Add parallel Print Page Options

சீனாய் மலையில் எலியா

19 எலியா செய்ததை எல்லாம் ஆகாப் அரசன் தன் மனைவி யேசபேலுக்கு கூறினான். அவன் எவ்வாறு அனைத்து தீர்க்கதரிசிகளையும் வாளால் கொன்றான் என்றும் கூறினான். எனவே அவள் எலியாவிடம் ஒரு தூதுவனை அனுப்பி, “நாளை இதே நேரத்திற்குள், நீ தீர்க்கதரிசிகளைக் கொன்றது போன்று உன்னைக்கொல்வேன். இல்லாவிட்டால் என்னைத் தெய்வங்கள் கொல்லட்டும்” என்று சொல்லச்செய்தாள்.

எலியா இதைக் கேட்டதும், பயந்தான். தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடினான். தன்னோடு வேலைக்காரனையும் அழைத்துப்போனான். யூதாவிலுள்ள பெயெர்செபாவிற்குப் போய். அங்கே அவனை விட்டுவிட்டான். பிறகு நாள் முழுவதும் பாலைவனத்தில் அலைந்தான். ஒரு புதரின் அருகில் உட்கார்ந்தான். “இது போதும், கர்த்தாவே! என்னை மரிக்கவிடும். என் முற்பிதாக்களைவிட நான் நல்லவன் அல்ல” என்று வேண்டினான்.

பிறகு அவன் ஒரு மரத்தடியில் படுத்து தூங்கினான். ஒரு தேவதூதன் வந்து அவனைத் தொட்டான். “எழுந்திரு, சாப்பிடு!” என்றான். எலியா தன்னருகில் தழலில் சுடப்பட்ட அடையும் ஒரு பாத்திரத்தில் தண்ணீரும் இருப்பதைப் பார்த்தான். அவன் உண்டு குடித்து திரும்பத் தூங்கப்போனான்.

மீண்டும் தேவதூதன் வந்து, “எழுந்திரு! சாப்பிடு! இல்லாவிட்டால், நீண்ட பயணம் செய்யமுடியாது” என்றான். எனவே எலியா எழுந்து சாப்பிட்டுவிட்டு தண்ணீர் குடித்தான். 40 நாட்கள் இரவும் பகலும் நடப்பதற்கான பெலத்தை அது கொடுத்தது. அவன் தேவனுடைய மலையான ஓரேப்புக்குச் சென்றான்.

Read full chapter