சகரியா 1-3
Tamil Bible: Easy-to-Read Version
கர்த்தர் தமது ஜனங்கள் திரும்பவேண்டும் என விரும்புகிறார்
1 கர்த்தரிடமிருந்து பெரகியாவின் குமாரன் சகரியாவுக்கு ஒரு செய்தி வந்தது. இது தரியு பெர்சியாவை அரசாண்ட இரண்டாம் ஆண்டு எட்டாம் மாதம். (சகரியா பெரகியாவின் குமாரன். பெரகியா தீர்க்கதரிசியான இத்தோவின் குமாரன்) இதுதான் அந்த செய்தி.
2 கர்த்தர் உங்களது முற்பிதாக்கள் மேல் மிகவும் கோபங்கொண்டவரானார். 3 நீங்கள் இவற்றை ஜனங்களிடம் சொல்லவேண்டும். கர்த்தர், “என்னிடம் திரும்பி வாருங்கள். நான் உங்களிடம் திரும்பி வருவேன்” என்கிறார். சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைச் சொன்னார்.
4 கர்த்தர், “நீங்கள் உங்கள் முற்பிதாக்களைப் போன்றிருக்கக் கூடாது. கடந்த காலத்தில், தீர்க்கதரிசிகள் அவர்களிடம், ‘சர்வ வல்லமையுள்ள கர்த்தர் நீங்கள் உங்களது தீய வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும் என விரும்புகிறார். தீயவற்றைச் செய்வதை நிறுத்துங்கள்!’ என்றார்கள். ஆனால், உங்கள் முற்பிதாக்கள் நான் சொன்னதைக் கேட்கவில்லை” என்றார். கர்த்தர் இவற்றைச் சொன்னார்.
5 கர்த்தர், “உங்கள் முற்பிதாக்கள் போய்விட்டனர். அந்தத் தீர்க்கதரிசிகள் என்றென்றைக்கும் வாழவில்லை. 6 தீர்க்கதரிசிகள் எனது வேலைக்காரர்கள். நான் எனது வார்த்தைகளையும், சட்டங்களையும், போதனைகளையும் அவர்களைப் பயன்படுத்தி உன் முற்பிதாக்களுக்குச் சொன்னேன். உனது முற்பிதாக்கள் இறுதியில் தங்கள் பாடங்களைக் கற்றனர். அவர்கள், ‘சர்வ வல்லமையுள்ள கர்த்தர் தான் எவற்றைச் செய்ய வேண்டும் எனச் சென்னாரோ அதைச் செய்தார். நாங்கள் வாழ்ந்த வாழ்க்கை முறைக்காகவும், நாங்கள் செய்த தீமைக்காகவும் அவர் எங்களைத் தண்டித்தார்’ என்றார்கள். எனவே அவர்கள் தேவனிடம் திரும்பி வந்தனர்” என்றார்.
நான்கு குதிரைகள்
7 தரியு அரசாண்ட இரண்டாம் ஆண்டு சேபாத் மாதமாகிய பதினோராம் மாதம் இருபத்து நாலாந் தேதியிலே கர்த்தரிடமிருந்து சகரியாவுக்கு இன்னொரு செய்தி வந்தது. (தீர்க்கதரிசி இத்தோவின் குமாரன் பெரகியா. இவனது குமாரன் சகரியா.) இதுதான் செய்தி.
8 இரவில், நான் ஒரு மனிதன் சிவப்புக் குதிரையில் ஏறி வருவதைப் பார்த்தேன். அவன் பள்ளத்தாக்கில் இருந்த நறுமணப் புதருக்குள் செடிகளுக்கிடையே நின்றான். அவனுக்குப் பின் சிவப்பும், மங்கின நிறமும், வெண்மையுமான குதிரைகள் நின்றன. 9 நான், “ஐயா இந்தக் குதிரைகள் எதற்காக?” என்று கேட்டேன்.
பிறகு என்னிடம் பேசின தேவதூதன், “இந்தக் குதிரைகள் எதற்காக உள்ளன என்பதை நான் உனக்குக் காட்டுவேன்” என்றான்.
