Add parallel Print Page Options

யோசியாவின் மரணம்

20 யோசியா ஆலயத்திற்கு அனைத்து நல்ல செயல்களையும் செய்து முடித்தான். பிறகு எகிப்து ராஜாவாகிய நேகோ தன் படைகளோடு ஐபிராத்து ஆற்றின் கரையிலுள்ள கர்கேமிஸ் நகரத்தின் மீது போர் செய்ய சென்றான். உடனே யோசியா ராஜாவும் அவனோடு போரிடச் சென்றான். 21 ஆனால் நேகோ யோசியாவுக்குத் தூதுவர்களை அனுப்பினான். அவர்கள்,

“யோசியா ராஜாவே! இந்தப் போர் உங்களுக்கு எதிரானது அல்ல. நான் உனக்கு எதிராகச் சண்டை செய்ய வரவில்லை. நான் என் பகைவர்களுக்கு எதிராகச் சண்டை செய்ய வந்திருக்கிறேன். தேவன் என்னை விரைவாகச் செல்லுமாறு சொன்னார். தேவன் என் பக்கத்தில் உள்ளார். எனவே எனக்கு எதிராகப் போரிடவேண்டாம். நீ எனக்கு எதிராகப் போரிட்டால் தேவன் உன்னை அழிப்பார்!” என்றனர்.

22 ஆனால் யோசியா அங்கிருந்து விலகவில்லை. அவன் நேகோவோடு போரிட முடிவுசெய்தான். எனவே அவன் உருவத்தை மாற்றிக்கொண்டு போரிட களத்துக்குச் சென்றான். தேவனுடைய கட்டளையைப் பற்றி நேகோ சொன்னதை யோசியா ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டான். யோசியா போரிட மெகிதோ பள்ளத்தாக்குக்குச் சென்றான். 23 போர்க்களத்தில் ராஜா யோசியாவின்மேல் அம்புகள் பாய்ந்தன. அவன் தன் வேலைக்காரர்களிடம், “நான் பலமாகக் காயப்பட்டிருக்கிறேன். நீங்கள் என்னைத் தூக்கிச் செல்லுங்கள்!” என்றான்.

24 எனவே, வேலைக்காரர்கள் யோசியாவை அவனது இரதத்திலிருந்து இறக்கி, வேறொரு இரதத்தில் ஏற்றினார்கள். இரண்டாவது இரதமும் அவனால் போர்க்களத்துக்குக் கொண்டுவரப்பட்டதுதான். பின் யோசியாவை எருசலேமிற்கு அழைத்துச் சென்றனர். அங்கே அவன் மரித்தான். அவன் முற்பிதாக்களின் கல்லறைகளுக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டான். யூதா மற்றும் எருசலேமில் உள்ள ஜனங்கள் அனைவரும் யோசியாவின் மரணத்திற்காகப் பெரிதும் துக்கப்பட்டார்கள்.

Read full chapter