உபாகமம் 10:12-18
Tamil Bible: Easy-to-Read Version
கர்த்தரின் உண்மையான விருப்பம்
12 “இப்போதும், இஸ்ரவேல் ஜனங்களே கவனியுங்கள்! உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களிடமிருந்து உண்மையிலேயே விரும்புவது என்ன? கர்த்தர் உங்களிடம் விரும்புவது, நீங்கள் அவருக்கும் அவர் சொன்னவற்றுக்கும் மதிப்பளித்து அதன்படி செய்ய வேண்டும். தேவன் விரும்புவது, நீங்கள் அவர் மீது அன்பு செலுத்துவதையும், உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு உங்கள் முழுமனதோடும், உங்களின் முழு ஆத்மதிருப்தியுடனும் சேவைச் செய்வதே. 13 ஆகையால், நான் இன்று உங்களுக்கு வழங்குகின்ற கர்த்தருடைய கட்டளைகளுக்கும், சட்டங்களுக்கும் நீங்கள் கீழ்ப்படிய வேண்டும். உங்களின் நன்மைக்கென்றே இந்தக் கட்டளைகளும், சட்டங்களும் உள்ளன.
14 “எல்லாப் பொருட்களும் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு உரியவை! வானங்களும், வானாதிவானங்களும் கர்த்தருக்குச் சொந்தமானவை. இந்தப் பூமியும் பூமியின் மேல் உள்ள எல்லாப் பொருட்களும் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குச் சொந்தமானவை. 15 கர்த்தர் உங்கள் முற்பிதாக்களின் மீது அன்பு வைத்திருந்தார். அவர்கள்மீது அதிகமாக அன்பு வைத்ததினாலேயே உங்களையும், உங்கள் சந்ததியினரையும் கர்த்தர் தன்னுடைய ஜனங்களாக இன்றும் கருதி அன்பு காட்டுகிறார். மற்ற எல்லா ஜனங்களும் இருந்தாலும் உங்களை தேவன் பிரித்தெடுத்தார். இன்றளவும் நீங்கள் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனங்களாய் இருக்கிறீர்கள்.
16 “உங்களின் பிடிவாத குணத்தை விட்டுவிடுங்கள். உங்களின் உள்ளங்களை கர்த்தருக்குக் கொடுங்கள். 17 ஏனென்றால், உங்களுடைய தேவனாகிய கர்த்தர் அவர் கர்த்தாதி கர்த்தரும், தேவாதி தேவனும் ஆவார். நமது கர்த்தரே மகத்துவமும், வல்லமையும், பயங்கரமும் உடைய தேவனாவார். கர்த்தர் பாரபட்சம் காட்டுபவர் அல்ல. கர்த்தர் தன் மனதை மாற்றிக்கொள்ள பணத்தை ஏற்றுக்கொள்ளமாட்டார். 18 அநாதைக் குழந்தைகளுக்கும், விதவைகளுக்கும் ஆதரவாகவும் அன்பு செலுத்துபவராகவும் தேவன் அருள் செய்கிறார். அந்நியர்கள் மீதும் தேவன் அன்பு காட்டுகிறார். அவர்களுக்கும் உண்ண உணவும், உடுக்க உடையும் அளிக்கின்றார்.
Read full chapter2008 by Bible League International