Add parallel Print Page Options

28 யாக்கோபு எகிப்தில் 17 ஆண்டுகள் வாழ்ந்தான். எனவே அவனுக்கு 147 வயது ஆனது. 29 தான் விரைவில் மரித்துப் போவேன் என்று இஸ்ரவேலுக்குத் (யாக்கோபு) தெரிந்தது. அவன் யோசேப்பை அழைத்து அவனிடம்: “நீ என்னை நேசித்தால், உன் கையை என் தொடையின் கீழ் வைத்து ஒரு வாக்குறுதியைச் செய். நான் சொல்வதை நீ செய்யவேண்டும். எனக்கு உண்மையாக இருக்கவேண்டும். நான் மரித்தால் என்னை எகிப்தில் அடக்கம் செய்யவேண்டாம். 30 எனது முற்பிதாக்களை அடக்கம் செய்த இடத்திலேயே என்னையும் அடக்கம் செய்துவிடு. இங்கிருந்து கொண்டுபோய் நமது குடும்பக் கல்லறையில் என்னை அடக்கம் செய்” என்றான்.

யோசேப்பு, “நீர் சொன்னபடியே நான் செய்வேன் என்று வாக்குறுதி செய்கிறேன்” என்றான்.

31 பிறகு யாக்கோபு, “எனக்கு வாக்கு கொடு” என்று கேட்டான். யோசேப்பும் அவ்வாறே வாக்குறுதி அளித்தான். பின் இஸ்ரவேல் (யாக்கோபு) படுக்கையில் தன் தலையைச் சாய்த்தான்.

மனாசேயையும் எப்பிராயீமையும் ஆசீர்வதித்தல்

48 கொஞ்ச காலத்திற்குப் பிறகு, யோசேப்பு தன் தந்தை உடல் நலம் குன்றி இருப்பதை அறிந்தான். ஆகவே அவன் மனாசே மற்றும் எப்பிராயீம் எனும் தன் இரண்டு மகன்களையும் அவனிடம் அழைத்து சென்றான். யோசேப்பு போய்ச் சேர்ந்தபோது ஒருவர், “உங்கள் மகன் யோசேப்பு உங்களைப் பார்க்க வந்திருக்கிறார்” என்று யாக்கோபிடம் சொன்னார். அவன் பலவீனமானவராக இருப்பினும் கஷ்டப்பட்டு எழுந்து உட்கார முயன்றான்.

அவன் யோசேப்பிடம், “சர்வ வல்லமையுள்ள தேவன் கானான் நாட்டிலுள்ள லூஸ் என்னுமிடத்தில் என் முன் தோன்றி அங்கே என்னை ஆசீர்வதித்தார். தேவன் என்னிடம், ‘உன்னைப் பெரிய குடும்பமாக செய்வேன். நிறைய குழந்தைகளைத் தருவேன். நீங்கள் பெரிய இனமாக வருவீர்கள். உன் குடும்பம் இந்த நிலத்தைச் சொந்தமாக்கிக்கொள்ளும்’ என்றார். இப்போது உனக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். நான் வருவதற்கு முன்னரே அவர்கள் இந்த எகிப்து நாட்டில் பிறந்திருக்கிறார்கள். உன் பிள்ளைகள் எனது சொந்தப் பிள்ளைகளைப் போன்றவர்கள். அவர்கள் எனக்கு சிமியோனையும் ரூபனையும் போன்றவர்கள். எனவே இந்த இருவரும் என் பிள்ளைகள். எனக்குரிய அனைத்தையும் இவர்களுக்குப் பங்கிட்டுத் தருகிறேன். ஆனால் உனக்கு வேறு குழந்தைகள் பிறந்தால் அவர்கள் உன் பிள்ளைகள். ஆனால் அவர்கள் மனாசேக்கும் எப்பிராயீமுக்கும் பிள்ளைகள் போல் இருப்பார்கள். எனவே, வருங்காலத்தில் இவர்களுக்குரியவற்றை அவர்களும் பங்கிட்டுக்கொள்வார்கள். பதான் அராமிலிருந்து வரும்போது ராகேல் மரித்துப்போனாள். அது என்னை மிகவும் வருத்தத்திற்குள்ளாக்கியது. அவள் கானான் நாட்டிலேயே மரித்தாள். நாங்கள் எப்பிராத்தாவை நோக்கி வந்தோம். சாலையோரத்தில் அவளை அடக்கம் செய்தோம்” என்றான். (எப்பிராத்தா என்பது பெத்லகேமைக் குறிக்கும்.)

