Add parallel Print Page Options

மோசே கானானுக்குள் நுழைவதற்கு தடை

23 “பின் எனக்கென்று சிறப்பாக எதையேனும் செய்யுமாறு நான் கர்த்தரை வேண்டினேன். 24 நான், ‘கர்த்தராகிய என் ஆண்டவரே, நான் உமது அடிமை. நீர் செய்யப் போகும் அற்புதமும் வல்லமையுமான செயல்களின் ஒரு சிறு பகுதியை மட்டுமே எனக்குக் காட்டியிருக்கிறீர் என்பதை நான் அறிவேன். நீர் செய்துள்ள மாபெரும் வல்லமை மிக்க செயல்களை செய்யத்தக்க வேறொரு தேவன் விண்ணுலகிலோ, பூமியிலோ இல்லை! 25 தயவுசெய்து என்னை யோர்தான் நதியைக் கடந்துசென்று, அதன் மறுபுறம் உள்ள நற்பகுதியைக் காணவிடும். அழகான மலைநாட்டினையும் லீபனோனையும் என்னைப் பார்க்கவிடும்’ என்று வேண்டினேன்.

26 “ஆனால் உங்கள் நிமித்தம் கர்த்தர் என்னிடம் கோபமாயிருந்தார். அவர் எனக்கு செவிசாய்க்கவில்லை. கர்த்தர் என்னிடம், ‘போதும் நிறுத்து! இதைப்பற்றி மேலும் பேசாதே. 27 பிஸ்கா மலையின் மீது ஏறிச் செல். மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு ஆகிய திசைகளில் பார், நீ இவற்றை உன் கண்களால் பார்க்கலாம். ஆனால் நீ ஒருபோதும் யோர்தான் நதியைக்கடக்க முடியாது. 28 நீ யோசுவாவிற்கு கட்டளைக் கொடுத்து, அவனை ஊக்கப்படுத்து, திடப்படுத்து! நீ அந்நாட்டைப் பார்க்கலாம், ஆனால் யோசுவாவே இஸ்ரவேலரை அங்கு வழிநடத்திச் செல்வான். அவர்கள் அந்நாட்டைக் கைப்பற்றவும், அங்கு வாழவும் யோசுவா உதவுவான்’ என்று கூறினார்.

29 “பின்பு நாம் பெத்பெயரைத் தாண்டியுள்ள பள்ளத்தாக்கில் தங்கினோம்.

தேவனின் சட்டங்களுக்குக் கீழ்ப்படியுமாறு மோசே ஜனங்களுக்குக் கூறுகிறான்

“இஸ்ரவேல் ஜனங்களே, இனி நான் போதிக்கும் கட்டளைகளையும், நியாயங்களையும் கவனியுங்கள். அவற்றைக் கடைபிடித்தால் நீங்கள் வாழலாம். பிறகு உங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குத் தரும் நிலத்தை, சென்று எடுத்துக்கொள்ளுங்கள். நான் இடும் கட்டளைகளுடன் எதையும் நீங்கள் சேர்க்கவும் கூடாது. மேலும் எதையும் (நீங்கள்) நீக்கவும் கூடாது. நான் உங்களுக்குத் தரும் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளுக்கு நீங்கள் கீழ்ப்படிய வேண்டும்.

“பாகால்பேயோரின் நிமித்தம், கர்த்தர் என்ன செய்தார் என்று பார்த்தீர்கள். பொய்த் தெய்வங்களான அங்குள்ள பாகாலை வழிபட்ட உங்கள் ஜனங்கள் அனைவரையும், உங்கள் தேவனாகிய கர்த்தர் அங்கே அழித்தார். ஆனால் உங்கள் தேவனாகிய கர்த்தரோடு இருந்த நீங்கள் அனைவரும் இன்று உயிருடன் இருக்கின்றீர்கள்.

“என் தேவனாகிய கர்த்தர் எனக்கிட்ட கட்டளையின்படி உங்களுக்கு கட்டளைகளையும், நியாயங்களையும் போதித்தேன். நீங்கள் நுழையவும் வசப்படுத்தவும் தயாராகவுள்ள எந்த நாட்டிலும் அச்சட்டங்களுக்கு நீங்கள் கீழ்ப்படிய வேண்டுமென்பதற்காகவே நான் அவற்றைப் போதித்தேன், எச்சரிக்கையுடன் இச்சட்டங்களுக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்கள் அறிவும், ஞானமும் உள்ளவர்கள் என்பதை இது மற்ற நாட்டு ஜனங்களுக்கு எடுத்துக்காட்டும். அந்நாட்டு ஜனங்களும் இச்சட்டங்களைக் கேள்விப்படும்போது, ‘உண்மையிலேயே, இந்த பெரிய ஜனத்தின் (இஸ்ரவேலர்) ஜனங்கள் ஞானமுள்ளவர்களாகவும் அறிவுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள்’ என்று அவர்கள் கூறுவார்கள்.

