கர்த்தாவே, என் கரங்களை உயர்த்தி, உமது மகா பரிசுத்த இடத்திற்கு நேராக ஜெபம் செய்வேன்.
    உம்மை நோக்கி நான் கூப்பிடும்போது செவிகொடும். எனக்கு இரக்கம் காட்டும்.
கர்த்தாவே, தீமை செய்யும் தீயோரைப் போல என்னை எண்ணாதேயும்.
    “ஷாலோம்” என்று அவர்கள் தங்கள் அயலாரை வாழ்த்துவார்கள்.
    ஆனால் அவர்களைக் குறித்துத் தீயவற்றைத் தங்கள் இருதயங்களில் எண்ணுகிறார்கள்.
கர்த்தாவே, அவர்கள் பிறருக்குத் தீய காரியங்களைச் செய்வார்கள்.
    எனவே அவர்களுக்குத் தீங்கு வரச்செய்யும்.
    அவர்களுக்குத் தக்க தண்டனையை நீர் கொடுத்தருளும்.
கர்த்தர் செய்யும் நல்லவற்றைத் தீயோர் புரிந்துகொள்வதில்லை.
    தேவன் செய்யும் நல்ல காரியங்களை அவர்கள் பார்ப்பதில்லை.
அவர்கள் அதைப் புரிந்துகொள்வதில்லை.
    அவர்கள் அழிக்க மட்டுமே முயல்வார்கள்.

கர்த்தரைத் துதிப்பேன்,
    இரக்கம் காட்டுமாறு கேட்ட என் ஜெபத்தை அவர் கேட்டார்.
கர்த்தரே என் பெலன், அவரே என் கேடகம்.
    அவரை நம்பினேன்.
அவர் எனக்கு உதவினார்.
    நான் மிகவும் மகிழ்கிறேன்!
    அவரைத் துதித்துப் பாடல்களைப் பாடுவேன்.
கர்த்தர் தாம் தேர்ந்தெடுத்தவனைக் காக்கிறார்.
    கர்த்தர் அவனை மீட்கிறார். கர்த்தரே அவன் பெலன்.

தேவனே, உம் ஜனங்களை மீட்டருளும்.
    உமது ஜனங்களை ஆசீர்வதியும்!
அவர்களை வழி நடத்தி என்றென்றும் கனப்படுத்தும்!

சங்கீதம் 36

இராகத் தலைவனுக்கு, கர்த்தருடைய ஊழியனாகிய தாவீது கொடுத்த பாடல்.

36 தீயவன் ஒருவன் தனக்குள், “நான் தேவனுக்கு பயப்படவோ, அவரை மதிக்கவோமாட்டேன்” எனக் கூறும்போது
    அவன் மிகத்தீமையான காரியத்தைச் செய்கிறான்.
அம்மனிதன் தனக்குத்தானே பொய் பேசுகிறான்.
    அம்மனிதன் தனது சொந்த தவறுகளைப் பார்ப்பதில்லை.
    எனவே அவன் மன்னிப்பும் கேட்பதில்லை.
அவன் வார்த்தைகள் பயனற்ற பொய்களாகும்.
    அவன் ஞானம் பெறவுமில்லை, நல்லதைச் செய்யக் கற்றுக்கொள்ளவுமில்லை.
இரவில், அவன் தீய செயல்களைத் திட்டமிடுகிறான்.
    எழுந்து, நல்லவற்றைச் செய்வதில்லை.
    ஆனால் தீயவற்றைச் செய்வதற்கு அவன் மறுப்பதில்லை.

