A A A A A
Bible Book List

2 சாமுவேல் 12 Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

தாவீதிடம் நாத்தான் பேசுகிறான்

12 கர்த்தர் நாத்தானை தாவீதிடம் அனுப்பினார். நாத்தான் தாவீதிடம் சென்றான். நாத்தான், “ஒரு நகரத்தில் இரண்டு பேர் இருந்தார்கள். ஒருவன் செல்வந்தன், மற்றவன் ஏழை. செல்வந்தனிடம் ஏராளமான ஆடுகளும் கால்நடைகளும் இருந்தன. ஆனால், ஏழையிடம் அவன் வாங்கிய ஒரு (பெண்) ஆட்டுக்குட்டி மாத்திரம் இருந்தது. அது அந்த ஏழையோடும் அவனது பிள்ளைகளோடும் வளர்ந்து, உணவை உண்டது, ஏழையின் கோப்பையில் அது குடித்தது. ஏழையின் மார்பில் அது தூங்கிற்று. அந்த ஏழைக்கு அது ஒரு மகளைப் போல இருந்தது.

“அந்த வழியாய் வந்த ஒரு பயணி செல்வந்தனைச் சந்திப்பதற்காக இறங்கினான். செல்வந்தன் அவனுக்கு ஒரு விருந்து தர ஏற்பாடு செய்தான். அதற்கென்று அச்செல்வந்தன் தனது ஆடுமாடுகளில் எதையும் தொடாமல் ஏழையின் ஒரே ஆட்டுக்குட்டியை எடுத்துக்கொண்டான். அதைக் கொன்று விருந்தாளிக்கு உணவாகச் சமைத்தான்” என்றான்.

தாவீது அச்செல்வந்தன் மீது கோபங்கொண்டான். அவன் நாத்தானை நோக்கி, “கர்த்தர் உயிரோடிருப்பது நிச்சயமானால், அம்மனிதன் மரிக்க வேண்டும் என்பதும் நிச்சயம்! அவன் ஆட்டுக்குட்டிக்காக நான்கு மடங்கு பணம் செலுத்த வேண்டும். ஏனெனில் அவன் இக்கொடிய தீமையைச் செய்தான். ஏனெனில் அவனிடம் இரக்க குணம் எள்ளளவும் இருக்கவில்லை” என்றான்.

நாத்தான் தாவீதிடம் அவன் பாவத்தை கூறுதல்

அப்போது நாத்தான் தாவீதை நோக்கி, “நீயே அந்த செல்வந்தன்! இதுவே இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் கூறுவது: ‘நான் உன்னை இஸ்ரவேலின் அரசனாக அபிஷேகம் செய்தேன். நான் உன்னை சவுலிடமிருந்து மீட்டேன். நீ அவனது குடும்பத்தையும் அவனது மனைவியரையும் எடுத்துக்கொள்ளுமாறு நான் செய்தேன். நான் உன்னை இஸ்ரவேல், யூதா ஜனங்களுக்கு அரசனாக்கினேன். அது போதாதென்று உனக்கு இன்னும் அதிகமதிகமாகக் கொடுத்தேன். ஏன் நீ கர்த்தருடைய கட்டளையை அசட்டை செய்தாய்? அவர் தவறெனக் கூறிய காரியத்தை நீ ஏன் செய்தாய்? உரியாவின் மனைவியை உன் மனைவியாக்கிக் கொண்டாய். நீ, அம்மோனியரின் வாளால் ஏத்தியனாகிய உரியாவைக் கொன்றாய். இந்த விதமாக ஏத்தியானாகிய உரியாவை ஒரு வாளால் கொன்றாய். 10 எனவே வாள் உன் குடும்பத்தை விட்டு அகலாது. நீ ஏத்தியானாகிய உரியாவின் மனைவியை எடுத்துக்கொண்டாய். இப்படி செய்ததினால் நீ என்னைப் பொருட்படுத்தவில்லை என்பதைக் காட்டினாய்’.

11 “கர்த்தர் சொல்வது: ‘நான் உனக்கு எதிராகத் தொல்லையைத் தர ஆரம்பிப்பேன். இந்தத் தொல்லை உனது குடும்பத்திலிருந்தே உருவாகும். உன் மனைவியரை நான் உன்னிடமிருந்து பிரித்து உனக்கு மிக நெருக்கமான ஒருவனுக்குக் கொடுப்பேன். அம்மனிதன் உன் மனைவியரோடுப் படுப்பான். அதை எல்லோரும் காண்பார்கள்! 12 நீ இரகசியமாக பத்சேபாளோடு படுத்தாய். இஸ்ரவேலர் எல்லோரும் பார்க்கும்படியாக [a] பகிரங்கமாக நான் இக்காரியத்தைச் செய்வேன்’ என்றார்” என்றான்.