“நாம் உதவி கேட்கும்பொழுது தேவனாகிய கர்த்தர் நமது அருகில் இருக்கிறார். வேறெந்த நாட்டிற்கும் அவரைப்போல ஒரு தேவன் இல்லை! நான் இன்று உங்களுக்கு வழங்கும் போதனைகளைப் போன்று நீதியான சட்டவிதிகள் வேறு எந்த பெரிய ஜனத்துக்கும் இல்லை. ஆனால் நீங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உங்கள் வாழ்நாள் முழுவதும் இவைகள் உங்கள் இதயத்திலிருந்து நீங்காதபடிக்கு காத்துக்கொள்ளுங்கள். நீங்கள் அவற்றை உங்கள் குழந்தைகளுக்கும் பேரக்குழந்தைகளுக்கும் எடுத்துக்கூற வேண்டும். 10 ஓரேப் மலையில் நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு முன்னால் நின்றதை நினைத்துப்பாருங்கள். கர்த்தர் என்னிடம், ‘நான் சொல்வதைக் கேட்க ஜனங்களை ஒன்று கூட்டு. பின்னர் அவர்கள் வாழ்நாள் முழுவதும் எனக்குப் பயந்து மதிப்பளிக்க கற்பார்கள். மேலும் இவற்றை அவர்கள் தமது குழந்தைகளுக்குக் கற்பிப்பார்கள்’என்று கூறினார். 11 நீங்கள் நெருங்கிவந்து மலையின் கீழ்ப்பகுதியில் நின்றீர்கள். தீப்பற்றி மலை வான உயரத்திற்கு எரிந்தது. கரிய மேகங்கள் சூழ்ந்து இருண்டது. 12 பின் நெருப்பிலிருந்து கர்த்தர் உங்களிடம் பேசினார். யாரோ பேசும் குரலை நீங்கள் கேட்டீர்கள். ஆனால் உருவம் எதையும் நீங்கள் பார்க்கவில்லை. குரல்மட்டுமே கேட்டது. 13 கர்த்தர் உங்களிடம் தமது உடன்படிக்கையைச் சொன்னார். அவர் பத்துக் கட்டளைகளைக் கூறி, அவற்றிற்குக் கீழ்ப்படியச் சொன்னார். அந்த உடன்படிக்கையின் சட்டங்களை கர்த்தர் இரு கற்பலகைகளில் எழுதினார். 14 அதே சமயம், நீங்கள் எடுத்துக்கொண்டு வாழப்போகும் நாடுகளில், நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய சட்டவிதிகளை உங்களுக்குப் போதிக்குமாறு எனக்குக் கட்டளையிட்டார்.

15 “ஒரேப் மலை மீது நெருப்பிலிருந்து கர்த்தர் உங்களுடன் பேசிய நாளில், நீங்கள் அவரைப் பார்க்கவில்லை. ஏனென்றால் தேவனுக்கு உருவமில்லை. 16 எனவே எச்சரிக்கையாக இருங்கள்! எந்த உயிரினத்தின் வடிவத்திலும் சிலைகளையோ பொய்யான தெய்வங்களை உருவாக்கும் பாவத்தைச் செய்து உங்களை நீங்களே அழித்துக்கொள்ளாதீர்கள். ஆண் அல்லது பெண் போன்ற சிலைகளைச் செய்யாதீர்கள். 17 நிலத்தில் வாழும் ஒரு மிருகத்தைப்போலவோ அல்லது வானில் பறக்கும் ஒரு பறவையைப் போலவோ விக்கிரகத்தைச் செய்யாதீர்கள். 18 நிலத்தில் ஊர்பவை அல்லது கடலில் உள்ள மீனைப்போலவோ விக்கிரகத்தைச் செய்யாதீர்கள். 19 வானத்தைப் பார்க்கும் பொழுதும் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் மற்றும் வானில் உள்ள பல்வேறு பொருட்களைப் பார்க்கும் பொழுதும் எச்சரிக்கையாக இருங்கள். அவற்றைத் தொழுதுகொள்ளவும், சேவை செய்யவும் தூண்டப்படாதிருக்க எச்சரிக்கையுடன் இருங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர் உலகின் மற்ற ஜனங்களை அவ்வாறு செய்யும்படி விட்டிருக்கிறார். 20 ஆனால் கர்த்தர் எகிப்திலிருந்து உங்களை வெளியேற்றி தமது சிறப்பான ஜனமாக்கியுள்ளார். இது, இரும்பை உருக்கும் வெப்பமிக்க உருக்காலையிலிருந்து [a] உங்களை வெளியே இழுத்துப்போட்டது போலாகும். இப்பொழுதோ நீங்கள் அவருடைய ஜனங்கள்!

21 “உங்களால் என்மீது கோபங்கொண்ட கர்த்தர், நான் யோர்தான் நதியைக் கடக்க இயலாது என்று ஆணையிட்டார். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குத் தரும் சிறப்பான நாட்டிற்குள் நான் கடந்து போவதில்லை” என்றார். 22 ஆகவே நான் இங்கேயே மரிக்க வேண்டும். ஆனால் நீங்களோ விரைவில் யோர்தான் நதியைக் கடந்து நல்ல நிலப்பகுதியைக் கைப்பற்றி அங்கு வாழ்வீர்கள். 23 அப்புதிய பூமியில், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுடன் செய்து கொண்ட உடன்படிக்கையை நீங்கள் மறக்கக்கூடாது. கர்த்தருடைய கட்டளைக்கு நீங்கள் கீழ்ப்படிய வேண்டும். எந்த உருவிலும் விக்கிரகங்களைச் செய்யாதீர்கள். 24 ஏனென்றால், உங்கள் தேவனாகிய கர்த்தர் தம் ஜனங்கள் அந்நிய தெய்வங்களை தொழுதுகொள்வதை வெறுக்கிறார். அழிக்கும் அக்கினியாகவும் கர்த்தர் விளங்குவார்!