கர்த்தாவே, உமது உண்மை அன்பு வானத்திலும் உயர்ந்தது.
    உம் நேர்மை மேகங்களிலும் உயர்ந்தது.
கர்த்தாவே, உமது நன்மை உயரமான மலைகளைக் காட்டிலும் உயர்ந்தது.
    உமது நியாயம் ஆழமான சமுத்திரத்திலும் ஆழமானது.
    கர்த்தாவே, நீர் மனிதனையும் மிருகங்களையும் காப்பாற்றுகிறீர்.
உமது அன்பான இரக்கத்தைக் காட்டிலும் விலையுயர்ந்தது எதுவுமில்லை.
    ஜனங்கள் உம்மிடத்தில் அடைக்கலம் புகுகின்றனர்.
    உமது கருணையான பாதுகாப்பில் மகிழ்கிறார்கள்.
கர்த்தாவே, உம் வீட்டின் நற்காரியங்களால் அவர்கள் புதுவலிமை பெறுகிறார்கள்.
    அற்புதமான நதியிலிருந்து அவர்களைப் பருகப்பண்ணுவீர்.
கர்த்தாவே, ஜீவஊற்று உம்மிடமிருந்து புறப்படுகிறது.
    உமது வெளிச்சம் நாங்கள் ஒளியைக் காண உதவுகிறது.

10 கர்த்தாவே, உம்மை உண்மையில் அறியும் ஜனங்களைத் தொடர்ந்து நேசியும்.
    உமக்கு உண்மையாயிருக்கிற அந்த ஜனங்களுக்கு உமது நன்மை எப்போதும் இருக்கட்டும்.
11 கர்த்தாவே, பெருமை நிரம்பியோர் என்னை அகப்படுத்தாதிருக்கட்டும்.
    தீயவர்கள் என்னைப் பிடிக்கவிடாதிரும்.

12 “துன்மார்க்கர் இங்கே விழுந்து நசுக்கப்பட்டனர்.
    அவர்கள் மீண்டும் எழுந்திருப்பதில்லை” என்பதை அவர்கள் கல்லறைகளில் பொறித்து வையுங்கள்.

சங்கீதம் 39

எதுதூன் என்னும் தலைவனுக்கு தாவீதின் பாடல்.

39 நான், “நான் கூறும் காரியங்களில் கவனமாக இருப்பேன்.
    என் நாவினால் நான் பாவம் செய்யாதபடி நான் தீய ஜனங்களின் அருகே இருக்கையில் வாய்மூடி மௌனமாக இருப்பேன்” என்றேன்.
நான் பேச மறுத்தேன்.
    நான் எதையும் கூறவில்லை.
    ஆனால் உண்மையில் கலங்கிப் போனேன்.
நான் மிகவும் கோபமடைந்தேன்.
    அதை நினைக்கும்போதெல்லாம் என் கோபம் பெருகியபடியால், நான் ஏதோ கூறினேன்.
கர்த்தாவே, எனக்கு என்ன நேரிடும்?
    எத்தனை காலம் நான் வாழ்வேன் என எனக்குச் சொல்லும்.
    என் ஆயுள் எவ்வளவு குறுகியதென எனக்குத் தெரியப்படுத்தும்.
கர்த்தாவே, எனக்கு அற்ப ஆயுளைக் கொடுத்தீர்.
    என் ஆயுள் உமக்குப் பொருட்டல்ல.
    ஒவ்வொருவனின் ஆயுளும் மேகத்தைப் போன்றது.
    ஒருவனும் நிரந்தரமாக வாழ்வதில்லை!

நாம் வாழும் வாழ்க்கை கண்ணாடியில் காணும் தோற்றத்தைப் போன்றது.
    நமது தொல்லைகளுக்குக் காரணமேதுமில்லை.
நாம் பொருள்களைச் சேர்த்து வைக்கிறோம்.
    ஆனால் யார் அதை அனுபவிப்பாரென்பதை நாம் அறியோம்.

