Print Page Options
Previous Prev Day Next DayNext

Book of Common Prayer

Daily Old and New Testament readings based on the Book of Common Prayer.
Duration: 861 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 70-71

ஜனங்கள் நினைவுக்கு உதவும்படியாக இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த பாடல்களில் ஒன்று.

70 தேவனே, என்னை மீட்டருளும்!
    தேவனே விரைந்து எனக்கு உதவும்!
ஜனங்கள் என்னைக் கொல்ல முயல்கிறார்கள்.
    அவர்கள் ஏமாற்றமடையச் செய்யும்!
ஜனங்கள் என்னை ஏளனம் செய்தார்கள்.
    அவர்கள் விழுந்து வெட்கமடைவார்கள் என நம்புகிறேன்.
உம்மைத் தொழுதுகொள்ளும் ஜனங்கள் மிகவும் மகிழ்ச்சிக்கொள்வார்கள் என நம்புகிறேன்.
    உமது உதவியை வேண்டும் (நாடும்) ஜனங்கள் எப்போதும் உம்மைத் துதிக்க முடியும் என நம்புகிறேன்.

நான் ஏழையான, உதவியற்ற மனிதன்.
    தேவனே, விரைந்து வந்து என்னை மீட்டருளும்!
தேவனே, நீர் மட்டுமே என்னைக் காப்பாற்ற முடியும்.
    மிகவும் தாமதியாதேயும்!

71 கர்த்தாவே, நான் உம்மை நம்புகிறேன்,
    எனவே நான் என்றும் ஏமாற்றமடையமாட்டேன்.
உமது நல்ல செயலினால், நீர் என்னை மீட்பீர். நீர் என்னைக் காப்பாற்றுவீர்.
    நான் சொல்வதைக் கேளும், என்னை மீட்டருளும்.
பாதுகாப்பிற்காக ஓடிவரக்கூடிய புகலிடமான அரணாக நீர் எனக்கு இரும்.
    நீர் என் கன்மலை என் பாதுகாப்பிடம்.
எனவே என்னைக் காப்பதற்குரிய ஆணையைக் கொடும்.
என் தேவனே, கெட்ட ஜனங்களிடமிருந்து என்னை மீட்டருளும்.
    கொடியோரும் தீயோருமான ஜனங்களிடமிருந்து என்னை மீட்டருளும்.
என் ஆண்டவரே, நீரே என் நம்பிக்கை.
    நான் சிறுவனாக இருந்தபோதே உம்மை நம்பினேன்.
நான் பிறப்பதற்கு முன்பிருந்தே உம்மையே சார்ந்திருக்கிறேன்.
    என் தாயின் கருவில் இருந்தபோதே நான் உம்மைச் சார்ந்திருந்தேன்.
    நான் உம்மிடம் எப்போதும் ஜெபம் பண்ணினேன்.

நீரே என் பெலத்தின் இருப்பிடம்.
    எனவே நான் பிற ஜனங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டானேன்.
நீர் செய்யும் அற்புதமான காரியங்களைக் குறித்து நான் எப்போதும் பாடிக்கொண்டிருக்கிறேன்.
நான் வயது முதிர்ந்தவனாகிவிட்டதால் என்னைத் தள்ளிவிடாதேயும்.
    என் பெலனை நான் இழக்கையில் என்னை விட்டுவிடாதேயும்.
10 என் பகைவர்கள் எனக்கெதிராகத் திட்டங்கள் வகுத்தார்கள்.
    அந்த ஜனங்கள் உண்மையிலேயே ஒருமித்துச் சந்தித்தார்கள், அவர்கள் என்னைக் கொல்லத் திட்டமிட்டார்கள்.
11 என் பகைவர்கள், “போய் அவனைப் பிடியுங்கள்!
    தேவன் அவனைக் கைவிட்டார்.
    அவனுக்கு ஒருவரும் உதவமாட்டார்கள்” என்றனர்.

