Book of Common Prayer
தாவீதின் பாடல்.
24 பூமியும் அதிலுள்ள எல்லாப் பொருள்களும் கர்த்தருடையவை.
உலகமும் அதன் ஜனங்களும் அவருக்கே உரிமையாம்.
2 கர்த்தர் பூமியை தண்ணீரின் மேல் உண்டாக்கினார்.
ஆறுகளின் மீது அதை உண்டாக்கினார்.
3 கர்த்தருடைய மலைகளின் மேல் யார் ஏறக்கூடும்?
கர்த்தருடைய பரிசுத்த ஆலயத்தில் யார் நிற்கக்கூடும்?
யார் அங்கு வழிபட முடியும்?
4 தீயவை செய்யாத ஜனங்களும்,
பரிசுத்த இருதயம் உடையோரும்,
பொய்யை உண்மையெனக் கூறுவதற்கு என் பெயரைப்[a] பயன்படுத்தாதோரும், பொய்யும்,
பொய்யான வாக்குறுதிகளும் அளிக்காதோரும், மட்டுமே அங்கு தொழுதுகொள்ள முடியும்.
5 நல்ல ஜனங்கள் கர்த்தரிடம் மற்ற ஜனங்களை ஆசீர்வதிக்கச் சொல்வார்கள்.
அந்த நல்ல ஜனங்கள் தங்கள் இரட்சகராகிய தேவனை நல்லக் காரியங்களைச் செய்யச் சொல்வார்கள்.
6 அந்த நல்லோர் தேவனைப் பின்பற்ற முயல்வார்கள்.
யாக்கோபின் தேவனிடம் உதவி வேண்டி அவர்கள் செல்வார்கள்.
7 வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்!
பழைமையான கதவுகளே! திறவுங்கள்!
மகிமை வாய்ந்த ராஜா உள்ளே வருவார்.
8 யார் இந்த மகிமைமிக்க ராஜா?
கர்த்தரே அந்த ராஜா. அவரே வல்லமையுள்ள வீரர்.
கர்த்தரே அந்த ராஜா. அவரே போரின் நாயகன்.
9 வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்!
பழைமையான கதவுகளே, திறவுங்கள்!
மகிமை மிக்க ராஜா உள்ளே வருவார்.
10 யார் அந்த மகிமை மிக்க ராஜா?
சர்வ வல்லமையுள்ள கர்த்தரே அந்த ராஜா.
அவரே மகிமை மிக்க ராஜா.
தாவீதின் பாடல்.
29 தேவனுடைய புத்திரரே, கர்த்தரைத் துதியுங்கள்!
அவரது மகிமையையும் வல்லமையையும் துதியுங்கள்.
2 கர்த்தரைத் துதித்து அவர் நாமத்தை கனப்படுத்துங்கள்!
உங்கள் விசேஷ ஆடைகளை அணிந்து அவரைத் தொழுதுகொள்ளுங்கள்.
3 கடலின்மேல் கர்த்தர் தமது குரலை எழுப்புகிறார்.
மகிமைபொருந்திய தேவனுடைய குரல் பெரும் சமுத்திரத்தின்மேல் இடியாய் முழங்கும்.
4 கர்த்தருடைய குரல் அவர் வல்லமையைக் காட்டும்.
அவரது குரல் அவர் மகிமையைக் காட்டும்.
5 கர்த்தருடைய குரல் பெரிய கேதுரு மரங்களையும் சின்னஞ்சிறு துண்டுகளாக்கும்.
லீபனோனின் பெரிய கேதுரு மரங்களை கர்த்தர் உடைத்தெறிகிறார்.
6 கர்த்தர் லீபனோனைக் குலுக்குகிறார்.
இளங்கன்று நடனமாடினாற்போன்று அது தோன்றுகிறது.
எர்மோன் மலை நடுங்குகிறது.
இளமையான வெள்ளாடு குதிப்பதைப்போன்று அது தோன்றுகிறது.
7 கர்த்தருடைய குரல் மின்னலைப்போல் ஒளிவிட்டுத் தாக்குகிறது.
8 கர்த்தருடைய குரல் பாலைவனத்தைக் குலுக்குகிறது.
