1 யோவான் 3:1-10
Tamil Bible: Easy-to-Read Version
நாம் தேவனின் பிள்ளைகள்
3 பிதா நம்மை மிகவும் நேசித்தார்! நாம் தேவனின் பிள்ளைகள் என்று அழைக்கப்படுகிறோம். ஆனால் உலகத்தின் மக்களோ நாம் தேவனின் பிள்ளைகள் என்பதைப் புரிந்துகொள்வதில்லை. அதற்குக் காரணம் தேவனை அவர்கள் அறியாமல் இருப்பது ஆகும். 2 அன்பான நண்பர்களே, நாம் இப்போது தேவனின் பிள்ளைகள். நாம் எதிர்காலத்தில் எவ்வாறு இருப்போம் என்பது இன்னும் நமக்குக் காட்டப்படவில்லை. கிறிஸ்து மீண்டும் வரும்போது நாம் அவரைப்போல இருப்போம் என்பதை நாம் அறிவோம். 3 கிறிஸ்து தூய்மையானவர். கிறிஸ்துவில் இந்த நம்பிக்கையுள்ள ஒவ்வொரு மனிதனும் கிறிஸ்துவைப் போலவே தன்னைத் தூய்மையாக வைத்துக்கொள்கிறான்.
4 ஒருவன் பாவம் செய்யும்போது, அவன் தேவனின் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான். ஆம், தேவனின் நியாயப்பிரமாணத்திற்கு எதிராக வாழ்வதைப்போன்றதே பாவம் செய்தலாகும். 5 மனிதரின் பாவங்களை நீக்குவதற்காக கிறிஸ்து வந்தார் என்பது உங்களுக்குத் தெரியும். கிறிஸ்துவில் பாவம் இல்லை. 6 எனவே கிறிஸ்துவில் வாழ்கிற மனிதனும் பாவத்தைச் செய்வதில்லை. ஒருவன் தொடர்ந்து பாவம் செய்தால், அவன் கிறிஸ்துவை உண்மையாகவே புரிந்துகொண்டதில்லை என்றும், கிறிஸ்துவை அறிந்துகொண்டதே இல்லை. என்றுமே பொருள்படும்.
7 அன்பான பிள்ளைகளே, தவறான வழிக்குள் ஒருவன் உங்களை நடத்தாதபடிக்குப் பார்த்துக்கொள்ளுங்கள். கிறிஸ்து நீதியுள்ளவர். கிறிஸ்துவைப்போல சரியானவராக இருப்பதற்கு ஒரு மனிதன் சரியானதை மட்டுமே செய்யவேண்டும். 8 துவக்கத்தலிருந்தே பிசாசு பாவம் செய்துகொண்டிருக்கிறான். பாவத்தைத் தொடர்ந்து செய்யும் மனிதன் பிசாசுக்குரியவன். தேவ குமாரன் பிசாசின் செயலை அழிக்கும்பொருட்டே வந்தார்.
9 தேவன் ஒருவனை அவரது பிள்ளையாக மாற்றும்போது அவன் பாவத்தைத் தொடர்ந்து செய்வதில்லை. ஏன்? தேவன் அவனுக்கு அளித்த புது வாழ்க்கை அவனில் நிலைத்திருக்கிறது. எனவே அம்மனிதன் பாவத்தில் தொடர முடியாது. ஏன்? அவன் தேவனின் பிள்ளையாக மாறியிருக்கிறான். 10 எனவே தேவனின் பிள்ளைகள் யாரென்பதையும் பிசாசின் பிள்ளைகள் யாரென்பதையும் நாம் பார்க்க முடியும். மேலும் தனது சகோதரனை நேசிக்காத ஒருவனும் தேவனின் பிள்ளை இல்லை.
Read full chapter2008 by Bible League International