Print Page Options
Previous Prev Day Next DayNext

Book of Common Prayer

Daily Old and New Testament readings based on the Book of Common Prayer.
Duration: 861 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 25

தாவீதின் பாடல்

25 கர்த்தாவே, நான் என்னை உமக்கு அளிக்கிறேன்.
என் தேவனே, நான் உம்மை நம்புகிறேன். நான் வெட்கப்பட்டுப் போகமாட்டேன்.
    என் பகைவர்கள் என்னைக் கண்டு நகைப்பதில்லை.
ஒருவன் உம்மை நம்பினால் அவன் வெட்கப்பட்டுப் போகமாட்டான்.
    ஆனால் வஞ்சகர் ஏமாந்து போவார்கள்.
    அவர்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை.

கர்த்தாவே, உமது வழிகளைக் கற்றுக் கொள்ள உதவும்.
    உமது வழிகளை எனக்குப் போதியும்.
எனக்கு வழிகாட்டி உமது உண்மைகளைப் போதியும்.
    நீரே என் தேவன், என் மீட்பர்.
    அனுதினமும் நான் உம்மை நம்புகிறேன்.
கர்த்தாவே, என்னிடம் தயவாயிருக்க நினைவு கூரும்.
    எப்போதுமுள்ள உமது மென்மையான அன்பை எனக்குக் காட்டும்.
எனது பாவங்களையும் என் சிறுவயதின் தீய செயல்களையும் நினைவில் கொள்ளாதேயும்.
    கர்த்தாவே, உமது நல்ல நாமத்திற்கேற்ப, என்னை அன்பிலே நினைத்தருளும்.

கர்த்தர் உண்மையாகவே நல்லவர்.
    பாவிகளுக்கு வாழ்வதற்குரிய வழியை அவர் போதிக்கிறார்.
தாழ்மைப்பட்டவர்களுக்கு அவர் தம் வழியைப் போதிக்கிறார்.
    அவர் அந்த ஜனங்களை நியாயமாக நடத்துகிறார்.
10 அவரது உடன்படிக்கையையும், வாக்குறுதிகளையும் பின்பற்றும் ஜனங்களுக்குக்
    கர்த்தர் தயவுள்ளவரும், உண்மையுமானவர்.
11 கர்த்தாவே, நான் பிழையான காரியங்கள் பலவற்றைச் செய்தேன்.
    ஆனால் உம் நன்மை வெளிப்படும் பொருட்டு நான் செய்தவற்றையெல்லாம் மன்னித்தீர்.

12 கர்த்தரைப் பின்பற்றுவதை ஒருவன் தெரிந்துகொண்டால்
    அவன் வாழ்வதற்குரிய நல் வழியை தேவன் காட்டுவார்.
13 அம்மனிதன் நல்லவற்றை அனுபவிப்பான்.
    தேவன் வாக்களித்த தேசத்தை அவன் பிள்ளைகள் பெறுவார்கள்.
14 தன்னைப் பின்பற்றுவோருக்கு கர்த்தர் தன் இரகசியங்களைச் சொல்வார்.
    அவரைப் பின்பற்றுவோருக்குத் தமது உடன்படிக்கையைக் கற்பிக்கிறார்.
15 உதவிக்காக நான் எப்போதும் கர்த்தரை நோக்கியிருக்கிறேன்.
    தொல்லைகளிலிருந்து அவர் எப்போதும் முடிவு உண்டாக்குகிறார்.

16 கர்த்தாவே, நான் காயமுற்றுத் தனித்திருக்கிறேன்.
    என்னிடம் திரும்பி எனக்கு இரக்கத்தைக் காட்டும்.
17 என் தொல்லைகளிலிருந்து என்னை விடுவியும்.
    என் சிக்கல்களைத் தீர்க்க எனக்கு உதவும்.
18 கர்த்தாவே, என் தொல்லைகளையும், துன்பத்தையும் பாரும்.
    நான் செய்த பாவங்களையெல்லாம் மன்னியும்.
19 என் பகைவர்களையெல்லாம் பாரும்.
    அவர்கள் என்னைப் பகைத்துத் தாக்க விரும்புகிறார்கள்.
20 தேவனே, என்னைப் பாதுகாத்து மீட்டருளும்.
    நான் உம்மை நம்புகிறேன், என்னை ஏமாற்றமடையச் செய்யாதேயும்.
21 தேவனே, நீர் உண்மையாகவே நல்லவர்.
    நான் உம்மை நம்புவதால் என்னைப் பாதுகாத்தருளும்.
22 தேவனே, இஸ்ரவேல் ஜனங்களை
    அவர்களது பகைவர்கள் எல்லோரிடமிருந்தும் மீட்டுக்கொள்ளும்.

