Book of Common Prayer
இசைத் தலைவனுக்கு கர்த்தருடைய ஊழியனாகிய தாவீது எழுதிய பாடல். சவுலிடமிருந்தும் பிற பகைவர்களிடமிருந்தும் கர்த்தர் அவனைத் தப்புவித்தப்போது இப்பாடலை எழுதினான்.
18 “எனது பெலனாகிய கர்த்தாவே,
நான் உம்மை நேசிக்கிறேன்!”
2 கர்த்தர் என் பாறையாகவும், கோட்டையாகவும், எனக்குப் பாதுகாப்பான இடமாகவும் இருக்கிறார்.
பாதுகாப்பிற்காக ஓடும் பாறையாக என் தேவன் இருக்கிறார்.
தேவன் எனக்குக் கேடகம். அவரது வல்லமை என்னைக் காப்பாற்றும்.
உயர்ந்த மலைகளில் மறைவிடமாக கர்த்தர் எனக்கு விளங்குகிறார்.
3 எனது விரோதிகள் என்னை காயப்படுத்த முயன்றனர்.
ஆனால் நான் கர்த்தருடைய உதவியை நாடினேன், நான் என் பகைவரிடமிருந்து காப்பாற்றப்பட்டேன்.
4 என் பகைவர்கள் என்னைக் கொல்ல முயன்றுகொண்டிருந்தார்கள்!
மரணத்தின் கயிறுகள் என்னைச் சூழ்ந்திருந்தன.
மரணத்தின் இடங்களுக்கு என்னைக் கொண்டு செல்லும் பெருவெள்ளத்தில் நான் அகப்பட்டேன்.
5 கல்லறையின் கயிறுகள் என்னைச் சுற்றிலுமிருந்தன.
மரணக் கண்ணிகள் என் முன் கிடந்தன.
6 நெருக்கத்தில் கர்த்தருடைய உதவியை நாடினேன்.
ஆம், என் தேவனை நான் கூப்பிட்டேன்.
தேவன் அவரது ஆலயத்தில் இருந்தார்.
என் குரலைக் கேட்டார். என் அபயக் குரல் அவர் காதில் விழுந்தது.
7 பூமி அதிர்ந்து நடுங்கிற்று. விண்ணின் அஸ்திபாரங்கள் அதிர்ந்தன.
ஏனெனில் கர்த்தர் கோபமாயிருந்தார்!
8 தேவனுடைய மூக்கில் புகை கிளம்பிற்று.
தேவனுடைய வாயில் நெருப்புக்கொழுந்துகள் தோன்றின.
அவரிடமிருந்து எரியும் ஜூவாலைகள் பறந்தன.
9 கர்த்தர் வானத்தைக் கிழித்துக் கீழிறங்கினார்!
திரண்ட காரிருளின் மேல் நின்றார்!
10 கர்த்தர் காற்றின் மேல் எழுந்து
பறக்கும் கேருபீன்கள் மேலேறிப் பறந்துக்கொண்டிருந்தார்.
11 அவரைச் சுற்றி கூடாரம்போல் சூழ்ந்திருந்த கருமேகங்களுக்குள் கர்த்தர் மறைந்திருந்தார்.
இடி மேகங்களினுள் அவர் ஒளிந்திருந்தார்.
12 அப்போது தேவனுடைய பிரகாசிக்கும் ஒளி மேகங்களைக் கிழித்து வெளிவந்தது.
புயலும் மின்னலும் தோன்றின.
13 கர்த்தர் வானத்திலிருந்து இடி இடித்தார்.
உன்னதமான தேவன் அவரது குரலைக் கேட்கச் செய்தார். கல்மழையும், மின்னல் ஒளியும் தோன்றின.
14 கர்த்தர் அம்புகளைச்[a] செலுத்திப் பகைவரைச் சிதறடித்தார்.
கர்த்தர் மின்னலை அனுப்பினார் ஜனங்கள் குழப்பத்தில் சிதறடிக்கப்பட்டனர்.
15 கர்த்தாவே, நீர் வல்லமையாகப் பேசினீர்,
உமது வாயிலிருந்து வல்லமையுள்ள காற்று வீசிற்று, தண்ணீரானது பின்னே தள்ளப்பட்டது.
கடலின் அடிப்பகுதியைப் பார்க்க முடிந்தது.
பூமியின் அஸ்திபாரங்கள் எங்கள் கண்களுக்குப் புலப்பட்டன.