12 தேவனே, நீர் என்னை விட்டு விலகாதேயும்!
    தேவனே, விரையும்! வந்து என்னைக் காப்பாற்றும்!
13 என் பகைவர்களைத் தோற்கடியும்!
    அவர்களை முழுமையாக அழித்துவிடும்.
அவர்கள் என்னைத் தாக்க முயல்கிறார்கள்.
    அவர்கள் வெட்கமும் இகழ்ச்சியும் அடைவார்கள் என நான் நம்புகிறேன்.
14 பின் நான் உம்மை எப்போதும் நம்புவேன்.
    நான் உம்மை மென்மேலும் துதிப்பேன்.
15 நீர் எவ்வளவு நல்லவர் என்பதை நான் ஜனங்களுக்குக் கூறுவேன்.
    நீர் என்னை மீட்ட காலங்களைக் குறித்து நான் ஜனங்களுக்குக் கூறுவேன்.
    எண்ண முடியாத பல காலங்கள் உள்ளன.
16 என் ஆண்டவராகிய கர்த்தாவே, உமது பெருமையைப்பற்றி நான் கூறுவேன்.
    உம்மையும் உமது நற்குணங்களையும் நான் பேசுவேன்.

17 தேவனே, நான் சிறுவனாக இருக்கையிலேயே நீர் எனக்குப் போதித்துள்ளீர்.
    இன்றுவரை நீர் செய்துள்ள அற்புதமான காரியங்களைக் குறித்து நான் ஜனங்களுக்குக் கூறியுள்ளேன்.
18 இப்போது நான் வயது முதிர்ந்தவன், என் தலைமுடி நரைத்துவிட்டது.
    ஆனாலும் தேவனே, நீர் என்னை விட்டுவிடமாட்டீர் என்பதை நான் அறிவேன்.
    உமது வல்லமையையும், பெருமையையும் ஒவ்வொரு புதிய தலைமுறையினருக்கும் நான் சொல்லுவேன்.

19 தேவனே, உமது நன்மை வானங்களுக்கும் மேலாக எட்டுகிறது.
    தேவனே, உம்மைப் போன்ற தேவன் வேறொருவருமில்லை.
    நீர் அற்புதமான காரியங்களைச் செய்திருக்கிறீர்.
20 தொல்லைகளையும் தீயகாலங்களையும் நான் காணச் செய்தீர்.
    ஆனாலும் அவை எல்லாவற்றினின்றும் நீர் என்னை மீட்டு, உயிரோடு வைத்தீர்.
    எத்தனை ஆழத்தில் மூழ்கியும் தொல்லைகளிலிருந்து நீர் என்னைத் தூக்கி நிறுத்தினீர்.
21 முன்னிலும் பெரியக் காரியங்களைச் செய்ய, நீர் எனக்கு உதவும்.
    தொடர்ந்து எனக்கு ஆறுதல் அளியும்.

22 வீணையை மீட்டி, நான் உம்மைத் துதிப்பேன்.
    என் தேவனே, நீர் நம்பிக்கைக் குரியவர் என்பதைப் பாடுவேன்.
இஸ்ரவேலின் பரிசுத்தருக்காக,
    என் சுரமண்டலத்தில் பாடல்களை இசைப்பேன்.
23 நீர் என் ஆத்துமாவைக் காத்தீர். என் ஆத்துமா மகிழ்ந்திருக்கும்.
    என் உதடுகளால் துதிப்பாடல்களை நான் பாடுவேன்.
24 எப்போதும் உமது நன்மையை என் நாவு பாடும்.
    என்னைக் கொல்ல விரும்பிய ஜனங்கள், தோற்கடிக்கப்பட்டு இகழ்ச்சி அடைவார்கள்.

சங்கீதம் 74

ஆசாபின் ஒரு மஸ்கீல்.

