2 நாளாகமம் 34:14-31
Tamil Bible: Easy-to-Read Version
சட்டப் புத்தகம் கண்டுபிடிக்கப்படுகிறது
14 கர்த்தருடைய ஆலயத்தில் இருக்கிற பணத்தை லேவியர்கள் வெளியே கொண்டு வந்தனர். அதே நேரத்தில் இல்க்கியா எனும் ஆசாரியன் கர்த்தருடைய சட்ட புத்தகத்தைக் கண்டுபிடித்தான். அது மோசேயால் கொடுக்கப்பட்டிருந்தது. 15 இல்க்கியா காரியக்காரனான சாப்பானிடம், சட்டப் புத்தகத்தை கர்த்தருடைய ஆலயத்தில் கண்டு எடுத்திருக்கிறேன் என்றான். இல்க்கியா அந்தப் புத்தகத்தைச் சாப்பானிடம் கொடுத்தான். 16 சாப்பான் அந்தப் புத்தகத்தை யோசியா ராஜாவிடம் எடுத்துவந்தான். அவன் ராஜாவிடம், “உங்கள் வேலைக்காரர்கள் நீங்கள் சொன்னது போலவே அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறார்கள். 17 அவர்கள் கர்த்தருடைய ஆலயத்தில் இருந்த பணத்தை சேகரித்து அதனை மேற்பார்வையாளர்களுக்கும், வேலைக்காரர்களுக்கும் கொடுக்கின்றனர்” என்றான். 18 மேலும் சாப்பான் ராஜாவிடம், “ஆசாரியனான இல்க்கியா ஒரு புத்தகத்தை என்னிடம் கொடுத்திருக்கிறான்” என்றான். பிறகு சாப்பான் அந்தப் புத்தகத்தை வாசித்துக் காட்டினான். அவன் வாசிக்கும்போது ராஜாவுக்கு முன்பு இருந்தான். 19 யோசியா ராஜா சட்டத்தின் வார்த்தைகளைக் கேட்டபோது அவன் தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டான். 20 பிறகு அவன் இல்க்கியாவுக்கும், சாப்பானின் குமாரனான அகிக்காமுக்கும், மீகாவின் குமாரனான அப்தோனுக்கும், சம்பிரதியாகிய சாப்பானுக்கும், ராஜாவின் ஊழியக்காரனாகிய அசாயாவுக்கும் கட்டளையிட்டான். 21 ராஜா, “செல்லுங்கள் எனக்காக கர்த்தரிடம் கேளுங்கள். இஸ்ரவேலிலும், யூதாவிலும் மிச்சமுள்ள ஜனங்களுக்காகக் கேளுங்கள். கண்டுபிடிக்கப்பட்ட புத்தகத்தில் உள்ள சொற்களைப்பற்றி கேளுங்கள். நமது முற்பிதாக்கள் அவரது வார்த்தைகளுக்கு அடிபணியவில்லை என்பதால் கர்த்தர் நம் மீது கோபமாக இருக்கிறார். இந்தப் புத்தகம் செய்ய சொன்னவற்றையெல்லாம் அவர்கள் செய்யவில்லை!” என்றான்.
22 இல்க்கியாவும், ராஜாவின் வேலைக்காரர்களும் உல்தாள் எனும் தீர்க்கதரிசி பெண்ணிடம் சென்றனர். உல்தாள் சல்லூமின் மனைவி. சல்லூம் திக்வாதின் குமாரன். திக்வாத் அஸ்ராவின் குமாரன். அஸ்ரா ராஜாவின் ஆடைகளுக்குப் பொறுப்பாளன். உல்தாள் எருசலேமின் புதிய பகுதியில் வாழ்ந்து வருகிறாள். இல்க்கியாவும், ராஜாவின் வேலைக்காரர்களும் அவளிடம் நடந்ததை எல்லாம் சொன்னார்கள். 23 உல்தாள் அவர்களிடம், “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் கூறுவது இதுதான்: ராஜாவாகிய யோசியாவிடம் கூறுங்கள்: 24 ‘நான் இந்த இடத்திற்கும், இங்கு வாழும் ஜனங்களுக்கும் தொந்தரவுகளைத் தருவேன். யூதா ராஜாவின் முன்னிலையில் வாசிக்கப்பட்ட புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள எல்லா கொடூரமானவற்றையும் கொண்டு வருவேன். 25 ஜனங்கள் என்னைவிட்டு விலகி அந்நிய தெய்வங்களுக்கு நறுமணப் பொருட்களை எரிக்க போய்விட்ட காரணத்தால் நான் இவற்றைச் செய்வேன். தம்முடைய தீயச்செயல்களால் அவர்கள் எனக்கு மிகுதியான கோபத்தை மூட்டிவிட்டார்கள். எனவே நான் இந்த இடத்தில் எனது கோபத்தைக் கொட்டுவேன். நெருப்பைப்போன்று கோபம் அவியாது.’