25 “அந்நாட்டில் நீங்கள் நீண்டகாலம் வசிப்பீர்கள். அங்கே குழந்தைகளையும் பேரக் குழந்தைகளையும் பெறுவீர்கள். அங்கு நீங்கள் முதுமையடைவீர்கள். பின் எல்லா வகையான விக்கிரகங்களையும் செய்து உங்கள் வாழ்க்கையை பாழாக்குவீர்கள். நீங்கள் அவ்வாறுச் செய்யும்போது, தேவனுக்கு மிகுந்த கோபமூட்டுவீர்கள்! 26 ஆகவே இப்பொழுதே நான் உங்களை எச்சரிக்கிறேன். பரலோகமும் பூமியும் எனக்குச் சாட்சி! அக்கொடியச் செயலை நீங்கள் செய்தால் விரைவில் அழிக்கப்படுவீர்கள். அப்பூமியைக் கைப்பற்ற நீங்கள் யோர்தான் நதியை இப்பொழுது கடக்கின்றீர்கள். ஆனால் நீங்கள் ஏதேனும் விக்கிரகங்களைச் செய்தால், அங்கே நீங்கள் நீண்ட காலம் வசிக்கமாட்டீர்கள். இல்லை, நீங்கள் முழுவதுமாக அழிக்கப்படுவீர்கள்! 27 கர்த்தர் உங்களைப் பல நாடுகளில் சிதறடிப்பார். கர்த்தர் உங்களை அனுப்பும் நாடுகளுக்குச் செல்ல உங்களில் வெகுசிலரே மீதியாயிருப்பீர்கள். 28 அங்கே மரத்தாலும் கல்லாலும் செய்யப்பட்டு பார்க்கவோ, கேட்கவோ, உண்ணவோ அல்லது நுகரவோ சக்தியற்ற, மனிதர்களால் உருவாக்கப்பட்ட தெய்வங்களுக்குச் சேவை செய்வீர்கள். 29 ஆனால் மற்ற நாடுகளில் நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரைத் தேடுவீர்கள். நீங்கள் உங்கள் முழு மனதுடனும் முழு இருதயத்துடனும் தேடினால் அவரைக் கண்டடைவீர்கள். 30 நீங்கள் துன்பமடைகிற பொழுது, இவைகளெல்லாம் உங்களுக்கு நேரும்போது உங்கள் தேவனாகிய கர்த்தரிடம் திரும்புவீர்கள். அவருக்குக் கீழ்ப்படிவீர்கள். 31 உங்கள் தேவனாகிய கர்த்தர் கருணைமிக்க தேவன், உங்களை அங்கே விட்டுவிடமாட்டார் அவர் உங்களை முழுமையாக அழிக்கமாட்டார். உங்கள் முற்பிதாக்களுடன் அவர் செய்துகொண்ட உடன்படிக்கையை மறக்கமாட்டார்.

தேவன் செய்த பெரும் செயல்களை நினையுங்கள்

32 “இதைப்போன்ற பெரிய செயல் ஏதும் இதற்கு முன் நடந்ததுண்டா? இல்லவே இல்லை. கடந்த காலத்தைப் பாருங்கள். நீங்கள் பிறப்பதற்கு முன்பு நடந்த அனைத்தையும் சிந்தித்துப் பாருங்கள். பூமியில் தேவன் மனிதர்களைப் படைத்த காலம் வரைக்கும் பின்னோக்கிப் பாருங்கள். இவ்வுலகில் நடந்த எல்லாவற்றையும் பாருங்கள். இப்படிப்பட்ட பெரிய காரியம் எதனையும் யாரும் கேள்விப்பட்டதுண்டா? இல்லை! 33 தேவன் அக்கினியிலிருந்து உங்களுடன் பேசியதைக் கேட்டும் உயிருடன் இருக்கிறீர்கள்! வேறெவருக்கேனும் அவ்வாறு நடந்ததுண்டா? இல்லை! 34 மேலும் வேறு எந்த தேவனும் ஒரு நாட்டிற்குள் நுழைந்து தன் ஜனங்களை தனக்காகத் தேர்ந்தெடுக்க முயன்றதுண்டா? இல்லை! ஆனால் இந்த அற்புதச் செயல்களை உங்கள் தேவனாகிய கர்த்தர் செய்ததை நீங்களே கண்டீர்கள்! தன் வல்லமையையும் பலத்தையும் உங்களுக்குக் காண்பித்தார். ஜனங்களுக்கு ஏற்பட்ட சோதனைகளைக் கண்டீர்கள். அற்புதங்களையும் அதிசயங்களையும் கண்டீர்கள். போரையும், கொடுஞ் செயல்கள் ஏற்பட்டதையும் பார்த்தீர்கள். 35 கர்த்தர் அவர் தேவன் என்பதை நீங்கள் அறியவே அவற்றை நிகழ்த்தினார். அவரைப் போல் வேறொரு தேவன் இல்லை! 36 உங்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க பரலோகத்திலிருந்து நீங்கள் அவரது குரலைக் கேட்க வைத்தார். பூமியின் மீது அவருடைய பெரும் நெருப்பை நீங்கள் காணும்படிச் செய்து, அதிலிருந்து உங்களுடன் பேசினார்.

37 “கர்த்தர் உங்கள் முற்பிதாக்களை நேசித்தார். அதனால்தான், அவர்களின் சந்ததியினரான உங்களைத் தேர்ந்தெடுத்தார். அதனாலேயே கர்த்தர் உங்களை எகிப்திலிருந்து வெளியேற்றினார். அவர் உங்களுடன் இருந்து, தமது பெரும் வல்லமையினால் உங்களை வெளியேற்றினார். 38 நீங்கள் முன்னேறியபொழுது, உங்களைவிடவும் பெரியதும் வலிமை மிக்கதுமான ஜனங்களை கர்த்தர் வெளியில் துரத்தினார். அந்நாடுகளுக்குள் உங்களை வழிநடத்தினார். நீங்கள் வாழ்வதற்காக உங்களுக்கு அவர்களுடைய நாடுகளைக் கொடுத்தார். இன்றும் அவர் அதைச் செய்து கொண்டிருக்கிறார்.