பின் இஸ்ரவேல் யோசேப்பின் பிள்ளைகளைப் பார்த்து, “இவர்கள் யார்?” என்று கேட்டார்.

யோசேப்பு தந்தையிடம், “இவர்கள் என் பிள்ளைகள், எனக்குத் தேவன் கொடுத்த மகன்கள்” என்றான்.

இஸ்ரவேல் அவனிடம், “என்னிடம் அவர்களை அழைத்து வா, நான் அவர்களை ஆசீர்வதிக்கிறேன்” என்றான்.

10 இஸ்ரவேலுக்கு வயதானதால் கண்களும் சரியாகத் தெரியவில்லை. எனவே, யோசேப்பு தன் மகன்களை மிக அருகில் அழைத்து வந்தான். இஸ்ரவேல் அவர்களை முத்தமிட்டு அணைத்துகொண்டான். 11 பிறகு அவன் யோசேப்பிடம், “நான் உனது முகத்தை மீண்டும் பார்ப்பேன் என்று நினைக்கவில்லை. ஆனால் தேவன் உன்னையும் உன் பிள்ளைகளையும் பார்க்கும்படி செய்துவிட்டார்” என்றான்.

12 பிறகு யோசேப்பு தன் மகன்களை இஸ்ரவேலின் மடியில் இருந்து இறக்கிவிட்டான். அவர்கள் அவரைக் குனிந்து வணங்கினார்கள். 13 யோசேப்பு எப்பிராயீமை தனது வலது பக்கத்திலும் மனாசேயை தனது இடது பக்கத்திலும் அமர வைத்தான். 14 ஆனால் இஸ்ரவேல் தனது கைகளைக் குறுக்காக வைத்து வலது கையை இளையவன் மீதும் இடது கையை மூத்தவன் மீதும் வைத்து ஆசீர்வாதம் செய்தான். மனாசே மூத்தவனாக இருப்பினும் அவன் மீது இடது கையை வைத்து ஆசீர்வதித்தான். 15 இஸ்ரவேல் யோசேப்பையும் ஆசீர்வதித்தான். அவன்,

“என் முற்பிதாக்களான ஆபிரகாமும் ஈசாக்கும் நம் தேவனை வழிபட்டனர்.
    அதே தேவன் என் வாழ்க்கை முழுவதும் என்னை வழி நடத்தினார்.
16 எனது அனைத்து துன்பங்களிலும் என்னைக் காப்பாற்றும் தேவதூதனாக இருந்தார்.
    இந்தப் பிள்ளைகளை ஆசீர்வதிக்கும்படி அந்த தேவனை வேண்டுகிறேன்.
இப்போது இவர்கள் எனது பெயரையும், எனது முற்பிதாக்களான ஆபிரகாம் மற்றும் ஈசாக்கின் பெயரையும் பெறுவார்கள்.
    இவர்கள் வளர்ந்து மகத்தான குடும்பமாகவும், தேசமாகவும் இப்பூமியில் விளங்கவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்” என்றான்.

17 யோசேப்பு தன் தந்தை வலது கையை எப்பிராயீம் மீது வைத்திருப்பதைப் பார்த்தான். இது யோசேப்புக்கு மகிழ்ச்சி தரவில்லை. யோசேப்பு தன் தந்தையின் வலது கையை எப்பிராயீம் தலையிலிருந்து எடுத்து மனாசேயின் தலையில் வைக்க விரும்பினான். 18 அவன் தன் தந்தையிடம், “உமது வலது கையைத் தவறாக வைத்திருக்கிறீர், மனாசேதான் முதல் மகன்” என்றான்.

