Añadir traducción en paralelo Imprimir Opciones de la página

செலோப்பியாத்தின் மகள்களின் பகுதி

36 மனாசே யோசேப்பின் மகன். மாகீர் மனாசேயின் மகன். கீலேயாத் மாகீரின் மகன். கீலேயாத் கோத்திரத்தின் தலைவர்கள் மோசேயோடும் மற்ற இஸ்ரவேல் கோத்திரங்களின் தலைவர்களோடும் பேசப் போனார்கள். அவர்கள், “ஐயா, எங்கள் நிலத்தின் பங்குகளைச் சீட்டுக்குலுக்கல் மூலம் நாங்கள் பெறுமாறு கர்த்தர் கட்டளையிட்டு இருக்கிறார். அதோடு செலோப்பியாத்தின் நிலப்பங்கானது அவனது மகள்களுக்குச் சேர வேண்டும் என்றும் கர்த்தர் கூறியிருக்கிறார். செலோப்பியாத் எங்களது சகோதரன். வேறு ஒரு கோத்திரத்தில் உள்ளவர்கள் செலோப்பியாத்தின் மகளை மணக்க நேரிடலாம். அப்போது அந்தப் பங்கு எங்கள் குடும்பத்தை விட்டுப் போய்விடுமே. வேறு ஒரு கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் அந்தப் பூமியை பெற்றுக்கொள்வார்களா? இவ்வாறு சீட்டுக் குலுக்கல் மூலம் நாங்கள் பெற்ற நிலப்பாகத்தை நாங்கள் இழந்துவிடுவதா? ஜனங்கள் தங்கள் நிலத்தை விற்கலாம். ஆனால் யூபிலி ஆண்டில் எல்லா நிலமும் உண்மையில் நில உரிமையாளனுக்கே திரும்பி அளிக்கப்படும். அப்போது செலோப்பியாத்தின் மகள்களுக்குரிய நிலம் யாருக்கு வந்து சேரும்? நித்தியத்துக்கும் எங்கள் குடும்பம் அந்த நிலத்தை இழந்து விட வேண்டியதுதானா?” என்று கேட்டனர்.

மோசே பின்வரும் கட்டளையை இஸ்ரவேல் ஜனங்களுக்கு கொடுத்தான். இந்தக் கட்டளை கர்த்தரிடமிருந்து வந்தது. “யோசேப்பின் கோத்திரத்தில் உள்ள மனிதர்கள் கூறுவது சரியே. செலொப்பியாத்தின் மகள்கள் விஷயத்தில் கர்த்தர் கூறும் கட்டளைகளாவன: அவர்கள் தங்களுக்கு விருப்பமானவர்களை மணந்துகொள்ளலாம். எனினும் அவர்கள் தங்கள் தந்தையின் கோத்திரத்தில் உள்ளவர்களை மட்டுமே மணந்துகொள்ள வேண்டும். இதனால் இஸ்ரவேல் ஜனங்களின் ஒரு கோத்திரத்தில் உள்ள சொத்தானது இன்னொரு கோத்திரத்திற்குச் செல்லாமல் இருக்கும். எனவே ஒவ்வொரு இஸ்ரவேலனும் தன் முற்பிதாக்களுக்குரிய நிலங்களைப் பாதுகாத்துக்கொள்வான். ஒரு பெண் தன் தந்தைக்குரிய நிலத்தைப் பெற்றால், பின்னர் அவள் தந்தையின் கோத்திரத்தில் உள்ளவர்களை மட்டுமே மணந்துகொள்ள வேண்டும். இந்த முறையில் ஒவ்வொரு இஸ்ரவேல் குடிமகனும் தங்கள் முற்பிதாக்களின் சொத்துக்களைத் தம் வசமே வைத்திருப்பார்கள். எனவே, இஸ்ரவேல் ஜனங்களின் ஒரு கோத்திரத்தில் இருந்து இன்னொரு கோத்திரத்திற்கு நிலம் போகாமல் இருக்கும். ஒவ்வொரு இஸ்ரவேலனும் தன் முற்பிதாக்களுக்குரிய நிலத்தை பாதுகாத்துக்கொள்வான்.”

10 செலொப்பியாத்தின் மகள்கள், மோசேக்கு கர்த்தர் அளித்த கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தனர். 11 எனவே மக்லாள், திர்சாள், ஓக்லாள், மில்காள், நோவாள் எனும் செலொப்பியாத்தின் மகள்கள் தம் தந்தையின் சகோதரரின் மகன்களை மணந்துகொண்டனர். 12 அவர்கள் யோசேப்பின் மகனாகிய மனாசேயின் கோத்திரத்தினரை மணந்துகொண்டபடியால் அவர்களின் சொத்தானது அக்கோத்திரத்திற்குள்ளேயே இருந்தது.

13 எரிகோவின் எதிரே, யோர்தானுக்கு இக்கரையில் மோவாப் சமவெளியில் கர்த்தர் மோசேக்கு கொடுத்த சட்டங்களும் கட்டளைகளும் இவைகளேயாகும்.