மத்தேயு 28:1-7
Tamil Bible: Easy-to-Read Version
இயேசுவின் உயிர்த்தெழுதல்
(மாற்கு 16:1-8; லூக்கா 24:1-12; யோவான் 20:1-10)
28 ஓய்வு நாளுக்குப் பிறகு மறுநாள் வாரத்தின் முதல் நாள் அன்று அதிகாலை மகதலேனா மரியாளும், மரியாள் எனப் பெயர் கொண்ட மற்றப் பெண்ணும் இயேசுவின் கல்லறையைக் காணச் சென்றார்கள்.
2 அப்பொழுது மிகத் தீவிரமான பூமி அதிர்ச்சி உண்டானது. வானத்திலிருந்து இறங்கி வந்த ஒரு தூதன் கல்லறையை மூடியிருந்த பாறாங்கல்லை உருட்டிக் கீழே தள்ளினான். பின் அத்தூதன் அப்பாறாங்கல்லின் மீது அமர்ந்தான். 3 மின்னலைப் போலப் பிரகாசித்த அந்தத் தூதனின் ஆடைகள் பனி போல வெண்மையாயிருந்தன. 4 கல்லறைக்குக் காவலிருந்த போர்வீரர்கள் தூதனைக் கண்டு மிகவும் பயந்துபோனார்கள். பயத்தினால் நடுங்கிய போர்வீரர்கள் பிணத்தைப்போல பேச்சு மூச்சற்றவர்களானார்கள்.
5 தூதன் பெண்களைப் பார்த்து, “பயப்படாதீர்கள். சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட இயேசுவை நீங்கள் தேடுகின்றீர்கள் என்பதை நானறிவேன். 6 ஆனால் இயேசு இங்கே இல்லை. அவர் சொன்னது போலவே மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்துவிட்டார். அவரது சரீரம் வைக்கப்பட்டிருந்த இடத்தைப் பாருங்கள். 7 உடனே அவரது சீஷர்களிடம் விரைந்து சென்று சொல்லுங்கள். ‘இயேசு மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்து விட்டார். அவர் கலிலேயாவிற்குச் சென்றுகொண்டிருக்கிறார். அவர் உங்களுக்கு முன்னரே அங்கிருப்பார்.’ அங்கே நீங்கள் இயேசுவைக் காணலாம். இதோ நான் உங்களுக்குச் சொல்லி விட்டேன்” என்று கூறினான்.
Read full chapter2008 by Bible League International