Add parallel Print Page Options

யூதாவின் மற்ற கோத்திரங்கள்

யூதாவின் மகன்களின் பட்டியல் பின் வருமாறு:

பாரேஸ், எஸ்ரோன், கர்மீ, ஊர், சோபால் ஆகியோர் யூதாவின் மகன்கள்.

சோபாலின் மகன் ராயா. இவன் யாகாத்தின் தந்தை. யாகாத் அகுமாயிக்கும் லாகாதுக்கும் தந்தை. இவர்களின் சந்ததிகளே சோரத்தியர்கள்.

யெஸ்ரெயேல், இஷ்மா, இத்பாஸ் ஆகியோர் ஏதாமின் மகன்கள். அத்செலெல்போனி இவர்களின் சகோதரி.

பெனுவேல் கேதோருக்குத் தந்தை. எசேர் உஷாவிற்கு தந்தை. இவர்கள் ஊரின் மகன்கள். ஊர் எப்ராத்தாவின் முதல் மகன். எப்ராத்தோ பெத்லெகேமுக்குத் தந்தை.

அசூர் தெக்கோவாவுக்குத் தந்தை. தெக்கோவாவுக்கு ஏலாள், நாராள் என்ற இரு மனைவியர்கள். நாராள் அசூருக்கு அகுசாம், எப்பேர், தெமனி, ஆகாஸ்தாரி ஆகிய மகன்களைப் பெற்றாள். ஏலாளிக்கு சேரேத், எத்சோகார், எத்னான், கோஸ் எனும் மகன்கள் இருந்தனர். கோஸ், அனூப், சோபேபாக் எனும் இருவரின் தந்தை. கோஸ் அகர்கேல் கோத்திரத்திற்கும் தந்தையானான். அகர்கேல் ஆருமின் மகன்.

யாபேஸ் மிக நல்லவன். அவன் தனது சகோதரர்களைவிடச் சிறந்தவன். அவனது தாய், “நான் அவனுக்கு யாபேஸ் என்று பெயரிட்டேன். ஏனென்றால் நான் அவனைப் பெற்றபோது பெருந்துன்பம் அடைந்தேன்” என்றாள். 10 யாபேஸ் இஸ்ரவேலின் தேவனிடம் ஜெபித்து, “நீர் என்னை உண்மையாகவே ஆசீர்வதிக்கவேண்டும் என்று விரும்புகிறேன். நீர் எனக்கு மிகுதியான நிலத்தைத் தரவேண்டும் என்று விரும்புகிறேன். என்னோடு நெருக்கமாக இரும். என்னை எவரும் காயப்படுத்தாதபடி பார்த்துக்கொள்ளும். அதனால் நான் துன்பம் இல்லாமல் இருக்கவேண்டும்” என்று கேட்டுக்கொண்டான். அவன் கேட்டதை தேவன் அவனுக்குக் கொடுத்தார்.

11 கேலூப் சூகாவின் சகோதரன். கேலூப் மேகீரின் தந்தை. மேகீர் எஸ்தோனின் தந்தை. 12 எஸ்தோன் பெத்ராபா, பசேயாக், தெகினாக் ஆகியோரின் தந்தை. தெகினாக் இர்நாகாஷின் தந்தை. இவர்கள் அனைவரும் ரேகாவைச் சேர்ந்தவர்கள்.

13 ஓத்னியேல், செராயா ஆகியோர் கேனாசின் மகன்கள். ஓத்னியேலின் மகன்கள் ஆத்தாத் மற்றும் மெயோனத்தாய் ஆகியோர். 14 மெயோனத்தாய் என்பவன் ஒபிராவுக்கு தந்தை ஆனான்.

செராயா யோவாபைப் பெற்றான். யோவாப் கராஷீமன் பள்ளத்தாக்குக்கு வித்திட்டவர். அவர்கள் திறமைமிக்க தொழிலாளிகளாக இருந்ததினால் ஜனங்கள் இந்தப் பெயரால் அவர்களை அழைத்தார்கள்.

15 காலேப் எப்புன்னேயின் மகன். ஈரு, ஏலா, நாகாம் ஆகியோர் காலேபின் மகன்கள். ஏலாவின் மகன் கேனாஸ்.

