2 நாளாகமம் 22
Tamil Bible: Easy-to-Read Version
யூதாவின் ராஜாவாகிய அகசியா
22 யோராமின் இடத்திற்கு எருசலேம் ஜனங்கள் அகசியாவைப் புதிய ராஜாவாகத் தேர்ந்தெடுத்தனர். அகசியா யோராமின் இளைய குமாரன் ஆவான். யோராமின் முகாமை அரபியர்களுடன் சேர்ந்துகொண்டு வந்தவர்கள் தாக்கியபோது, யோராமின் மூத்த குமாரர்களைக் கொன்றுவிட்டனர். எனவே அகசியா மட்டுமே மீதியாகயிருந்ததால் யூதாவின் ராஜாவானான். 2 அகசியா ஆட்சிக்கு வந்தபோது அவனுக்கு 22 வயது. அகசியா எருசலேமில் ஓராண்டு ஆட்சி செய்தான். அவனது தாயின் பெயர் அத்தாலியாள். அவள் ஒம்ரியின் குமாரத்தி. 3 அகசியாவும் ஆகாபின் குடும்பத்தினரைப்போலவே வாழ்ந்தான். இவன் இவ்வாறு வாழ்வதற்கு இவனது தாயே காரணமாக இருந்தாள். இவன் தவறு செய்ய அவள் தூண்டினாள். 4 கர்த்தருடைய பார்வையில் அகசியா தீமைச் செய்துவந்தான். இதைத்தான் ஆகாப் குடும்பத்தினரும் செய்துவந்தனர். அகசியாவின் தந்தை மரித்த பிறகு ஆகாபின் குடும்பத்தினர் இவனுக்கு தீய அறிவுரைகளைக் கூறிவந்தனர். அவை அவனுக்கு மரணத்துக்கு ஏதுவாயிற்று, 5 ஆகாபின் குடும்பத்தினர் தந்த அறிவுரைகளை அகசியா பின்பற்றினான். இவன் யோராமோடு சேர்ந்துகொண்டு ஆராமின் ராஜாவாகிய ஆசகேலுக்கு எதிராகச் சண்டையிட ராமோத் கீலேயாத் நகரத்திற்குச் சென்றான். யோராமின் தந்தையின் பெயர் ஆகாப். இவன் இஸ்ரவேலின் ராஜா. ஆனால் ஆராமியர்கள் போரில் யோராமைக் காயப்படுத்தினர். 6 யோராம் தன்னைக் குணப்படுத்திக்கொள்ள யெஸ்ரெயேல் நகரத்திற்குத் திரும்பிப் போனான். இவன் ஆராம் ராஜாவாகிய ஆசகேலுக்கு எதிராக ராமோத்தில் சண்டையிட்டபோது இக்காயங்களை அடைந்தான். பிறகு யோராமைப் பார்க்க அகசியா யெஸ்ரெயேல் நகரத்திற்கு சென்றான். அகசியாவின் தந்தையின் பெயர் யோராம். இவன் யூதாவின் ராஜா. யோராமின் தந்தையின் பெயர் ஆகாப். யோராம் காயப்பட்டதால் யெஸ்ரெயேல் நகரத்தில் இருந்தான்.
7 யோராமைப் பார்க்க அகசியா சென்றபொழுது, தேவன் அகசியாவிற்கு மரணத்தை விளைவித்தார். அகசியா வந்ததும் யோராமோடு யெகூவைச் சந்திக்கப்போனான். யெகூவின் தந்தை நிம்சி. ஆகாபின் குடும்பத்தை அழிக்க கர்த்தர் யெகூவைத் தேர்ந்தெடுத்தார். 8 யெகூ ஆகாபின் குடும்பத்தைத் தண்டித்துக் கொண்டிருந்தான். அதோடு அவன் அகசியாவிற்கு சேவை செய்த யூதாவின் தலைவர்களையும் அகசியாவின் உறவினர்களையும் கண்டுபிடித்து அவர்களைக் கொன்றான். 9 பிறகு யெகூ, அகசியாவைத் தேடினான். அவன் சமாரியா நகரத்திலே ஒளிந்துகொள்ள முயன்றபோது யெகூவின் ஆட்கள் பிடித்துக்கொண்டனர். அவனை அவர்கள் யெகூவிடம் கொண்டுவந்தனர். அவர்கள் அவனைக் கொன்று அடக்கம் செய்தனர். அவர்கள், “அகசியா யோசபாத்தின் சந்ததியான். யோசபாத் தன் முழுமனதோடு கர்த்தரைப் பின்பற்றினான்” என்று கூறினர். அகசியாவின் குடும்பத்தினருக்கு யூதா முழுவதையும் ஆள்வதற்குரிய பெலன் இல்லாமல்போனது.
அத்தாலியாள் இராணி
10 அத்தாலியாள் அகசியாவின் தாய் ஆவாள். இவள் தன் குமாரன் மரித்துப்போனதை அறிந்ததும், யூதாவில் உள்ள ராஜாக்களின் எல்லா பிள்ளைகளையும் கொன்றுபோட்டாள். 11 ஆனால் யோசேபியாத் அகசியாவின் குமாரனான யோவாசை எடுத்து மறைத்து வைத்தாள். அவள் யோவாசையும் அவனது தாதிகளையும் படுக்கையறைக்குள்ளே ஒளித்தாள். யோசேபியாத் யோராம் ராஜாவின் குமாரத்தி. அவள் யோய்தாவின் மனைவி. யோய்தா ஒரு ஆசாரியன். யோசேபியாத் அகசியாவின் சகோதரி. அத்தாலியாள் யோவாசைக் கொல்லவில்லை. காரணம் அவன் மறைக்கப்பட்டான். 12 யோவாஸ் ஆசாரியர்களோடு தேவனுடைய ஆலயத்தில் ஆறு ஆண்டுகளுக்கு மறைக்கப்பட்டான். அக்காலக்கட்டத்தில், அத்தாலியாள் அந்நாட்டை இராணியைப்போல ஆண்டு வந்தாள்.
2008 by Bible League International