74 தேவனே, என்றென்றும் நீர் எங்களைவிட்டு விலகினீரா?
    உமது ஜனங்களிடம் நீர் இன்னும் கோபமாயிருக்கிறீரா?
பல்லாண்டுகளுக்கு முன் நீர் மீட்டுக்கொண்ட உமது ஜனங்களை நினைவுகூரும்.
    நீர் எங்களை மீட்டீர். நாங்கள் உமக்குச் சொந்தமானவர்கள்.
நீர் வாழ்ந்த இடமாகிய சீயோன் மலையை நினைவுகூரும்.
தேவனே, பழைமையான இந்த இடிபாடுகளுக்கு மத்தியில் நீர் நடந்துவாரும்.
    பகைவன் அழித்த பரிசுத்த இடத்திற்குத் திரும்ப வாரும்.

ஆலயத்தில் பகைவர்கள் தங்கள் யுத்த ஆரவாரத்தைச் செய்தார்கள்.
    போரில் தங்கள் வெற்றியைக் குறிப்பதற்கு ஆலயத்தில் அவர்கள் தங்கள் கொடிகளை ஏற்றினார்கள்.
பகைப்படை வீரர்கள்
    கோடரியால் களைகளை அழிக்கும் ஜனங்களைப் போன்றிருந்தார்கள்.
தேவனே, அவர்கள் தங்கள் கோடாரிகளையும், சம்மட்டிகளையும் பயன்படுத்தி,
    உமது ஆலயத்தில் மரத்தினாலான சித்திர வேலைப்பாடுகளை நாசம் செய்தார்கள்.
அந்த வீரர்கள் உமது பரிசுத்த இடத்தை எரித்துவிடடார்கள்.
    அந்த ஆலயம் உமது நாமத்தின் மகிமைக்காகக் கட்டப்பட்டது.
    அவர்கள் அதைத் தரையில் விழும்படி இடித்துத் தள்ளினார்கள்.
பகைவன் எங்களை முழுமையாக அழிக்க முடிவு செய்தான்.
    தேசத்தின் ஒவ்வொரு பரிசுத்த இடத்தையும் அவர்கள் எரித்தார்கள்.
எங்களுக்கான அடையாளங்கள் எதையும் நாங்கள் காண முடியவில்லை.
    எந்தத் தீர்க்கதரிசிகளும் இங்கு இல்லை.
    யாருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை.
10 தேவனே, எத்தனைக் காலம்வரைக்கும் பகைவன் எங்களைப் பரிகாசம் பண்ணுவான்?
    உமது நாமத்தை அவர்கள் என்றென்றும் இழிவுபடுத்த நீர் அனுமதிப்பீரா?
11 தேவனே, நீர் ஏன் எங்களைக் கடுமையாகத் தண்டிக்கிறீர்?
    நீர் உமது மிகுந்த வல்லமையைப் பயன்படுத்தி, எங்களை முற்றிலும் அழித்துவிட்டீர்.

12 தேவனே, நீண்டகாலம் நீரே எங்கள் ராஜாவாக இருந்தீர்.
    இத்தேசத்தில் பல போர்களில் வெல்ல நீர் எங்களுக்கு உதவினீர்.
13 தேவனே, நீர் மிகுந்த வல்லமையைப் பயன்படுத்தி
    செங்கடலைப் பிளக்கச் செய்தீர்.
14 கடலின் பெரிய விலங்குகளை நீர் தோற்கடித்தீர்!
    லிவியாதானின் தலைகளை நீர் சிதைத்துப்போட்டீர்.
    பிற விலங்குகள் உண்ணும்படி அதன் உடலை விட்டுவிட்டீர்.
15 நீர் நீரூற்றுக்களும் நதிகளும் பாயும்படி செய்கிறீர்.
    நதிகள் உலர்ந்து போகும்படியும் செய்கிறீர்.
16 தேவனே, நீர் பகலை ஆளுகிறீர்.
    நீர் இரவையும் ஆளுகிறீர். நீர் சந்திரனையும் சூரியனையும் உண்டாக்கினீர்.
17 பூமியிலுள்ள ஒவ்வொன்றிற்கும் நீர் எல்லையை வகுத்தீர்.
    நீர் கோடையையும் குளிர் காலத்தையும் உண்டாக்கினீர்.