16 கர்த்தர் மேலிருந்து கீழிறங்கி என்னைக் காப்பாற்றினார்.
கர்த்தர் என்னைப் பிடித்து ஆழமான தண்ணீரிலிருந்து வெளியே எடுத்தார்.
17 எனது பகைவர்கள் என்னிலும் பலவான்கள்.
அவர்கள் என்னைப் பகைத்தார்கள்.
என்னைக் காட்டிலும் என் பகைவர்கள் பலசாலிகள்.
எனவே தேவன் என்னைக் காப்பாற்றினார்.
18 நான் தொல்லையில் சிக்குண்டபோது என் பகைவர்கள் என்னைத் தாக்கினார்கள்.
ஆனால் கர்த்தரோ எனக்கு ஆதரவளித்தார்.
19 கர்த்தர் என்னை நேசிக்கிறார், எனவே என்னைக் காப்பாற்றினார்.
என்னைப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றார்.
20 நான் ஒன்றும் அறியாதவன் எனவே கர்த்தர் எனக்குரிய பலனைத் தருவார்.
நான் தவறேதும் செய்யவில்லை, எனவே எனக்காக அவர் நன்மைகளைச் செய்வார்.
21 ஏனெனில் நான் கர்த்தருக்குக் கீழ்ப்படிந்தேன்.
என் தேவனுக்கு எதிராகப் பாவம் செய்யவில்லை.
22 கர்த்தருடைய முடிவுகளை நான் நினைவு கூர்ந்தேன்.
அவர் சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்தேன்!
23 அவருக்கு முன் என்னைத் தூய்மையாகவும்
களங்கமின்றியும் வைத்துக்கொண்டேன்.
24 அதனால் கர்த்தர் எனக்கு வெகுமதி கொடுப்பார்.
ஏனெனில் நான் கபடமற்றவன்.
தேவனுடைய பார்வையில் நான் தவறிழைக்கவில்லை.
அவர் எனக்கு நன்மைகள் செய்வார்.
25 கர்த்தாவே! ஒருவன் உம்மை உண்மையாய் நேசித்தால் நீர் உமது உண்மையான அன்பை அவனுக்குக் காண்பிப்பீர்.
ஆண்டவரே ஒருவன் உமக்கு உண்மையாய் இருந்தால் நீரும் அவனுக்கு உண்மையாய் இருப்பீர்.
26 கர்த்தாவே, நல்லோருக்கும் தூயோருக்கும் நீர் நல்லவர், தூயவர்.
ஆனால் இழிவானவர்களையும், கபடதாரிகளையும் நீர் மிக நன்கு அறிவீர்.
27 கர்த்தாவே, நீர் தாழ்மையுள்ளோருக்கு உதவுகிறீர்.
அகந்தையுள்ளோரைத் தாழ்த்துவீர்.
28 கர்த்தாவே, என் விளக்கை ஏற்றுகிறீர்.
என் தேவனுடைய வெளிச்சம் என்னைச் சூழ்ந்த இருளை போக்குகிறது!
29 கர்த்தாவே, உமது உதவியால், நான் வீரரோடு ஓடுவேன்.
தேவனுடைய உதவியால், பகைவரின் சுவர்களில் ஏறுவேன்.
30 தேவனுடைய வல்லமை முழுமையானது.
கர்த்தருடைய வார்த்தைகள் புடமிடப்பட்டிருக்கிறது.
அவரை நம்பும் ஜனங்களை அவர் பாதுகாக்கிறார்.
31 கர்த்தரைத் தவிர தேவன் எவருமில்லை.
நமது தேவனைத் தவிர வேறு பாறை இல்லை.
32 தேவன் எனக்கு பெலன் தந்து
தூய வாழ்க்கை வாழ உதவுவார்.
33 மானைப்போல ஓடுவதற்கு தேவன் உதவுகிறார்.
உயர்ந்த இடங்களில் என்னை உறுதியாக நிலைநிறுத்துகிறார்.
34 தேவன் என்னை யுத்தங்களுக்குப் பழக்குகிறார்.
எனவே எனது கரங்கள் பலமான வில்லை வளைக்கும்.
35 தேவனே, நீர் என்னைப் பாதுகாத்து வெற்றியடையச் செய்தீர்.
உமது வலது கரத்தால் என்னைத் தாங்கினீர்.
என் சத்துருக்களை நான் வெல்ல உதவி செய்தீர்.
