Add parallel Print Page Options

யோவானின் கேள்வி(A)

18 இவை அனைத்தையும் குறித்து யோவானின் சீஷர்கள் யோவானுக்குக் கூறினர். தன் சீஷர்களில் இருவரை யோவான் அழைத்தான். 19 “நீர்தானா வருகிறவர், அல்லது இன்னொருவர் வருகைக்குக் காத்திருக்க வேண்டுமா” என்று கேட்டுத் தெரிந்து கொள்ள கர்த்தரிடம் அவர்களை யோவான் அனுப்பினார்.

20 அவ்விதமாகவே அந்த மனிதர் இயேசுவிடம் வந்தனர். அவர்கள், “யோவான் ஸ்நானகன் எங்களை உம்மிடம், ‘நீர்தானா வருகிறவர், அல்லது இன்னொருவரின் வருகைக்குக் காத்திருக்க வேண்டுமா?’ என்று கேட்டுவர அனுப்பினார்” என்றார்கள்.

21 அப்போது இயேசு பலரையும் காய்ச்சலில் இருந்தும் நோய்களில் இருந்தும் குணமாக்கவும், பிசாசினால் வரும் அசுத்த ஆவிகளினின்று விடுதலை பெறவும் செய்தார். குருடர்கள் பலர் மீண்டும் பார்வை பெறுமாறு அவர்களைக் குணப்படுத்தினார். 22 யோவானின் சீஷர்களை நோக்கி இயேசு, “இங்கு நீங்கள் பார்த்தவற்றையும் கேட்டவற்றையும் யோவானிடம் போய் கூறுங்கள். குருடர்கள் குணமடைந்து பார்க்கிறார்கள். முடவர்கள் குணமடைந்து நடக்கிறார்கள். தொழுநோயாளிகள் நலம் பெறுகின்றனர். செவிடர்கள் நலம் பெற்றுக் கேட்கிறார்கள். மரித்தோர் உயிர்ப்பிக்கப்படுகிறார்கள். தேவனுடைய இராஜ்யத்தைப்பற்றிய நற்செய்தி ஏழைகளுக்குச் சொல்லப்படுகிறது. 23 என்னை ஏற்றுக்கொள்ளுகிற மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன்!” என்றார்.

24 யோவானின் தொண்டர்கள் அங்கிருந்து சென்ற பின்னர் இயேசு யோவானைக் குறித்து அவர்களிடம் பேச ஆரம்பித்தார்: “நீங்கள் வனாந்தரத்துக்கு எதைப் பார்க்கச் சென்றீர்கள்? காற்றில் அசையும் நாணலையா? 25 நீங்கள் எதைப் பார்க்கும்படியாக வெளியே சென்றீர்கள்? நல்ல ஆடைகள் அணிந்த மனிதனையா? அழகிய மெல்லிய ஆடைகள் அணிந்த மக்கள் அரசர்களின் உயர்ந்த அரண்மனைகளில் வாழ்வார்கள். 26 உண்மையாகவே யாரைப் பார்க்கச் சென்றீர்கள்? ஒரு தீர்க்கதரிசியையா? ஆம், நான் உங்களுக்குச் சொல்கிறேன், யோவான் ஒரு தீர்க்கதரிசியைக் காட்டிலும் மிகவும் சிறந்தவன். 27 இவ்வாறு யோவானைக் குறித்து எழுதப்பட்டிருக்கிறது:

“‘கேளுங்கள்! உங்களுக்கு முன்பாக என் செய்தியாளனை நான் அனுப்புவேன்.
    அவன் உங்களுக்கு வழியை ஆயத்தம் செய்வான்.’ (B)

28 நான் உங்களுக்குச் சொல்கிறேன். உலகில் பிறந்த எந்த மனிதனைக் காட்டிலும் யோவான் பெரியவன். ஆனால் தேவனுடைய இராஜ்யத்தில் முக்கியத்துவம் குறைந்தவன் கூட யோவானைக் காட்டிலும் பெரியவன்”.

29 (யோவானின் போதனைகளை மக்கள் கேட்டபோது தேவனின் போதனைகள் நல்லவை என்று ஒத்துக்கொண்டனர். வரி வசூலிப்பவர்களும் அதனை ஆமோதித்தனர். இம்மக்கள் யோவானால் ஞானஸ்நானம் பெற்றனர். 30 ஆனால் பரிசேயர்களும், வேதபாரகரும் தேவனுடையத் திட்டத்தைத் தங்களுக்கென்று ஏற்றுக்கொள்ள மறுத்தனர். யோவான் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பதை அவர்கள் அனுமதிக்கவில்லை.)

31 “இக்காலத்து மக்களைப்பற்றி நான் என்ன கூறட்டும்? அவர்களை எதனோடு ஒப்பிடட்டும்? அவர்கள் எதைப் போன்றவர்கள்? 32 இக்காலத்து மக்கள் சந்தையில் அமர்ந்திருக்கும் சிறுவர்களைப் போன்றவர்கள். ஒரு கூட்டத்தை சேர்ந்த சிறுவர்கள் பிற சிறுவர்களை அழைத்து,

“‘நாங்கள் உங்களுக்காக இசை இசைத்தும்
    நீங்கள் ஆடவில்லை.
நாங்கள் சோகப்பாடல் பாடியும்
    நீங்கள் துக்கம் அடையவில்லை’

என்று கூறுவதுபோல் உள்ளனர்.

33 யோவான் ஸ்நானகன் பிறரைப் போன்று உண்ணவோ, திராட்சை இரசம் பருகவோ செய்யவில்லை. நீங்கள், ‘அவனுக்குள்ளே பிசாசின் அசுத்த ஆவி இருக்கிறது’ என்கிறீர்கள். 34 மனித குமாரன் பிறரைப் போன்று உண்பவராகவும், திராட்சை இரசம் பருகுபவராகவும் வந்தார். நீங்கள், ‘அவரைப் பாருங்கள். அவர் தேவைக்கும் மிகுதியாக உண்டு, மிகுதியாக திராட்சை இரசம் பருகுகிறார். அவர் வரிவசூலிப்பவர்களுக்கும் தீயோருக்கும் நண்பராக இருக்கிறார்’ என்கிறீர்கள். 35 ஆனால் ஞானமானது அதன் செய்கைகளால் சரியானதென விளங்கும்” என்றார்.

Read full chapter