A A A A A
Bible Book List

1 சாமுவேல் 20 Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

தாவீதும் யோனத்தானும் ஒரு ஒப்பந்தம் செய்கிறார்கள்

20 ராமாவிற்கு அருகில் உள்ள முகாம்களில் இருந்து தாவீது தப்பி ஓடி யோனத்தானிடம் வந்தான். தாவீது, “உன் தந்தை என்னைக் கொல்ல தேடுகிறாரே. நான் என்ன தவறு செய்தேன்? நான் அவருக்குச் செய்த துரோகம் என்ன?” என்று கேட்டான்.

அதற்கு யோனத்தான், “அது உண்மையாக இருக்க முடியாது! என் தந்தை உன்னைக் கொல்ல முயலவில்லை. என்னிடம் சொல்லாமல் எந்தக் காரியத்தையும் என் தந்தை செய்வதில்லை. அது சின்ன காரியமோ, பெரிய காரியமோ, எதுவாக இருந்தாலும் சரி, உன்னைக் கொல்லும் திட்டத்தை என்னிடமிருந்து அவர் ஏன் மறைத்தார்? இல்லை, இது உண்மையன்று!” என்றான்.

ஆனால் தாவீது, “உன் கண்களில் எனக்கு தயை கிடைத்தது, இதை உன் தந்தை அறிவார். அதனால், என்னிடமுள்ள நட்பினிமித்தம் நீ சஞ்சலம் அடையாதபடிக்கு இதை உன்னிடம் மறைத்தார். கர்த்தர் ஜீவித்திருக்க, நீயும் ஜீவித்திருக்கிற உண்மைபடி கூறுகிறேன், நான் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறேன்!” என்று பதிலளித்தான்.

யோனத்தான் அப்போது, “நீ சொல்லுகிறபடி நான் செய்வேன்” என்றான்.

தாவீது, “கவனி, நாளை அமாவாசை விருந்து, நான் அரச பந்தியில் சாப்பிட வேண்டும். ஆனால் மாலைவரை ஒளிந்திருக்க எனக்கு உத்தரவு வேண்டும்! உன் தந்தை கேட்டால், ‘தன் ஊராகிய பெத்லேகேமில் ஆண்டுக்கு ஒரு தடவை மாதப் பலிச் செலுத்துவதால் அதில் கலந்துகொள்ள தன் குடும்பத்தோடு போயிருப்பதாகச் சொல்.’ அதற்கு அவர், ‘நல்லது’ என்றால் எனக்குச் சமாதானம். அவருக்கு எரிச்சல் வந்தால், அவரால் ஆபத்து என்று அர்த்தம், எனவே தயவுச் செய்யவேண்டும். என்னோடு கர்த்தருக்கு முன்னால் ஒப்பந்தம் செய்துள்ளாய். என் மீது தவறு என்றால் என்னைக் கொல். என்னை உன் தந்தையிடம் மட்டும் அழைத்துப் போகாமல் இருக்க வேண்டும்!” என வேண்டினான்.

அதற்கு யோனத்தான், “அந்த நிலை உனக்கு ஏற்படாமல் இருப்பதாக! என் தந்தையால் உனக்கு ஆபத்து என்றால் நான் சொல்லாமல் இருப்பேனா?” என்று கேட்டான்.

10 ஆனால் தாவீது, “உன் தந்தைக் கடுமையான உத்தரவு போட்டால் எனக்கு அதை யார் சொல்வது?” என்று கேட்டான்.

11 அதற்கு யோனத்தான், “வா ஊருக்கு வெளியே வயலுக்குப்போவோம்” என்றான். இருவரும் வெளியே போனார்கள்.

