Book of Common Prayer
தாவீதின் பாடல்.
29 தேவனுடைய புத்திரரே, கர்த்தரைத் துதியுங்கள்!
அவரது மகிமையையும் வல்லமையையும் துதியுங்கள்.
2 கர்த்தரைத் துதித்து அவர் நாமத்தை கனப்படுத்துங்கள்!
உங்கள் விசேஷ ஆடைகளை அணிந்து அவரைத் தொழுதுகொள்ளுங்கள்.
3 கடலின்மேல் கர்த்தர் தமது குரலை எழுப்புகிறார்.
மகிமைபொருந்திய தேவனுடைய குரல் பெரும் சமுத்திரத்தின்மேல் இடியாய் முழங்கும்.
4 கர்த்தருடைய குரல் அவர் வல்லமையைக் காட்டும்.
அவரது குரல் அவர் மகிமையைக் காட்டும்.
5 கர்த்தருடைய குரல் பெரிய கேதுரு மரங்களையும் சின்னஞ்சிறு துண்டுகளாக்கும்.
லீபனோனின் பெரிய கேதுரு மரங்களை கர்த்தர் உடைத்தெறிகிறார்.
6 கர்த்தர் லீபனோனைக் குலுக்குகிறார்.
இளங்கன்று நடனமாடினாற்போன்று அது தோன்றுகிறது.
எர்மோன் மலை நடுங்குகிறது.
இளமையான வெள்ளாடு குதிப்பதைப்போன்று அது தோன்றுகிறது.
7 கர்த்தருடைய குரல் மின்னலைப்போல் ஒளிவிட்டுத் தாக்குகிறது.
8 கர்த்தருடைய குரல் பாலைவனத்தைக் குலுக்குகிறது.
கர்த்தருடைய குரலால் காதேஸ் பாலைவனம் நடுங்குகிறது.
9 கர்த்தருடைய குரல் மானை அஞ்சச்செய்யும்.
கர்த்தர் காடுகளை அழிக்கிறார்.
அவரது அரண்மனையில், ஜனங்கள் அவரது மகிமையைப் பாடுகிறார்கள்.
10 வெள்ளப்பெருக்கின்போது கர்த்தர் ராஜாவாயிருந்தார்.
என்றென்றும் கர்த்தரே ராஜா.
11 கர்த்தர்தாமே அவரது ஜனங்களைப் பாதுகாப்பாராக.
கர்த்தர் அவரது ஜனங்களை சமாதானத்தோடு வாழும்படி ஆசீர்வதிப்பாராக.
ஒரு துதிப்பாடல்.
98 புதிய வியக்கத்தக்க காரியங்களைச் செய்ததால்
கர்த்தருக்கு புதுப்பாட்டைப் பாடுங்கள்.
அவரது பரிசுத்த வலது கை
மீண்டும் அவருக்கு வெற்றியைத் தரும்.
2 கர்த்தர் தமது மீட்பின் வல்லமையை தேசங்களுக்குக் காட்டினார்.
கர்த்தர் அவர்களுக்குத் தமது நன்மையைக் காட்டினார்.
3 இஸ்ரவேலரிடம் தேவன் காட்டிய உண்மையை அவரைப் பின்பற்றுவோர் நினைவு கூர்ந்தனர்.
தூர தேசத்து ஜனங்கள் நம் தேவனுடைய மீட்பின் வல்லமையைக் கண்டனர்.
4 பூமியிலுள்ள ஒவ்வொருவரும் கர்த்தரை நோக்கிக் களிப்போடு சத்தமிடுங்கள்.
துதிப்பாடல்களைப் பாடத் தொடங்குங்கள்.
5 சுரமண்டலங்களே, கர்த்தரைத் துதியுங்கள்.
சுரமண்டலங்களின் இசையே, அவரைத் துதியுங்கள்.
6 எக்காளங்களையும் மற்றும் கொம்புகளையும் ஊதுங்கள்.
எங்கள் ராஜாவாகிய கர்த்தரைக் களிப்போடு ஆர்ப்பரியுங்கள்.
7 கடலும், பூமியும்
அவற்றிலுள்ளவை யாவும் உரக்கப் பாடட்டும்.
8 ஆறுகளே, கைகளைத் தட்டுங்கள்.
எல்லா மலைகளும் இணைந்து பாடுங்கள்!
9 கர்த்தர் உலகை ஆளுகை செய்ய வருவதால் அவருக்கு முன்பாகப் பாடுங்கள்.
அவர் உலகை நியாயமாக ஆளுகை செய்வார்.
அவர் ஜனங்களை நன்மையோடு அரசாள்வார்.
