Add parallel Print Page Options

கர்த்தர் உங்களுக்காக உடன்படிக்கையை எழுதிய கற்பலகைகளைப் பெற்றுக்கொள்வதற்கு நான் மலைமீது ஏறிச்சென்றேன். மலை மீதே 40 நாட்கள் இரவும், பகலும் தங்கினேன். நான் உணவு உண்ணாமலும், தண்ணீர் குடிக்காமலும் இருந்தேன். 10 அப்போது கர்த்தர் என்னிடம் அந்தக் கற்பலகைகளைத் தந்தார். தேவன் அவரது கட்டளைகளை அந்த இரண்டு கற்பலகைகளில் தமது விரல்களால் எழுதியிருந்தார். தேவன் எழுதிய ஒவ்வொன்றும் நீங்கள் மலையருகில் கூடியபோது அக்கினியின் நடுவிலிருந்து பேசிய வார்த்தைகளின்படியே இருந்தன.

11 “இரவும் பகலுமாய் 40 நாட்கள் முடிந்த பின்பு, கர்த்தர் அந்த உடன்படிக்கையின்படி எழுதிய இரண்டு கற்பலகைகளையும் என்னிடம் கொடுத்தார். 12 பின் கர்த்தர் என்னிடம், ‘நீ எழுந்து இங்கிருந்து விரைவாக இறங்கிப்போ.. நீ எகிப்திலிருந்து அழைத்துவந்த ஜனங்கள் தங்களைத் தாங்களே கெடுத்துக்கொண்டார்கள், என்னுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதை இவ்வளவு விரைவாக நிறுத்திவிட்டார்கள். அவர்கள் பொன்னை வார்த்து தங்களுக்கென்று ஒரு விக்கிரகத்தை உருவாக்கினார்கள்’ என்று கூறினார்.

13 “மேலும் கர்த்தர் என்னிடம், ‘நான் இந்த ஜனங்களைக் கவனித்தேன். இவர்கள் மிகவும் பிடிவாதமுள்ளவர்கள்! 14 என்னைவிட்டு விடு! இவர்கள் எல்லோரையும் அழித்து விடுகிறேன். இவர்களில் ஒருவரது பெயரைக்கூட தங்கவிடமாட்டேன்! உன்னிடமிருந்து இவர்களைவிட மிகப் பெரிய பலம் வாய்ந்த ஜனங்கள் இனத்தை உருவாக்குவேன்’ என்று கூறினார்.

தங்கக் கன்றுக்குட்டி

15 “பின் மலையிலிருந்து திரும்பி கீழே இறங்கி வந்தேன். மலையானது அக்கினியால் எரிந்தது. உடன்படிக்கையை எழுதிய இரண்டு கற்பலகைகளும் என் கைகளில் இருந்தன. 16 நான் உங்களைக் கவனித்தபோது உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு எதிராக நீங்கள் பாவம் செய்ததைப் பார்த்தேன். தங்கத்தில் வார்க்கப்பட்ட கன்றுக்குட்டியை உருவாக்கியதை நான் பார்த்தேன்! கர்த்தர் உங்களுக்கு இட்ட வழியை விட்டு நீங்கள் வேகமாக விலகிச் சென்றதைக் கண்டேன்! 17 எனவே நான் எடுத்துவந்த இரண்டு கற்பலகைகளையும் ஓங்கி கீழே எறிந்தேன். உங்களின் கண்கள் முன்னாலேயே கற்பலகைகளை துண்டுத் துண்டுகளாகப் போட்டு உடைத்தேன். 18 பின் உங்களுடைய பாவங்களுக்காக கர்த்தருக்கு முன்பாக முன்போல் மீண்டும் 40 நாட்கள் இரவு பகலாக விழுந்து கிடந்தேன். எவ்வகை உணவும் உண்ணவில்லை. தண்ணீரும் குடிக்கவில்லை. எதற்காக இதனைச் செய்தேன் என்றால் நீங்கள் செய்த பாவங்கள் மிகக் கொடுமையானவை. நீங்கள் செய்த இந்த செயல்கள் கர்த்தருக்குச் செய்த தீமைகள் ஆகும். கர்த்தருக்குக் கடுங்கோபம் உண்டாக்கினீர்கள். 19 கர்த்தருக்கு இருந்த கடுமையான கோபத்தைக் கண்டு நான் பயந்தேன். உங்களை அழிக்கின்ற அளவுக்கு அவர் கோபம் கொண்டிருந்தார். ஆனால், மீண்டும் நான் மன்றாடியதைக் கேட்டார். 20 ஆரோன் மீதும் கர்த்தர் கடுங்கோபம் கொண்டு அவனை அழிக்க வேண்டும் என்றிருந்தார்! ஆனால் ஆரோனுக்காகவும் நான் மன்றாடினேன். 21 நீங்கள் உருவாக்கிய எரிச்சலூட்டும் அந்தக் கன்றுக்குட்டியை எடுத்து தீயிலிட்டுக் கொளுத்தி தூள் தூளாக்கும்படி செய்தேன். அவற்றைப் புழுதியாகும்படிச் செய்தேன். பின் அந்தச் சாம்பலை மலையிலிருந்து வரும் ஆற்றில் போட்டுவிட்டேன்.

Read full chapter