13 அப்போது தாவீது நாத்தனை நோக்கி, “நான் கர்த்தருக்கு எதிராக பாவம் செய்தேன்” என்றான்.

நாத்தான் தாவீதை நோக்கி, “கர்த்தர் இந்த பாவத்தை மன்னிப்பார். நீ மரிக்கமாட்டாய். 14 ஆனால் நீ செய்த இந்த பாவத்தின் மூலம் கர்த்தருடைய எதிரிகளும் அவரை வெறுத்தொதுக்க நீ வழிவகுத்துவிட்டாய்! ஆதலால் உனக்குப் பிறக்கும் மகன் மரிப்பான்” என்றான்.

தாவீதுக்கும் பத்சேபாளுக்கும் பிறந்த மகனின் மரணம்

15 பின்பு நாத்தான் வீட்டிற்குத் திரும்பினான். தாவீதுக்கும் உரியாவின் மனைவிக்கும் பிறந்த ஆண் குழந்தையை கர்த்தர் பெரும் நோய்க்குள்ளாக்கினார். 16 தாவீது தேவனிடம் குழந்தையின் பொருட்டு வேண்டினான். தாவீது உண்ணவோ, குடிக்கவோ மறுத்தான். வீட்டிற்குள் சென்று அங்கேயே இருந்தான். இரவு முழுவதும் தரையில் கிடந்தான்.

17 தாவீதின் குடும்பத்திலுள்ள மூப்பர்கள் வந்து தரையிலிருந்து அவனை எழுப்ப முயன்றனர். ஆனால் தாவீதோ எழுந்திருக்க மறுத்தான். அந்த மூப்பர்களுடன் அமர்ந்து உண்ண மறுத்தான். 18 ஏழாவது நாள், குழந்தை மரித்தது. தாவீதின் பணியாட்கள் குழந்தை மரித்த செய்தியை தாவீதிடம் சொல்லப் பயந்தனர். அவர்கள், “குழந்தை உயிரோடிருந்தபோது தாவீதோடு பேச முற்பட்டோம். ஆனால் அவர் நாங்கள் சொன்னதைக் கேட்க மறுத்தார். இப்போது குழந்தை மரித்ததென்று தாவீதிடம் சொன்னால், அவர் தனக்குத்தானே தீங்கு ஏதேனும் செய்துக்கொள்ளலாம்” என்றனர்.

19 ஆனால் தாவீது, அவனது பணியாட்கள் மெதுவான குரலில் பேசிக்கொள்வதைப் பார்த்தான். குழந்தை மரித்துப்போனதைப் புரிந்துக்கொண்டான். எனவே தாவீது பணியாட்களை நோக்கி, “குழந்தை மரித்துவிட்டதா?” என்று கேட்டான். பணியாட்கள், “ஆம், அவன் மரித்துப்போனான்” என்றனர்.

20 அப்போது தாவீது தரையிலிருந்து எழுந்து குளித்தான். பழைய ஆடைகளைக் களைந்து புதிய ஆடைகளை உடுத்திக் கொண்டான். பின்னர் அவன் கர்த்தருடைய வீட்டிற்குள் தொழுதுகொள்ளச் சென்றான். அதன் பின் தன் வீட்டிற்குப் போய் உண்பதற்கு ஏதாவது வேண்டுமெனக் கேட்டான். அவனது வேலைக்காரர்கள் கொடுத்த உணவை உண்டான்.

21 தாவீதின் வேலையாட்கள் அவனிடம், “நீர் ஏன் இப்படிச் செய்கிறீர்? குழந்தை உயிருடன் இருந்தபோது உண்ண மறுத்து அழுதீர்? ஆனால் அது மரித்த பின்பு, எழுந்து புசித்தீரே?” என்று கேட்டனர்.