12 யோனத்தான், “இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தருடைய முன்னிலையில் வாக்களிக்கிறேன், நான் நாளையோ மறுநாளோ என் தந்தையின் மனதை அறிந்துவிடுவேன். அவர் உன்மேல் தயவாக இருந்தாலும், தீங்கு செய்யும் எண்ணமாக இருந்தாலும் 3 நாட்களுக்குள் அறிவிப்பேன். 13 ஒருவேளை, எனது தந்தை உனக்குத் தீமை செய்யத் துடித்துக் கொண்டிருந்தால் அதையும் அறிவிப்பேன். அதோடு அமைதியாக நீ ஒதுங்கிவிட உதவுகிறேன். நான் உனக்கு உண்மையைச் சொல்லாவிட்டால் கர்த்தர் எனக்கு அதற்கு நிகராகவும் அதிகமாகவும் துன்பம் தரட்டும்! கர்த்தர் உன் தந்தையோடு இருந்தது போலவே உன்னோடும் இருப்பாராக. 14 மேலும் நான் உயிரோடு இருக்கும்வரை என் மீது கருணையோடு இரு. 15 நான் மரித்தப் பிறகும் என் குடும்பத்தின் மேலுள்ள கருணையை நிறுத்தாமல் இரு. உன் பகைவரையெல்லாம் கர்த்தர் பூமியில் இருந்து அழிப்பார். 16 யோனத்தான் பெயர் தாவீதின் குடும்பத்திலிருந்து எடுத்துப் போடாமல் இருப்பதாக. தாவீதின் பகைவர்களை கர்த்தர் தண்டிப்பாராக” என்று தாவீதின் குடும்பத்தோடு ஒப்பந்தம் செய்துக்கொண்டான்.

17 யோனத்தான் தாவீதிடம், அவனது அன்பு பற்றிய வாக்குறுதியைத் திருப்பிச் சொல்லும்படி கேட்டான். ஏனென்றால், அவன் தன்னைத் தானே எவ்வளவு நேசித்தானோ அவ்வளவு அதிகமாய் தாவீதையும் நேசித்தான்.

18 யோனத்தான் தாவீதிடம், “நாளை அமாவாசை விருந்து. நீ உட்காரவேண்டிய இடம் காலியாயிருப்பதால் உன்னைக் குறித்து விசாரிக்கப்படும். 19 இந்த சிக்கல் முதலில் ஆரம்பித்தபோது நீ ஒளிந்திருந்த இடத்திற்குப் போ. அங்கேயே காத்திரு 20 மூன்றாவது நாள், ஏஸேல் எனும் கல்லருகில் காத்திரு, பிறகு மூன்றாம் நாளில் ஒரு இலக்கைக் குறிவைத்து எய்வதுபோல், நான் அங்கு போய் அதன் பக்கமாக மூன்று அம்புகளை எய்வேன். 21 ஒரு பிள்ளையை அம்பைத் தேடிவருமாறு அனுப்புவேன். நான் அவனிடம், ‘அதிக தூரம் போனாய் அம்புகள் என் அருகில் உள்ளன,’ என்று சொன்னால் வந்துவிடு. அப்போது ஒன்றும் இல்லை, உனக்கு சமாதானம். இதை கர்த்தருடைய அன்பால் கூறுகிறேன்! 22 ஏதாவது தொந்தரவு இருந்தால் அவனிடம், ‘அம்புகள் ரொம்ப தூரத்தில் கிடக்கிறது, எடுத்து வா’ என்று சத்தமிடுவேன். உடனே நீ விலகவேண்டும். கர்த்தர் உன்னை தூர அனுப்பிகொண்டிருக்கிறார் என்று அர்த்தம். 23 அப்போது நமக்கு இடையேயுள்ள ஒப்பந்தத்தை மறவாமல் இரு. கர்த்தர் தாமே நமக்கு எப்போதும் சாட்சியாக இருப்பார்!” என்றான்.

24 பிறகு தாவீது வயலில் ஒளிந்துக்கொண்டான்.

விருந்தில் சவுலின் போக்கு

அமாவாசை விருந்துக்கு சமயம் வந்தது, அரசன் உணவுண்ண உட்கார்ந்தான். 25 அரசன் வழக்கம் போல் சுவரை அடுத்து உட்கார்ந்தான். யோனத்தான் எதிரே இருந்தான். அப்னேர் சவுலுக்கடுத்து இருந்தான். தாவீதின் இடம் வெறுமையாய் இருந்தது. 26 சவுல் எதுவும் சொல்லவில்லை. அவன், “தாவீதிற்கு ஏதேனும் நடந்து அதனால் தீட்டாக இருப்பான்” என்று எண்ணிக்கொண்டான்.

27 மாதத்தின் இரண்டாம் நாளான மறுநாள் மீண்டும் தாவீதின் இடம் வெறுமையாய் இருந்தது. சவுல் தன் மகனிடம் “எதற்காக ஈசாயின் மகன் நேற்றும் இன்றும் அமாவாசை விருந்து உண்ண வரவில்லை?” என்று கேட்டான்.