39 “ஆகவே கர்த்தரே தேவன் என்பதை நீங்கள் இன்று உணர்ந்து ஒப்புக்கொள்ள வேண்டும். மேலேயுள்ள பரலோகத்திலும், கீழேயுள்ள பூமியிலும் அவரே தேவன். வேறு தேவன் இல்லை! 40 நான் உங்களுக்கு இன்று தரும் அவரது சட்டங்களுக்கும் கட்டளைகளுக்கும் நீங்கள் கீழ்ப்படிய வேண்டும். உங்களுக்கும் உங்களுக்குப் பின் வசிக்கப்போகும் உங்கள் குழந்தைகளுக்கும் ஒவ்வொன்றும் நல்லபடியாக நடக்கும். உங்களுக்கே எப்பொழுதும் சொந்தமாக உங்கள் தேவனாகிய கர்த்தர் கொடுக்கும் நாட்டில் நீங்கள் நீண்ட காலம் வாழ்வீர்கள். இது என்றும் உங்களுடையதாயிருக்கும்!” என்றான்.

பாதுகாப்பு நகரங்களை மோசே தேர்ந்தெடுத்தல்

41 பின் யோர்தான் நதியின் கிழக்குத் திசையில் மோசே மூன்று நகரங்களைத் தேர்ந்தெடுத்தான். 42 ஒருவன் முற்பகையின்றி மற்றவனைக் கைத்தவறி கொலை செய்தால், அவன் அம்மூன்று நகரங்களில் ஒன்றுக்குள் கொல்லப்படாமல் ஓடிவிடலாம். ஆனால் அவன் மற்றவனை வெறுக்காமலும், வேண்டுமென்றே கொலை செய்யாதிருந்தால் மட்டுமே பாதுகாப்பாக இருக்கமுடியும். 43 மோசே தேர்ந்தெடுத்த மூன்று நகரங்களாவன: ரூபனின் கோத்திரத்திற்குரிய உயரமான சமவெளியில் உள்ள பேசேர், காத்தின் கோத்திரத்திற்குரிய கீலேயாத்தில் உள்ள ராமோத் மற்றும் மனாசேயின் கோத்திரத்திற்குரிய பாசானில் உள்ள கோலான் ஆகியவையாகும்.

மோசேயின் சட்டங்களுக்கான அறிமுகம்

44 தேவனின் சட்டங்களை மோசே இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கொடுத்தான். 45 இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலிருந்து வெளியேறியபின், மோசே இப்போதனைகளையும் பிரமாணங்களையும் தந்தான். 46 அவர்கள் பெத்பேயோரைத் தாண்டியுள்ள பள்ளத்தாக்கில் யோர்தான் நதிக்குக் கிழக்கில் இருந்தபொழுது, மோசே இச்சட்டங்களை அவர்களுக்கு வழங்கினான். எஸ்போனில் வசித்த எமோரிய அரசனாகிய சீகோனின் நாட்டில் அவர்கள் இருந்தார்கள். (எகிப்திலிருந்து வெளியேறிய பொழுது மோசேயும் இஸ்ரவேல் ஜனங்களும் சீகோனைத் தோற்கடித்தனர். 47 அவர்கள் சீகோனின் தேசத்தைப் பிடித்துக்கொண்டார்கள். மேலும் பாசானின் அரசனாகிய ஓக்கின் தேசத்தையும் அவர்கள் கைப்பற்றினார்கள். இவ்விரு எமோரிய அரசர்களும் யோர்தான் நதிக்குக் கிழக்கில் வசித்தார்கள். 48 இந்த நிலப்பகுதி அர்னோன் பள்ளத்தாக்கின் ஓரத்தில் ஆரோவேர் முதல் சிரியோன் மலை (எர்மோன் மலை) வரையிலும் பரவியுள்ளது. 49 யோர்தான் நதியின் கிழக்கில் யோர்தான் பள்ளத்தாக்கு முழுவதையும் இந்நிலப்பகுதி உள்ளடக்கியுள்ளது. இது தெற்கில் சவக்கடல் வரையிலும் கிழக்கில் பிஸ்கா மலையின் அடிவாரம் வரையிலும் பரவியுள்ளது.)

பத்துக் கட்டளைகள்

மோசே இஸ்ரவேல் ஜனங்கள்

அனைவரையும் அழைத்து அவர்களிடம், “இஸ்ரவேல் ஜனங்களே! நான் இன்று உங்களிடம் கூறும் சட்டங்களையும் நியாயங்களையும் நன்றாகக் கவனித்துக் கேளுங்கள். நீங்கள் அவற்றை மனதில் கொண்டு அவற்றிற்குக் கீழ்ப்படிய வேண்டும். நமது தேவனாகிய கர்த்தர் ஓரேப் மலையில் நம்மோடு ஒரு உடன்படிக்கை செய்துகொண்டார். கர்த்தர் இந்த உடன்படிக்கையை நமது முற்பிதாக்களுடன் செய்து கொள்ளாமல், இன்று உயிரோடு வாழ்கின்ற நம் எல்லோருடனுமே செய்துகொண்டார். மலையிலே கர்த்தர் உங்களிடம் முகமுகமாய்ப் பார்த்துப் பேசினார். அவர் அக்கினியின் நடுவிலிருந்து உங்களிடம் பேசினார். ஆனால், அந்த அக்கினியைக் கண்டு நீங்கள் பயந்தீர்கள். அதனால் நீங்கள் மலையில் ஏறாமல் இருந்தீர்கள். எனவே, கர்த்தர் சொல்வதை உங்களுக்கு அறிவிக்க நான் கர்த்தருக்கும் உங்களுக்கும் நடுவில் நின்றேன். அப்பொழுது கர்த்தர் சொன்னார்:

‘உங்கள் தேவனாகிய கர்த்தர் நான் எகிப்தில் உங்கள் அடிமைத்தனத்திலிருந்து உங்களை வெளியேறச் செய்தேன். எனவே நான் கூறும் இந்தக் கட்டளைகளுக்கு நீங்கள் கீழ்ப்படிய வேண்டும்.

‘என்னைத் தவிர அந்நிய தெய்வங்களை நீங்கள் தொழுதுகொள்ளக்கூடாது.