18 தேவனே, இவற்றை நினைவுகூரும். பகைவன் உம்மை இழிவுபடுத்தினான் என்பதை நினைவு கூரும்.
    அம்மூடர்கள் உமது நாமத்தை வெறுக்கிறார்கள்.
19 அக்கொடிய விலங்குகள் உமது புறாவை எடுத்துக்கொள்ளவிடாதேயும்!
    என்றென்றும் உமது ஏழை ஜனங்களை மறந்துவிடாதேயும்.
20 நமது உடன்படிக்கையை நினைவுகூரும்!
    இத்தேசத்தின் ஒவ்வொரு இருண்ட இடத்திலும் கொடுமை நிகழ்கிறது.
21 தேவனே, உமது ஜனங்கள் மோசமாக நடத்தப்பட்டார்கள்.
    இனிமேலும் அவர்கள் துன்புறாதபடி பாரும். உமது திக்கற்ற, ஏழை ஜனங்கள் உம்மைத் துதிப்பார்கள்.

22 தேவனே, எழுந்து போரிடும்!
    அம்மூடர்கள் உம்மோடு போட்டியிடுகிறார்கள் என்பதை நினைவுகூரும்.
23 உமது பகைவர்களின் கூக்குரலை மறவாதேயும்.
    மீண்டும், மீண்டும் அவர்கள் உம்மை இழிவுப்படுத்தினார்கள்.

2 சாமுவேல் 4

சவுலின் குடும்பத்திற்குத் தொல்லைகள்

எப்ரோனில் அப்னேர் மரித்தான் என்பதை சவுலின் குமாரனான இஸ்போசேத் கேள்விப்பட்டான். இஸ்போசேத்தும் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் மிகவும் அச்சம் கொண்டனர். சவுலின் குமாரனாகிய இஸ்போசேத்தைப் பார்ப்பதற்கு இருவர் சென்றனர். அவர்கள் படைத்தலைவர்களாக இருந்தனர். அவர்கள் ரிம்மோனின் குமாரர்களாகிய, ரேகாபும், பானாவும் ஆவார்கள். (ரிம்மோன் பேரோத்தைச் சேர்ந்தவன். பென்யமீன் கோத்திரத்திற்கு உரிய நகரமாக பேரோத் இருந்ததால் அவர்கள் பென்யமீனியர் ஆவார்கள். ஆனால் பேரோத்தின் ஜனங்கள் கித்தாயீமிற்கு ஓடிவிட்டனர். அவர்கள் இன்றும் அங்கேயே வசித்து வருகின்றனர்.)

சவுலின் குமாரனாகிய யோனத்தானுக்கு மேவிபோசேத் என்னும் பெயருள்ள குமாரன் இருந்தான். சவுலும் யோனத்தானும் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தி யெஸ்ரயேலிலிருந்து வந்தபோது மேவிபோசேத்திற்கு ஐந்து வயது ஆகியிருந்தது. பகைவர்கள் வருவார்கள் என எதிர்பார்த்ததால் மேவிபோசேத்தை வளர்த்த தாதி பெண் அச்சம் கொண்டாள். எனவே அவள் அவனைத் தூக்கிக்கொண்டு ஓடினாள். அவ்வாறு ஓடியபோது அவள் குழந்தையைத் தவறி போட்டுவிட்டாள். எனவே அவனது இரண்டு கால்களும் முடமாயின.

