Add parallel Print Page Options

அடைக்கலப் பட்டணங்கள்

19 “மற்ற இன ஜனங்களை அழித்துவிட்டு உங்கள் தேவனாகிய கர்த்தர் அவர்களது தேசத்தை உங்களுக்குத் தருகின்றார். அவர்கள் வாழ்ந்த இடங்களிலேயே நீங்கள் வாழப்போகிறீர்கள். நீங்கள் அவர்களது நகரங்களையும், வீடுகளையும் எடுத்துக்கொண்டு அனுபவிக்கப் போகிறீர்கள். அப்படி நடக்கும்போது, 2-3 நீங்கள் அந்த தேசத்தை மூன்று பிரிவுகளாக பிரித்துக்கொள்ள வேண்டும். பின் ஒவ்வொரு பிரிவிலும் எல்லாருக்கும் மையமான ஒரு நகரத்தைத் தேர்ந்தெடுத்து, அந்த நகரங்களுக்குச் சாலைகளையும், வீதிகளையும் அமைத்துக்கொள்ளுங்கள். அப்போது தற்செயலாக மற்றவர்களைக் கொலை செய்திடும் நபர் பாதுகாப்பாய் அந்நகருக்குள் ஓடிப்போகலாம்.

“கொலை செய்தவன் எவனும் அம்மூன்று நகரங்களில் ஒன்றில் ஓடிப்போய் இருக்க வேண்டுவதற்கான நியாயம் என்னவென்றால்: அந்த நபர் மற்றவனைக் கொன்றது எதிர்ப்பாராத விதமாக நடந்திருக்க வேண்டும். தான் மனதறியாது எவ்வித முன் வெறுப்பும் இல்லாது கொன்றிருக்க வேண்டும். இங்கு உதாரணமாகச் சொன்னால், ஒருவன் மற்றவனோடு விறகு வெட்ட காட்டிற்குச் சென்று மரத்தை வெட்டும்படி தன் கையிலிருக்கும் கோடரியை ஓங்கும்போது, அதிலிருந்த இரும்பானது கைப்பிடியை விட்டு கழன்று மற்றவன்மேல் விழுந்ததினால் அவன் மரித்துப்போனால், அந்தக் கோடரியை ஓங்கியவன், அம்மூன்று பட்டணங்கள் ஒன்றில் ஓடிப்போய் பாதுகாப்படைந்து கொள்ளலாம். ஆனால், இந்தப் பட்டணம் வெகு தூரத்தில் இருப்பதினால் போதுமான வேகத்திற்கு அவனால் ஓடமுடியாமல் போகலாம். அப்போது கொலையுண்டவனின் நெருங்கிய உறவினன் பழிவாங்கும் நோக்கத்தோடு அவனை விரட்டக்கூடும். அவன் கோபாவேசம் நிறைந்தவனாய் கொலை செய்தவனை நெருங்கியவுடன் அவனைக் கொன்று போடக்கூடும். இப்படி அவன் மரிக்க வேண்டியவனல்ல. ஏனெனில், அவன் முன் விரோதமின்றி கொலை செய்தவனாவான். இந்த மூன்று நகரங்களும் அவைகளைச் சுற்றியுள்ள ஜனங்களுக்கு அருகாமையில் இருக்க வேண்டும். அதனால்தான், நீங்கள் விசேஷமான அந்த மூன்று நகரங்களைத் தேர்ந்தெடுக்கக் கட்டளையிட்டேன்.

Read full chapter