‘மேலே ஆகாயத்திலோ, கீழே பூமியிலோ அல்லது பூமிக்குக் கீழே தண்ணீரிலோ உள்ளவைகளின் சிலைகளையோ உருவங்களையோ உண்டாக்கக்கூடாது. நீங்கள் எத்தகைய விக்கிரகங்களையும் தொழுதுகொள்ளவோ, சேவிக்கவோ வேண்டாம். ஏனென்றால் நானே உங்கள் தேவனாகிய கர்த்தர்! என் ஜனங்கள் அந்நிய தெய்வங்களைத் தொழுதுகொள்வதை நான் வெறுக்கின்றேன். எனக்கு எதிராக அவ்வாறு பாவம் செய்யும் ஜனங்கள் என் எதிரிகள். நான் அவர்களைத் தண்டிப்பேன். அவர்களது குழந்தைகளையும் பேரக் குழந்தைகளையும் அவர்களின் குழந்தைகளையும்கூடத் தண்டிப்பேன். 10 ஆனால், என்னிடத்தில் அன்பு காட்டி என் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிபவர்களிடம் மிகவும் இரக்கம் காட்டுவேன். அவர்களின் குடும்பங்களின் மீது ஆயிரம் தலைமுறைகள் வரை இரங்கி அருள்வேன்!

11 ‘உங்கள் தேவனாகிய கர்த்தருடைய பெயரைத் தவறான வழியில் பயன்படுத்தாதே. அவ்வாறு, ஒருவன் கர்த்தருடைய பெயரைத் தவறாகப் பயன்படுத்தினால் அவன் தண்டிக்கப்படுவான். அவன் கர்த்தரால் குற்றமற்றவனாகக் கருதப்படமாட்டான்.

12 ‘உங்கள் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டபடியே ஓய்வு நாட்களைப் பரிசுத்தமாகக் கழிப்பாயாக. 13 வாரத்திற்கு ஆறு நாட்கள் உன் வேலைக்குரிய கிரியைகளைச் செய். 14 ஆனால், ஏழாவது நாளோ உங்கள் தேவனாகிய கர்த்தருக்கான ஓய்வுநாள். எனவே, அந்த நாளில் யாரும் வேலை செய்யக்கூடாது. நீ மட்டுமின்றி, உனது மகன்களும், மகள்களும், வேலைக்காரர்களும், உன் வீட்டிலுள்ள மாடு, கழுதை மற்றும் பிற விலங்குகளும்கூட வேலைச் செய்யக்கூடாது. உன் வீட்டிலிருக்கின்ற அந்நியர்களும் யாதொரு வேலையும் செய்யக்கூடாது. நீ ஓய்வு எடுப்பது போல உன் அடிமைகள் எல்லோருமே ஓய்வு எடுக்க வேண்டும். 15 நீங்கள் எகிப்து நாட்டில் அடிமைகளாக இருந்ததை மறந்துவிடாதீர்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர் அவரது ஆற்றல் மிகுந்த கரத்தினாலும், ஓங்கிய புயத்தினாலும் உங்களை எகிப்திலிருந்து மீட்டு வந்தார். உங்களை அடிமைத்தனத்திலிருந்து சுதந்திரமாக்கினார். இதனாலேயே ஓய்வுநாளை எப்போதும் விசேஷித்த நாளாக செய்யும்படி உங்கள் தேவனாகிய கர்த்தர் கட்டளையிட்டார்.

16 ‘உன் தாய், தந்தைக்கு மரியாதை செலுத்த வேண்டும். உங்கள் தேவனாகிய கர்த்தர் நீ இதைச் செய்வதற்குக் கட்டளையிட்டுள்ளார். நீ இந்தக் கட்டளையைப் பின்பற்றினால், உங்கள் தேவனாகிய கர்த்தர் உனக்கு அளிக்கும் நாட்டிலே உன்னை நீண்ட நாள் வாழச் செய்வார்.

17 ‘யாரையும் கொலை செய்யாதிருக்க வேண்டும்.

18 ‘விபச்சாரம் என்னும் பாவத்தைச் செய்யாதே.

19 ‘எந்த ஒரு பொருளையும் திருடக்கூடாது.

20 ‘பிறருக்கு எதிராகப் பொய் சாட்சி சொல்லக்கூடாது.

21 ‘பிறருடைய மனைவி மீது ஆசைகொள்ளாதே. பிறரது வீட்டையும், அவரது நிலத்தையும், அவரது வேலைக்காரன் வேலைக்காரிகளையும், அவனது மாடு அல்லது கழுதைகளையும் விரும்பக்கூடாது. மற்றவர்களிடம் உள்ள எந்த ஒரு பொருளையும் எடுத்துக்கொள்ள ஆசைப்படக்கூடாது’” என்றான்.

தேவனைக் கண்டு ஜனங்கள் பயந்தனர்

22 மோசே, “இந்தக் கட்டளைகளை கர்த்தர் மலையிலே உங்கள் எல்லோர் முன்னிலையிலுமே வழங்கினார். அக்கினியிலிருந்தும், மேகத்திலிருந்தும், இருளிலிருந்தும் மகா சத்தமாகவே கர்த்தர் பேசினார். அவர் வழங்கிய இக்கட்டளைகளைத் தவிர வேறு எதுவும் கூறவில்லை. அவர் இந்தக் கட்டளைகளை இரண்டு கற்பலகைகளில் எழுதி என்னிடம் தந்தார்.