பேரோத்திலுள்ள ரிம்மோனின் குமாரர்களாகிய ரேகாபும், பானாவும் இஸ்போசேத்தின் வீட்டிற்கு நண்பகலில் சென்றார்கள். வெப்பம் மிகுதியாக இருந்ததால் இஸ்போசேத் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தான். 6-7 கோதுமை எடுக்க வந்தவர்களைப் போன்று ரேகாபும் பானாவும் வீட்டிற்குள் புகுந்தனர். படுக்கையறையில் இஸ்போசேத் சாய்ந்திருந்தான். அவனை ரேகாபும் பானாவும் குத்திக் கொன்றார்கள். பின் அவனது தலையை வெட்டி எடுத்துக் கொண்டு யோர்தான் பள்ளத்தாக்கு வழியாக இரவு முழுவதும் பயணம் செய்தனர். அவர்கள் எப்ரோனை வந்தடைந்தனர். இஸ்போசேத்தின் தலையை தாவீதிடம் கொடுத்தனர்.

ரிம்மோனின் பிள்ளைகளாகிய ரேகாபும் பானாவும் தாவீது ராஜாவை நோக்கி, “இதோ உம்மைக் கொல்ல முயன்ற உமது பகைவனாகிய சவுலின் குமாரன் இஸ்போசேத்தின் தலை, உமக்காக இன்று கர்த்தர் சவுலையும் அவனது குடும்பத்தாரையும் தண்டித்துள்ளார்” என்றனர்.

ஆனால் தாவீது ரேகாபையும் அவனது சகோதரன் பானாவையும் நோக்கி, “கர்த்தர் உயிரோடிருப்பது எவ்வளவு நிச்சயமோ, அவ்வாறே அவர் என்னைத் தொல்லைகளிலிருந்து விடுவித்ததும் நிச்சயம். 10 ஆனால் முன்பொருமுறை ஒருவன் எனக்கு ஏதோ நற்செய்தி கொண்டுவருவதாக எண்ணினான். அவன் என்னிடம், ‘பாருங்கள் சவுலை கொன்றதினால் மரித்துவிட்டான்’ என்றான். அச்செய்தியைக் கொண்டு வந்ததற்காக ஏதேனும் பரிசளிப்பேன் என்று அவன் எண்ணினான். ஆனால் அம்மனிதனைப் பிடித்து சிக்லாக் என்னும் இடத்தில் அவனைக் கொன்றேன். 11 எனவே உன்னையும் நான் கொன்று இத்தேசத்திலிருந்து அகற்றவேண்டும். ஏனெனில் துஷ்டராகிய நீங்கள் ஒரு நல்ல மனிதனை வீட்டிற்குள், அவனது படுக்கையில் உறங்கிக்கொண்டிருக்கும்போது கொன்றீர்கள்” என்றான்.

12 எனவே ரேகாபையும் பானாவையும் கொல்லும்படி தனது இளம் வீரர்களுக்கு தாவீது கட்டளையிட்டான். அந்த இளம் வீரர்கள் ரேகாப், பானா ஆகியோரின் கைகளையும் கால்களையும் வெட்டி எப்ரோன் குளத்தருகே தொங்கவிட்டார்கள். பின் அவர்கள் இஸ்போசேத்தின் தலையை எடுத்து எப்ரோனில் அப்னேர் புதைக்கப்பட்ட இடத்திலேயே புதைத்தார்கள்.

அப்போஸ்தலர் 16:25-40

25 நள்ளிரவில் பவுலும், சீலாவும் பிரார்த்தனை செய்துகொண்டும் தேவனை நோக்கி துதிப்பாடல்களைப் பாடிக்கொண்டுமிருந்தனர். மற்ற சிறைக் கைதிகள் அவர்களைக் கவனித்தவண்ணமிருந்தனர். 26 திடீரென்று ஒரு பெரிய பூமியதிர்ச்சி உண்டாயிற்று. சிறையின் அஸ்திபாரத்தை அசைக்கும்படியாக அது பலமாக இருந்தது. பின் சிறைச் சாலையின் கதவுகள் எல்லாம் திறந்தன. எல்லா கைதிகளும் அவர்களது விலங்குகளிலிருந்து விடுபட்டனர். 27 சிறையதிகாரி விழித்தெழுந்தான். சிறைக் கதவுகள் திறந்திருப்பதை அவன் கண்டான். சிறைக் கைதிகள் ஏற்கெனவே தப்பித்துப் போயிருக்க வேண்டுமென அவன் நினைத்தான். எனவே சிறையதிகாரி தன் வாளை உருவித் தற்கொலை செய்துகொள்ள இருந்தான். 28 ஆனால் பவுல் உரக்க, “உன்னைத் துன்புறுத்திக்கொள்ளாதே. நாங்கள் எல்லோரும் இங்கு இருக்கிறோம்!” என்றான்.