சங்கீதம் 9

முத்லபேன் என்ற இசைக்கருவியில் வாசிக்க இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்

என் முழு இருதயத்தோடும் நான் கர்த்தரைத் துதிப்பேன்.
    கர்த்தாவே, நீர் செய்த எல்லா அற்புதமான காரியங்களையும் நான் எடுத்துக் கூறுவேன்.
நீர் என்னை மிகவும் சந்தோஷப்படுத்துகிறீர்.
    உன்னதமான தேவனே, நான் உமது நாமத்தைத் துதிப்பேன்.
என் பகைவர்கள் உம்மிடமிருந்து ஓட முயன்றார்கள்.
    ஆனால் அவர்கள் விழுந்து அழிந்தார்கள்.

நீர் நல்ல நீதிபதி. உமது சிங்காசனத்தில் நீதிபதியாக அமர்ந்தீர்.
    கர்த்தாவே, என் வழக்கைக் கேட்டீர்.
    எனக்குரிய நீதியான முடிவை அளித்தீர்.
பிற ஜனங்களை நீர் கண்டித்தீர் கர்த்தாவே, நீர் அந்தத் தீயோரை அழித்தீர்.
    உயிருள்ள ஜனங்களின் பட்டியலிலிருந்து என்றென்றும் அவர்கள் பெயரை அகற்றினீர்.
பகைவன் ஒழிக்கப்பட்டான்!
    கர்த்தாவே, அவர்கள் நகரங்களை அழித்தீர், அழிந்த கட்டிடங்களே இன்று உள்ளன.
    அத்தீயோரை நினைவுபடுத்த எதுவும் இன்று இல்லை.

ஆனால் கர்த்தர் என்றென்றும் அரசாளுவார்.
    கர்த்தர் அவர் அரசை வலுவாக்குவார்.
    உலகிற்கு நியாயத்தை வழங்க அவர் இதைச் செய்தார்.
உலகில் உள்ள எல்லா ஜனங்களுக்கும் கர்த்தர் நியாயமான தீர்ப்பு வழங்குவார்.
    எல்லா நாடுகளுக்கும் நீதியோடு தீர்ப்பு வழங்குவார்.
பல குழப்பங்கள் இருப்பதால் பல ஜனங்கள் அகப்பட்டுக் காயமுற்றனர்.
    அவர்கள் தங்கள் துன்பங்களின் பாரத்தால் நசுங்குண்டு போயினர்.
    கர்த்தாவே, நீர் அவர்களுக்கு அடைக்கலமாயிரும்.

10 உமது நாமத்தை அறிந்த ஜனங்கள் உம்மை நம்பவேண்டும்.
    கர்த்தாவே, ஜனங்கள் உம்மிடம் வந்தால் அவர்களுக்கு உதவாது விடமாட்டீர்.

11 சீயோனில் வாழும் ஜனங்களே கர்த்தரைத் துதித்துப் பாடுங்கள்.
    கர்த்தர் செய்த பெரிய காரியங்களை தேசங்களில் கூறுங்கள்.
12 உதவிநாடிப் போனோரை கர்த்தர் நினைவு கூருவார்.
    அந்த ஏழை ஜனங்கள் உதவிக்காக அவரிடம் சென்றனர்.
    கர்த்தர் அவர்களை மறக்கவில்லை.
13 நான் தேவனிடம் இந்த ஜெபத்தைக் கூறினேன்:
    “கர்த்தாவே, என்னிடம் தயவாயிரும்.
    பாரும், என் பகைவர்கள் என்னைத் தாக்குகிறார்கள்.
    ‘மரணவாசலில்’ இருந்து என்னைக் காப்பாற்றும்.
14 அப்போது கர்த்தாவே, எருசலேமின் வாசல்களில் நான் உம்மைத் துதித்துப் பாடக்கூடும்.
    என்னை நீர் காப்பாற்றியதால் நான் மிகவும் மகிழ்ச்சிகொள்வேன்.”