36 நான் தடுமாறாமல் விரைந்து நடக்கும்படிக்கு உதவி செய்தீர்.
எனது கால்களையும், மூட்டுக்களையும் பலப்படுத்தினீர்.
37 நான் என் பகைவர்களைத் துரத்திப் பிடிக்க முடியும்.
அவர்கள் அழியும்வரை நான் திரும்பேன்.
38 எனது பகைவரைத் தோற்கடிப்பேன்.
அவர்கள் மீண்டும் எழுந்திரார்கள்.
என் பகைவர்கள் என் பாதங்களுக்குக் கீழிருப்பார்கள்.
39 தேவனே, என்னை யுத்தங்களில் பலவான் ஆக்கினீர்.
என் பகைவர்கள் என் முன்னே விழும்படி செய்தீர்.
40 என் பகைவரின் கழுத்தை முறிக்கப் பண்ணி,
அவர்களை அழிக்கச் செய்தீர்.
41 என் பகைவர்கள் உதவி வேண்டினார்கள்.
அவர்களைக் காப்பவர் எவருமில்லை.
கர்த்தரை நோக்கி முறையிட்டனர்,
அவர் பதிலளிக்கவில்லை.
42 நான் என் பகைவரைத் துண்டிப்பேன்.
அவர்கள் காற்றில் பறக்கும் தூளைப் போலாவார்கள்.
அவர்களைத் துண்டாக நசுக்குவேன்.
43 என்னிடம் போர் செய்கிற ஜனங்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
என்னை அத்தேசங்களின் தலைவனாக்கும்.
எனக்குத் தெரியாத ஜனங்களும் என்னைச் சேவிப்பார்கள்.
44 அந்த ஜனங்கள் என்னைக் குறித்துக் கேள்விப்படுவார்கள். எனக்கு உடனே கீழ்ப்படிவார்கள்.
அந்த அயலார்கள் என்னைக் கண்டு அஞ்சுவார்கள். அந்த அயலார் நடுங்கி வீழ்வார்கள்.
45 அவர்கள் தைரியமிழந்து
தங்கள் மறைவிடங்களிலிருந்து நடுங்கிக்கொண்டே வெளிவருவார்கள்.
46 கர்த்தர் உயிரோடிருக்கிறார்!
நான் என் பாறையை (தேவனை) துதிப்பேன்!
தேவன் என்னைக் காப்பாற்றுகிறார்.
அவர் மேன்மையானவர்.
47 தேவன் எனக்காக என் பகைவர்களைத் தண்டித்தார்.
என் கட்டுப்பாட்டின் கீழ் ஜனங்களைக் கொண்டுவந்தார்.
48 கர்த்தாவே, நீர் என் பகைவரிடமிருந்து என்னைக் காப்பாற்றினீர்.
எனக்கு எதிரான ஜனங்களைத் தோற்கடிக்க உதவினீர்.
கொடியோரிடமிருந்து என்னை மீட்டீர்.
49 கர்த்தாவே, தேசங்களுக்கு முன்பாக உம்மைத் துதிப்பேன்.
உமது நாமத்தைக் குறித்துப் பாடல்கள் இசைப்பேன்.
50 தான் ஏற்படுத்தின ராஜா யுத்தங்கள் பலவற்றில் வெல்ல கர்த்தர் உதவுகிறார்!
தான் தேர்ந்தெடுத்த ராஜாவுக்குத் தன் உண்மையான அன்பை உணர்த்துகிறார்.
அவர் தாவீதுக்கும் அவன் சந்ததியினருக்கும் என்றென்றும் உண்மையுள்ளவராக இருக்கிறார்.
தானியத்தைப் போரடிக்கும் இடம்
3 பிறகு நகோமி ரூத்திடம், “என் மகளே, உனக்காக நான் ஒரு நல்ல கணவனையும், சிறந்த வீட்டையும் ஏற்பாடு செய்ய வேண்டும். அதுதான் உனக்கும் நல்லது. 2 அதற்கு போவாஸ் சரியான மனிதனாக இருக்கலாம். போவாஸ் நமது நெருக்கமான உறவினன். நீ அவனது வேலைக்காரிகளோடு வேலை செய்திருக்கிறாய். இன்று இரவு களத்தில் தானியத்தைப் போரடிக்கும் இடத்தில் அவன் வேலை செய்வான். 3 நீ குளித்து நன்றாக ஆடை அணிந்துகொள். தானியத்தை போரடிக்கும் களத்திற்குப் போ. அவன் இரவு உண்டு முடிக்கும்வரை போவாஸின் கண்ணில் படாமல் இரு. 4 அவன் உண்டு முடித்ததும், ஓய்வுக்காகப் படுப்பான். அவனையே கவனித்துக்கொண்டிருந்தால் அவன் படுக்கும் இடத்தை நீ அறிந்து கொள்ள முடியும். அங்கேபோய் அவனது காலை மூடியிருக்கும் போர்வையை ஒதுக்கிவிட்டு அவனோடு படுத்துக்கொள். நீ திருமணத்துக்காகச் செய்ய வேண்டியதைப்பற்றி அவன் உனக்குக் கூறுவான்” என்றாள்.
