Add parallel Print Page Options

13 ஆகீத்தின் மகனான அதோனியா சாலொமோனின் தாயான பத்சேபாளிடம் வந்தான். அவள் அவனிடம், “நீ சமாதானத்தோடு வந்திருக்கிறாயா?” என்று கேட்டாள்.

அவனோ, “ஆமாம், இது ஒரு சமாதான வருகையே ஆகும். 14 நான் உங்களிடம் சொல்வதற்கு ஒரு காரியம் இருக்கிறது” என்றான். பத்சேபாள், “அப்படியென்றால் சொல்” என்றாள்.

15 அதோனியா, “ஒரு காலத்தில் அரசாங்கம் எனக்குரியதாயிருந்தது என்பதை நினைத்துப் பாருங்கள். இஸ்ரவேலில் உள்ள அனைத்து ஜனங்களும் அடுத்த அரசன் நான்தான் என்று எண்ணினார்கள். ஆனால் நிலைமை மாறிவிட்டது. இப்போது எனது சகோதரன் அரசனாகிவிட்டான். கர்த்தர் அவனை அரசனாகத் தேர்ந்தெடுத்துவிட்டார். 16 இப்போது உங்களிடம் கேட்க ஒரு காரியம் உள்ளது. தயவு செய்து மறுத்துவிடாதீர்கள்” என்றான். பத்சேபாள், “உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டாள்.

17 அதோனியா, “அரசனாகிய சாலொமோனிடம் நீ என்ன கேட்டாலும் அவன் கொடுப்பான் என்பது எனக்குத் தெரியும். அவன், நான் சூனேம் ஊராளாகிய அபிஷாகை மணக்கும்படி செய்யவேண்டும்” என்று கேட்டான்.

18 பிறகு பத்சேபாள், “நல்லது இதுபற்றி உனக்காக அரசனிடம் பேசுவேன்” என்றாள்.

19 எனவே பத்சேபாள் அரசன் சாலொமோனிடம் பேசுவதற்காகப் போனாள். சாலொமோன் அவளைப் பார்த்ததும் எழுந்து நின்று வரவேற்றான். அவன் குனிந்து வணங்கி பிறகு உட்கார்ந்தான். அவளுக்கு இன்னொரு சிங்காசனம் கொண்டுவரும்படி வேலைக்காரர்களிடம் கூறினான். அவனது வலது பக்கத்தில் அவள் உட்கார்ந்திருந்தாள்.

20 பத்சேபாள் அவனிடம், “நான் உன்னிடம் கேட்பதற்கு ஒரு சிறிய காரியம் உள்ளது. தயவுசெய்து மறுத்துவிடாதே” என்றாள்.

அதற்கு அரசன், “அம்மா, நீங்கள் என்னிடம் எதை வேண்டுமானாலும் கேட்கலாம். நான் மறுக்கமாட்டேன்” என்றான்.

21 எனவே பத்சேபாள், “உனது சகோதரனான அதோனியா சூனேம் ஊராளாகிய அபிஷாகை மணந்துக்கொள்ள அனுமதிக்கவேண்டும்” என்றாள்.

22 அதற்கு அவன் தன் தாயிடம், “அபிஷாகை அதோனியாவிற்குக் கொடுக்கும்படி நீ ஏன் வேண்டுகிறாய். அவனையே அரசனாக்கிவிடு என்று நீ ஏன் கேட்கவில்லை. இத்தனைக்கும் அவன் எனக்கு மூத்தசகோதரன் தானே! ஆசாரியனான அபியத்தாரும் யோவாபும் அவனுக்கு பக்கபலமாக இருப்பார்கள்!” என்றான்.

23 பிறகு சாலொமோன் கர்த்தரிடம் ஒரு வாக்குறுதி செய்துகொடுத்தான். “நான் இதற்குரிய விலையை அதோனியாவை செலுத்தச் செய்வேன்! அது அவனது உயிராகவும் இருக்கும்! 24 கர்த்தர் என்னை இஸ்ரவேலின் அரசனாக்கினார். என் தந்தை தாவீதிற்கு உரிய சிங்காசனத்தை நான் பெறுமாறு செய்தார். கர்த்தர் தன் வாக்குறுதியைக்காத்து எனக்கும் எனது குடும்பத்திற்கும் ஆட்சியை அளித்தார். நான் கர்த்தர்மேல் ஆணையிட்டுக் கூறுகிறேன். இன்று அதோனியா கொல்லப்படுவான்” என்றான்.

25 அரசனான சாலொமோன் அதை பெனாயாவிற்கு கட்டளையிட்டான். அவன் சென்று அதோனியாவைக் கொன்று விட்டான்.

Read full chapter