கர்த்தருடைய குரலால் காதேஸ் பாலைவனம் நடுங்குகிறது.
9 கர்த்தருடைய குரல் மானை அஞ்சச்செய்யும்.
கர்த்தர் காடுகளை அழிக்கிறார்.
அவரது அரண்மனையில், ஜனங்கள் அவரது மகிமையைப் பாடுகிறார்கள்.
10 வெள்ளப்பெருக்கின்போது கர்த்தர் ராஜாவாயிருந்தார்.
என்றென்றும் கர்த்தரே ராஜா.
11 கர்த்தர்தாமே அவரது ஜனங்களைப் பாதுகாப்பாராக.
கர்த்தர் அவரது ஜனங்களை சமாதானத்தோடு வாழும்படி ஆசீர்வதிப்பாராக.
கித்தீத் என்ற இசைக் கருவியில் வாசிக்க இராகத் தலைவனுக்குத் தந்த தாவீதின் சங்கீதம்.
8 எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உமது நாமம் பூமியின் எல்லா இடத்திலும் மிகுந்த அற்புதமானது!
விண்ணுலகிலும் உமது நாமம் உமக்குத் துதிகளைக் கொண்டு வருகிறது.
2 பிள்ளைகள், குழந்தைகள் வாயிலுமிருந்து உம்மைத் துதிக்கும் பாடல்கள் வெளிப்படும்.
உம் பகைவரை அமைதிப்படுத்த இவ்வல்லமையான பாடல்களைக் கொடுத்தீர்.
3 கர்த்தாவே, உமது கைகளால் நீர் செய்த வானங்களை நான் கண்டேன்.
நீர் படைத்த நிலாவையும், நட்சத்திரங்களையும் நான் கண்டு ஆச்சரியமடைந்தேன்.
4 ஏன் மனிதர்கள் உமக்கு முக்கியமாயினர்?
ஏன் அவர்களை நீர் நினைவுகூருகிறீர்?
ஏன் அவர்களைக் கவனிக்கிறீர்?
5 ஆனால் மனிதர்கள் உமக்கு முக்கியமாயினர்!
அவர்களை ஏறக்குறைய தேவர்களைப் போலவே உண்டாக்கினீர்.
மனிதரை மகிமையாலும், மேன்மையாலும் முடிசூட்டினீர்.
6 நீர் உண்டாக்கின எல்லாவற்றிற்கும் அவர்களை அதிகாரிகளாக வைத்தீர்.
7 ஆடுகள், பசுக்கள், காட்டு மிருகங்கள் அனைத்தையும் மனிதர்கள் ஆண்டனர்.
8 வானத்துப் பறவைகளையும்
சமுத்திரத்தில் நீந்தும் மீன்களையும் அவர்கள் ஆண்டனர்.
9 எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உமது நாமம் உலகத்தில் எங்கும் மிகவும், மிகவும் அற்புதமானது!
கீத்தித் என்னும் வாத்தியத்தில் இசைக்கும் இராகத் தலைவனுக்குக் கோராகின் குடும்பம் அளித்த ஒரு துதிப் பாடல்.
84 சர்வ வல்லமையுள்ள தேவனே, உமது ஆலயம் உண்மையிலேயே இனிமையானது.
2 கர்த்தாவே, உமது ஆலயத்திற்குள் நுழைவதற்கு என்னால் காத்திருக்க முடியாது.
ஏனெனில் நான் மிகுந்த ஆவலாய் இருக்கிறேன்.
என் அவயவங்கள் ஒவ்வொன்றும் ஜீவனுள்ள தேவனோடு இருப்பதையே விரும்புகிறது.
3 என் ராஜாவே, என் தேவனே, சர்வ வல்லமையுள்ள கர்த்தாவே, குருவிகளுக்கும், அடைக்கலான் குருவிகளுக்கும் உம்முடைய ஆலயத்தில் வீடுகள் உண்டு.
உமது பலிபீடத்தருகே அப்பறவைகள் தங்கள் கூடுகளை அமைக்கும், அங்கு அவற்றின் குஞ்சுகளைப் பெறும்.
4 உமது ஆலயத்தில் வாழும் ஜனங்கள் மிகுந்த பாக்கியமுள்ளவர்களாக இருக்கிறார்கள்.