19 ஆனால் யாக்கோபோ, “எனக்குத் தெரியும் மகனே! மனாசேதான் மூத்தவன், அவன் பெரியவன் ஆவான். அவனும் ஏராளமான ஜனங்களின் தந்தையாவான். ஆனால் இளையவனே மூத்தவனைவிட பெரியவனாவான். அவனது குடும்பமும் மிகப் பெரியதாக இருக்கும்” என்றான்.

20 இவ்விதமாக இஸ்ரவேல் அன்று அவர்களை ஆசீர்வதித்தான்.

“இஸ்ரவேலின் ஜனங்கள் உங்கள் பெயரைப் பயன்படுத்தி
    மற்றவரை வாழ்த்துவார்கள்.
அவர்கள், ‘எப்பிராயீமும் மனாசேயும்போல
    தேவன் உங்களை வாழ வைக்கட்டும் என்பார்கள்’” என்றான்.

இவ்வாறு இஸ்ரவேல் எப்பீராயிமை மனாசேயைவிடப் பெரியவனாக்கினான்.

21 பிறகு இஸ்ரவேல் யோசேப்பிடம், “பார், நான் மரிப்பதற்குரிய காலம் நெருங்கிவிட்டது. ஆனாலும் தேவன் உன்னோடு இருக்கிறார். அவர் உன்னை உன் முற்பிதாக்களின் பூமிக்கு வழி நடத்திச் செல்வார். 22 நான் உன் சகோதரர்களுக்குக் கொடுக்காத சிலவற்றை உனக்குக் கொடுத்திருக்கிறேன். எமோரிய ஜனங்களிடம் இருந்து நான் வென்ற மலையை உனக்குக் கொடுத்திருக்கிறேன். நான் என் பட்டயத்தையும், வில்லையும் பயன்படுத்தி அதை நான் வென்றேன்” என்றான்.

யாக்கோபு தன் மகன்களை ஆசீர்வதித்தல்

49 பின்பு யாக்கோபு தன் அனைத்து பிள்ளைகளையும் அழைத்து, “பிள்ளைகளே! என்னிடம் வாருங்கள். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று சொல்கிறேன்.

“சேர்ந்து வாருங்கள், கவனியுங்கள். யாக்கோபின் பிள்ளைகளே.
இஸ்ரவேலாகிய உங்கள் தந்தை சொல்வதைக் கேளுங்கள்.

ரூபன்

“ரூபனே! என் முதல் மகனே! நீ எனக்கு முதல் பிள்ளை.
    எனது மனித சக்தியின் முதல் அடையாளம் நீயே.
நீயே வல்லமையும்
    மரியாதையும் உள்ள மகனாக விளங்கியிருக்கலாம்.
ஆனால் உனது உணர்ச்சிகளை வெள்ளம்போல உன்னால் கட்டுப்படுத்த முடியாததாக இருக்கிறது.
    எனவே நீ மரியாதைக்குரியவனாக இருக்கமாட்டாய்.
நீ உன் தந்தையின் படுக்கையில் அவர் மனைவிகளுள் ஒருத்தியோடு படுத்தவன்.
    நீ எனது படுக்கைக்கே அவமானம் தேடித் தந்தவன்.

சிமியோனும் லேவியும்

“சிமியோனும் லேவியும் சகோதரர்கள்.
    அவர்கள் வாள்களால் சண்டையிடுவதை விரும்புவார்கள்.
இரகசியமாகப் பாவம் செய்யத் திட்டமிடுவார்கள்.
    அவர்களின் திட்டங்களில் என் ஆத்துமா பங்குகொள்ள விரும்பவில்லை.
அவர்களின் இரகசியக் கூட்டங்களை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். கோபமாக இருக்கும்போது மனிதர்களைக் கொல்லுகிறார்கள், மிருகங்களை வேடிக்கைக்காகவே துன்புறுத்துகிறார்கள்.
அவர்களின் கோபமே ஒரு சாபம்.
    அது வலிமையானது. அவர்கள் பைத்தியமாகும்போது கொடூரமானவர்களாகிறார்கள்.
யாக்கோபின் பூமியிலே அவர்கள் சொந்த பூமியைப் பெறமாட்டார்கள்.
    அவர்கள் இஸ்ரவேல் முழுவதும் பரவி வாழ்வார்கள்.

