உபாகமம் 7:1-10
Tamil Bible: Easy-to-Read Version
இஸ்ரவேலர், தேவனின் விசேஷ ஜனங்கள்
7 “உங்கள் விருப்பத்திற்கேற்ப சுதந்திரமாக வாழப்போகின்ற இந்த தேசத்தில் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை வழிநடத்திச் செல்வார். உங்களுக்காக உங்களைவிடப் பெரியவர்களும், பலசாலிகளுமான ஏத்தியர், கிர்காசியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் ஆகிய ஏழு நாட்டினர்களையும் உங்களுக்கு முன்பாகவே துரத்துவார். 2 உங்கள் தேவனாகிய கர்த்தர் அந்த ஏழு நாட்டினரையும் உங்களுக்குக் கீழே கட்டுப்பட வைப்பார். அவர்களை நீங்கள் தோற்கடிப்பீர்கள். அவர்களை முழுவதுமாக நீங்கள் அழித்துவிட வேண்டும். அவர்களிடம் எவ்வித ஒப்பந்தமும் செய்யாதீர்கள். அவர்களிடம் இரக்கம் காட்டாதீர்கள். 3 அவர்களில் எவரையும் மணந்துகொள்ளாதீர்கள். நீங்கள் மட்டுமின்றி உங்கள் மகன்களையோ மகள்களையோ அந்த ஜனங்களைச் சார்ந்தவர்களில் ஒருவருக்கும் திருமணம் செய்து வைக்கக் கூடாது. 4 ஏனென்றால் அந்த ஜனங்கள் உங்கள் பிள்ளைகளை என்னைப் பின்பற்றுவதிலிருந்து திசைதிருப்பி விடுவார்கள். பின்பு உங்கள் பிள்ளைகள் மற்ற பொய்த் தெய்வங்களை தொழுதுகொள்வார்கள். அதனால், கர்த்தர் உங்கள்மீது கடுமையாக கோபங்கொள்ள நேரிடும். அவர் உங்களை விரைவில் அழித்துவிடுவார்.
பொய்த் தெய்வங்களை அழித்துவிடுங்கள்
5 “நீங்கள் அந்தப் பகைவர்களுக்குச் செய்ய வேண்டியது என்னவென்றால், அவர்களின் பலிபீடங்களை இடித்து, அவர்களுடைய ஞாபகார்த்தக் கற்களை உடைத்துவிடுங்கள். அவர்களது அஷெரா கோவில் கம்பங்களை வெட்டி வீழ்த்தி, அவர்களது சிலைகளைத் தீயிலிட்டு அழித்துவிடுங்கள்! 6 ஏனென்றால் நீங்கள் எல்லோரும் கர்த்தருடைய சொந்த ஜனங்கள். இந்தப் பூமியில் உள்ள எல்லா ஜனங்களிலிருந்தும் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைத் தேர்ந்தெடுத்து தமக்கு விசேஷமான ஜனங்களாக ஆக்கினார். 7 ஏன் கர்த்தர் உங்கள் மீது அன்பு செலுத்தி தேர்ந்தெடுத்தார்? மற்ற ஜனங்களைவிட நீங்கள் அதிகமானவர்கள் என்பதால் அல்ல, மற்ற எல்லா ஜனங்களையும்விட நீங்கள் மிகக் குறைவானவர்களே! 8 ஆனால், கர்த்தர் தமது பெரிய வல்லமையினால் எகிப்திலிருந்து உங்களை மீட்டு வந்தார். அவர் உங்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தார். எகிப்து நாட்டு மன்னனாகிய பார்வோனின் கட்டுப்பாட்டிலிருந்து உங்களை கர்த்தர் விடுவித்தார். ஏனென்றால் கர்த்தர் உங்கள்மீது அன்பு செலுத்தி உங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற விரும்பினார்.
9 “ஆகையால், உங்கள் தேவனாகிய கர்த்தர் ஒருவரே தேவன் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் அவரிடம் முழு நம்பிக்கை கொள்ளலாம்! அவர் தமது உடன்படிக்கையிலிருந்து விலகமாட்டார். யாரெல்லாம் அவரிடம் அன்பு வைத்து, அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறார்களோ அவர்களுக்கெல்லாம் தேவன் தமது அன்பையும், அருளையும் பொழிவார். உங்களிடம் மட்டுமின்றி, உங்களின் ஆயிரம் தலைமுறைகளுக்கும் அவர் தமது அன்பையும் அருளையும் தருவார். 10 ஆனால், அவரை வெறுக்கின்றவர்களை கர்த்தர் தண்டிப்பார். அவர்களை அழித்துவிடுவார். அவர்களைத் தண்டிப்பதில் சிறிதும் தயவு காட்டமாட்டார்.
Read full chapter2008 by Bible League International