23 “மலை அக்கினியால் எரிந்தபோது இருளிலிருந்து உண்டான சத்தத்தை நீங்கள் கேட்டீர்கள். பின்பு மூப்பர்களும் உங்கள் கோத்திரங்களின் தலைவர்களும் என்னிடம் வந்தார்கள். 24 அவர்கள், ‘நமது தேவனாகிய கர்த்தர் அவரது மகிமையையும், பெருமைகளையும் காண்பித்தார். நாம் அவர் அக்கினியிலிருந்து பேசியதைக் கேட்டோம். தேவன் மனிதனோடு பேசியும் அவர் உயிரோடு வாழ்வதை இந்நாளில் கண்டோம். 25 ஆனால், இங்கே மீண்டும் நமது தேவனாகிய கர்த்தர் பேசுவதைக் கேட்டோமானால் நாம் மரிப்பது உறுதி. அந்த பயங்கரமான அக்கினியானது நம்மை அழித்துவிடும். நாம் மரிக்க விரும்பவில்லை. 26 நாம் கேட்டதுபோல் அக்கினியின் நடுவே இருந்து பேசுகிற ஜீவனுள்ள தேவனுடைய சத்தத்தை வேறு யாராவது கேட்டு உயிரோடிருந்ததுண்டோ! 27 மோசே, நீ நெருங்கிச் சென்று, நமது தேவனாகிய கர்த்தர் கூறும் எல்லாவற்றையும் கேட்க வேண்டும். பின் கர்த்தர் உம்மிடம் கூறிய எல்லாவற்றையும் எங்களிடம் சொல்ல வேண்டும். நாங்கள் நீர் சொல்வதைக் கேட்டு அதன்படியே செய்வோம்’ என்றீர்கள்.

கர்த்தர் மோசேயிடம் பேசுகிறார்

28 “கர்த்தர் நீங்கள் என்னோடு பேசியதைக் கேட்டுக்கொண்டு, அவர் என்னிடம் சொன்னது, ‘இந்த ஜனங்கள் உன்னோடு பேசியதை எல்லாம் நான் கேட்டேன். அவர்கள் சொன்னது எல்லாமே நன்றாகவே இருந்தன. 29 நான் விரும்புவதெல்லாம் அவர்களது சிந்தனை வழிமாறாமல் என்னை மதித்து எனக்குக் கீழ்ப்படிந்து, எனது கட்டளைகளை எல்லாம் பின்பற்றக்கூடிய மனஉறுதியைப் பெறவேண்டும். அப்போது அவர்களுக்கு எல்லாவற்றிலும் நன்மை உண்டாயிருக்கும். அவர்களுக்கு மட்டுமின்றி, அவர்களது சந்ததிகளுக்கும் என்றென்றைக்கும் அனைத்தும் நன்றாய் அமையும்.

30 “‘நீ சென்று அந்த ஜனங்களிடம், அவர்களது கூடாரங்களுக்குத் திரும்பிப் போகச் சொல், 31 ஆனால் நீயோ இங்கே எனது அருகிலேயே நில். நான் உன்னிடம் எல்லா கட்டளைகளையும், சட்டங்களையும் நியாயங்களையும் சொல்லுகிறேன். அவற்றை நீ அவர்களுக்குப் போதிக்க வேண்டும். நான் அவர்கள் வாழும்படி கொடுத்த நிலத்தில் உன் போதனைப்படியே அவர்கள் ஒவ்வொன்றையும் செய்ய வேண்டும்.’”

32 ஆகையால், நீங்கள் கர்த்தர் உங்களுக்குக் கூறிய கட்டளைகளின்படி நடந்துகொள்ளக் கவனமாக இருங்கள். தேவன் கூறியவற்றைப் பின்பற்றுவதை நிறுத்திவிடாதீர்கள். 33 உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு கொடுத்த கட்டளைகளின்படியே நெறி தவறாது வாழவேண்டும். பின் நீங்கள் தொடர்ந்து எல்லாவற்றிலும் நலம்பெற்று வாழலாம். உங்களுக்குச் சொந்தமான நிலத்தில் நீண்டநாள் நீங்கள் வாழ்வீர்கள்.

எப்பொழுதும் தேவனை நேசித்துக் கீழ்ப்படி!

“உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குப் போதிக்கும்படி என்னிடம் கூறியக் கட்டளைகளும், சட்டங்களும், நியாயங்களும் இவைகளே. குடியேறும்படி நீங்கள் போகிற தேசத்திலே இந்த சட்டங்களுக்குக் கீழ்ப்படியுங்கள். நீயும் உன் சந்ததியினரும் நீங்கள் வாழ்கின்ற காலம்வரை உங்கள் தேவனாகிய கர்த்தரை மதிக்க வேண்டும். நான் உங்களுக்குத் தரும் சட்டங்களுக்கும் கற்பனைகளுக்கும் நீங்கள் கீழ்ப்படிய வேண்டும். இவ்வாறு நீங்கள் செய்தால், நீங்கள் நீண்ட ஆயுளைப் பெறுவீர்கள். இஸ்ரவேல் ஜனங்களே, நான் கூறுவதைக் கவனமாகக் கேட்பதுடன் இந்தச் சட்டங்களுக்கு நீங்கள் கீழ்ப்படிய வேண்டும், அப்போது உங்களுக்கு எல்லாம் நல்லவையாக அமையும், நீங்கள், அநேக குழந்தைகளைப் பெறுவீர்கள். உங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு வாக்களித்தபடி பாலும் தேனும் ஓடக்கூடிய வளமான தேசத்தைப் பெறுவீர்கள்.