அவர்கள் எப்போதும் உம்மைத் துதித்துக்கொண்டிருக்கிறார்கள்.
5 தங்கள் இருதயத்தில் கீதங்களைப் பாடிக் கொண்டு
ஆலயத்திற்கு வருகிற ஜனங்கள் மிகுந்த சந்தோஷமாயிருக்கிறார்கள்.
6 அவர்கள் அழுகையின் பள்ளத்தாக்கின் வழியாகப் பயணம் செய்கிறார்கள்.
தேவன் அதை ஒரு நீரூற்றாகச் செய்கிறார்.
இலையுதிர்கால மழையின் தண்ணீரால் குளங்கள் தோன்றும்.
7 தேவனைச் சந்திப்பதற்காக சீயோனுக்குச் செல்லும் வழியில்
ஜனங்கள் ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு பயணமாகிறார்கள்.
8 சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, என் ஜெபத்தைக்கேளும்.
யாக்கோபின் தேவனே, எனக்குச் செவிகொடும்.
9 தேவனே, எங்கள் பாதுகாவலரைப் (கேடகத்தைப்) பாதுகாத்துக்கொள்ளும்.
நீர் தேர்ந்தெடுத்த ராஜா மீது இரக்கமாயிரும்.
10 வேறிடங்களில் செலவிடும் ஆயிரம் நாட்களைக் காட்டிலும் உமது ஆலயத்தில் இருக்கும் ஒரே நாள் நல்லது.
எனது தேவனுடைய வீட்டின் வாசலில் நிற்பதோ தீயவனின் வீட்டில் வாழ்வதைக் காட்டிலும் நல்லது.
11 கர்த்தர் நமது கேடகமும் மகிமை வாய்ந்த அரசருமானவர்.[a]
தயவினாலும் மகிமையாலும் தேவன் நம்மை ஆசீர்வதிக்கிறார்.
அவரைப் பின்பற்றிக் கீழ்ப்படிகிற ஜனங்களுக்கு
தேவன் எல்லா நல்ல பொருள்களையும் தருகிறார்.
12 சர்வ வல்லமையுள்ள தேவனே,
உம்மை நம்புகிற ஜனங்கள் உண்மையாகவே சந்தோஷமானவர்கள்.
கர்த்தருடைய விசேஷ ஊழியன்
42 “என் தாசனைப் பாருங்கள்!
அவரை நான் ஆதரிக்கிறேன்.
நான் தேர்ந்தெடுத்த ஒருவர் அவரே.
நான் அவரை மிகவும் விரும்புகிறேன்.
அவரில் எனது ஆவியை வைக்கிறேன்.
அவர் நாடுகளுக்கு நியாயமாக நீதி வழங்குவார்.
2 அவர் தெருக்களில் உரக்க பேசமாட்டார்.
அவர் கூக்குரலிடவும்மாட்டார்.
3 அவர் சாந்த குணமுள்ளவர். அவர் நெரிந்த நாணலைக்கூட முறிக்கமாட்டார்.
அவர் மங்கி எரிகிற திரியைக்கூட அணைக்கமாட்டார்.
அவர் நியாயத்தைத் தீர்த்து உண்மையைக் கண்டுகொள்வார்.
4 உலகத்தில் நியாயத்தைக் கொண்டுவரும்வரை அவர் பலவீனராகவோ அல்லது நொறுக்கப்படுபவராகவோ ஆவதில்லை.
ஜனங்கள் தொலைதூர இடங்களிலிருந்து அவரது போதனைகளை நம்புவார்கள்.”
கர்த்தரே ஆளுகிறார் உலகத்தை உருவாக்கினார்
5 உண்மையான தேவனாகிய கர்த்தர் இவற்றைச் சொன்னார். (கர்த்தர் வானங்களை உருவாக்கினார். கர்த்தர் பூமியின்மேல் வானத்தை விரித்தார். அவர் பூமியின்மேல் எல்லாவற்றையும் செய்தார். கர்த்தர் பூமியிலுள்ள அனைத்து ஜனங்களுக்கும் சுவாசத்தைக் கொடுக்கிறார். கர்த்தர் பூமியில் நடமாடுகிற ஒவ்வொரு மனிதருக்கும் ஆவியைக் கொடுக்கிறார்).
