Add parallel Print Page Options

பஸ்கா விருந்து

(மத்தேயு 26:17-25; லூக்கா 22:7-14,21-23; யோவான் 13:21-30)

12 அன்று புளிப்பில்லாத அப்பம் உண்ணும் பஸ்கா பண்டிகையின் முதல் நாள். அன்றுதான் அவர்கள் பஸ்கா ஆட்டுக் குட்டியைப் பலியிடுவார்கள். இயேசுவின் சீஷர்கள் அவரிடம் வந்தனர். “நாங்கள் உமக்காகப் பஸ்கா விருந்து உண்ண எங்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?” என்று கேட்டனர்.

13 இயேசு நகரத்துக்குள் இரண்டு சீஷர்களை அனுப்பினார். “நகரத்துக்குள் போங்கள். தண்ணீர் குடத்தைச் சுமந்துகொண்டுவரும் ஒருவனைக் காண்பீர்கள். அவன் உங்களிடம் வருவான். அவனைப் பின் தொடர்ந்து செல்லுங்கள். 14 அவன் ஒரு வீட்டுக்குச் செல்வான். அந்த வீட்டு எஜமானைப் பாருங்கள். ‘ஆண்டவரும், அவரது சீஷர்களும் பஸ்கா விருந்துண்ணும் அறை எது?’ என்று கேளுங்கள். 15 அவன் மாடியில் உள்ள ஒரு பெரிய அறையைக் காட்டுவான். அந்த அறை உங்களுக்கு தயாராக இருக்கும். அங்கு விருந்து தயாராக்குங்கள்” என்றார்.

16 ஆகையால் சீஷர்கள் அவ்விடத்தை விட்டு நகரத்துக்குச் சென்றனர். இயேசு சொன்னபடி எல்லாக் காரியங்களும் நிறைவேறின. எனவே, சீஷர்கள் பஸ்கா விருந்தைத் தயாரித்தனர்.

17 மாலையில் அந்த வீட்டுக்குப் பன்னிரண்டு சீஷர்களோடு இயேசு சென்றார். 18 அவர்கள் உணவு உண்ணும்போது, இயேசு “நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன், இப்பொழுது என்னோடு உணவு உண்டுகொண்டிருக்கிற உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக் கொடுப்பான்” என்றார்.

19 இதைக் கேட்டதும் சீஷர்கள் பெரிதும் வருத்தப்பட்டனர். ஒவ்வொருவரும் அவரிடம், “உறுதியாக அது நானில்லை” என்று கூறினர்.

20 இயேசுவோ, “எனக்கு எதிரியாகிறவன் உங்கள் பன்னிரண்டு பேர்களில் ஒருவன்தான். அவன் என்னோடுதான் இப்போது தனது அப்பத்தை இப்பாத்திரத்தில் நனைத்துக்கொண்டிருக்கிறான். 21 மனித குமாரன் இறந்து போவார். வேதவாக்கியங்களில் எழுதியபடி எல்லாம் நடக்கும். எனினும் எந்த மனிதனால் மனிதகுமாரன் காட்டிக் கொடுக்கப்படுவாரோ அந்த மனிதனுக்குக் கேடு வரும். அவன் பிறக்காமல் இருந்தால் அது அவனுக்கு நன்மையாக இருந்திருக்கும்” என்றார்.

Read full chapter