Add parallel Print Page Options

31 தாவீது சொல்வதைச் சிலர் கேட்டு அவனைச் சவுலிடம் அழைத்துச் சென்றார்கள். 32 தாவீது சவுலிடம், “கோலியாத்துக்காக யாரும் நடுங்க வேண்டாம். நான் உங்கள் சேவகன். நான் போய் அவனோடு போரிடுகிறேன்!” என்றான்.

33 “உன்னால் வெளியே போய் அந்த பெலிஸ்தியனாகிய கோலியாத்துடன் சண்டைபோட முடியாது. நீ ஒரு படைவீரன் அல்ல! அவனோ சிறுவயது முதல் போரிட்டு வருகிறான்” என்றான்.

34 ஆனால் தாவீது சவுலிடம், “நான் ஒரு இடையன், ஆடுகளை மேய்த்து வருபவன். இரு தடவை ஒரு சிங்கமும், மற்றொரு தடவை கரடியும் ஆடுகளைத் தூக்கியபோது, 35 அவற்றைக் கொன்று அவற்றின் வாயிலிருந்து ஆட்டை மீட்டேன். அவை என் மேல் பாய்ந்தன. எனினும் அவற்றின் வாயின் அடிப்பகுதியைப் பிடித்து கிழித்துக் கொன்றேன். 36 சிங்கத்தையும் கரடியையும் கொன்ற என்னால், இந்த அந்நியனையும் விலங்குகளைப்போல் கொல்லமுடியும்! அவன் ஜீவனுள்ள தேவனுடைய சேனையைக் கேலி செய்ததால் அவன் கொல்லப்படுவான். 37 கர்த்தர் என்னை சிங்கம் மற்றும் கரடியிடமிருந்து காப்பாற்றியது போலவே பெலிஸ்தனிடமிருந்தும் என்னைக் காப்பாற்றுவார்” என்றான்.

சவுல் தாவீதிடம், “கர்த்தர் உன்னோடு இருப்பாராக, நீ போ” என்றான். 38 சவுல் தன் சொந்த ஆடையை தாவீதுக்கு அணிவித்தான். தலையில் வெண்கல தலைச் சீராவை, பிற யுத்த சீருடையும் போடுவித்தான். 39 தாவீது வாளை எடுத்துக்கட்டிக் கொண்டு நடந்து பார்த்தான். சவுலின் சீருடையை அணிந்து பார்த்தான். ஆனால் அவ்வளவு பாரமான யுத்த சீருடை அணிந்து கொள்ளும் பயிற்சி அவனுக்கு இருக்கவில்லை.

தாவீது சவுலிடம், “இவற்றை அணிந்து என்னால் சண்டை போட முடியாது. அணிந்து பழக்கமில்லை” என்றான். எனவே தாவீது எல்லாவற்றையும் கழற்றினான். 40 தன் கைத்தடியை எடுத்துக்கொண்டு 5 கூழங்கற்கள் கிடைக்குமா என்று பார்க்கச் சென்றான். தேடியெடுத்த 5 கூழாங்கற்களையும் தான் வைத்திருந்த இடையர் தோல் பையில் போட்டுக் கொண்டான். கையில் வில் கவணை வைத்துக்கொண்டான். பிறகு கோலியாத்தை நோக்கி நடந்தான்.

தாவீது கோலியாத்தைக் கொல்கிறான்

41 கோலியாத் மெதுவாக நடந்து தாவீதை நெருங்கினான். கேடயத்தை ஏந்திய உதவியாள் முன்னே நடந்தான். 42 கோலியாத் தாவீதைப் பார்த்து, அவன் யுத்த பயிற்சி இல்லாத சிவந்த முகத்தையுடைய இளைஞன் என்று கண்டு நகைத்தான். 43 “ஏன் இந்த கைத்தடி? ஒரு நாயை விரட்டுவது போல் நீ என்னை விரட்டப் போகிறாயா?” என்று கோலியாத் கேட்டான். அதற்கு பின் கோலியாத் தன் தெய்வங்களின் பெயரைச் சொல்லி தாவீதை நிந்தித்தான். 44 கோலியாத் தாவீதிடம் “இங்கே வா, உனது உடலை பறவைகளுக்கும், காட்டு மிருகங்களுக்கும் இரையாகப் போடுகிறேன்!” என்றான்.

45 தாவீது அவனிடம், “நீ உனது பட்டயம், ஈட்டியைப் பிடித்துகொண்டு வந்துள்ளாய். நானோ இஸ்ரவேல் சேனைகளின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தருடைய நாமத்தில் வந்துள்ளேன். அவரைத் தூஷித்து நீ நிந்தித்தாய். 46 இன்று உன்னைத் தோற்கடிக்க கர்த்தர் எனக்கு உதவுவார். இன்று உன் தலையை வெட்டி உன் உடலை பறவைகளுக்கும், காட்டு மிருகங்களுக்கும் இரையாக்குவேன். மற்ற பெலிஸ்தரையும் இவ்வாறே செய்வோம்! அப்போது இஸ்ரவேலில் தேவன் ஒருவர் இருக்கிறார் என்று உலகம் அறிந்துக்கொள்ளும்! 47 ஜனங்களை மீட்கும்படி கர்த்தருக்குப் பட்டயமும் ஈட்டியும் தேவையில்லை என்பதை இங்குள்ளவர்களும் அறிவார்கள். யுத்தம் கர்த்தருடையது! பெலிஸ்தியர்களாகிய உங்களெல்லாரையும் வெல்ல கர்த்தர் உதவுவார்” என்றான்.

48 கோலியாத் தாவீதை தாக்கும்படி சீறி எழுந்து நெருங்கி வந்தான். தாவீதும் நெருங்கி ஓடி,

49 தனது தோல் பையிலிருந்து கூழாங்கல்லை எடுத்து கவணில் வைத்து சுழற்றி வீசினான். அது கோலியாத்தின் நெற்றியில் இரு கண்களுக்கும் நடுவில்பட்டது. அவன் நெற்றிக்குள் அது புகவே அவன் முகங்குப்புற விழுந்தான்.

50 இவ்வாறு தாவீது கோலியாத்தை ஒரே கவண் கல்லால் சாகடித்தான். தாவீதிடம் பட்டயம் இருக்கவில்லை. 51 அதனால் ஓடிப்போய் அந்த பெலிஸ்தியன் அருகில் நின்று, கோலியாத்தின் பட்டயத்தை அவனது உறையில் இருந்து உருவி அதைக் கொண்டே அவனது தலையை சீவினான். இவ்விதமாகத்தான் தாவீது பெலிஸ்தியனான கோலியாத்தை கொன்றான்.

மற்ற பெலிஸ்தியர் தங்களது மாவீரன் மரித்ததைப் பார்த்து பின்வாங்கி ஓடினார்கள்.

Read full chapter