15 பிறரை அகப்படுத்த யூதரல்லாத ஜனங்கள் குழிகளைத் தோண்டினார்கள்.
    அக்குழிகளில் அவர்களே வீழ்ந்தனர்.
    பிறரை அகப்படுத்த வலைகளை விரித்தனர். அவ்வலைகளில் அவர்களே சிக்குண்டனர்.
16 கர்த்தர் அத்தீயோரைப் பிடித்தார்.
    தீயவை செய்வோரை கர்த்தர் தண்டிப்பாரென அந்த ஜனங்கள் அறிந்துகொண்டனர்.

17 தேவனை மறக்கும் ஜனங்கள் தீயோர்கள்.
    அந்த ஜனங்கள் மரணத்தின் இடங்களுக்குச் செல்வார்கள்.
18 துன்பப்பட்ட ஜனங்களை தேவன் மறந்துவிட்டாரென சில நேரங்களில் தோன்றும்.
    அந்த ஏழைகள் நம்பிக்கையிழக்கும் நிலை வந்ததென்று தோன்றும்.
    ஆனால் தேவன் அவர்களை என்றென்றும் மறப்பதில்லை.
19 கர்த்தாவே, எழுந்து தேசங்களை நியாந்தீரும்.
    தாங்கள் வல்லமை மிகுந்தோரென ஜனங்கள் தங்களை நினையாதபடி செய்யும்.
20 ஜனங்களுக்குப் பாடம் கற்பியும்.
    அவர்கள் தாங்கள் சாதாரண மனிதப் படைப்பு மட்டுமே என்றறியச் செய்யும்.

சங்கீதம் 15

தாவீதின் பாடல்

15 கர்த்தாவே, உமது பரிசுத்த கூடாரத்தில் யார் வாழக்கூடும்?
    உமது பரிசுத்த மலைகளில் யார் வாழக்கூடும்?
தூய வாழ்க்கை வாழ்ந்து, நற்செயல்களை செய்பவனும்,
    உள்ளத்திலிருந்து உண்மையைப் பேசுபவனும் உமது மலையில் வாழமுடியும்.
அம்மனிதன் பிறரைக் குறித்துத் தீமை கூறான்.
    அம்மனிதன் அயலானுக்குத் தீங்கு செய்யான்.
    அம்மனிதன் அவன் குடும்பத்தைக் குறித்து வெட்கம் தரும் மொழிகளைச் சொல்லான்.
தேவனை வெறுப்போரை அவன் மதியான்.
    ஆனால் கர்த்தரைச் சேவிப்போரையெல்லாம் அம்மனிதன் மதிப்பான்.
அவன் அயலானுக்கு வாக்களித்தால்
    அவற்றைச் சரியாகக் கடைப்பிடிப்பான்.
அவன் கடன் கொடுத்தால், வட்டி கேளான்.
    குற்றமற்ற மனிதருக்குத் தீங்கிழைப்பதற்கு அவன் பணம் பெறான்.

அந்த நல்ல மனிதனைப்போல வாழும் ஒருவன் எப்போதும் நீங்காது தேவனுடைய அருகே இருப்பான்.

உபாகமம் 4:9-14

ஆனால் நீங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உங்கள் வாழ்நாள் முழுவதும் இவைகள் உங்கள் இதயத்திலிருந்து நீங்காதபடிக்கு காத்துக்கொள்ளுங்கள். நீங்கள் அவற்றை உங்கள் குழந்தைகளுக்கும் பேரக்குழந்தைகளுக்கும் எடுத்துக்கூற வேண்டும். 10 ஓரேப் மலையில் நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு முன்னால் நின்றதை நினைத்துப்பாருங்கள். கர்த்தர் என்னிடம், ‘நான் சொல்வதைக் கேட்க ஜனங்களை ஒன்று கூட்டு. பின்னர் அவர்கள் வாழ்நாள் முழுவதும் எனக்குப் பயந்து மதிப்பளிக்க கற்பார்கள். மேலும் இவற்றை அவர்கள் தமது குழந்தைகளுக்குக் கற்பிப்பார்கள்’என்று கூறினார். 11 நீங்கள் நெருங்கிவந்து மலையின் கீழ்ப்பகுதியில் நின்றீர்கள். தீப்பற்றி மலை வான உயரத்திற்கு எரிந்தது. கரிய மேகங்கள் சூழ்ந்து இருண்டது. 12 பின் நெருப்பிலிருந்து கர்த்தர் உங்களிடம் பேசினார். யாரோ பேசும் குரலை நீங்கள் கேட்டீர்கள். ஆனால் உருவம் எதையும் நீங்கள் பார்க்கவில்லை. குரல்மட்டுமே கேட்டது. 13 கர்த்தர் உங்களிடம் தமது உடன்படிக்கையைச் சொன்னார். அவர் பத்துக் கட்டளைகளைக் கூறி, அவற்றிற்குக் கீழ்ப்படியச் சொன்னார். அந்த உடன்படிக்கையின் சட்டங்களை கர்த்தர் இரு கற்பலகைகளில் எழுதினார். 14 அதே சமயம், நீங்கள் எடுத்துக்கொண்டு வாழப்போகும் நாடுகளில், நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய சட்டவிதிகளை உங்களுக்குப் போதிக்குமாறு எனக்குக் கட்டளையிட்டார்.