எனவே, ஆண்டவரே, நான் வேறு எதிலும் நம்பிக்கை வைக்கவில்லை.
    நீரே என் நம்பிக்கை!
கர்த்தாவே, நான் செய்த தீய செயல்களிலிருந்து என்னைக் காப்பாற்றும்.
    ஒரு துன்மார்க்கனைப் போல நான் நடத்தப்பட அனுமதியாதிரும்.
நான் என் வாயைத் திறந்து, எதையும் கூறப்போவதில்லை.
    கர்த்தாவே, செய்ய வேண்டியதை நீர் செய்தீர்.
10 தேவனே, என்னைத் தண்டிப்பதை நிறுத்தும்.
    நீர் நிறுத்தாவிட்டால் நான் அழிந்துபோவேன்.
11 கர்த்தாவே, ஜனங்கள் தவறு செய்வதனால் நீர் தண்டிக்கிறீர்.
    நேர்மையான வாழ்க்கை வாழ போதிக்கிறீர்.
பூச்சி துணியை அரிப்பதுபோல் ஜனங்கள் நேசிக்கிறவற்றை அழிக்கிறீர்.
    எங்களுடைய வாழ்க்கை விரைவில் மறையும் சிறு மேகம் போன்றது.

12 கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும்.
    நான் உம்மை நோக்கிக் கூப்பிடும் வார்த்தைகளைக் கவனியும்.
என் கண்ணீரைப் பாரும்.
    உம்மோடு வாழ்க்கையைத் தாண்டிச் செல்கிற ஒரு பயணியாகவே நான் இருக்கிறேன்.
    என் முற்பிதாக்களைப்போல சில காலம் மட்டுமே இங்கு நான் வாழ்கிறேன்.
13 கர்த்தாவே, என்னிடம் பொருமையாயிரும்,
    நான் மரிக்கும் முன்பு மகிழ்ச்சியாக இருக்கட்டும்.

ஆதியாகமம் 9:1-17

புதிய துவக்கம்

தேவன் நோவாவையும் அவனது பிள்ளைகளையும் ஆசீர்வதித்தார். தேவன் அவர்களிடம், “குழந்தைகளைப் பெற்று, ஜனங்களால் இப்பூமியை நிரப்புங்கள். பூமியிலுள்ள அனைத்து மிருகங்களும், வானத்திலுள்ள அனைத்து பறவைகளும், தண்ணீரிலுள்ள அனைத்து மீன்களும், பிற அனைத்து ஊர்வனவும் உங்களைக் கண்டு அஞ்சும், அவை உங்கள் அதிகாரத்திற்குள் இருக்கும். கடந்த காலத்தில் பச்சையான தாவரங்களை உங்களுக்கு உணவாகக் கொடுத்தேன். இப்போது அனைத்து மிருகங்களும் உங்களுக்கு உணவாகட்டும். உலகிலுள்ள அனைத்தும் உங்களுக்காகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் உங்களுக்கு ஒரு ஆணை இடுகிறேன். இறைச்சியை அதின் உயிராகிய இரத்தத்துடன் உண்ணாதீர்கள். நான் உங்களது உயிருக்காக உங்களது இரத்தத்தைக் கேட்பேன். அதாவது ஒரு மனிதனைக் கொல்லுகிற விலங்கின் இரத்தத்தைக் கேட்பேன். மேலும் மற்றொரு மனிதனைக் கொல்லுகிற மனிதனின் இரத்தத்தைக் கேட்பேன்.

“தேவன் மனிதனைத் தமது சாயலாகவேப் படைத்தார்.
    எனவே மற்றவனைக் கொல்லுகிற எவனும் இன்னொருவரால் கொல்லப்பட வேண்டும்.

“நோவா, நீயும் உன் குமாரர்களும் குழந்தைகளைப் பெற்று, உங்கள் ஜனங்களால் பூமியை நிரப்புங்கள்” என்றார்.