16 சீப், சீப்பா, திரியா, அசாரெயேல் ஆகியோர் எகலெலேலின் மகன்கள்.

17-18 யெத்தேர், மேரேத், ஏப்பேர், யாலோன் ஆகியோர் எஸ்றாவின் மகன்கள், மேரேத், மிரியாமுக்கும் சம்மாயிக்கும் இஸ்பாவுக்கும் தந்தையானான். இஸ்பா எஸ்தெ மோவாவுக்குத் தந்தை ஆனான். மேரேத்திற்கு எகிப்திலுள்ள மனைவி ஒருத்தி உண்டு. அவளுக்கு யாரேது, ஏபேர், எக்குத்தியேல் எனும் மகன்கள் இருந்தனர். யாரேது கேதோரின் தந்தை. ஏபேர் சோக்கோவின் தந்தை. எக்குத்தியேல் சனோவாவிற்குத் தந்தை. இவர்கள் பித்தியாளின் மகன்கள். பித்தியாள் பார்வோனின் மகள். இவள் எகிப்திலிருந்து வந்த மேரேத்தின் மனைவி.

19 நாகாமின் சகோதரியும் மேரேத்தின் மனைவிதான். இவள் யூதாவிலிருந்து வந்தவள். இவளுடைய மகன்களே கேயிலாவிற்கும் எஸ்தேமோவாவிற்கும் தந்தையாவர். ஆபிகேயிலா கர்மியன் ஜனங்களிடமிருந்தும் எஸ்தேமோவா மாகாத்திய ஜனங்களிடமிருந்தும் வந்தவர்கள். 20 அம்னோன், ரின்னா, பென்கானான், தீலோன் ஆகியோர் ஷீமோனின் மகன்கள்.

சோகேதும் பென் சோகேதும் இஷியின் மகன்கள்.

21-22 யூதாவின் மகன் சேலாக். ஏர், லெகா, லாதா, யோக்கீம் ஆகியோரும் கோசேபாவின் ஆண்களும், யோவாஸும், சாராப்பும் சேலாக்கின் ஜனங்களாவர். ஏர்லேக்காவூரின் தந்தை. லாதா மரேசாவூரின் தந்தை. அஸ்பெயா வீட்டு கோத்திரத்தினர் மெல்லிய புடவை நெய்யும் தொழிலாளர் ஆயினர். யோவாஸும் சாராப்பும் மோவாபிய பெண்களை மணந்துகொண்டனர். பிறகு அவர்கள் பெத்லெகேமுக்குத் திரும்பிப்போயினர். இக்குடும்பத்தைப் பற்றிய எழுத்துக்கள் எல்லாம் பழையவை. 23 சேலாக்கின் பிள்ளைகள் அனைவரும் குயவரின் வேலையைச் செய்துவந்தனர். அவர்கள் நெத்தாயிமிலும் கெதேராவிலும் வாழ்ந்தனர். அவர்கள் அங்கு வாழ்ந்து அரசனுக்குப் பணி செய்துவந்தனர்.

சிமியோனின் பிள்ளைகள்

24 நெமுவேல், யாமின் யாரீப், சேரா, சவுல் ஆகியோர் சிமியோனின் மகன்கள். 25 சவுலின் மகன் சல்லூம், சல்லூமின் மகன் மிப்சாம், மிப்சாமின் மகன் மிஸ்மா.

26 மிஸ்மாவின் மகன் அம்முவேல், அம்முவேலின் மகன் சக்கூர், சக்கூரின் மகன் சீமேயி. 27 சீமேயிக்கு 16 மகன்களும் 6 மகள்களும் இருந்தனர். ஆனால் சீமேயியின் சகோதரர்களுக்கு அதிகப் பிள்ளைகள் இல்லை! அவர்களுக்குப் பெரியக் குடும்பமும் இல்லை. அது யூதாவின் மற்ற கோத்திரங்களைப் போல பெரிதாக வளரவில்லை.