29 சிறையதிகாரி விளக்குகளைக் கொண்டுவருமாறு ஒருவனுக்குப் பணித்தான். பின் அவன் உள்ளே ஓடினான். அவன் பயத்தால் நடுங்கிக்கொண்டிருந்தான். அவன் பவுல், சீலா ஆகியோர் முன்பாகக் கீழே விழுந்தான். 30 பின் அவன் அவர்களை வெளியே அழைத்து வந்து அவர்களிடம், “நான் இரட்சிப்படைய என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான்.

31 அவர்கள் அவனை நோக்கி, “கர்த்தராகிய இயேசுவில் விசுவாசமாயிரு. நீயும் உன் வீட்டாரும் இரட்சிப்பு அடைவீர்கள்” என்றார்கள். 32 எனவே பவுலும் சீலாவும் கர்த்தரின் செய்தியை சிறையதிகாரிக்கும் அவன் வீட்டிலிருந்த ஒவ்வொருவருக்கும் கூறினர். 33 சிறையதிகாரி பவுலையும் சீலாவையும் அழைத்துச் சென்று அவர்களது காயங்களைக் கழுவினான். பின் சிறையதிகாரியும் அவன் வீட்டிலிருந்த அனைவரும் ஞானஸ்நானம் பெற்றனர். 34 அதன் பிறகு சிறையதிகாரி பவுலையும் சீலாவையும் வீட்டிற்கு அழைத்துச் சென்று சாப்பாடு கொடுத்தான். அவன் வீட்டிலிருந்த அனைவரும் தேவன் மீதுகொண்ட விசுவாசத்தால் மகிழ்ந்தார்கள்.

35 மறுநாள் காலையில், தலைவர்கள் சில வீரர்களைச் சிறையதிகாரியிடம், “அம்மனிதர்களை விடுதலை செய்!” என்று கூற அனுப்பினர்.

36 சிறையதிகாரி பவுலிடம், “உங்களை விடுதலை செய்யும்படியாகக் கூறி தலைவர்கள் இந்த வீரர்களை அனுப்பியுள்ளனர். நீங்கள் போகலாம். அமைதியாகச் செல்லுங்கள்” என்று அறிவித்தான்.

37 ஆனால் பவுல் வீரரை நோக்கி, “உங்கள் தலைவர்கள் எங்களை விசாரணை செய்யவில்லை. ஆனால் மக்கள் முன்பாக அவர்கள் எங்களை அடித்துச் சிறையில் அடைத்தார்கள். நாங்கள் ரோம மக்கள். எங்களுக்கு உரிமை உள்ளது. இப்போது தலைவர்கள் நாங்கள் இரகசியமாகப் போக வேண்டுமென விரும்புகிறார்கள். முடியாது, தலைவர்களே வந்து எங்களை வெளியேற்றட்டும்!” என்றான்.

38 பவுல் கூறியவற்றை வீரர்கள் தலைவர்களுக்குக் கூறினர். பவுலும் சீலாவும் ரோம மக்கள் என்பதைத் தலைவர்கள் கேள்விப்பட்டபோது, அவர்கள் பயந்தார்கள். 39 எனவே அவர்கள் வந்து பவுலிடமும், சீலாவிடமும் தங்கள் வருத்தத்தைத் தெரிவித்தார்கள். அவர்கள் பவுலையும் சீலாவையும் சிறைக்கு வெளியே அழைத்துவந்து அவர்களை நகரத்தை விட்டுப்போகுமாறு கூறினர். 40 ஆனால் பவுலும் சீலாவும் சிறையினின்று வந்தபோது அவர்கள் லிதியாளின் வீட்டிற்குச் சென்றனர். அவர்கள் விசுவாசிகள் சிலரைக் கண்டு, அவர்களை ஆறுதல்படுத்தினார்கள். பின் பவுலும் சீலாவும் வெளியேறினர்.