5 பிறகு ரூத், “நீங்கள் சொன்னபடியே நான் செய்வேன்” என்று பதில் சொன்னாள்.
6 எனவே ரூத் தானியத்தைப் போரடிக்கும் களத்திற்குச் சென்றாள். ரூத் தனது மாமியார் சொன்னபடியே எல்லாவற்றையும் செய்து முடித்தாள். 7 உணவை உண்டு, குடித்தபின் போவாஸ் மிகவும் மனநிறைவோடு இருந்தான். அவன் ஒரு தானிய அம்பாரத்துக்கு அடியிலே படுத்துக்கொண்டான். பிறகு ரூத் அமைதியாக அவன் அருகிலே சென்று காலருகே போர்வையை விலக்கிவிட்டு படுத்துக்கொண்டாள்.
8 நடு இரவில் போவாஸ் தூக்கத்தில் புரண்டு படுத்தான். அப்போது விழிப்பு வந்தது. தன் காலடியில் ஒரு பெண் படுத்திருப்பதைக் கண்டு அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. 9 போவாஸ் அவளிடம், “யார் நீ?” என்று கேட்டான்.
அவளோ, “நான் உங்கள் வேலைக்காரியான ரூத். உங்கள் போர்வையை என்மேல் மூடுங்கள். நீங்களே எனது பாதுகாவலர்” என்றாள்.
10 பிறகு போவாஸ், “இளம்பெண்ணே! கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்கட்டும். நீ என்னிடம் கருணை உடையவளாய் இருக்கிறாய். நீ உன் மாமியாரின் பேரில் வைத்திருக்கும் கருணையைவிட என்மீது வைத்திருக்கும் கருணை மிகவும் உயர்ந்தது. ஏழையோ பணக்காரனோ, உன்னால் ஒரு இளைஞனை மணந்திருக்க முடியும். ஆனால் நீ அவ்வாறு செய்யவில்லை. 11 இளம் பெண்ணே, இனிமேல் நீ பயப்பட வேண்டாம். நீ கேட்கும் உதவியை உனக்குச் செய்வேன். நீ மிகவும் சிறந்த பெண் என்பதை நகரத்தில் உள்ள அனைவரும் அறிவார்கள். 12 நான் உனது நெருங்கிய உறவினன் என்பதும் உண்மைதான். ஆனால் என்னைவிட நெருக்கமான உறவினன் ஒருவன் உனக்கு இருக்கிறான். 13 இன்று இரவு இங்கேயே தங்கியிரு. காலையில் அவன் உனக்கு உதவுவானா என்று பார்க்கலாம். அவன் உனக்கு உதவுவதாகத் தீர்மானித்துவிட்டால் அது மிகவும் நல்லதாக இருக்கும். ஒருவேளை அவன் மறுத்துவிட்டால், பிறகு கர்த்தருடைய பேரால் ஆணையிட்டுக் கூறுகிறேன், நானே உன்னை மணந்துகொள்வேன். உனக்காக எலிமெலேக்கின் நிலத்தையும் வாங்கித் தருவேன். எனவே காலைவரை இங்கேயே படுத்திரு” என்றான்.
14 எனவே ரூத், போவாஸின் காலருகே காலைவரை படுத்திருந்தாள். விடியும் முன், இருள் இருக்கும்போதே ரூத் எழுந்தாள்.
போவாஸ் அவளிடம், “நேற்று இரவு நீ இங்கே வந்தது நமக்குள் இரகசியமாக இருக்கட்டும்” என்று கூறினான். 15 மேலும் அவன், “உனது போர் வையைக் கொண்டு வா. அதனை விரித்துப்பிடி” என்று கூறினான்.