பிறகு தேவன் நோவாவிடமும் அவனது பிள்ளைகளிடமும், “நான் உங்களோடும் உங்களுக்குப் பின்னுள்ள வாரிசுகளோடும், 10 உங்களோடு கப்பலிலே இருந்த பறவைகளோடும் மிருகங்களோடும் ஊர்வனவற்றோடும் பூமியில் உள்ள அனைத்து உயிர்களோடும் எனது உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொள்கிறேன். 11 வெள்ளப்பெருக்கால் பூமியில் உள்ள அனைத்து உயிர்களும் அழிக்கப்பட்டன. ஆனால் மீண்டும் இது போல் நடைபெறாது. இன்னொரு வெள்ளப் பெருக்கு பூமியில் உள்ள உயிர்களை அழிக்காது” என்றார்.

12 மேலும் தேவன், “உங்களுக்குக் கொடுத்த வாக்குறுதிக்கு அடையாளமாக ஒன்றை உங்களுக்குத் தருகிறேன். உன்னோடும் பூமியில் வாழும் ஒவ்வொரு உயிரோடும் நான் செய்துகொண்ட உடன்படிக்கைக்கு அது அத்தாட்சியாக இருக்கும். இந்த உடன்படிக்கை இனிவரும் எல்லாக் காலத்துக்கும் உரியதாக இருக்கும். இதுவே அந்த அத்தாட்சி. 13 மேகங்களுக்கு இடையே ஒரு வானவில்லை உருவாக்கி உள்ளேன். எனக்கும் பூமிக்குமான உடன்படிக்கைக்கு இதுவே அத்தாட்சி. 14 பூமிக்கு மேலாய் மேகங்களைக் கொண்டு வரும்போதெல்லாம் நீங்கள் அதில் வானவில்லைப் பார்க்கலாம். 15 வானவில்லைப் பார்க்கும்போதெல்லாம் நான் எனக்கும் உங்களுக்கும் மற்ற உயிர்களுக்கும் இடையில் ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கையை நினைத்துக்கொள்வேன். அந்த உடன்படிக்கை இனி ஒரு வெள்ளப் பெருக்கு உலகில் தோன்றி இங்குள்ள உயிர்களை அழிக்காது என்று கூறுகிறது. 16 மேகங்களுக்கிடையில் நான் வானவில்லைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கும் பூமியின் மீதுள்ள அனைத்து உயிர்களுக்குமிடையிலான நிரந்தரமான உடன்படிக்கையை நினைத்துக்கொள்வேன்.”

17 “நான் பூமியில் உள்ள அனைத்து உயிர்களோடும் செய்துகொண்ட உடன்படிக்கைக்கு அத்தாட்சியாக வானவில் விளங்குகிறது” என்றார்.

எபிரேயர் 5:7-14

கிறிஸ்து பூமியில் வாழ்ந்தபோது, அவர் தேவனிடம் உரத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் பிரார்த்தனை செய்தார். மரணத்திலிருந்து அவரைக் காப்பாற்ற வல்ல ஒருவரிடம் அவர் பிரார்த்தனை செய்தார். தேவன் மீது இயேசுவுக்கு இருந்த மிகுந்த மரியாதையின் காரணமாக தேவன் அப்பிரார்த்தனையை பின்னர் கேட்டார். அவர் தேவனுடைய குமாரனாக இருந்தாலும் கூட அவர் துன்பங்களின் மூலம் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார். இயேசு முழுமையானவரான பின்னர் தமக்குக் கீழ்ப்படிகிற எல்லாருக்கும் நிரந்தர இட்சிப்பின் காரணரானார். 10 இயேசு, மெல்கிசேதேக்கைப் போன்றே பிரதான ஆசாரியராக தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