மாற்கு 7:1-23

பிரமாணங்களும் மனிதரின் விதிமுறைகளும்

(மத்தேயு 15:1-20)

எருசலேமிலிருந்து சில பரிசேயர்களும், சில வேதபாரகர்களும் வந்தனர். அவர்கள் இயேசுவைச் சுற்றிக் கூடினர். இயேசுவின் சீஷர்களில் சிலர் சுத்தமற்ற கைகளால் உணவு உண்பதை அவர்கள் கவனித்தார்கள். (சுத்தமற்ற கை என்றால் பரிசேயர்கள் முறைப்படி அவர்கள் தம் கைகளைக் கழுவாமல் இருந்தனர்) பரிசேயர்களும், யூதர்களனைவரும் இத்தகு சிறப்பான முறையில் தம் கைகளைக் கழுவுவதற்கு முன்னால் உணவு உண்பதில்லை. அவர்கள் இதனை அவர்களின் முன்னோர் சொன்னபடி தொடர்ந்து செய்து வருகின்றனர். யூதர்கள் சந்தையில் ஏதாவது வாங்கும்போது, அதனைத் தனியான முறையில் கழுவிச் சுத்தப்படுத்தும் முன் அவர்கள் அதை உண்பதில்லை. இதைப்போன்று அவர்கள் பல விதிகளைத் தங்கள் முன்னோரிடமிருந்து பெற்றுக் கடைப்பிடித்தனர். கிண்ணங்கள், குடங்கள், வெண்கலப் பாத்திரங்கள் போன்றவற்றைக் கழுவுவது ஆகியவற்றைக் கடைப்பிடித்தனர்.

பரிசேயர்களும், வேதபாரகர்களும் இயேசுவிடம், “உம்முடைய சீஷர்கள் நமக்கு முன்பு வாழ்ந்த முன்னோர்களின் விதிமுறைகளைக் கைக்கொள்ளவில்லையே? உம்முடைய சீஷர்கள் சுத்தமற்ற கைகளால் தம் உணவை உண்டு வருகிறார்கள். ஏன் இவ்வாறு செய்கிறார்கள்?” என்று கேட்டனர்.

இயேசு அவர்களிடம் “நீங்கள் எல்லாரும் போலித்தனமானவர்கள். உங்களைப் பற்றி ஏசாயா சரியாகவே எழுதியிருக்கிறான். அவன் எழுதியிருப்பது:

“‘இந்த மக்கள் என்னை மதிப்பதாய்ச் சொல்கிறார்கள்,
    ஆனால் உண்மையில் அவர்கள் தம் வாழ்வில் எனக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
அவர்களின் வழிபாடு ஒரு பயனுமற்றது.
    அவர்கள் உபதேசிக்கும் விதிமுறைகள் எல்லாம் மனிதர்களால் உருவாக்கப்பட்டவை.’(A)

நீங்கள் தேவனின் கட்டளைகளைப் பின்பற்றுவதை நிறுத்தி இருக்கிறீர்கள். இப்பொழுது நீங்கள் மனிதனின் போதனைகளைக் கடைப்பிடித்து வருகிறீர்கள்” என்றார்.

