மத்தேயு 8:14-17
Tamil Bible: Easy-to-Read Version
இயேசு அநேகரைக் குணமாக்குதல்
(மாற்கு 1:29-34; லூக்கா 4:38-41)
14 இயேசு பேதுருவின் வீட்டிற்குச் சென்றார். அங்குப் பேதுருவின் மாமியார் அதிகக் காய்ச்சலுடன் படுத்திருந்ததைக் கண்டார். 15 இயேசு அவளது கையைத் தொட்டார். உடனே அவளது காய்ச்சல் நீங்கியது. பின்னர் அவள் எழுந்து இயேசுவுக்குப் பணிவிடை செய்தாள்.
16 அன்று மாலை, பிசாசு பிடித்த பல மக்களை அவரிடம் அழைத்து வந்தனர். இயேசு தமது வார்த்தையினால் அப்பிசாசுகளைத் துரத்தி, வியாதியாய் இருந்த அனைவரையும் குணமாக்கினார்.
17 “அவர் எங்களது நோய்களைத் தீர்த்தார்;
பிணிகளை நீக்கினார்”(A)
என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்னது நடந்தேறும்படியாக இயேசு இவற்றைச் செய்தார்.
Read full chapter
மாற்கு 1:29-34
Tamil Bible: Easy-to-Read Version
அநேகரைக் குணமாக்குதல்
(மத்தேயு 8:14-17; லூக்கா 4:38-41)
29 இயேசுவும் அவரது சீஷர்களும் ஜெப ஆலயத்தை விட்டு வெளியேறினர். அவர்கள் யாக்கோபு, யோவான் ஆகியோருடன் சீமோன், அந்திரேயா சகோதரர்களின் வீட்டுக்குச் சென்றார்கள். 30 சீமோனின் மாமியார் மிகவும் உடல்நலம் இல்லாமல் இருந்தாள். அவள் படுக்கையில் காய்ச்சலோடு கிடந்தாள். மக்கள் அவரிடம் அவளைப்பற்றிக் கூறினர். 31 எனவே இயேசு அவளது படுக்கையருகே சென்றார். அவளது கையைப் பற்றிக்கொண்டு அவள் எழுந்திருக்க உதவி செய்தார். காய்ச்சல் அவளை விட்டு நீங்கி அவள் சுகமடைந்தாள். பிறகு அவள் அவர்களை உபசரிக்கத் தொடங்கினாள்.
32 அந்த இரவில், சூரியன் மறைந்த பிறகு, மக்கள் அனைத்து நோயாளிகளையும் இயேசுவிடம் கொண்டு வந்தனர். அவர்கள் பிசாசு பிடித்தவர்களையும் அவரிடம் கொண்டு வந்தனர். 33 அந்நகரில் உள்ள அனைத்து மக்களும் அந்த வீட்டின் வாசலுக்கு வந்து கூடினர். 34 அநேகருடைய பலவிதமான நோய்களையும் இயேசு குணப்படுத்தினார். பல பிசாசுகளையும் இயேசு துரத்தினார். ஆனால் இயேசு பிசாசுகளைப் பேச அனுமதிக்கவில்லை. ஏனென்றால் அவர் யாரென்று அவைகள் அறிந்திருந்தன.
Read full chapter
லூக்கா 4:38-41
Tamil Bible: Easy-to-Read Version
சீமோனின் மாமி குணமடைதல்
(மத்தேயு 8:14-17; மாற்கு 1:29-34)
38 இயேசு ஜெப ஆலயத்தில் இருந்து சென்றார். அவர் சீமோனின்[a] வீட்டிற்குச் சென்றார். சீமோனின் மாமியார் மிகவும் உடல் நலமின்றி இருந்தாள். அவளுக்கு கடும் காய்ச்சலாய் இருந்தது. அவளுக்கு உதவி செய்யும் பொருட்டு எதையேனும் செய்யும்படியாக மக்கள் இயேசுவை வேண்டினர். 39 இயேசு அவளருகே சென்று நின்று, அவள் நோயைக் குணமாகும்படியாய் கட்டளையிட்டார். நோய் அவளை விட்டு நீங்கியது. அவள் எழுந்து அவர்களுக்குப் பணிவிடை புரிய ஆரம்பித்தாள்.
பலரையும் குணமாக்குதல்
40 கதிரவன் மறையும் சமயத்தில் மக்கள் தம் நோயுற்ற நண்பர்களை இயேசுவிடம் அழைத்து வந்தனர். அவர்கள் வெவ்வேறு வகை நோய்களால் துன்புற்றனர். ஒவ்வொரு நோயுற்ற மனிதனையும் அவரது கைகளால் தொட்டு இயேசு குணமாக்கினார். 41 பிசாசின் அசுத்த ஆவிகள் பலரிடமிருந்து வெளியேறின. அவை “நீர் தேவனுடைய குமாரன்” எனக் கூக்குரலிட்டன. ஆனால் அவை பேசாமல் இருக்கும்படியாக அந்த ஆவிகளை இயேசு வன்மையாகக் கண்டித்தார். இயேசுவே கிறிஸ்து என்று அவை அறிந்திருந்தன.
Read full chapterFootnotes
- லூக்கா 4:38 சீமோன் சீமோனின் இன்னொரு பெயர் பேதுரு.
2008 by Bible League International