யூதா

“உன்னை உன் சகோதரர்கள் போற்றுவார்கள்.
    நீ உன் பகைவர்களை வெல்வாய்.
    உன் சகோதரர்கள் உனக்கு அடிபணிவார்கள்.
யூதா ஒரு சிங்கத்தைப் போன்றவன்.
    என் மகனே, தான் கொன்ற மிருகத்தின் மேல் நிற்கும் ஒரு சிங்கத்தை போன்றவன் நீ.
நீ ஓய்வெடுக்கும்போது உன்னை எவரும்
    தொந்தரவு செய்யமுடியாது.
10 யூதாவின் குடும்பத்தில் வருபவர்கள் அரசர் ஆவார்கள்.
    சமாதான கர்த்தர் வரும்வரை உன்னை விட்டு செங்கோல் நீங்குவதில்லை.
ஏராளமான ஜனங்கள் அவனுக்கு அடிபணிந்து சேவை செய்வார்கள்.
11 அவன் தன் கழுதையைத் திராட்சைக் கொடியில் கட்டி வைப்பான்.
    அவன் தன் இளைய கழுதையை சிறந்த திராட்டைக் கொடியில் கட்டி வைப்பான்.
    அவன் சிறந்த திராட்சைரசத்தை ஆடைவெளுக்கப் பயன்படுத்துவான்.
12 அவன் கண்கள் திராட்சைரசத்தினால் சிவப்பாகும்.
    அவன் பற்கள் பாலால் வெளுக்கும்.

செபுலோன்

13 “இவன் கடற்கரையில் வசிப்பான்.
    அவனது துறைமுகம் கப்பல்களுக்கு ஏற்றதாக இருக்கும்.
    அவனது எல்லை சீதோன்வரை இருக்கும்.

இசக்கார்

14 “இசக்கார் ஒரு கழுதையைப்போல கடினமாக உழைப்பான்.
    இரண்டு பொதியின் நடுவே படுத்திருப்பவனைப் போன்றவன்.
15 தன் ஓய்விடத்தை நன்றாக இருக்கும்படி பார்த்துக்கொள்வான்.
    தன் பூமியை செழிப்பாக வைத்துக்கொள்வான்.
அடிமையைப்போல
    வேலை செய்ய சம்மதிப்பான்.

தாண்

16 “தாண் இஸ்ரவேல் குடும்பத்தில் ஒருவனாக
    தன் சொந்த ஜனங்களையே நியாயம்தீர்ப்பான்.
17 இவன் சாலையோரத்தில் அலையும் பாம்பைப் போன்றவன்.
    இவன் பாதையிலேபடுத்திருக்கும் பாம்பைப் போன்று பயங்கரமானவன்.
இப்பாம்பு ஒரு குதிரையின் காலை கடிக்கிறது,
    சவாரி செய்தவன் கீழே விழுகிறான்.

18 “கர்த்தாவே நான் உமது இரட்சிப்புக்காகக் காத்திருக்கிறேன்.

காத்

19 “ஒரு கொள்ளைக் கூட்டம் காத்தைத் தாக்கும்.
    ஆனால் அவர்களை அவன் துரத்திவிடுவான்.

ஆசேர்

20 “இவனது நிலம் அதிகமாக விளையும்.
    ஒரு அரசனுக்கு வேண்டிய உணவு பொருட்களைத் தருவான்.

நப்தலி

21 “இவன் சுதந்திரமாக ஓடுகிற மானைப் போன்றவன்.
    அவன் வார்த்தைகள் குழந்தைகளைப் போன்று அழகானவைகள்.”