மேலும் இயேசு அவர்களிடம், “நீங்கள் சமர்த்தராக இருப்பதாக நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் உங்கள் சொந்த போதனையை பின்பற்றுவதற்காக தேவனின் கட்டளைகளைப் புறக்கணித்து விட்டீர்கள். 10 ‘உங்கள் தாய்க்கும் தந்தைக்கும் மதிப்பு கொடுங்கள்’(B) என்று மோசே சொல்லி இருக்கிறான். மேலும் அவன் ‘எவன் ஒருவன் தன் தந்தையிடமோ அல்லது தாயிடமோ கெட்டவற்றைப் பேசுகிறானோ அவன் கொலை செய்யப்படத்தக்கவன்’(C) என்று கூறி இருக்கிறான். 11 ஒருவன் தன் தந்தையையோ தாயையோ நோக்கி ‘நான் உங்களுக்கு உதவக்கூடியவற்றைச் செய்ய முடியும். ஆனால் நான் உங்களுக்குச் செய்யமாட்டேன். நான் அதனைத் தேவனுக்குத் தருவேன்’ என்று சொல்ல நீங்கள் கற்றுத் தருகிறீர்கள். 12 அவன் தன் தந்தைக்கோ தாய்க்கோ எதுவும் செய்யத் தேவையில்லை என்று கற்பிக்கிறீர்கள். 13 ஆகையால் தேவன் சொன்னவற்றைச் செய்வது அவ்வளவு முக்கியமில்லை என்று சொல்லித்தருகிறீர்கள். நீங்கள் சொல்பவற்றை மக்கள் செய்தால் போதும் என்று நினைக்கிறீர்கள். நீங்கள் இது போன்று பல செயல்களைச் செய்து வருகின்றீர்கள்” என்றார்.

14 மக்களை மீண்டும் இயேசு தன்னிடம் அழைத்தார். அவர் “ஒவ்வொரு மனிதனும் எனக்குச் செவிகொடுக்க வேண்டும். நான் சொல்பவற்றைப் புரிந்துகொள்ள வேண்டும். 15 வெளியே இருந்து மனிதனுக்குள்ளே போகும் எதுவும் அவனைத் தீட்டுப்படுத்தாது. அவனது உள்ளத்தில் இருந்து வெளியே வருவதுதான் அவனைத் தீட்டுப்படுத்தும். 16 நான் சொல்வதைக் கேட்பவர்களே, கவனியுங்கள்” என்றார்.

17 பின்னர் இயேசு அந்த மக்களிடமிருந்து விலகி வீட்டிற்குள் சென்றார். இந்த உவமையைப்பற்றி அவரது சீஷர்கள் இயேசுவிடம் கேட்டனர். 18 “உங்களுக்கு புரிந்துகொள்வதில் இன்னும் சிரமங்கள் உள்ளனவா? வெளியே இருந்து மனிதனுக்குள் செல்லும் எதுவும் அவனைத் தீட்டுப்படுத்தாது என்பது புரியவில்லையா? 19 உணவானது மனிதனின் மூளைக்குள் செல்வதில்லை. உணவு வயிற்றுக்குள் தான் செல்லும். பிறகு அந்த உணவு உடம்பைவிட்டு வெளியேறிவிடும்” என்றார் இயேசு. (இயேசு இதனைக் கூறும்போது, அவர் மக்கள் உண்ணும் எந்த உணவும் அவர்களைத் தீட்டுப்படுத்தாது என்று உணர்த்தினார்.)

20 மேலும் இயேசு, “மனிதனுக்குள்ளே இருந்து வெளிவரும் எதுவும் அவனைத் தீட்டுப்படுத்திவிடுகிறது. 21 கெட்டவை எல்லாம் மனிதனுக்குள்ளே இருந்துதான் பிறக்கின்றன. அவன் மனத்தில் கெட்ட எண்ணங்கள், பாலியல் குற்றங்கள், களவு, கொலை 22 விபசாரம், சுயநலம், தீயசெயல்கள், பொய், பொறாமை, புறங்கூறுதல், பெருமை பேசுதல், மூடவாழ்க்கை போன்றவை தோன்றும். 23 இத்தகைய கெட்டவை எல்லாம் மனிதனுக்குள்ளே இருந்துதான் வருகின்றன. இத்தீயவையே மனிதனை மாசுபடுத்துபவை” என்றார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center