எனவே ரூத் போர்வையை விரித்துப் பிடித்தாள், போவாஸ் அதில் ஆறுபடி வாற்கோதுமையை அளந்துபோட்டான். அதை நகோமிக்குத் தனது அன்பளிப்பாகக் கொடுக்கச் சொன்னான். பிறகு அதை அவளது முதுகில் ஏற்றிவிட்டு, நகரத்தை நோக்கி போவாஸ் போனான்.
16 ரூத் தனது மாமியாரான நகோமி இருந்த வீட்டிற்குப் போனாள். நகோமி கதவருகே வந்து, “யாரங்கே?” என்று கேட்டாள்.
ரூத் வீட்டிற்குள்ளே போய் போவாஸ் அவளுக்காகச் செய்ததை எல்லாம் எடுத்துச் சொன்னாள். 17 அவள், “போவாஸ் உங்களுக்கு அன்பளிப்பாக இதை என்னிடம் கொடுத்தார். உங்களுக்கு அன்பளிப்பாக எதையும் எடுத்துச் செல்லாமல் நான் வீட்டுக்குப் போகக் கூடாது என்று சொன்னார்” என்றாள்.
18 அதற்கு நகோமி, “மகளே, என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ளும்வரை பொறுமையாக இருப்போம். தான் செய்ய வேண்டியவற்றை போவாஸ் செய்து முடிக்கும்வரை ஓய்வெடுக்கமாட்டான். என்ன நடக்கப் போகிறது என்பதை இன்று இரவுக்குள் நாமறிவோம்” என்றாள்.
தவறான போதகர்களைப் பற்றி எச்சரிக்கை
4 வருங்காலத்தில் சிலர் உண்மையான போதனையை நம்புவதை நிறுத்திவிடுவார்கள் என்று தூய ஆவியானவர் கூறி இருக்கிறார். அவர்கள் பொய் சொல்லும் ஆவிகளுக்குத் தலைவணங்குவார்கள். அவர்கள் பிசாசுகளின் போதனைகளைப் பின்பற்றுவார்கள். 2 பொய்யும், தந்திரமும் உடையவர்கள் மூலம் அத்தீய போதனைகள் வருகிறது. அந்த மக்கள் சரி எது, தவறு எது என்று பார்க்கமாட்டார்கள். அவர்களுடைய புரிந்துகொள்ளும் தன்மை, சூடு போடப்பட்டு, அழிக்கப்பட்டதைப் போன்றது. 3 அவர்கள் திருமணம் செய்யக்கூடாது என்கின்றனர். சில உணவு வகைகளை உண்ணக் கூடாது என்று கூறுகின்றனர். ஆனால் அந்த உணவுகளை தேவனே படைத்திருக்கிறார். நம்புகிறவர்களும், உண்மையை அறிந்தவர்களும் அவற்றை நன்றியோடு உண்ணலாம். 4 தேவனால் படைக்கப்பட்ட அனைத்துமே நல்லதுதான். நன்றிக் கடனாகப் பெறுகிறவரையில் தேவனால் உருவாக்கப்பட்ட எதையும் மறுக்கக்கூடாது. 5 தேவனால் படைக்கப்பட்டவை எல்லாம் தேவனுடைய வார்த்தையாலும் பிரார்த்தனைகளாலும் தூய்மையாக்கப்படும்.
கிறிஸ்துவின் நல்ல வேலையாளாக இரு
6 அங்குள்ள சகோதர சகோதரிகளிடமும் இவற்றைக் கூறு. இவை நீ இயேசு கிறிஸ்துவின் நல்ல வேலையாள் என்பதைக் காட்டும். விசுவாசமான வார்த்தைகளாலும், பின்பற்றப்படுகிற நல்ல போதனையாலும் நீ பலப்படுத்தப்படுகிறாய் என்றும் காட்டுவாய். 7 மக்கள் சொல்கிற அர்த்தமற்ற கதைகள் தேவனுடைய உண்மையோடு சற்றும் பொருந்தாதவை. அவற்றின் கூற்றுக்களைப் பின்பற்றாதே. தேவனுக்கு உண்மையான சேவையைச் செய்ய கற்றுக்கொள். 8 உடற்பயிற்சியானது சில வழிகளில் உதவிகரமானது. ஆனால் தேவபக்தியானது எல்லா வழிகளிலும் உதவுவதாகும். அது இவ்வாழ்க்கைக்கு மட்டுமல்லாமல் இனிவரும் வாழ்வுக்கும் ஆசீர்வாதம் தரும். 9 நான் சொல்வதெல்லாம் உண்மை, அவற்றை முழுமையாக நீ ஏற்றுக்கொள்ளவேண்டும். 10 இதற்காகத் தான் நாம் உழைக்கிறோம். போராடுகிறோம்; தேவனில் விசுவாசம் கொள்கிறோம்; அவரே அனைத்து மக்களின் மீட்பராக இருக்கிறார். அதோடு விசுவாசிகளுக்குச் சிறப்பான முறையில் மீட்பராக இருக்கிறார்.