26 “ஆனால் யூதாவின் ராஜாவாகிய யோசியாவிடம் கூறு. அவன் உங்களைக் கர்த்தரைக் கேட்குமாறு அனுப்பியிருக்கிறான். சற்று நேரத்திற்கு முன்னர் நீ கேட்டவற்றைப்பற்றி இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் கூறுவது இதுதான்: 27 ‘யோசியா நீ மனம் இளகி பணிந்துகொண்டாய், உனது ஆடைகளைக் கிழித்துக்கொண்டாய், எனக்கு முன்பு நீ அழுதாய். இவ்வாறு உன் மனம் இளகியதால், 28 உன் முற்பிதாக்களுடன் இருப்பதற்கு நான் உன்னை அழைத்துச் செல்வேன். நீ உனது கல்லறைக்கு சமாதானத்தோடு போவாய். அதனால் நான் இந்த இடத்துக்கும், இங்குள்ள ஜனங்களுக்கும் கொடுக்கப்போகும் பயங்கரமான துன்பங்களை நீ காணமாட்டாய்’” என்றார். இல்க்கியாவும், ராஜாவின் வேலைக்காரர்களும் இந்த செய்தியை யோசியா ராஜாவிடம் கொண்டுவந்தனர்.
29 பிறகு யோசியா யூதா மற்றும் எருசலேமில் உள்ள மூப்பர்களை அழைத்து அவர்களைச் சந்தித்தான். 30 ராஜா கர்த்தருடைய ஆலயத்திற்குள் சென்றான். யூதாவிலுள்ள ஜனங்களும், எருசலேமில் உள்ள ஜனங்களும் ஆசாரியர்களும், லேவியர்களும், முக்கியமானவர்களும் முக்கியமற்றவர்களும் ராஜாவோடு சென்றனர். உடன்படிக்கைப் புத்தகத்தில் உள்ள அனைத்தையும் ராஜா அவர்களுக்கு வாசித்துக் காட்டினான். அப்புத்தகம் கர்த்தருடைய ஆலயத்தில் கண்டெடுத்த புத்தகம் ஆகும். 31 பிறகு ராஜா தனது இடத்தில் எழுந்து நின்றான். பிறகு அவன் கர்த்தரோடு ஒரு உடன்படிக்கைச் செய்தான். கர்த்தரைப் பின்பற்றுவதாகவும் அவரது கட்டளைகளுக்கும், சட்டங்களுக்கும் அடிபணிவதாகவும் சொன்னான். முழு இருதயத்தோடும் ஆத்துமாவோடும் அவன் கீழ்ப்படிவதற்கு ஒப்புக்கொண்டான். உடன்படிக்கைப் புத்தகத்தில் எழுதப்பட்ட அனைத்துக்கும் அடிபணிவதாக ஒப்புக்கொண்டான்.
Read full chapter
2 தீமோத்தேயு 3:14-16
Tamil Bible: Easy-to-Read Version
14 நீ அறிந்த போதனைகளின்படி தொடர்ந்து செல். அவை உண்மையான போதனைகள் என்பதை அறிந்திருக்கிறாய். ஏனெனில் அவ்விஷயங்களை உனக்குப் போதித்தவர்கள் மீது நம்பிக்கை வைக்கமுடியும் என்பதை நீ அறிவாய். 15 நீ குழந்தைப் பருவம் முதலாகப் பரிசுத்த வேதவாக்கியங்களை அறிந்திருக்கிறாய். அவை உன்னை ஞானவானாக மாற்றும் வல்லமைகொண்டது. அந்த ஞானம் உனக்கு இயேசு கிறிஸ்துவில் கொண்ட விசுவாசம் மூலம் இரட்சிப்பைப்பெற வழிகாட்டும். 16 அனைத்து வேதவாக்கியங்களும் தேவனால் கொடுக்கப்பட்டவை. இவை போதிக்கப் பயன்படும், வாழ்வில் தவறு செய்கின்றவர்களுக்கு வழிகாட்டும். இது தவறுகளைத் திருத்தி நல் வழியில் வாழத் துணை செய்யும்.
Read full chapter2008 by Bible League International