A A A A A
Bible Book List

1 இராஜாக்கள் 17 Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

எலியாவும் மழையற்ற காலமும்

17 கீலேயாத்தின் திஸ்பியன் நகரில் எலியா என்ற தீர்க்கதரிசி இருந்தான். இவன் அரசனான ஆகாப்பிடம், “நான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஊழியம் செய்பவன். அவரது வல்லமையால், வருகின்ற சில வருடங்கள் மழையும் பனியும் இல்லாமல் போகும் எனக் கூறுகிறேன். நான் கட்டளையிட்டால்தான் மழைபொழியும்” என்றான்.

பிறகு கர்த்தர் எலியாவிடம், “இந்த இடத்தை விட்டு கீழ் நாடுகளுக்குப் போ. கேரீத் ஆற்றருகில் ஒளிந்துக்கொள். அது யோர்தான் ஆற்றிற்குக் கிழக்கே உள்ளது. அந்த ஆற்றின் தண்ணீரைக் குடி. அங்கு காகங்கள் உனக்கு உணவு கொண்டுவரும்படி நான் கட்டளையிட்டிருக்கிறேன்.” என்றார். எனவே எலியா அங்கே போனான். கர்த்தருடைய கட்டளைபடியே கேரீத்தில் ஒளிந்திருந்தான். ஒவ்வொரு நாள் காலையிலும் மாலையிலும் காகங்கள் இறைச்சியும் அப்பமும் கொண்டுவந்தன. ஆற்று தண்ணீரைக் குடித்தான்.

மழை இல்லாமல் போனது. கொஞ்ச நாள் ஆனதும் ஆறும் வறண்டது. கர்த்தர் எலியாவிடம், “சீதோனில் உள்ள சாறிபாத்துக்குப் போ. அங்கே இரு. கணவனை இழந்த ஒருத்தி அங்கே இருக்கிறாள். அவள் உனக்கு உணவு தருமாறு நான் கட்டளையிட்டிருக்கிறேன்” என்றார்.

10 எலியா சாறிபாத்துக்குப் போனான். நகர வாயிலுக்குள் நுழையும்போதே ஒரு பெண்ணைப் பார்த்தான். அவள் கணவன் மரித்துப்போயிருந்தான். அவள் விறகு பொறுக்கிக்கொண்டிருந்தாள். எலியா அவளிடம், “நான் குடிக்க ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவரமாட்டாயா?” என்ற கேட்டான். 11 அவள் தண்ணீர் கொண்டுவர போனபோது, அவன், “தயவு செய்து அப்பமும் கொண்டு வா” என்றான்.

12 அவளோ, “நான் தேவனாகிய கர்த்தர் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். என்னிடம் அப்பம் இல்லை. ஜாடியில் கொஞ்சம் மாவும், கலயத்தில் கொஞ்சம் எண்ணெயும் உள்ளது. நான் விறகு பொறுக்க வந்துள்ளேன். இதனால் எங்கள் கடைசி உணவை சமைத்து உண்டுவிட்டு பிறகு பசியால் நானும் என் மகனும் மரிக்கவேண்டும்” என்றாள்.

13 எலியா அந்தப் பெண்ணிடம், “கவலைப்படாதே, வீட்டிற்குப்போய் நான் சொன்னது போல சமையல் செய். உன்னிடம் உள்ள மாவால் ஒரு சிறு அப்பத்தைச் செய், அதனை எனக்குக் கொண்டு வா. பிறகு உங்களுக்கானதைச் செய்யலாம், 14 இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தர், ‘அந்த ஜாடியில் உள்ள மாவு காலியாகாது, கலயத்திலும் எண்ணெய் குறையாது என்று கூறியுள்ளார். இது கர்த்தர் மழையைக் கொண்டு வரும்வரை நிகழும்’ என்கிறார்” என்றான்.

15 எனவே அந்தப் பெண் வீட்டிற்குத் திரும்பிச் சென்று எலியா சொன்னது போல் செய்தாள். எலியாவிற்கும் அந்தப் பெண்ணிற்கும் அவள் மகனுக்கும் பல நாட்களுக்குப் போதுமான உணவு இருந்தது. 16 அவளது ஜாடியும் பானையும் காலியாகாமல் இருந்தன. கர்த்தர் சொன்னபடியே எல்லாம் நடந்தது. கர்த்தர் எலியாவின் மூலம் பேசினார்.

17 கொஞ்ச நாள் ஆனதும் அப்பெண்ணின் மகன் அதிகமாக நோய்வாய்ப்பட்டான். இறுதியில் சுவாசிப்பதை நிறுத்தினான். 18 அப்பெண் எலியாவிடம், “நீர் ஒரு தீர்க்கதரிசி. எனக்கு உதவுவீரா. நீங்கள் இங்கு ஏன் வந்தீர்கள்? உங்களுக்கும் எனக்கும் என்ன தொடர்பு? என் பாவங்களை நினைவூட்டவும் என் மகனைக் கொல்லுவதற்குமா வந்தீர்கள்?” என்று கேட்டாள்.

19 எலியா அவளிடம், “உன் மகனை என்னிடம் கொடு” என்றான். பின் அவனைத் தூக்கிக்கொண்டு மேல் மாடிக்குப் படிவழியே ஏறிப்போனான். தனது அறையிலுள்ள படுக்கையில் அவனைக் கிடத்தினான். 20 பிறகு எலியா, “எனது தேவனாகிய கர்த்தாவே, இந்த விதவை எனக்குத் தங்க இடம் தந்தாள். அவளுக்கு இத்தீமையைச் செய்யலாமா? மகன் மரிக்க காரணம் ஆகலாமா?” 21 பின் அவன் மீது மூன்று முறை குப்புற விழுந்து, “எனது தேவனாகிய கர்த்தாவே! இவனை மீண்டும் பிழைக்கச் செய்வீராக!” என்றான்.

22 எலியாவின் வேண்டுதலுக்குக் கர்த்தர் பதிலளித்தார். அப்பையன் மீண்டும் உயிர் பிழைத்தான்! 23 எலியா அவனைத் தூக்கிக்கொண்டு கீழே வந்தான். அவன் அந்தப் பெண்ணிடம், “இதோ பார் உன் மகன் உயிரோடு இருக்கிறான்!” என்று கூறினான்.

24 அந்தப் பெண், “நீங்கள் உண்மையில் தேவனுடைய மனிதர் என்று நான் இப்போது அறிகிறேன். கர்த்தர் உங்கள் மூலமாக உண்மையில் பேசுகிறார்” என்றாள்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center

  Back

1 of 1

You'll get this book and many others when you join Bible Gateway Plus. Learn more

Viewing of
Cross references
Footnotes