Añadir traducción en paralelo Imprimir Opciones de la página

இதெக்கேல் நதிக்கரையில் தானியேலின் தரிசனம்

10 கோரேசு பெர்சியாவின் அரசன். கோரேசின் மூன்றாவது ஆட்சியாண்டில், தானியேல் இவற்றைக் கற்றுக்கொண்டான். (தானியேலின் இன்னொரு பெயர் பெல்தெஷாத்சார்). இவை உண்மையானவை, ஆனால் இவை புரிந்துகொள்வதற்குக் கடினமானது. ஆனால் தானியேல் இவற்றைப் புரிந்துகொண்டான். இவையெல்லாம் அவனுக்கு ஒரு தரிசனத்தில் விளக்கப்பட்டது.

தானியேல் சொல்கிறதாவது, “அந்தக் காலத்தில், தானியேலாகிய நான் மூன்று வாரங்களுக்குத் துக்கமாக இருந்தேன். அந்த மூன்று வாரங்களில் நான் எவ்வித ருசிகரமான உணவையும் உண்ணவில்லை. நான் எவ்வித இறைச்சியையும் உண்ணவில்லை. நான் எவ்வித திராட்சைரசத்தையும் குடிக்கவில்லை. நான் என் தலையில் எவ்வித எண்ணெயையும் தடவவில்லை. நான் இவ்விதச் செயல்கள் எவற்றையும் மூன்று வாரங்களுக்குச் செய்யவில்லை.

அந்த ஆண்டின் முதல் மாதத்தின் 28வது நாளில் நான் இதெக்கேல் நதிக்கரையில் நின்று கொண்டிருந்தேன். நான் அங்கே நின்று கொண்டிருந்தபோது, ஏறிட்டுப் பார்த்தேன். எனக்கு முன்னால் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவர் மெல்லிய சணல் ஆடை அணிந்திருந்தார். அவரது இடுப்பில் சுத்தமான தங்கக் கச்சையைக் கட்டியிருந்தார். அவரது உடலானது ஒளிவீசும் மிருதுவான கல்லைப் போன்றிருந்தது. அவரது முகம் மின்னலைப்போன்று ஒளி வீசியது. அவரது கண்கள் தீயின் நாவுகள் போன்றிருந்தன. அவரது கைகளும் கால்களும் துலக்கப்பட்ட வெண்கலம் போன்று இருந்தது. அவரது குரலானது ஜனங்கள் கூட்டத்தின் ஆரவாரம்போல் இருந்தது.

தானியேலாகிய நான் ஒருவன் மட்டும்தான் அந்தத் தரிசனத்தைப் பார்த்தேன். என்னோடு இருந்த மனிதர்கள் அந்தத் தரிசனத்தைப் பார்க்கவில்லை. ஆனாலும் அவர்கள் பயந்தார்கள். அவர்கள் அவ்வளவாகப் பயந்ததால் ஓடி ஒளிந்து கொண்டனர். எனவே நான் தனியாக விடப்பட்டேன். நான் இந்தத் தரிசனத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இது எனக்கு அச்சமூட்டியது. நான் என் பலத்தை இழந்தேன். எனது முகம் செத்தவனின் முகத்தைப்போன்று வெளுத்தது. நான் உதவியற்றவன் ஆனேன். பிறகு நான் தரிசனத்தில் அம்மனிதன் பேசுவதைக் கேட்டேன். அவரது குரலைக் கேட்டதும் நான் ஆழ்ந்த உறக்கத்தில் விழுந்தேன். நான் முகம் குப்புற தரையில் விழுந்து கிடந்தேன்.