11 கட்டளையிட்டு இவ்விஷயங்களைப் போதனை செய். 12 நீ இளமையாக இருக்கிறாய். ஆனால் உன்னை முக்கியம் அற்றவனாக நடத்த யாரையும் அனுமதிக்காதே. விசுவாசம் உடையவர்கள் எப்படி வாழவேண்டும் என்பதற்கு முன்மாதிரியாக இரு. வார்த்தையிலும், வாழும் வகையிலும், அன்பிலும், விசுவாசத்திலும், தூய நடத்தையிலும் விசுவாசிகளுக்கு முன் மாதிரியாக இரு.
13 மக்களுக்குத் தொடர்ந்து வேதவாக்கியங்களை வாசித்துக்காட்டு. அவர்களை பலப்படுத்து, அவர்களுக்குப் போதனைசெய். நான் வரும்வரை இவற்றைச் செய். 14 உனக்குக் கிடைத்துள்ள வரத்தைப் பயன்படுத்த நினைவுகொள். மூப்பராகிய சபையோர் உன் மேல் கைகளை வைத்தபோது தீர்க்கதரிசனத்தின் மூலம் இந்த வரத்தைப் பெற்றாய். 15 இவற்றைத் தொடர்ந்து செய். இவற்றுக்காக உன் வாழ்வைக் கொடு. பிறகு, உன் பணியின் வளர்ச்சியை அனைவரும் கண்டுகொள்வர். 16 உன் வாழ்விலும் போதனையைக் குறித்து எச்சரிக்கையாக இரு. சரியாய் வாழ்ந்து இவற்றைப் போதனை செய். அதனால் உன் வாழ்வையும், உன் போதனையைக் கேட்பவர்களின் வாழ்வையும் நீ காப்பாற்றிக்கொள்ள முடியும்.
எருசலேமில் இயேசு மரிப்பார்
(மத்தேயு 23:37-39)
31 அப்போது, சில பரிசேயர்கள், “இங்கிருந்து சென்று ஒளிந்துகொள்ளும். ஏரோது மன்னன் உம்மைக் கொல்ல விரும்புகிறான்” என்று இயேசுவிடம் வந்து சொன்னார்கள்.
32 அவர்களை நோக்கி, இயேசு, “அந்த நரியிடம் (ஏரோது) போய் ‘இன்றும், நாளையும் நான் மக்களிடமிருந்து அசுத்த ஆவிகளைத் துரத்தி, குணப்படுத்துதலாகிய என் வேலையை முடிக்க வேண்டும். மறுநாள், என் வேலை முடிந்துவிடும்’ 33 அதற்குப் பிறகு, எல்லாத் தீர்க்கதரிசிகளும் எருசலேமில் மரிக்க வேண்டும் என்பதால் நான் என் வழியில் செல்லவேண்டும் என்று சொல்லுங்கள்” என்றார்.
34 “எருசலேமே! எருசலேமே! நீ தீர்க்கதரிசிகளைக் கொலை செய்கின்றாய். தேவன் உன்னிடம் அனுப்பிய அந்த மனிதர்களைக் கல்லெறிந்து கொல்கிறாய். பற்பல வேளைகளில் உன் மக்களுக்கு உதவ விரும்பினேன். ஒரு கோழி தன் குஞ்சுகளைச் சிறகுகளின் கீழே சேர்ப்பதுபோல நான் உன் மக்களை ஒருமித்து சேர்க்க விரும்பினேன். ஆனால் நீ என்னை அனுமதிக்கவில்லை. 35 இப்போது உன் வீடு வெறுமையானதாக விடப்பட்டிருக்கும். நீங்கள், ‘தேவனின் பெயரால் வருகிறவர் தேவனால் ஆசீர்வதிக்கப்படடவர்’ என்று மீண்டும் சொல்கிறவரைக்கும், என்னைப் பார்க்கமாட்டீர்கள் என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார் இயேசு.
2008 by World Bible Translation Center