6 “கர்த்தராகிய நான், சரியானதைச் செய்ய உன்னை அழைத்தேன்.
நான் உன் கையைப் பற்றிக்கொள்வேன். நான் உன்னைப் பாதுகாப்பேன்.
நான் ஜனங்களோடு ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கையை பிறருக்குக் காட்டுவதற்கு வெளிப்புற அடையாளமாக நீ இருப்பாய்.
அனைத்து ஜனங்களுக்கும் ஒளி வீசும் விளக்காக நீ இருப்பாய்.
7 குருடர்களின் கண்களை நீ திறப்பாய், அவர்களால் பார்வையைப் பெறமுடியும்.
சிறையில் இருக்கிறவர்களை நீ விடுவிப்பாய்.
பலர் இருளில் இருக்கிறார்கள். அவர்களை அந்தச் சிறையில் இருந்து வெளியே அழைத்து வருவாய்.
8 “நானே கர்த்தர்! எனது நாமம் யேகோவா!
நான் எனது மகிமையை வேறு ஒருவனுக்கும் கொடேன்.
நான் எனக்குரிய பாராட்டை சிலைகளுக்கு (பொய்த் தெய்வங்களுக்கு) கொடேன்.
9 தொடக்கத்தில் சில காரியம் நடைபெறும் என்று சொன்னேன். அவை நடந்தன.
இப்போது, இது நடக்கும் முன்னால்!
நான் சிலவற்றைப்பற்றிச் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.”
இவை எதிர்காலத்தில் நடைபெறும்.
தேவனைத் துதிக்கும் ஒரு பாடல்
10 ஒரு புதிய பாடலை கர்த்தருக்குப் பாடுங்கள்.
தொலைதூர நாடுகளில் உள்ள ஜனங்களே, கடலில் பயணம் செய்கிற ஜனங்களே, கடலில் உள்ள மிருகங்களே, தொலைதூர இடங்களில் உள்ள ஜனங்களே, கர்த்தரைத் துதியுங்கள்.
11 வனாந்திரங்களே, நகரங்களே, கேதாரியரின் வயல்களே, கர்த்தரைத் துதியுங்கள்.
சீலோவில் வாழுகின்ற ஜனங்களே!
மகிழ்ச்சியோடு பாடுங்கள்.
உங்கள் மலை உச்சியில் இருந்து பாடுங்கள்.
12 கர்த்தருக்கு மகிமையைக் கொடுங்கள்.
தொலை தூர நாடுகளில் உள்ள ஜனங்களே, அவரைத் துதியுங்கள்.
முழு ஆயதங்களையும் அணியுங்கள்
10 இறுதியாக நான் எழுதுவது யாதெனில்: அவரது பெரும் பலத்தால் நீங்கள் உங்களை பலப்படுத்திக்கொள்ளுங்கள் என்று கூறுகிறேன். 11 அவரது முழு ஆயுதங்களையும் அணிந்துகொள்ளுங்கள். அதற்குப் பிறகு உங்களால் சாத்தானின் தந்திரங்களை எதிர்த்துப் போராட முடியும். 12 நமது போராட்டம் பூமியிலுள்ள மக்களை எதிர்த்தல்ல. நாம் இருட்டில் உள்ள ராஜாக்களையும், அதிகாரிகளையும், அதிகாரங்களையும் எதிர்த்தே போராடுகிறோம். வானமண்டலங்களில் உள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளுக்கு எதிராகப் போர் செய்கிறோம். 13 அதனால்தான் தேவனின் முழுக் கவசங்களும் உங்களுக்குத் தேவை. அப்போது தான் உங்களால் தீங்கு நாளில் எதிர்த்து பலத்துடன் இருக்க முடியும். போர் முடித்த பிறகும் வல்லமையுடன் நிற்கமுடியும்.