விழாதிருக்க எச்சரிக்கை

11 இதுபற்றிச் சொல்ல எங்களிடம் நிறைய காரியங்கள் இருக்கின்றன. ஆனால் அவை அனைத்தையும் உங்களுக்கு விளக்கிச் சொல்வது கடினம். ஏனெனில் புரிந்துகொள்ள முயல்வதையே நீங்கள் நிறுத்திவிட்டிருக்கிறீர்கள். 12 இப்போதைக்கு, நீங்கள் போதகராக ஆகி இருக்க வேண்டும். ஆனால் இன்னும் தேவனுடைய போதனைகள் என்னும் அடிப்படைப் பாடங்களை உங்களுக்கே யாராவது போதிக்கத் தேவையாய் இருக்கிறது. இன்னும் உங்களுக்குப் பால் உணவே தேவைப்படுகிறது. திட உணவுக்கு நீங்கள் தயாராயில்லை. (அதாவது இன்னும் கடினமான போதனைகள் அல்ல, எளிய போதனைகளே உங்களுக்குத் தேவைப்படுகிறது). 13 இன்னும் பால் தேவையாய் இருக்கிற குழந்தையைப்போல் அடிப்படைப் போதனை தேவையாய் இருக்கிற ஒருவன் சரியாக வாழ்வது பற்றிய சிரமமான போதனைகளைப் புரிந்துகொள்ள முடியாது. ஏனெனில் அவன் இன்னும் ஒரு குழந்தையே! 14 திட உணவானது குழந்தைப் பருவத்தைத் தாண்டியவர்களுக்கு உரியது. நன்மை மற்றும் தீமை இரண்டுக்கும் இடையிலான வித்தியாசத்தை அனுபவத்தின் வாயிலாக அடையாளம் கண்டுகொள்ள அவர்களுக்குப் பயிற்சியளிக்கப்பட்டிருக்கிறது.

யோவான் 3:16-21

16 “ஆம்! தேவன் இவ்வுலகினைப் பெரிதும் நேசித்தார். எனவே தனது ஒரே குமாரனை இதற்குத் தந்தார். தேவன் தன் குமாரனைத் தந்ததால் அவரில் நம்பிக்கை வைக்கிற எவரும் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனைப் பெறுவர். 17 தேவன் தன் குமாரனை உலகிற்கு அனுப்பினார். உலகின் குற்றங்களை நியாயம் விசாரிக்க தனது குமாரனை அனுப்பவில்லை. இவ்வுலகம் தேவனுடைய குமாரனால் இரட்சிக்கப்படுவதற்கென்று தேவன் தன் குமாரனை அனுப்பினார். 18 தேவகுமாரன் மீது நம்பிக்கை வைக்கிறவர்கள் தண்டிக்கப்படுவதில்லை. ஆனால், அவர் மீது நம்பிக்கைகொள்ளாதவர்கள் ஏற்கெனவே தண்டிக்கப்பட்டுவிட்டார்கள். ஏன்? ஏனென்றால் அவர்களுக்கு தேவனுடைய ஒரே குமாரன் மீது நம்பிக்கை இல்லை. 19 இந்த உலகத்துக்கு ஒளி (நன்மை) வந்திருக்கிறது. ஆனால் அந்த ஒளியை மக்கள் விரும்பவில்லை. அவர்கள் இருளை (பாவத்தை) விரும்பினார்கள். ஏனென்றால் அவர்கள் தீய செயல்களைச் செய்துகொண்டிருந்தார்கள். இந்த உண்மையை வைத்தே அவர்கள் நியாயம் விசாரிக்கப்படுகிறார்கள். 20 தீமைகளைச் செய்கிற ஒவ்வொரு மனிதனும் ஒளியை வெறுக்கிறான். அவன் வெளிச்சத்துக்குள் வரமாட்டான். ஏனென்றால் ஒளி அவன் செய்த தீமைகளை வெளிப்படுத்திக்காட்டும். 21 ஆனால் உண்மை வழியைப் பின்தொடர்ந்து செல்கிறவர்கள் ஒளியிடம் வந்தடைகிறார்கள். பிறகு, அந்த ஒளி அவர்கள் செய்த செயல்கள் தேவன் மூலமாகச் செய்த நற்செயல்கள் எனக் காட்டும்[a] என்று இயேசு கூறினார்.”

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center