Add parallel Print Page Options

பவுலின் பணி

நான் இயேசு கிறிஸ்துவின் கைதியாக இருக்கிறேன். யூதர் அல்லாத உங்களுக்காகவே நான் அவ்வாறு இருக்கிறேன். தேவன் தம் இரக்கத்தாலேயே இந்த வேலையை எனக்குக் கொடுத்தார் என்பது உறுதியாக உங்களுக்குத் தெரியும். உங்களுக்கு உதவி செய்வதற்காகவே தேவன் எனக்கு இந்த வேலையைக் கொடுத்தார். தேவன் தனது இரகசிய திட்டத்தை எனக்குத் தெரியும்படி செய்தார். அதை எனக்கு காட்டினார். நான் ஏற்கெனவே அதைப்பற்றி விளக்கமாக எழுதியுள்ளேன். நான் எழுதினதையெல்லாம் நீங்கள் படிப்பீர்களேயானால் பின்னர் கிஸ்துவைப் பற்றிய இரகசிய உண்மையை நான் புரிந்திருக்கிறேன் என்பதை நீங்கள் கண்டுகொள்ள முடியும். முற்காலங்களில் வாழ்ந்த மக்களுக்கு இந்த இரகசியம் சொல்லப்படவில்லை. ஆனால் இப்போது ஆவியின் மூலம் தேவன் அந்த இரகசிய உண்மையை அவரது அப்போஸ்தலர்களுக்கும், தீர்க்கதரிசிகளுக்கு புலப்படுத்தினார். இது தான் அந்த உண்மை. தேவன் தனது மக்களுக்குக் குறிப்பாக யூத மக்களுக்குக் கொடுத்த அத்தனையும் யூதர் அல்லாதவர்களுக்கும் கொடுப்பார். ஒரே குழுவில் யூதர்களோடு யூதர் அல்லாதவர்களும் சேர்ந்து இருப்பார்கள். தேவன் இயேசு கிறிஸ்துவுக்குள் செய்த வாக்குறுதியில் அவர்கள் யாவரும் பங்கு பெறுவர். யூதர் அல்லாதவர்களும் நற்செய்தியினாலேயே இவற்றை அடைகிறார்கள்.

தேவனின் சிறப்புப் பரிசாகிய அவரது கிருபையால் நற்செய்தியைக் கூறுகிற தொண்டனானேன். தேவன் தன்னுடைய வல்லமையைப் பயன்படுத்தி அந்தக் கிருபையை எனக்குத் தந்தார். தேவனின் பிள்ளைகளில் நானே முக்கியத்துவம் மிககுறைந்தவன். ஆனால் யூதர் அல்லாதவராகிய உங்களுக்கு நான் கிறிஸ்துவின் உயர்வு பற்றிய நற்செய்தியைச் சொல்லும் வாய்ப்பு பெற்றேன். அவரது உயர்வு சொல்ல முடியாத அளவுக்கு மிகப் பெரியது. தேவனைப் பற்றிய இரகசிய உண்மையை அனைத்து மக்களிடமும் சொல்கின்ற அரிய பணியை தேவன் எனக்குக் கொடுத்திருக்கிறார். தொடக்க காலத்திலிருந்தே இந்த இரகசிய உண்மை தேவனிடம் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது. எல்லாவற்றையும் படைத்தது தேவன் ஒருவரே, 10 பரலோகத்தில் உள்ள ஆளுகைகளும், அதிகாரங்களும் தேவனின் அளவற்ற பலவகை ஞானத்தையும் சபையின் மூலம் தெரியவரும்படிச் செய்வதே தேவனுடைய நோக்கமாகும். 11 தொடக்க காலத்திலிருந்தே இது தேவனின் திட்டம். தேவன் தன் திட்டப்படியே செய்து வருகிறார். 12 கிறிஸ்துவால் நாம் தைரியத்தோடும் முழு விசுவாசத்தோடும் தேவன் முன் வந்து சேரமுடியும். நாம் இவற்றை கிறிஸ்து மீதுள்ள விசுவாசத்தால் செய்ய முடியும்.

Read full chapter