14 எனவே உண்மை என்னும் இடுப்புக் கச்சையைக் கட்டிக்கொண்டு வலிமையாகுங்கள். சரியான வாழ்க்கை என்னும் கவசத்தை உங்கள் மார்பில் அணிந்துகொள்ளுங்கள். 15 சமாதானத்தின் நற்செய்தி என்னும் செருப்புகளை உங்கள் கால்களில் அணிந்துகொண்டு முழு தயார் நிலையில் நில்லுங்கள். 16 நம்பிக்கை என்னும் கேடயத்தைக் கைகளில் தாங்கிக்கொள்ளுங்கள். சாத்தான் எறியும் அம்புகளை அதனால் தடுத்துவிட முடியும். 17 தேவனின் வார்த்தை என்னும் தலைக்கவசத்தை அணிந்துகொள்க! ஆவி என்னும் வாளை எடுத்துக்கொள்க. அது தேவனின் போதகங்களாகும். 18 எப்பொழுதும் ஆவிக்குள் பிரார்த்தனை செய்யுங்கள். எல்லா வகையான பிரார்த்தனைகளையும் செய்து உங்களுக்குத் தேவையான அனைத்தையும் கேளுங்கள். இதனைச் செய்வதற்கு எப்பொழுதும் தயாராக இருங்கள். ஒருபோதும் மனம் தளராதீர்கள். எப்பொழுதும் தேவனுடைய எல்லாப் பிள்ளைகளுக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள்.
19 எனக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள், அப்பொழுது நான் பேசும்போது தேவன் எனக்கு வார்த்தைகளைக் கொடுப்பார். நான் அச்சம் இல்லாமல் சுவிசேஷத்தின் இரகசிய உண்மைகளைப் போதிக்க வேண்டும். 20 நற்செய்தியைப் போதிக்கும் பணி என்னுடையது. அதை இப்பொழுது சிறைக்குள் இருந்து செய்கிறேன். இதற்கான தைரியத்தை நான் பெற்றுக்கொள்ள எனக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்.
16 “ஆம்! தேவன் இவ்வுலகினைப் பெரிதும் நேசித்தார். எனவே தனது ஒரே குமாரனை இதற்குத் தந்தார். தேவன் தன் குமாரனைத் தந்ததால் அவரில் நம்பிக்கை வைக்கிற எவரும் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனைப் பெறுவர். 17 தேவன் தன் குமாரனை உலகிற்கு அனுப்பினார். உலகின் குற்றங்களை நியாயம் விசாரிக்க தனது குமாரனை அனுப்பவில்லை. இவ்வுலகம் தேவனுடைய குமாரனால் இரட்சிக்கப்படுவதற்கென்று தேவன் தன் குமாரனை அனுப்பினார். 18 தேவகுமாரன் மீது நம்பிக்கை வைக்கிறவர்கள் தண்டிக்கப்படுவதில்லை. ஆனால், அவர் மீது நம்பிக்கைகொள்ளாதவர்கள் ஏற்கெனவே தண்டிக்கப்பட்டுவிட்டார்கள். ஏன்? ஏனென்றால் அவர்களுக்கு தேவனுடைய ஒரே குமாரன் மீது நம்பிக்கை இல்லை. 19 இந்த உலகத்துக்கு ஒளி (நன்மை) வந்திருக்கிறது. ஆனால் அந்த ஒளியை மக்கள் விரும்பவில்லை. அவர்கள் இருளை (பாவத்தை) விரும்பினார்கள். ஏனென்றால் அவர்கள் தீய செயல்களைச் செய்துகொண்டிருந்தார்கள். இந்த உண்மையை வைத்தே அவர்கள் நியாயம் விசாரிக்கப்படுகிறார்கள். 20 தீமைகளைச் செய்கிற ஒவ்வொரு மனிதனும் ஒளியை வெறுக்கிறான். அவன் வெளிச்சத்துக்குள் வரமாட்டான். ஏனென்றால் ஒளி அவன் செய்த தீமைகளை வெளிப்படுத்திக்காட்டும். 21 ஆனால் உண்மை வழியைப் பின்தொடர்ந்து செல்கிறவர்கள் ஒளியிடம் வந்தடைகிறார்கள். பிறகு, அந்த ஒளி அவர்கள் செய்த செயல்கள் தேவன் மூலமாகச் செய்த நற்செயல்கள் எனக் காட்டும்[a] என்று இயேசு கூறினார்.”
2008 by World Bible Translation Center