2 கொரி 1:1-11

இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பவுல் எழுதுவது, நான் அப்போஸ்தலன் ஆனேன். ஏனென்றால் நான் அவ்விதம் ஆவதையே தேவன் விரும்பினார். கிறிஸ்துவில் நமது சகோதரனாகிய தீமோத்தேயுவிடமிருந்தும்

கொரிந்து நகரின் தேவனுடைய சபைக்கும் அகாயா நாடெங்கும் உள்ள எல்லா பரிசுத்தவான்களுக்கும் எழுதுகிறதாவது,

நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.

பவுல் தேவனுக்கு நன்றி கூறுதல்

நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனை வாழ்த்துங்கள். தேவனே இரக்கம் நிறைந்த பிதா. எல்லா விதமான ஆறுதல்களுக்கும் உறைவிடம் அவர் தான். நாம் துன்பத்தில் இருக்கும் ஒவ்வொரு முறையும் அவர் ஆறுதல் வழங்குகிறார். இது எந்த வகையிலாவது மற்றவர்கள் துன்பத்தில் இருக்கும்போது நாம் ஆறுதல் வழங்கத் துணையாயிருக்கும். நம்மை தேவன் ஆறுதல்படுத்துவதைப் போலவே நாம் அவர்களையும் ஆறுதல்படுத்த வேண்டும். கிறிஸ்துவின் அநேக துன்பங்களில் நாம் பங்கு கொண்டால் கிறிஸ்துவிடமிருந்து நமக்கு மிகுந்த ஆறுதலும் கிடைக்கும். நாங்கள் தொல்லைக்குட்பட்டால் அது உங்களின் இரட்சிப்புக்காகவும் ஆறுதலுக்காகவும் தான். நாங்கள் ஆறுதல் பெற்றால் அது உங்களின் ஆறுதலுக்காகத்தான். எங்களுக்கு நேரும் தொல்லைகள் போல உங்களுக்கு நேரும் தொல்லைகளை நீங்கள் பொறுமையுடன் தாங்கிக்கொள்ள இது உதவும். உங்களுக்கான எங்கள் நம்பிக்கை பலமானது. எங்கள் துன்பங்களில் நீங்களும் பங்கு கொள்வீர்கள் என்பதை அறிவோம். எனவே, எங்கள் ஆறுதலிலும் உங்களுக்குப் பங்கு உண்டு என்பதை நாங்கள் அறிவோம்.

சகோதர சகோதரிகளே, ஆசியா நாட்டில் நாங்கள் பட்ட துன்பங்களைப் பற்றி நீங்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறோம். அங்கே எங்களுக்குப் பெரும் பாரங்கள் இருந்தன. அந்த பாரங்கள் எங்கள் பலத்தைவிட பெரிது. வாழ்க்கைப் பற்றிய நம்பிக்கையையே நாங்கள் இழந்துவிட்டோம். உண்மையாகவே நாங்கள் இறந்து போவோம் என மனதிற்குள் எண்ணினோம். நம்மீது நம்பிக்கை வைக்காமல் தேவன் மீது நம்பிக்கை வைப்பதை நாம் உணரும் பொருட்டு இது இவ்வகையில் நடந்தது. அவர் மரணத்திலிருந்து மக்களை எழுப்பியவர். 10 இது போன்ற மரண ஆபத்துகளில் இருந்து தேவன் எங்களைக் காப்பாற்றினார். அவர் தொடர்ந்து நம்மைக் காப்பாற்றுவார். நாங்கள் அவர் மீது தான் நம்பிக்கையை வைத்திருக்கிறோம். அவரே தொடர்ந்து நம்மைக் காப்பாற்றுவார். 11 நீங்கள் உங்களது பிரார்த்தனைகள் மூலம் எங்களுக்கு உதவலாம். ஏராளமான மக்கள் எங்களுக்காக நன்றி சொல்வர். அவர்களின் பிரார்த்தனைகளால் தேவன் எங்களை ஆசீர்வதிப்பார்.