“இஸ்ரவேல் ஜனங்களே, கவனியுங்கள், நமது தேவனாகிய கர்த்தர் ஒருவரே தேவன்! உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில், நீ முழு இருதயத்துடன், நிறைவான ஆத்மாவுடன், உன் முழு வலிமையுடன் அன்பு செலுத்தவேண்டும். இன்று நான் கூறும் இந்தக் கட்டளைகளை என்றும் உங்கள் மனதில் வைக்கவேண்டும். நீங்கள் இவற்றைக் கட்டாயமாக உங்கள் குழந்தைகளுக்குப் போதிக்க வேண்டும். உங்கள் வீட்டினுள் இருக்கும்போதும் வீதிகளில் நடக்கும்போதும் அவற்றைப் பற்றிப் பேசவேண்டும். நீங்கள் தூங்கச் செல்லும்போதும் உறங்கி எழும்போதும் அவற்றைப் பற்றியே அவர்களிடம் பேச வேண்டும். அவற்றை எழுதிக்கொண்டு அடையாளமாக உங்கள் கைகளில் அணிந்து கொள்ளுங்கள். என் போதனைகளை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளப் பயன்படும்படி எப்போதும் அவைகளை உங்கள் நெற்றியில் அணிந்துகொள்ளுங்கள். அவைகளை உங்கள் வீட்டுக்கதவு நிலைக்கால்களிலும் வாசல்களிலும் எழுதி வையுங்கள்.

10 “ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகிய உங்கள் முற்பிதாக்களிடம் உங்கள் தேவனாகிய கர்த்தர் இந்தப் பூமியை உங்களுக்குத் தருவதாகக் கூறினார். கர்த்தர் உங்களுக்கு அந்த பூமியைக் கொடுப்பார். நீங்கள் இதுவரை உருவாக்காத வளமான பெரிய நகரங்களைத் தருவார். 11 நீங்கள் வைத்திராத சிறந்த நல்ல பொருட்கள் பலவற்றைக்கொண்ட வீடுகளை கர்த்தர் உங்களுக்குத் தருவார். நீங்கள் இதுவரைத் தோண்டியிருக்காத கிணறுகளைத் தருவார். நீங்கள் இதுவரைப் பயிரிடாத திராட்சைத் தோட்டங்கள், ஒலிவ மரங்கள் போன்றவற்றை கர்த்தர் உங்களுக்குத் தருவார். நீங்கள் திருப்தியாக உண்ணலாம்.

12 “ஆனால் எச்சரிக்கையாய் இருங்கள்! கர்த்தரை மறந்துவிடாதிருங்கள். நீங்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்தீர்கள், ஆனால் கர்த்தர் உங்களை அந்த அடிமைத்தனத்திலிருந்து மீட்டு வந்தார். 13 உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு மரியாதை செய்து அவர் ஒருவரை மட்டும் சேவியுங்கள். அவரது பெயரை மட்டுமே வைத்து மற்றவருக்கு வாக்களியுங்கள் (பிற பொய்த் தெய்வங்களின் பெயரைப் பயன்படுத்தாதிருங்கள்!) 14 நீங்கள் கண்டிப்பாக பிற பொய்த் தெய்வங்களைப் பின்பற்றக் கூடாது. உங்களைச் சுற்றியிருக்கின்ற ஜனங்களின் பிற பொய்த் தெய்வங்களை நீங்கள் பின்பற்றக் கூடாது. 15 உங்கள் தேவனாகிய கர்த்தர் எப்போதும் உங்களுடன் இருக்கிறார். அவர் தமது ஜனங்கள் பிற பொய்த் தெய்வங்களை தொழுதுகொள்வதை வெறுக்கின்றார். எனவே, நீங்கள் அத்தகைய தெய்வங்களைப் பின்பற்றினால் உங்கள் மீது கர்த்தர் மிகவும் கோபங்கொள்வார். அவர் உங்களை இந்தப் பூமியில் இருந்தே அழித்துவிடுவார்.

16 “நீங்கள் மாசாவிலே செய்ததுபோல் உங்கள் தேவனாகிய கர்த்தரை சோதனை செய்யாதீர்கள். 17 உங்கள் தேவனாகிய கர்த்தருடைய, கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதில் நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும். அவர் உங்களுக்காக வழங்கிய எல்லா போதனைகளையும், சட்டங்களையும் நீங்கள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். 18 நீங்கள் கர்த்தரைத் திருப்திப்படுத்தும்படி நல்லவற்றையும், சரியானவற்றையும் மட்டுமே செய்யவேண்டும். அப்போது எல்லாம் உங்களுக்கு நன்றாகவே நடக்கும். கர்த்தர் உங்கள் முற்பிதாக்களுக்கு உறுதியளித்த தேசத்தில் போய் நல்ல நிலங்களை எடுத்துக்கொள்ளலாம். 19 கர்த்தர் சொன்னது போல் உங்கள் எதிரிகள் அனைவரையும் நீங்கள் துரத்திவிடலாம்.

தேவன் செய்தவற்றை உங்கள் பிள்ளைகளுக்குப் போதியுங்கள்

20 “வருங்காலத்தில், ‘நமது தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு வழங்கிய போதனைகளுக்கும், சட்டங்களுக்கும், நியாயங்களுக்கும் அர்த்தம் என்ன?’ என்று உன்னுடைய மகன் உன்னிடம் கேட்கலாம். 21 நீ உன் மகனிடம் சொல், ‘நாங்கள் எகிப்தில் பார்வோனுக்கு அடிமைகளாக இருந்தோம். அப்போது கர்த்தர் தன் வல்லமையான கரத்தினாலே எகிப்திலிருந்து எங்களை வெளியேறச் செய்து மீட்டுக்கொண்டார். 22 கர்த்தர் அங்கே சிறந்த அற்புதங்களைச் செய்தார். கர்த்தர் எங்கள் கண்களுக்கு முன்பே எகிப்தின் மீதும், பார்வோன் மீதும், அவன் குடும்பம் அனைத்தின் மீதும், கொடிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்தார். 23 பின்பு கர்த்தர் நமது முற்பிதாக்களுக்கு கூறியபடி இந்த தேசத்தை நமக்குக் கொடுக்கும்படி நம்மை எகிப்திலிருந்து வெளியேறச் செய்தார், 24 கர்த்தர் போதித்த அனைத்தையும் நாம் பின்பற்றும்படி கர்த்தர் நமக்கு கட்டளையிட்டார். நாம் நமது தேவனாகிய கர்த்தருக்கு மிகுந்த மரியாதை செலுத்த வேண்டும். அப்போது கர்த்தர் நாம் இன்று இருக்கிற வண்ணமாக எப்போதும் வாழ்ந்து செழிப்பாக இருக்கும்படிச் செய்வார். 25 நமது தேவனாகிய கர்த்தர் சொன்னபடியே அவரது சட்டங்களை நாம் கவனமாகப் பின்பற்றினோம் என்றால், அப்போது தேவன் நாம் மிக நல்ல காரியத்தைச் செய்தோம்’” என்று சொல்வார்.