10 பிறகு புதருக்குள் நின்ற அந்த மனிதன் “கர்த்தர் இந்தக் குதிரைகளைப் பூமியில் அங்கும் இங்கும் போவதற்காக அனுப்பினார்” என்றான். 11 அதன் பிறகு நறுமணப் புதருக்குள் நின்ற கர்த்தருடைய தூதனிடத்தில் குதிரைகள், “நாங்கள் பூமி முழுதும் சுற்றித்திரிந்தோம், எல்லாம் அமைதியாக இருக்கிறது” என்றன.
12 பின்னர் கர்த்தருடைய தூதன், “கர்த்தாவே, நீர் இன்னும் எவ்வளவு காலத்துக்கு எருசலேமையும் யூதாவின் நகரங்களையும் ஆறுதல்படுத்தாமலிருப்பீர்? எழுபது ஆண்டுகளாக இந்நகரங்களின் மேல் நீர் உமது கோபத்தைக் காட்டினீர்” என்றான்.
13 பின்னர் கர்த்தர், என்னோடு பேசிக்கொண்டிருந்த தேவதூதனிடம், நல்ல ஆறுதலான வார்த்தைகளைப் பேசினார்.
14 பின்னர் தூதன் ஜனங்களிடம் இவற்றைச் சொல்லவேண்டும் என்று சொன்னான். சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்:
“நான் எருசலேம் மற்றும் சீயோன் மீது உறுதியான அன்புகொண்டிருந்தேன்.
15 நான், தாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று எண்ணும் நாடுகள் மீது மிகவும் கோபமாக இருக்கிறேன்.
நான் கொஞ்சம் கோபம் கொண்டிருந்தபோது
என் ஜனங்களைத் தண்டிக்க அந்த நாடுகளைப் பயன்படுத்தினேன்.
ஆனால் அந்த நாடுகள் பெருஞ்சேதத்திற்குக் காரணமாயின.”
16 எனவே கர்த்தர் கூறுகிறார்:
“நான் எருசலேமிற்குத் திரும்பி வருவேன்.
அவளுக்கு ஆறுதல் கூறுவேன்.”
சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: “எருசலேமை மீண்டும் கட்டுவேன். எனது வீடு அங்கே கட்டப்படும்.”
17 தூதன் கூட, “‘எனது நகரங்கள் மீண்டும் வளம்பெறும்.
நான் சீயோனுக்கு ஆறுதல் அளிப்பேன்.
நான் எனது சிறப்புக்குரிய நகரமாக எருசலேமைத் தேர்ந்தெடுப்பேன்’
என்று சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்” என்றான்.
நான்கு கொம்புகளும் நான்கு தொழிலாளிகளும்
18 பிறகு நான் மேலே பார்த்தேன். நான்கு கொம்புகளைக் கண்டேன். 19 பிறகு நான் என்னோடு பேசிக்கொண்டிருந்த தூதனிடம், “இக்கொம்புகளின் அர்த்தம் என்ன?” என்று கேட்டேன்.
அவர், “இக்கொம்புகள் இஸ்ரவேல், யூதா மற்றும் எருசலேம் ஜனங்களை அன்னிய நாடுகளுக்குத் துரத்தின” என்றார்.
20 பிறகு கர்த்தர் நான்கு தொழிலாளிகளைக் காட்டினார். 21 நான் அவரிடம், “இந்த நான்கு ஆட்களும் என்ன செய்ய வந்திருக்கிறார்கள்?” எனக் கேட்டேன்.
அவர், “இம்மனிதர்கள் இக்கொம்புகளை அச்சுறுத்தி வெளியில் எறிந்துபோட வந்திருக்கின்றனர். அக்கொம்புகள் யூதாவின் ஜனங்களை அயல்நாடுகளுக்குப் பலவந்தமாக தூக்கி ‘எறிந்தன.’ அக்கொம்புகள் எவரிடமும் இரக்கம் காட்டவில்லை. அக்கொம்புகள் யூதா ஜனங்களை அயல் நாடுகளுக்குத் தூக்கி எறிவதின் அடையாளமாக உள்ளன” என்றார்.