யோசேப்பு

22 “இவன் வெற்றி பெற்றவன்.
    இவன் பழத்தால் மூடப்பட்ட திராட்சைக்கொடியைப் போன்றவன்.
    நீரூற்றுக்கருகிலும் வேலிக்குள்ளும் இருக்கிற கொடியைப் போன்றவன்.
23 பலர் அவனுக்கு எதிராகப் போரிடுவார்கள்.
    வில் வீரர்களே அவன் பகைவர்.
24 ஆனால் அவன் பலம் வாய்ந்த வில்லாலும் திறமையான கைகளாலும் சண்டையில் வென்றான்.
    அவன் யாக்கோபின் வல்லவரும், மேய்ப்பரும், இஸ்ரவேலின் பாறையும் ஆனவரிடமிருந்தும் உன் பிதாவின் தேவனிடமிருந்தும் வலிமை பெற்றான்.
25 தேவன் உன்னை ஆசீர்வதிக்கிறார்.
சர்வ வல்லமையுள்ள தேவன்
    வானத்திலிருந்தும், கீழே ஆழத்திலிருந்தும் உன்னை ஆசீர்வதிக்கட்டும்.
    ஸ்தனங்களுக்கும், கர்ப்பங்களுக்குமுரிய ஆசிகளை அவர் உனக்கு வழங்கட்டும்.
26 எனது பெற்றோர்களுக்கு எவ்வளவோ நன்னமைகள் ஏற்பட்டன எனினும் எனது ஆசீர்வாதங்கள் அவற்றைவிட மேலானது.
உனது சகோதரர்கள் உன்னை எதுவுமில்லாமல் விட்டுவிட்டுப் போனார்கள்.
    ஆனால், இப்போது எனது ஆசீர்வாதங்களையெல்லாம் மலையின் உயரம்போல் கூட்டித் தருகிறேன்.

பென்யமீன்

27 “பென்யமீன் ஒரு பசித்த நரி போன்றவன்.
    காலையில் கொன்று தின்பான்.
    மாலையில் மிஞ்சியதைப் பகிர்ந்துகொள்வான்.”

28 இவர்கள் அனைவரும் இஸ்ரவேலின் 12 குடும்பத்தினர். இவ்வாறு யாக்கோபு அவர்கள் ஒவ்வொருவருக்கும் அவரவருக்குப் பொருத்தமான ஆசீர்வாதங்களைக் கொடுத்தான். 29 பின் இஸ்ரவேல் ஒரு ஆணையிட்டான். “நான் மரிக்கும்போது என் ஜனங்களோடு இருக்க விரும்புகிறேன். என் முற்பிதாக்களோடு நான் அடக்கம் செய்யப்பட வேண்டும். அந்தக் கல்லறை ஏத்தியரிடம் வாங்கிய எப்பெரோனில் உள்ளது. 30 அந்தக் குகை மம்ரேக்கு அருகில் மக்பேலா எனும் இடத்தில் வயலில் உள்ளது. இது கானான் நாட்டில் உள்ளது. இதனை ஆபிரகாம் எப்ரோனிடமிருந்து விலைக்கு வாங்கி கல்லறையாக மாற்றிவிட்டார். 31 ஆபிரகாமும் அவன் மனைவி சாராளும் அதே குகையில் அடக்கம் செய்யப்பட்டனர். ஈசாக்கும் அவர் மனைவி ரெபெக்காளும் அதே குகையில் அடக்கம் செய்யப்பட்டனர். நான் என் மனைவி லேயாளையும் அதே குகையில் அடக்கம் பண்ணினேன். 32 அந்தக் குகை இருக்கும் நிலம் ஏத்தின் மகன்களிடமிருந்து வாங்கப்பட்டது” என்றான். 33 யாக்கோபு பேசி முடித்ததும் படுத்தான். கால்களைக் கட்டிலின்மேல் மடக்கியபடியே மரணமடைந்தான்.

யாக்கோபின் இறுதிச் சடங்கு

50 இஸ்ரவேல் மரித்ததும் யோசேப்பு மிகவும் துக்கப்பட்டான். அவன் தன் தந்தையைக் கட்டிப் பிடித்துக்கொண்டு அழுது முத்தமிட்டான். பிறகு யோசேப்பு தன் வேலைக்காரர்களுக்கு அவனது தந்தையின் உடலை அடக்கத்திற்கு தயார் செய்யும்படி ஆணையிட்டான். (அவர்கள் அனைவரும் மருத்துவர்கள்.) அடக்கம் செய்வதற்கு ஏற்ற முறையில் அதனைத் தயார்படுத்தினர். எகிப்திய முறையில் அவ்வாறு செய்தனர். சரியான முறையில் தயார் செய்ய 40 நாட்கள் ஆகும். அந்தபடியே அந்த நாட்கள் நிறைவேறின. எகிப்தியர்கள் அவனுக்காக 70 நாட்கள் துக்கம் கொண்டாடினர்.