லூக்கா 14:25-35

முதலில் திட்டமிடுங்கள்(A)

25 இயேசுவோடு பலர் பயணம் செய்துகொண்டு இருந்தனர். இயேசு மக்களை நோக்கி, 26 “என்னிடம் வருகிற ஒருவன் அவனது தந்தையையோ, தாயையோ, சகோதரரையோ, சகோதரிகளையோ, என்னைக் காட்டிலும் அதிகமாக நேசித்தால் அம்மனிதன் எனக்குச் சீஷனாக ஆக முடியாது. ஒருவன் தன்னை நேசிப்பதைக் காட்டிலும் அதிகமாக என்னை நேசிக்க வேண்டும்! 27 ஒருவன் என்னைப் பின்பற்றும்போது அவனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் சிலுவையை (துன்பத்தை) சுமக்காவிட்டால் அவன் எனக்குச் சீஷனாக முடியாது.

28 “ஒரு கோட்டையைக் கட்டும் முன்பு, முதலில் அமர்ந்து அதைக் கட்டுவதற்கு எவ்வளவு செலவாகும் என்பதைத் தீர்மானிப்பீர்கள். வேலையை முடிப்பதற்குத் தேவையான பணம் உங்களிடம் இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். 29 அதைச் செய்யாவிட்டால் நீங்கள் வேலையைத் தொடங்கினாலும், அதை முடிக்க உங்களால் முடியாது. நீங்கள் அதை முடிக்க முடியாவிட்டால் அதைக் கவனிக்கிற எல்லா மக்களும் உங்களைப் பார்த்து நகைப்பார்கள். 30 அவர்கள், ‘இந்த மனிதன் கட்ட ஆரம்பித்தான். ஆனால் முடிக்க முடியவில்லை’ என்று சொல்வார்கள்.

31 “ஓர் அரசன் மற்றோர் அரசனுக்கு எதிராகப் போரிடச் சென்றால், முதலில் அமர்ந்து திட்டமிடுவான். அரசனிடம் பத்தாயிரம் வீரர்கள் மட்டுமே இருந்தால் இருபதாயிரம் வீரர்கள் கொண்ட மற்ற அரசனைத் தோற்கடிக்க முடியுமா எனப் பார்ப்பான். 32 அவனால் மற்ற அரசனைத் தோற்கடிக்க முடியாதென்றால், எதிரி இன்னும் தொலைவான இடத்தில் இருக்கும்பொழுதே சில ஆட்களை அனுப்பி அந்த அரசனிடம் சமாதானத்திற்கான பேச்சு வார்த்தையில் ஈடுபடுவான்.

33 “அதைப்போலவே முதலில் நீங்கள் திட்டமிட வேண்டும். என்னைப் பின்பற்ற வேண்டுமானால் உங்களிடம் இருக்கும் அனைத்தையும் கொடுத்துவிட வேண்டும், அவ்வாறு செய்யவில்லை என்றால், நீங்கள் எனது சீஷராக இருக்க முடியாது!”

உப்பின் உதாரணம்(B)

34 “உப்பு ஒரு நல்ல பொருள். ஆனால் உப்பு அதன் சுவையை இழந்துபோனால் அதனால் பயன் எதுவும் இல்லை. அதைத் திரும்பவும் சுவை உடையதாக மாற்ற முடியாது. 35 மண்ணிற்காகவோ, உரமாகவோ, கூட அதனைப் பயன்படுத்த முடியாது. மக்கள் அதை வீசியெறிந்துவிடுவார்கள்.

“என்னைக் கேட்கிற மக்களே! கவனியுங்கள்” என்றார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center