Añadir traducción en paralelo Imprimir Opciones de la página

காணாமற்போன மகன்

11 அப்போது இயேசு, “ஒரு மனிதனுக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தனர். 12 இளைய மகன் தந்தையை நோக்கி, ‘நமக்குச் சொந்தமான எல்லாப் பொருட்களிலும் எனது பங்கை எனக்குத் தாருங்கள்’ என்று கூறினான். எனவே தந்தை செல்வத்தை இரண்டு பிள்ளைகளுக்கும் பங்கிட்டுக் கொடுத்தான்.

13 “சில நாட்களுக்குப் பிறகு இளைய மகன் தனக்குரிய எல்லாப் பொருட்களையும் எடுத்துக்கொண்டு வீட்டை விட்டுப் போனான். வேறொரு தூர தேசத்துக்கு அவன் பிரயாணம் செய்தான். அங்கு அவன் பணத்தை மூடனைப்போல் வீணாகச் செலவழித்தான். 14 அவன் தன்னிடமிருந்த பணம் அனைத்தையும் செலவு செய்தான். அதற்குப் பின்னர், அந்நாட்டில் வறட்சி நிலவியது. மழை பெய்யவில்லை. அந்நாட்டில் எல்லாருக்கும் தேவையான அளவுக்கு உணவு கிடைக்கவில்லை. அந்த மகன் பசியாலும், பணமின்மையாலும் துன்பப்பட்டான். 15 எனவே அந்த நாட்டில் வாழ்ந்த ஒருவனிடம் அவன் வேலைக்கு அமர்ந்தான். பன்றிகளுக்குத் தீவனமிடுமாறு அந்த மகனை அம்மனிதன் அனுப்பினான். 16 அந்த மகன் பசிமிகுதியால் பன்றிகள் சாப்பிட்டுக்கொண்டிருந்த உணவையாகிலும் உண்ண வேண்டுமென விரும்பினான். ஆனால் அவனுக்கு ஒருவரும் எந்த உணவையும் கொடுக்கவில்லை.

17 “இளைஞன் தன் மூடத்தனத்தை உணர்ந்தான். அவன், ‘என் தந்தையின் எல்லா வேலைக்காரர்களுக்கும் மிகுதியான உணவு கிடைக்கும். நானோ உணவின்றி இங்கு இறக்கும் நிலையில் இருக்கிறேன். 18 நான் இங்கிருந்து என் தந்தையிடம் போய்: தந்தையே, நான் தேவனுக்கு எதிராகப் பாவம் செய்தேன். உங்களிடமும் தவறு செய்தேன். 19 உங்கள் மகன் என்று அழைக்கப்படும் அளவுக்கு நான் தகுதியுள்ளவன் அல்லன். நான் உங்கள் வேலைக்காரர்களில் ஒருவனாக வாழ அனுமதியுங்கள் என்று சொல்லுவேன்’ என்று எண்ணினான். 20 எனவே அந்த மகன் அங்கிருந்து தன் தந்தையிடம் சென்றான்.

மகன் திரும்பிவருதல்

“அந்த மகன் தொலைவில் வரும்போதே அவனது தந்தை பார்த்துவிட்டார். அந்த மகனின் நிலையைக் கண்டு தந்தை வருந்தினார். எனவே தந்தை மகனிடம் ஓடினார். மகனை அரவணைத்து முத்தமிட்டார். 21 மகன், ‘தந்தையே, நான் தேவனுக்கு எதிராகப் பாவம் செய்தேன். உங்களுக்கும் தவறு இழைத்தேன். உங்கள் மகன் என்று அழைக்கப்படுவதற்கேற்ற தகுதி எனக்குக் கிடையாது’ என்றான்.

22 “ஆனால் தந்தை வேலைக்காரரை நோக்கி, ‘விரைந்து செல்லுங்கள். விலையுயர்ந்த ஆடைகளைக் கொண்டுவந்து அவனுக்கு உடுத்துங்கள். அவன் விரலுக்கு மோதிரம் அணிவித்துக் காலுக்கு நல்ல பாதரட்சைகளை அணியச் செய்யுங்கள். 23 நம் கொழுத்த கன்றை கொண்டுவாருங்கள். அதைச் சமைத்து திருப்தியாகச் சாப்பிடுவோம். ஒரு விருந்து வைப்போம். 24 என்னுடைய இந்த மகன் இறந்து போயிருந்தான். மீண்டும் உயிரோடு வந்துள்ளான். அவன் காணாமல் போயிருந்தான், இப்போது மீண்டும் கண்டு பிடிக்கப்பட்டான்’ என்று கூறினார். எனவே விருந்து ஏற்பாடு செய்ய ஆரம்பித்தார்கள்.

மூத்த மகன் வருதல்

25 “மூத்த மகன் வயலில் இருந்தான். அவன் வீட்டுக்கு அருகாமையில் திரும்பி வந்து கொண்டிருந்தான். இசை, ஆடல் ஆகியவற்றின் சத்தத்தைக் கேட்டான். 26 எனவே மூத்த மகன் வேலைக்காரச் சிறுவர்களில் ஒருவனை அழைத்து, ‘இவையெல்லாம் எதற்காக நடைபெறுகின்றன?’ என்று கேட்டான். 27 வேலைக்காரன், ‘உங்கள் சகோதரன் திரும்பி வந்துள்ளார். உங்கள் தந்தை கொழுத்த கன்றை உண்பதற்காகக் கொன்றுள்ளார். உங்கள் சகோதரன் பாதுகாப்பாகவும் நல்ல முறையிலும் மீண்டும் வீட்டுக்குத் திரும்பி இருப்பதால் உங்கள் தந்தை மகிழ்ச்சியாக இருக்கிறார்’ என்றான்.

28 “மூத்த மகன் கோபமுற்று விருந்துக்குச் செல்லவில்லை. எனவே தந்தை வெளியே வந்து அவனிடம் வற்புறுத்தினார். உள்ளே வருமாறு அழைத்தார். 29 மகன் தந்தையை நோக்கி, ‘நான் உங்களுக்கு ஓர் அடிமையைப் போல் பல ஆண்டுகள் உழைத்தேன்! உங்கள் கட்டளைக்கு எப்போதும் கீழ்ப்படிந்து நடந்தேன். ஆனால் ஒரு வெள்ளாட்டையாகிலும் நீங்கள் எனக்காகக் கொன்றதில்லை. எனக்கும் என் நண்பர்களுக்கும் நீங்கள் விருந்தளித்ததில்லை. 30 ஆனால் உங்கள் இன்னொரு மகன் பணத்தை எல்லாம் வேசிகளிடம் செலவழித்தான். பின்னர் வீடு திரும்பியதும் அவனுக்காகக் கொழுத்த கன்றுக் குட்டியை கொன்றீர்கள்’ என்றான்.

31 “ஆனால் தந்தை அவனை நோக்கி, ‘மகனே! நீ எப்போதும் என்னோடு இருக்கிறாய். எனக்குரியவை அனைத்தும் உனக்கு உரியவை. 32 நாம் சந்தோஷமாக விருந்துண்ண வேண்டும். ஏனெனில் உன் சகோதரன் இறந்து போயிருந்தான், இப்போது உயிரோடு வந்துள்ளான். காணாமல் போயிருந்தான், ஆனால் இப்போது கண்டுபிடிக்கப்பட்டான்’ என்றார்” என்று கூறினார்.

Read full chapter