70 நாட்கள் ஆனதும் துக்க நாட்கள் முடிந்தன. எனவே யோசேப்பு பார்வோன் மன்னனின் அதிகாரிகளோடு பேசினான். “இதனை பார்வோன் மன்னனுக்குச் சொல்லுங்கள். ‘என் தந்தை மரணத்தை நெருங்கும்போது அவருக்கு நான் ஒரு வாக்குக் கொடுத்தேன். அவரை கானான் நாட்டில் ஓரிடத்தில் அடக்கம் செய்வதாக ஒப்புக்கொண்டேன். அதுவே அவர் விரும்பிய குகை. எனவே, நான் போய் அவரை அடக்கம் செய்ய எனக்கு அனுமதி வேண்டும். பின்னர் நான் உங்களிடம் திரும்பி வருவேன்’” என்றான்.

பார்வோனும், “உன் வாக்கைக் காப்பாற்று. போய் உன் தந்தையை அடக்கம் செய்” என்றான்.

எனவே யோசேப்பு அடக்கம் செய்யக் கிளம்பினான். பார்வோனின் மூப்பர்களும் (தலைவர்களும்) எகிப்திலுள்ள முதியவர்களும் யோசேப்போடு சென்றார்கள். யோசேப்பின் குடும்பத்தினரும், அவனது சகோதரர்களின் குடும்பத்ததினரும் தந்தையின் குடும்பத்தினரும் அவனோடு சென்றார்கள். குழந்தைகளும் மிருகங்களும் மட்டுமே கோசேன் பகுதியில் தங்கினார்கள். அவர்கள் பெருங்கூட்டமாகப் போனார்கள். வீரர்களும் இரதங்களிலும் குதிரைகளிலும் ஏறிப் போனார்கள்.

10 அவர்கள் கோரான் ஆத்தாத் நதியின் கீழ்க்கரையில் உள்ள கோசேன் ஆத்தாதிற்கு வந்தனர். அங்கே இஸ்ரவேலுக்கு இறுதிச் சடங்குகளையெல்லாம் செய்தனர். இது ஏழு நாட்கள் நடந்தது. 11 கானான் நாட்டிலுள்ள ஜனங்களெல்லாம் இந்தச் சடங்கில் கலந்துகொண்டனர். அவர்களோ, “அந்த எகிப்தியர்கள் பெரிய துக்கமான சடங்கைக் கொண்டுள்ளனர்” என்றனர். இப்போது அந்த இடத்திற்கு ஆபேல்மிஸ்ராயீம் என்று பெயர் வழங்குகிறது.

12 யாக்கோபின் மகன்கள் தந்தை சொன்னபடியே செய்தனர். 13 அவர்கள் அவனது உடலை கானானுக்குள் எடுத்துச் சென்று மக்பேலாவில் அடக்கம் செய்தனர். இந்தக் குகை ஆபிரகாம் ஏத்தின் ஜனங்களிடமிருந்து வாங்கிய நிலத்தில் மம்ரேக்கு அருகில் இருந்தது. ஆபிரகாம் இதனைக் கல்லறைக்காகவே வாங்கியிருந்தான். 14 யோசேப்பு தன் தந்தையை அடக்கம் செய்த பிறகு, அவனோடு அனைவரும் எகிப்துக்குத் திரும்பிப் போனார்கள்.