எருசலேமின் அளவுகள்
2 பிறகு நான் பார்த்தேன், நான் ஒரு மனிதன், அளவு கயிற்றினை எடுத்துக் கொண்டு நிற்பதைக் கண்டேன். 2 நான் அவனிடம், “எங்கே போய்கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டேன். அவன் என்னிடம், “நான் எருசலேமை அளந்து எவ்வளவு நீளம் எவ்வளவு அகலம் எனப் பார்க்கப் போகிறேன்” என்றான்.
3 பிறகு என்னோடு பேசிக்கொண்டிருந்த தூதன் விலகினான். இன்னொரு தூதன் அவனோடு பேசப் போனான். 4 அவன் அவனிடம், “ஓடிப்போய் அந்த இளைஞனிடம் எருசலேமானது அளக்க முடியாத வகையில் பெரிதாக உள்ளது என்று சொல். அவனிடம் இவற்றைச் சொல்!
“‘எருசலேம் சுவர்களில்லாத நகரமாகும்.
ஏனென்றால் அங்கே ஏராளமான ஜனங்களும் மிருகங்களும் வாழ்ந்துக்கொண்டிருக்கின்றன.’
5 கர்த்தர் கூறுகிறார்:
‘நான் அவளைக் காப்பாற்றுவதற்கு அவளைச் சுற்றி நெருப்புச் சுவராக இருப்பேன்.
அந்நகரத்திற்கு மகிமையைக் கொண்டுவர நான் அங்கே குடியிருப்பேன்’” என்றான்.
தேவன் தமது ஜனங்களை வீட்டிற்கு அழைக்கின்றார்
கர்த்தர் கூறுகிறார்:
6 “சீக்கிரம்! வடக்கே உள்ள நிலத்திலிருந்து ஓடு.
ஆம், நான் உங்கள் ஜனங்களை எல்லாத் திசைகளுக்கும் சிதறடித்தேன் என்பது உண்மை.
7 சீயோனிலிருந்து உனது ஜனங்கள் பாபிலோனில் கைதிகளாக இருக்கிறார்கள்.
ஆனால் இப்பொழுது தப்பி, அந்த நகரத்திலிருந்து வெளியே ஓடுங்கள்!”
8 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைச் சொன்னார்.
உன்னிடமிருந்து திருடிய ஜனங்களிடத்திற்கு என்னை அனுப்பினார்.
உங்களைக் கனப்படுத்தும்படி என்னை அனுப்பினார். ஏனென்றால், யார் உன்னைக் காயப்படுத்தினாலும், அது தேவனுடைய கண்மணியைக் காயப்படுத்துவது போன்றதாகும்.
9 பாபிலோனியர், என் ஜனங்களை அடிமைப்படுத்தினார்கள்.
ஆனால் நான் அவர்களைப் பலமாக அடிப்பேன்,
அவர்கள் என் ஜனங்களின் அடிமைகளாவார்கள்,
பிறகு சர்வ வல்லமையுள்ள கர்த்தர் என்னை அனுப்பினார் என்பதை அறிவார்கள்.
10 கர்த்தர் கூறுகிறார்:
“சீயோனே, மகிழ்ச்சியோடு இரு.
ஏனென்றால், நான் வந்துக்கொண்டிருக்கிறேன். நான் உங்கள் நகரத்தில் வாழ்வேன்.
11 அந்த நேரத்தில், பல நாடுகளிலிருந்து ஜனங்கள் என்னிடம் வருவார்கள்.
அவர்கள் எனது ஜனங்களாவார்கள்.
நான் உங்கள் நகரில் வாழ்வேன்”
பிறகு, சர்வ வல்லமையுள்ள கர்த்தர்
என்னை அனுப்பினார் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
12 கர்த்தர் எருசலேமைத் தனது சிறப்புக்குரிய நகரமாகத் தேர்ந்தெடுப்பார்.
யூதா பரிசுத்தமான நாடாக, அவரது பங்காகச் சேரும்.
13 ஒவ்வொருவரும் அமைதியாக இருப்பார்கள்.
கர்த்தர் அவரது பரிசுத்தமான வீட்டை விட்டு வெளியே வருவார்.
