Add parallel Print Page Options

சீபா நாட்டு இராணி சாலொமோனைப் பார்க்க வருகிறாள்

சீபா நாட்டு இராணி சாலொமோனின் மேன்மையை அறிந்தாள். அவள் எருசலேமிற்கு வந்து சாலொமோனைக் கடினமான கேள்விகளால் சோதிக்க விரும்பினாள். அவளோடு ஒரு பெரிய குழுவும் வந்தது. அவள் தனது ஒட்டகங்களில் மணப்பொருட்களையும், பொன்னையும், இரத்தினங்களையும் கொண்டு வந்தாள். அவள் சாலொமோனிடம் வந்து அவனிடம் பேசினாள். சாலொமோனிடம் கேட்பதற்கு அவளிடம் ஏராளமான கேள்விகள் இருந்தன. சாலொமோன் அவளுடைய கேள்விகள் அனைத்திற்கும் விடையளித்தான். பதில் சொல்லவோ, விளக்கம் தரவோ சாலொமோனுக்கு எதுவும் கடினமாக இல்லை. சீபா இராணி சாலொமோனின் அறிவு ஞானத்தையும், அவன் கட்டிய அரண்மனையையும் பார்த்தாள். அவள் சாலொமோனின் மேஜையில் இருந்த உணவு வகைகளையும் அவனது முக்கிய அதிகாரிகளையும் பார்த்தாள். சாலொமோனின் வேலைக்காரர்கள் பணிசெய்யும் முறையையும், அவர்கள் ஆடைகள் அணிந்திருக்கும் விதத்தையும் கவனித்தாள். அவள் சாலொமோனின் திராட்சைரசம் பரிமாறுபவர்களையும் அவர்களது ஆடைகளையும் கவனித்தாள். கர்த்தருடைய ஆலயத்தில் சாலொமோன் கொடுத்த தகனபலிகளையும் கண்டாள். அனைத்தையும் அவள் கண்டு வியப்பில் மூழ்கினாள்.

பிறகு அவள் சாலொமோன் ராஜாவிடம், “நான் உங்கள் அறிவைப்பற்றியும் அரிய வேலைகளைப்பற்றியும் எனது நாட்டில் கேள்விப்பட்டதெல்லாம் உண்மைதான். நான் இங்கு வந்து என் கண்ணால் இவற்றைக் காணும்வரை நம்பாமல் இருந்தேன். உங்கள் மகத்தான ஞானத்தில் பாதியளவு கூட எனக்குச் சொல்லப்படவில்லை. நான் கேள்விப்பட்டதைவிடவும் நீங்கள் மகத்தானவர்! உங்கள் மனைவிகளும் அதிகாரிகளும் பாக்கியசாலிகள்! அவர்கள் உங்களுக்கு சேவை செய்யும்போது உங்கள் ஞானத்தை அனுபவிக்கும் வாய்ப்பைப் பெறுகின்றனர்! உங்கள் தேவனாகிய கர்த்தரைத் துதிப்போம். அவர் உங்களால் மகிழ்கிறார். தமது சிங்காசனத்தில் உங்களை அமரச்செய்திருக்கிறார். உங்கள் தேவன் இஸ்ரவேலின் மீது அன்பு வைத்திருக்கிறார். அவர் என்றென்றும் இஸ்ரவேலுக்கு உதவுகிறார். இதனால்தான், நியாயமானதையும் சரியானதையும் செய்வதற்காக கர்த்தர் உங்களை இஸ்ரவேலின் ராஜாவாக்கியுள்ளார்” என்றாள்.

பிறகு சீபா இராணி சாலொமோன் ராஜாவுக்கு 120 தாலந்து பொன்னையும் மிகுதியான உணவில் சேர்க்கும் நறுமணப் பொருட்களையும் இரத்தினங்களையும் கொடுத்தாள். சீபா இராணி கொடுத்தது போன்று சாலொமோன் ராஜாவுக்கு உணவில் சேர்க்கும் மிக உயர்ந்த நறுமணப் பொருட்களை யாரும் கொடுத்ததில்லை.

10 ஈராமில் வேலைக்காரர்களும் சாலொமோனின் வேலைக்காரர்களும் ஓப்பீரிலிருந்து தங்கத்தைக் கொண்டு வந்தார்கள். அவர்கள் அங்கிருந்து வாசனை மரங்களையும் இரத்தினக் கற்களையும் கொண்டு வந்தனர். 11 அந்த வாசனை மரங்களால் கர்த்தருடைய ஆலயத்திற்கும் அரண்மனைக்கும் சாலொமோன் படிக்கட்டுகளை அமைத்தான். சாலொமோன் அம்மரத்தால் பாடகர்களுக்காகச் சுரமண்டலங்களையும் தம்புருக்களையும் செய்தான். யூதா நாட்டிலே வாசனை மரங்களால் செய்யப்பட்ட பொருட்கள் இவைபோன்று இதற்கு முன்பு இருந்ததை எவரும் பார்த்ததில்லை.

12 சாலொமோன் ராஜா சீபா இராணிக்கு அவள் விரும்பியதையும் கேட்டவற்றையும் கொடுத்தான். அவள் அவனுக்குக் கொடுத்தவற்றைவிட அதிக அளவில் அவன் அவளுக்கு கொடுத்தான். பிறகு சீபா இராணியும் அவளது வேலைக்காரர்களும் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்கள் தம் நாட்டிற்குத் திரும்பிச் சென்றார்கள்.

Read full chapter