18 “அந்த ஜனங்கள் தீய நினைவுகளைக் கொண்டு தீயவற்றைச் செய்தனர். எனவே, நான் அவர்களைத் தண்டிக்க வந்துகொண்டிருக்கிறேன். நான் அனைத்து நாடுகளையும் அனைத்து ஜனங்களையும் ஒன்று சேர்ப்பேன். அனைத்து ஜனங்களும் சேர்ந்து வந்து எனது வல்லமையைப் பார்ப்பார்கள். 19 நான் ஜனங்களில் சிலர் மீது அடையாளத்தை இடுவேன். நான் அவர்களைக் காப்பாற்றுவேன். காப்பாற்றப்பட்ட ஜனங்களில் சிலரை நான் தர்ஷீசு, லிபியாலூத் (வில் வீரர்களின் நாடு), தூபால், கிரீஸ் மற்றும் தொலைதூர நாடுகளுக்கும் அனுப்புவேன். அந்த ஜனங்கள் என்றும் எனது போதனைகளைக் கேள்விப்பட்டிருக்கமாட்டார்கள். அந்த ஜனங்கள் எனது மகிமையை என்றும் பார்த்திருக்கமாட்டார்கள். எனவே, காப்பாற்றப்பட்ட ஜனங்கள் எனது மகிமையைப்பற்றி அந்நாடுகளில் கூறுவார்கள். 20 அவர்கள் அனைத்து நாடுகளிலும் உள்ள உங்கள் சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் அனைவரையும் அழைத்துக்கொண்டு வருவார்கள். உங்கள் சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் அனைவரையும் அவர்கள் எனது பரிசுத்தமான மலையான எருசலேமிற்கு அழைத்து வருவார்கள். உங்கள் சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் குதிரைகள், கழுதைகள், ஒட்டகங்கள், இரதங்கள் மற்றும் வண்டிகளில் வருவார்கள். உங்கள் சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் ஆகியோர் இஸ்ரவேலர்களால் கர்த்தருடைய ஆலயத்திற்குச் சுத்தமான தட்டில் வைத்து கொண்டுவரப்படும் காணிக்கைகளைப்போன்று இருப்பார்கள். 21 நானும் இந்த ஜனங்களில் சிலரை ஆசாரியர்களாகவும் லேவியர்களாகவும் தேர்ந்தெடுப்பேன்” கர்த்தர்தாமே இவற்றைச் சொன்னார்.
புதிய வானங்களும் புதிய பூமியும்
22 “நான் ஒரு புதிய உலகத்தைப் படைப்பேன். புதிய வானங்களும் புதிய பூமியும் என்றென்றும் நிலைத்து இருக்கும். அவ்வாறே உங்கள் பெயர்களும், உங்கள் பிள்ளைகளும் என்னோடு எப்பொழுதும் இருப்பார்கள். 23 ஒவ்வொரு ஆராதனைக்குரிய நாளிலும் அனைத்து ஜனங்களும் என்னை ஆராதிக்க வருவார்கள். அவர்கள் ஒவ்வொரு ஓய்வு நாளிலும் ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளிலும் வருவார்கள்.
7 கிறிஸ்து உங்களை ஏற்றுக்கொண்டார். எனவே நீங்களும் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ள வேண்டும். இது தேவனுக்கு மகிமையைக் கொண்டு வரும். 8 இதனால் யூதர்கள் தேவனுடைய இரக்கத்துக்காக அவரை மகிமைப்படுத்த வேண்டும். கிறிஸ்து யூதர்களுக்குப் பணியாளர் ஆனார். இதன் மூலம் அவர் தேவனுடைய வாக்குறுதிகள் உண்மையானவை எனக் காட்டினார். கிறிஸ்து யூதர்களின் தந்தையர்க்குக் கொடுத்த வாக்குறுதியை நிரூபித்துவிட்டார். 9 இதனால் யூதரல்லாதவர்கள் தேவனுடைய இரக்கத்துக்காக அவரை மகிமைப்படுத்த வேண்டும். வேதவாக்கியங்களில் எழுதப்பட்டுள்ளது:
“யூதர் அல்லாத மக்களுக்கிடையில் நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன்.
உமது பெயரைப் பாராட்டிப் பாடுவேன்.”(A)
10 மேலும் வேதவாக்கியம் கூறுகிறது:
“யூதரல்லாதவர்களாகிய நீங்கள் தேவனுடைய மக்களோடு சேர்ந்து மகிழ்ச்சியடையுங்கள்.”(B)
11 மேலும் வேத வாக்கியம் கூறுகிறது:
“யூதரல்லாத நீங்கள் கர்த்தரைப் புகழுங்கள்.
அனைத்து மக்களும் கர்த்தரைப் புகழ வேண்டும்.”(C)
12 ஏசாயா இப்படி கூறுகிறார்:
“ஈசாயின் குடும்பத்திலிருந்து ஒருவர் வருவார்.
யூதரல்லாதவர்களை அவர் ஆள்வார்.
அவரால் யூதரல்லாதவர்களும் நம்பிக்கை அடைவார்கள்.”(D)
13 தேவன் வழங்கும் விசுவாசம் உங்களை சமாதானத்தாலும், சந்தோஷத்தாலும் நிரப்பட்டும் என்று பிரார்த்திக்கிறேன். பிறகு உங்களுக்கு மேலும், மேலும் விசுவாசம் பெருகும். பரிசுத்த ஆவியானவரின் வல்லமையால் அது நிரம்பி வழியும்.
2008 by World Bible Translation Center