Add parallel Print Page Options

நீங்கள் கிறிஸ்துவைப் பார்த்ததில்லை. அப்படியிருந்தும் அவரை நேசிக்கிறீர்கள். நீங்கள் இப்போது அவரைப் பார்க்க முடிவதில்லை. ஆனால் அவரை விசுவாசிக்கிறீர்கள். சொல்லமுடியாத சந்தோஷத்தால் உங்கள் மனம் நிரம்பும். அச்சந்தோஷம் மகிமை மிகுந்தது. உங்கள் விசுவாசம் ஒரு குறிக்கோளை உடையது. இறுதியில் உங்கள் ஆத்தும இரட்சிப்பாகிய நற்பலனைப் பெறுவீர்கள்.

10 உங்களுக்குக் காட்டப்பட வேண்டிய கிருபையைப்பற்றி தீர்க்கதரிசனம் சொன்ன தீர்க்கதரிசிகள் கவனமாக ஆராய்ந்து இந்த இரட்சிப்பைப் பற்றி அறிய முயன்றிருக்கிறார்கள். 11 இயேசு கிறிஸ்துவின் ஆவியானவர் அத்தீர்க்கதரிசிகளிடம் இருந்தார். கிறிஸ்துவுக்கு நேர இருக்கிற துன்பங்களைப் பற்றியும் அதைத் தொடர்ந்து வரப்போகும் மகிமையைப் பற்றியும் அந்த ஆவியானவர் ஏற்கெனவே சொல்லியிருக்கிறார். அந்த ஆவியானவர் எதைக் குறித்து பேசுகிறார் என்று அறிய தீர்க்கதரிசிகள் முயன்றார்கள். அச்சம்பவங்கள் நடக்கும் நேரம் மற்றும் சூழ்நிலை பற்றி அறிய தீர்க்கதரிசிகள் முயன்றார்கள்.

12 அவர்கள் செய்த பணி அவர்களுக்குரியதல்லவென்று அந்தத் தீர்க்கதரிசிகளுக்கு உணர்த்தப்பட்டது. தீர்க்கதரிசிகள் உங்களுக்காகப் பணியாற்றினார்கள். இவ்விஷயங்களைப் பற்றி அவர்கள் பேசியபொழுது அவர்கள் உங்களுக்கு சேவை செய்துகொண்டிருந்தனர். நற்செய்தியை உங்களுக்குப் போதித்த மனிதர்களே அச்செய்திகளையும் உங்களுக்குக் கூறியிருக்கிறார்கள். பரலோகத்தில் இருந்து அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியானவரின் உதவியால் அவர்கள் அதை உங்களுக்குக் கூறினார்கள். தேவ தூதர்களும் அறிந்துகொள்ள விரும்புகின்ற காரியங்கள் உங்களுக்கு அறிவிக்கப்பட்டன.

பரிசுத்த வாழ்க்கைக்கான அழைப்பு

13 எனவே உங்கள் மனங்களை சேவைக்கு ஆயத்தப்படுத்தி, தன்னடக்கத்தோடிருங்கள். இயேசு கிறிஸ்து தோன்றும்போது உங்களுக்கு வாய்க்கப் போகிற கிருபையின் பரிசின் மீது முழு நம்பிக்கை கொள்ளுங்கள். 14 கடந்த காலத்தில் இந்தக் காரியங்களை நீங்கள் புரிந்துகொள்ளவில்லை. எனவே நீங்கள் விரும்பிய தீயசெயல்களைச் செய்து வந்தீர்கள். ஆனால் இப்போது கீழ்ப்படிகிற தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறீர்கள். எனவே ஏற்கெனவே நீங்கள் கொண்டிருந்த தீய ஆசைகளுக்கு ஏற்ப வாழ்வதை நிறுத்துங்கள். 15 உங்களை அழைத்த தேவன் பரிசுத்தமானவர். ஆதலால் நீங்களும் நீங்கள் செய்கிற ஒவ்வொரு காரியத்திலும் பரிசுத்தமானவர்களாக இருங்கள். 16 வேதவாக்கியங்களில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது. “நான் பரிசுத்தராக இருப்பதால், நீங்களும் பரிசுத்தராய் இருங்கள்.”

Read full chapter