28 யோனத்தான், “தாவீது தன்னை பெத்லேகேமுக்குப் போக அனுமதிக்கும்படி கேட்டுக்கொண்டான். 29 அதனால் என்னிடம், என்னைப் போகவிடு. எங்கள் குடும்பத்திற்குப் பெத்லேகேமில் ஒரு பலியைச் செலுத்த வேண்டியுள்ளது. எனது சகோதரன் அங்கே இருக்கும்படி எனக்கு கட்டளையிட்டிருக்கிறார். இப்பொழுது நான் உனது நண்பனானால், நான் போய் என் சகோதரர்களைப் பார்க்க அனுமதி தா, என்று கேட்டான். அதனால் தாவீது அரசனுடைய பந்திக்கு வரவில்லை” என்று பதிலுரைத்தான்.

30 சவுல் யோனத்தான் மீது கோபமுற்று, “அடிபணிய மறுத்த கலகக்காரப் பெண்ணின் மகன் நீ, நீயும் அவளைப்போல் இருக்கிறாய், நீ தாவீதின் பக்கத்தில் உள்ளாய். நீ உனக்கும் உன் தாய்க்கும் அவமானத்தைத் தந்தாய்! 31 ஈசாயின் மகன் இருக்கும்வரை நீ அரசனாக முடியாது. உனக்கு அரசும் கிடைக்காது. இப்போது தாவீதைக் கொண்டு வா! அவன் ஒரு மரித்தவன்” என்றான்.

32 யோனத்தான் அவனிடம், “தாவீது ஏன் கொல்லப்பட வேண்டும்? அவனது தவறு யாது?” எனக் கேட்டான்.

33 ஆனால் சவுல் ஈட்டியை அவன் மீது எறிந்து கொல்லப் பார்த்தான். எனவே யோனத்தான் தனது தந்தை தாவீதைக் கொன்றுவிட பெரிதும் விரும்புகிறான் என்பதை அறிந்தான். 34 அவன் தந்தை மீது கோபங்கொண்டுப் பந்தியிலிருந்து விலகிக் கொண்டான். விருந்தின் இரண்டாம் நாளில் யோனத்தான் உணவுண்ண மறுத்தான். தனது தந்தை தன்னை அவமானப்படுத்தியதாலும் தாவீதை கொல்ல விரும்பியதாலும் யோனத்தான் கோபமடைந்தான்.

தாவீதும் யோனத்தானும் விடை பெறுகின்றனர்

35 மறுநாள் காலை யோனத்தான் வயலுக்குப் போனான். அவர்கள் ஏற்கெனவே திட்டமிட்ட இடத்தில் தாவீதை சந்திக்க தன்னோடு ஒரு சிறுவனை அழைத்துப் போனான். 36 அவன் சிறுவனிடம், “நான் எறிகிற அம்பைத் தேடி கண்டுபிடித்து வா” என்றான். பையனின் தலைக்கு மேலாக எறிந்த அம்பை அவன் தேடிப்போனான். 37 அம்பு விழுந்த இடத்தில் சிறுவன் தேட, “அம்புகள் இன்னும் தூரத்தில் உள்ளது” என்றான். 38 மீண்டும் அவன், “சும்மா நிற்காதே! போய் அம்பைத் தேடு” என்றான். சிறுவன் அம்பைத்தேடி தன் எஜமானனிடம் எடுத்து வந்தான். 39 என்ன நடைபெறுகிறது என்று அந்தப் பையன் அறியாதிருந்தான். ஆனால் தாவீதிற்கும் யோனத்தானுக்கும் அது புரிந்தது. 40 யோனத்தான் சிறுவனிடம், வில்லையும் அம்பையும் கொடுத்து, “நகரத்திற்குத் திரும்பிப் போ” என்று அனுப்பினான்.

41 பையன் போனதும் தாவீது வெளியே வந்து யோனத்தானைத் தரையில் குனிந்து 3 முறை வணங்கினான். பின் அவர்கள் ஒருவரை ஒருவர் முத்தமிட்டனர். இருவரும் சத்தமிட்டு அழ, தாவீது யோனத்தானைவிட மிகுதியாக அழுதான்.

42 யோனத்தான் தாவீதிடம், “சமாதானமாகப் போ, நாம் கர்த்தருடைய நாமத்தால் நண்பர்களாக இருப்போம் என்று ஆணையிட்டோம் அதன்படியே நமக்கும் நமது சந்ததியினருக்கும் நடுவே உள்ள ஒப்பந்தத்திற்கு கர்த்தரே என்றென்றைக்கும் சாட்சியாக இருப்பார்” என்றான்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center

  Back

1 of 1

You'll get this book and many others when you join Bible Gateway Plus. Learn more

Viewing of
Cross references
Footnotes