இஸ்ரவேலர், தேவனின் விசேஷ ஜனங்கள்

“உங்கள் விருப்பத்திற்கேற்ப சுதந்திரமாக வாழப்போகின்ற இந்த தேசத்தில் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை வழிநடத்திச் செல்வார். உங்களுக்காக உங்களைவிடப் பெரியவர்களும், பலசாலிகளுமான ஏத்தியர், கிர்காசியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் ஆகிய ஏழு நாட்டினர்களையும் உங்களுக்கு முன்பாகவே துரத்துவார். உங்கள் தேவனாகிய கர்த்தர் அந்த ஏழு நாட்டினரையும் உங்களுக்குக் கீழே கட்டுப்பட வைப்பார். அவர்களை நீங்கள் தோற்கடிப்பீர்கள். அவர்களை முழுவதுமாக நீங்கள் அழித்துவிட வேண்டும். அவர்களிடம் எவ்வித ஒப்பந்தமும் செய்யாதீர்கள். அவர்களிடம் இரக்கம் காட்டாதீர்கள். அவர்களில் எவரையும் மணந்துகொள்ளாதீர்கள். நீங்கள் மட்டுமின்றி உங்கள் மகன்களையோ மகள்களையோ அந்த ஜனங்களைச் சார்ந்தவர்களில் ஒருவருக்கும் திருமணம் செய்து வைக்கக் கூடாது. ஏனென்றால் அந்த ஜனங்கள் உங்கள் பிள்ளைகளை என்னைப் பின்பற்றுவதிலிருந்து திசைதிருப்பி விடுவார்கள். பின்பு உங்கள் பிள்ளைகள் மற்ற பொய்த் தெய்வங்களை தொழுதுகொள்வார்கள். அதனால், கர்த்தர் உங்கள்மீது கடுமையாக கோபங்கொள்ள நேரிடும். அவர் உங்களை விரைவில் அழித்துவிடுவார்.

பொய்த் தெய்வங்களை அழித்துவிடுங்கள்

“நீங்கள் அந்தப் பகைவர்களுக்குச் செய்ய வேண்டியது என்னவென்றால், அவர்களின் பலிபீடங்களை இடித்து, அவர்களுடைய ஞாபகார்த்தக் கற்களை உடைத்துவிடுங்கள். அவர்களது அஷெரா கோவில் கம்பங்களை வெட்டி வீழ்த்தி, அவர்களது சிலைகளைத் தீயிலிட்டு அழித்துவிடுங்கள்! ஏனென்றால் நீங்கள் எல்லோரும் கர்த்தருடைய சொந்த ஜனங்கள். இந்தப் பூமியில் உள்ள எல்லா ஜனங்களிலிருந்தும் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைத் தேர்ந்தெடுத்து தமக்கு விசேஷமான ஜனங்களாக ஆக்கினார். ஏன் கர்த்தர் உங்கள் மீது அன்பு செலுத்தி தேர்ந்தெடுத்தார்? மற்ற ஜனங்களைவிட நீங்கள் அதிகமானவர்கள் என்பதால் அல்ல, மற்ற எல்லா ஜனங்களையும்விட நீங்கள் மிகக் குறைவானவர்களே! ஆனால், கர்த்தர் தமது பெரிய வல்லமையினால் எகிப்திலிருந்து உங்களை மீட்டு வந்தார். அவர் உங்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தார். எகிப்து நாட்டு மன்னனாகிய பார்வோனின் கட்டுப்பாட்டிலிருந்து உங்களை கர்த்தர் விடுவித்தார். ஏனென்றால் கர்த்தர் உங்கள்மீது அன்பு செலுத்தி உங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற விரும்பினார்.

“ஆகையால், உங்கள் தேவனாகிய கர்த்தர் ஒருவரே தேவன் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் அவரிடம் முழு நம்பிக்கை கொள்ளலாம்! அவர் தமது உடன்படிக்கையிலிருந்து விலகமாட்டார். யாரெல்லாம் அவரிடம் அன்பு வைத்து, அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறார்களோ அவர்களுக்கெல்லாம் தேவன் தமது அன்பையும், அருளையும் பொழிவார். உங்களிடம் மட்டுமின்றி, உங்களின் ஆயிரம் தலைமுறைகளுக்கும் அவர் தமது அன்பையும் அருளையும் தருவார். 10 ஆனால், அவரை வெறுக்கின்றவர்களை கர்த்தர் தண்டிப்பார். அவர்களை அழித்துவிடுவார். அவர்களைத் தண்டிப்பதில் சிறிதும் தயவு காட்டமாட்டார். 11 எனவே நான் இன்று கொடுக்கும் நமது தேவனுடைய கட்டளைகளையும், கற்பனைகளையும், நியாயங்களையும் நீங்கள் எச்சரிக்கையுடன் பின்பற்றவேண்டும்.

Footnotes

  1. உபாகமம் 4:20 உருக்காலை இரும்பை உருக்கும் உலை என்பது எகிப்துக்கு உவமானமாக இருக்கிறது.