சகோதரர்கள் யோசேப்புக்குப் பயப்படுதல்

15 யாக்கோபு மரித்தபிறகு யோசேப்பின் சகோதரர்கள் மிகவும் கவலைப்பட்டனர். அவர்கள் பயந்தார்கள். அவர்கள் யோசேப்புக்கு தாங்கள் செய்த தீமையை எண்ணிப் பயந்தனர். “நாம் யோசேப்பிற்குச் செய்த தீமைக்காக அவன் இப்போது நம்மை வெறுக்கலாம். நம் தீமைகளுக்கெல்லாம் அவன் பழி தீர்க்கலாம்” என்று அவர்கள் பேசிக்கொண்டனர். 16 எனவே அவனது சகோதரர்கள் அவனுக்குக் கீழ்க்கண்ட செய்தியை அனுப்பினர்: “தந்தை மரிப்பதற்கு முன்னால் உனக்கு ஒரு செய்தி சொல்லும்படி சொன்னார். 17 அவர், ‘யோசேப்புக்கு நீங்கள் முன்பு செய்த தீமையை மன்னிக்கும்படி கேட்டுக்கொள்ளுங்கள்’ என்றார். எனவே நாங்கள் உன்னைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் உனக்குச் செய்த தீமைக்கு எங்களை மன்னித்துவிடு. நாங்கள் தேவனின் அடிமைகள். அவர் உனது தந்தைக்கும் தேவன்” என்றனர்.

இந்தச் செய்தி யோசேப்பை மிகவும் துக்கப்படுத்தியது. அவன் அழுதான். 18 அவனது சகோதரர்கள் அவனிடம் சென்று பணிந்து வணங்கினார்கள். “நாங்கள் உன் வேலைக்காரர்கள்” என்றனர்.

19 பிறகு யோசேப்பு, “பயப்படவேண்டாம், நான் தேவன் அல்ல. உங்களைத் தண்டிக்க எனக்கு உரிமையில்லை. 20 எனக்குக் கேடு செய்ய நீங்கள் திட்டம்போட்டீர்கள் என்பது உண்மை. ஆனால் உண்மையில் தேவன் நன்மைக்குத் திட்டமிட்டிருக்கிறார். நான் பலரது உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பது தேவனின் திட்டம். இன்னும் அவரது திட்டம் அதுதான். 21 எனவே அஞ்ச வேண்டாம். நான் உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் பொறுப்பேற்றுக்கொள்வேன்” என்றான். இவ்வாறு யோசேப்பு தன் சகோதரர்களுக்கு இனிமையாகப் பதில் சொன்னான். இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

22 யோசேப்பு தொடர்ந்து எகிப்தில் தன் தந்தையின் குடும்பத்தோடு வாழ்ந்தான். அவனுக்கு 110 வயதானபோது மரணமடைந்தான். 23 யோசேப்பு உயிரோடு இருக்கும்போதே எப்பிராயீமுக்குப் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் இருந்தனர். மனாசேக்கு மாகீர் என்ற மகன் இருந்தான். மாகீரின் பிள்ளைகளையும் யோசேப்பு பார்த்தான்.

யோசேப்பின் மரணம்

24 மரணம் நெருங்கியதும் யோசேப்பு தன் சகோதரர்களிடம், “எனது மரண நேரம் நெருங்கிவிட்டது. தேவன் உங்களை கவனித்துக்கொள்வார் என்பதை நான் அறிவேன். உங்களை இந்த நாட்டிலிருந்து வெளியே அழைத்துச் செல்வார். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருக்கு தேவன் கொடுப்பதாகச் சொன்ன நாடுகளை உங்களுக்குக் கொடுப்பார்” என்றான்.

25 பின் யோசேப்பு இஸ்ரவேல் ஜனங்களிடம் ஒரு வாக்குறுதிச் செய்தான். அவன், “நான் மரித்த பிறகு என் எலும்புகளை எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் தேவனால் வழி நடத்தப்பட்டு புதிய பூமிக்குப் போகும்போது அதையும் கொண்டு செல்லுங்கள்” இதைப்பற்றி வாக்குறுதி செய்யுங்கள் என்றான்.

26 யோசேப்பு எகிப்திலேயே மரணமடைந்தான். அப்போது அவனுக்கு 110 வயது. மருத்துவர்கள் அவனது உடலை அடக்கம் செய்வதற்காகத் தயார் செய்தனர். அதனை ஒரு பெட்டியில் வைத்தார்கள்.