28 சீமேயியின் சந்ததியினர் பெயெர்செபாவிலும், மொலாதாவிலும், ஆத்சார்சூவாவிலும், 29 பில்லாவிலும், ஏத்சாமிலும், தோலாதிலும், 30 பெத்தூவேலிலும், ஓர்மாவிலும், சிக்லாகிலும், 31 பெத்மர்காபோத்திலும், ஆத்சார்சூசிமிலும், பெத்பிரியிலும், சாராயிமிலும் குடியிருந்தார்கள். தாவீது அரசனாகும்வரை இவர்கள் இந்நகரங்களில் வாழ்ந்தனர். 32 இந்நகரங்களின் அருகில் ஐந்து கிராமங்கள் இருந்தன. அவை, ஏத்தாம், ஆயின், ரிம்மோன், தோகேன், ஆசான் ஆகியவையாகும். 33 பாலாத்தைப் போன்று தொலைவில் மற்ற கிராமங்களும் இருந்தன. இவற்றில் இவர்கள் வாழ்ந்தனர். அவர்கள் தம் குடும்ப வரலாற்றையும் எழுதி வைத்தனர்.

34-38 இவர்களது கோத்திரங்களில் உள்ள தலைவர்களின் பட்டியல் இது. மெசோபாபும், யம்லேகும், அமத்சியாவின் மகன் யோஷாவும், யோவேலும் ஆசியேலின் மகனான செராயாவும், செராயாவின் மகன் யோசிபியாவும், யோசிபியாவின் மகன் ஏகூவும், எலியோனாயும், யாக்கோபாவும், யெசொகொயாவும், அசாயாவும், ஆதியேலும், யெசிமியேலும், பெனாயாவும், சீப்பியின் மகனான சீசாவும், அல்லோனின் மகனான சீப்பியும், யெதாயாவின் மகனான அல்லோனும், சிம்ரியின் மகனான யெதாயாவும், செமாயாவின் மகனான சிம்ரியும்.

அவர்களின் குடும்பங்கள் மிகப் பெரிதாக வளர்ந்தன. 39 இவர்கள் தேதோரின் எல்லையாகிய பள்ளத்தாக்கின் கிழக்குப் பகுதிவரை சென்றார்கள். தம் ஆடுமாடுகளுக்குரிய மேய்ச்சல் பூமியைத் தேடி இவ்வாறு சென்றார்கள். 40 அவர்கள் ஏராளமாகப் புல் உள்ள நல்ல வயல்வெளிகளைக் கண்டு பிடித்தனர். அப்பூமி சமாதானத்தோடும், சப்தமின்றியும் இருந்தது. பண்டைக்காலத்தில் அங்கு காமின் சந்ததியார் வாழ்ந்தார்கள். 41 யூதாவின் அரசனாக எசேக்கியா இருந்தபோது இது நிகழ்ந்தது. அவர்கள் கேதாருக்கு வந்து காமிய மக்களுக்கு எதிராகச் சண்டையிட்டனர். அவர்கள் காமியரின் கூடாரங்களை அழித்தனர். அதோடு அங்கு வாழ்ந்த மௌனியர்களுக்கு எதிராகவும் சண்டையிட்டு அவர்களை அழித்தனர். இன்னும் அவர்களைச் சேர்ந்த எவரையும் அங்கு விட்டு வைக்கவில்லை. எனவே இவர்கள் அங்கு வாழத்தொடங்கினார்கள். காரணம் அந்நிலம் அவர்களின் ஆடுகளுக்கான புல் நிரம்பியிருந்தது.

42 சிமியோனின் கோத்திரத்திலிருந்து 500 ஜனங்கள் சேயீர் மலைநாட்டுக்குச் சென்றனர். இஷியின் மகன்கள் இவர்களை வழிநடத்தினர். அவர்கள், பெலத்தியா, நெகரியா, ரெப்பாயா, ஊசியேல் ஆகியோராகும். சிமியோர் ஜனங்கள் அங்கே வாழ்ந்தவர்களோடு சண்டையிட்டனர். 43 அங்கே சிறிது அமலேக்கியரே வாழ்ந்து வந்தனர். அவர்கள் இவர்களோடு சண்டையிட்டுக் கொன்றனர். அன்று முதல் இன்றுவரை இவர்கள் அங்கே வாழ்ந்து வருகின்றனர்.