22 தாவீது, “குழந்தை உயிரோடிருந்தபோது, நான் உணவுண்ண மறுத்து அழுதேன். ஏனெனில், ‘யாருக்குத் தெரியும்? கர்த்தர் எனக்காக இரக்கங்கொண்டு குழந்தையின் உயிரை அனுமதிக்கக்கூடும்’ என நான் எண்ணினேன். 23 இப்போது குழந்தை மரித்துப்போனது, நான் உண்ண மறுத்து பயன் என்ன? அதனால் குழந்தையை உயிருடன் கொண்டுவர முடியுமா? முடியாது! ஒரு நாள் நானும் அவனிடம் செல்வேன், ஆனால் அவனோ என்னிடம் வரமுடியாது” என்றான்.

சாலொமோன் பிறப்பு

24 பின்பு தாவீது தன் மனைவியாகிய பத்சேபாளுக்கு ஆறுதல் கூறினான். அவன் அவளோடு பாலின உறவுக்கொண்டான். பத்சேபாள் மீண்டும் கருவுற்றாள். அவளுக்கு மற்றோர் ஆண் குழந்தை பிறந்தது. தாவீது அவனுக்கு சாலொமோன் என்று பெயரிட்டான். கர்த்தர் சாலொமோனை நேசித்தார். 25 கர்த்தர், தீர்க்கதரிசியாகிய நாத்தான் மூலமாக சொல்லியனுப்பி சாலொமோனுக்கு யெதிதியா என்று பெயரிட்டார். நாத்தான் கர்த்தருக்காக இதைச் செய்தான்.

தாவீது ரப்பாவைக் கைப்பற்றுகிறான்

26 ரப்பா அம்மோனியாவின் தலைநகரமாயிருந்தது. அம்மோனியரின் ரப்பாவுக்கு எதிராக யோவாப் போரிட்டான். அவன் அந்நகரைக் கைப்பற்றினான். 27 யோவாப் தாவீதிடம் தூதுவர்களை அனுப்பி, “நான் ரப்பாவுக்கு எதிராகப் போர் செய்தேன். நீர்நிலைகளின் நகரத்தை நான் கைப்பற்றினேன். 28 இப்போது பிறரையும் அழைத்து வந்து இந்நகரைத் (ரப்பாவை) தாக்குங்கள். நான் கைப்பற்றும் முன்பு இந்நகரைக் கைப்பற்றுங்கள். நான் இந்நகரைக் கைப்பற்றினால் அது என் பெயரால் அழைக்கப்படும்” என்று கூறினான்.

29 பின்பு தாவீது எல்லோரையும் அழைத்துக்கொண்டு ரப்பாவுக்குப் போனான். அவன் ரப்பாவுக்கு எதிராகப் போர்செய்து அந்நகரைக் கைப்பற்றினான். 30 அந்த அரசனின் தலையிலிருந்த கிரீடத்தை [b] தாவீது அகற்றினான். அக்கிரீடம் பொன்னாலானது. 75 பவுண்டு எடையுள்ளது. அக்கிரீடத்தில் விலையுயர்ந்த கற்கள் இருந்தன. அக்கீரிடத்தை தாவீதுக்கு சூட்டினார்கள். அந்நகரிலிருந்து பல விலையுயர்ந்த பொருட்களை தாவீது எடுத்துச் சென்றான்.

31 ரப்பாவின் ஜனங்களை தாவீதின் நகருக்கு வெளியே அழைத்துவந்தான். இரம்பம், கடப்பாரை, இரும்புக்கோடரி ஆகியவற்றைப் பயன்படுத்தும் வேலையை அவர்கள் செய்யும்படி தாவீது கூறினான். செங்கற்களால் கட்டிடம் கட்டும் வேலையைச் செய்யும்படியாகவும் தாவீது அவர்களை வற்புறுத்தினான். அம்மோனியரின் நகரங்கள் அனைத்திலும் தாவீது இதனையே செய்தான். பின்பு தாவீதும் அவனது படையினரும் எருசலேமுக்குத் திரும்பிச் சென்றனர்.

Footnotes:

  1. 2 சாமுவேல் 12:12 இஸ்ரவேல்...பார்க்கும்படியாக எழுத்தின் பிராகாரமாக, “இஸ்ரவேலுக்கு முன்னாலும் சூரியனுக்கு முன்னாலும்.”
  2. 2 சாமுவேல் 12:30 தலையிலிருந்த கிரீடம் அல்லது “மில்காமின் தலை” மில்காம் ஒரு பொய் தெய்வம், இதனை அம்மோனியர்கள் வழிபட்டனர்.
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center

  Back

1 of 1

You'll get this book and many others when you join Bible Gateway Plus. Learn more

Viewing of
Cross references
Footnotes