10 பிறகு ஒரு கை என்னைத் தொட்டது. அது நடந்ததும் என் முழங்கால்களும், என் உள்ளங்கைகளும் தரையை ஊன்றியிருக்க என்னைத் தூக்கியது. நான் மிகவும் பயந்து நடுங்கினேன். 11 தரிசனத்தில் அம்மனிதன் என்னிடம் சொன்னான், “தானியேலே, தேவன் உன்னை மிகவும் நேசிக்கிறார். நான் உன்னிடம் பேசும் வார்த்தைகளை மிகவும் கவனமாகச் சிந்தனை செய் எழுந்து நில், நான் உன்னிடம் அனுப்பப்பட்டிருக்கிறேன்.” அவன் இதைச் சொன்னதும் நான் எழுந்து நின்றேன். நான் இன்னும் நடுங்கிக் கொண்டிருந்தேன். ஏனென்றால் நான் பயந்தேன். 12 பிறகு அந்த மனிதன் தரிசனத்தில் மீண்டும் பேசத்தொடங்கினான். அவன், “தானியேலே, பயப்படாதே. முதல் நாளிலேயே நீ ஞானம்பெற முடிவுச் செய்தாய். தேவனுக்கு முன்னால் பணிவாக இருக்க முடிவுசெய்தாய். அவர் உனது ஜெபங்களைக் கேட்டிருக்கிறார். நான் உன்னிடம் வந்தேன். ஏனென்றால் நீ ஜெபம் செய்திருக்கிறாய். 13 ஆனால் பெர்சியாவின் அதிபதி (சாத்தானின் தூதன்) இருபத்தொரு நாள் எனக்கு எதிராக போரிட்டு எனக்குத் தொந்தரவு கொடுத்தான். பிறகு முக்கியமான தேவ தூதர்களில் ஒருவனான மிகாவேல் உதவி செய்ய என்னிடம் வந்தான். ஏனென்றால் நான் ஒருவன்தான் அங்கு பெர்சியா அரசனிடமிருந்து வரமுடியாமல் இருந்தேன். 14 இப்பொழுதும் தானியேலே, உன்னிடம் வருங்காலத்தில் உன் ஜனங்களுக்கு என்ன ஏற்படும் என்று சொல்ல நான் உன்னிடம் வந்திருக்கிறேன். தரிசனமானது நிறைவேற இன்னும் நாளாகும்” என்றான்.

15 அவன் என்னோடு இதனைப் பேசிக்கொண்டிருக்கும்போது என் முகம் தரையைத் தொடும்படி நான் தலை கவிழ்ந்து குனிந்தேன். என்னால் பேச முடியவில்லை. 16 பிறகு மனிதனைப்போன்று தோற்றமளித்த ஒருவன் என் உதடுகளைத் தொட்டான். நான் வாயைத்திறந்து பேச ஆரம்பித்தேன். எனக்கு முன்னால் நின்று கொண்டிருந்தவனிடம் நான், “ஐயா, நான் கலக்கமடைந்தேன், பயப்படுகிறேன். ஏனென்றால், நான் பார்த்த தரிசனம் இத்தகையது. நான் உதவியற்றவனாக உணருகிறேன். 17 ஐயா, நான் உமது ஊழியனான தானியேல். நான் உம்மோடு எப்படிப் பேசமுடியும்? எனது பலம் போய்விட்டது. எனக்கு மூச்சுவிடவே கடினமாக இருக்கிறது” என்றேன்.

18 மனிதனைப் போன்று தோற்றமளித்தவன் என்னை மீண்டும் தொட்டான். அவன் என்னைத் தொட்ட பின் நான் திடமாக உணர்ந்தேன். 19 பிறகு அவன் என்னிடம், “தானியேலே, பயப்படாதே தேவன் உன்னை மிகவும் நேசிக்கிறார். சமாதானம் உன்னுடன் இருப்பதாக. இப்போதும் திடங்கொள்” என்றான்.

அவன் என்னோடு பேசியபோது நான் பலமடைந்தேன். பிறகு நான் “ஐயா, நீர் எனக்குப் பலத்தைக் கொடுத்தீர். இப்பொழுது நீர் பேசலாம்” என்றேன்.

20 அவன், என்னிடம், தானியேலே, நான் உன்னிடம் எதற்காக வந்தேன் என்று உனக்குத் தெரியுமா? நான் பெர்சியா அதிபதிக்கு எதிராகச் சண்டையிட விரைவில் திரும்பிப் போகவேண்டும். நான் போகும்போது, கிரேக்க அதிபதி வருவான். 21 ஆனால் தானியேலே, நான் போகும்முன், சத்தியமாகிய புத்தகத்திலே என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதை முதலில் உனக்குச் சொல்லவேண்டும். மிகாவேலைத் தவிர வேறுயாரும் அத்தீய தூதர்களுக்கெதிராக என்னுடன் நிற்பதில்லை. மிகாவேல் உன் ஜனங்களின் அதிபதியாக ஆளுகை செய்கிறான்.