தலைமை ஆசாரியன்
3 பிறகு தலைமை ஆசாரியனாகிய யோசுவாவை எனக்கு தூதன் காட்டினான். யோசுவா கர்த்தருடைய தூதனுக்கு முன்னால் நின்றுக்கொண்டிருந்தான். சாத்தான், யோசுவாவைக் குற்றஞ்சாட்டும்படி அவன் வலது பக்கத்திலே இருந்தான். 2 பிறகு கர்த்தருடைய தூதன், “சாத்தானே, கர்த்தர் உன்னை தொடர்ந்து குற்றஞ்சாட்டுவார். கர்த்தர் எருசலேமைத் தனது சிறப்புக்குரிய நகரமாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அவர் நகரைக் காப்பாற்றினார். இது எரிகின்ற நெருப்பிலிருந்து கட்டையை உருவி எடுப்பது போன்றதாகும்” என்றான்.
3 யோசுவா தூதனுக்கு முன் நின்று கொண்டிருந்தான். யோசுவா ஒரு அழுக்கான ஆடையை அணிந்திருந்தான். 4 பிறகு, அந்த தூதன் தன்னருகில் நின்றுக்கொண்டிருந்தவர்களை நோக்கி, “யோசுவாவின் அழுக்கு ஆடைகளை எடுத்துப் போடுங்கள்” என்றான். பிறகு தூதன் யோசுவாவிடம், “இப்பொழுது நான் உனது குற்றங்களை நீக்கியிருக்கிறேன், நான் உனக்கு புதிய ஆடையை தருகிறேன்” என்றான்.
5 பிறகு நான், “அவனது தலைமேல் சுத்தமான தலைப்பாகையை அணிவி” என்றேன். எனவே அவர்கள் அவன் தலைமேல் சுத்தமான தலைப்பாகையை அணிவித்தார்கள். கர்த்தருடைய தூதன் அங்கே நிற்கும்போது, அவர்கள் அவன் மேல் சுத்தமான ஆடையை வைத்தார்கள். 6 பிறகு கர்த்தருடைய தூதன் யோசுவாவிடம் இவற்றைச் சொன்னான்.
7 சர்வ வல்மையுள்ள கர்த்தர் இவற்றைச் சொன்னார்:
“நான் சொல்கிற வழியில் வாழ்.
நான் சொன்னவற்றைச் செய்.
என் ஆலயத்தின் பொறுப்பாளராக நீ அதன் பிரகாரங்களைக் காவல் செய்வாய்.
இங்கு நிற்கும் தூதர்களைப் போல ஆலயத்தின் எவ்விடத்திற்கும் போகலாம் என்று நான் உனக்கு அனுமதி தருவேன்.
8 எனவே யோசுவா, நீயும் உன் முன்னால் அமர்ந்திருக்கும் உடன் ஆசாரியர்களும்
நான் சொல்வதைக் கேட்கவேண்டும். நீயே தலைமை ஆசாரியன்.
உன்னோடு இருக்கிற ஜனங்கள் நான் என்னுடைய சிறப்பு வேலைக்காரனைக் கொண்டு வரும்போது செய்யப்போகும் செயல்களைக் காட்டும் உதாரணங்களாக இருக்கிறார்கள்.
நான் உண்மையாக என் சிறப்பு வேலைக்காரனைக் கொண்டு வருவேன்.
அவர் ‘கிளை’ என அழைக்கப்படுகிறார்.
9 பார், நான் யோசுவாவின் முன்பு ஒரு சிறப்பான கல்லை வைத்தேன்.
அக்கல்லில் ஏழு பக்கங்கள் இருக்கின்றன.
நான் அந்தக் கல்லில் சிறப்புச் செய்தியைச் செதுக்குவேன்.
நான் இந்த நாட்டில் உள்ள அனைத்து குற்றங்களையும் ஒரே நாளில் எடுத்துவிடுவேன் என்பதனை இது காட்டும்.”
10 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்:
“அந்த வேளையில், ஜனங்கள் தமது நண்பர்களோடும்
அயலார்களோடும் அமர்ந்து பேசுவார்கள்.
அத்தி மரம் மற்றும் திராட்சை கொடிகளுக்குக் கீழ் அமர ஒருவரையொருவர் அழைப்பார்கள்.”
2008 by Bible League International