சங்கீதம் 82
Tamil Bible: Easy-to-Read Version
ஆசாபின் துதிப் பாடல்களுள் ஒன்று.
82 தேவன் தேவர்களின் சபையில்[a] நிற்கிறார்.
தேவர்களின் கூட்டத்தில் அவரே நீதிபதி.
2 தேவன், “எத்தனைக் காலம் நீங்கள் ஜனங்களைத் தகாதபடி நியாயந்தீர்ப்பீர்கள்?
தீயவர்களைத் தண்டனை இல்லாமல் எவ்வளவு காலம் தப்பிக்கச் செய்வீர்கள்?”
3 “ஏழைகளுக்கும் அநாதைகளுக்கும் ஆதரவளியுங்கள்.
அந்த ஏழைகளின் உரிமைகளுக்குப் பாதுகாப்பளியுங்கள்.
4 ஏழைகளுக்கும் திக்கற்றோருக்கும் உதவுங்கள்.
அவர்களைத் தீயோரிடமிருந்து காப்பாற்றுங்கள்.
5 “அவர்கள் நிகழ்வது என்னவென்று அறியார்கள்.
அவர்கள் புரிந்துகொள்ளார்கள்!
அவர்கள் செய்துகொண்டிருப்பதை அவர்கள் அறியார்கள்.
அவர்கள் உலகம் அவர்களைச் சுற்றிலும் வீழ்ந்து கொண்டிருக்கிறது!” என்கிறார்.
6 நான் (தேவன்),
“நீங்கள் தேவர்கள். மிக உன்னதமான தேவனுடைய குமாரர்கள்.
7 ஆனால் நீங்கள் எல்லா ஜனங்களும் மடிவதைப்போல மடிவீர்கள்.
பிற எல்லாத் தலைவர்களையும்போல நீங்களும் மடிவீர்கள்” என்று சொல்லுகிறேன்.
8 தேவனே! எழுந்தருளும்! நீரே நீதிபதியாயிரும்!
தேவனே, தேசங்களுக்கெல்லாம் நீரே தலைவராயிரும்!
Footnotes
- சங்கீதம் 82:1 தேவர்களின் சபை தேவனும் அந்நிய தெய்வங்களும் சந்தித்துப் பூமியில் உள்ள ஜனங்களுக்குச் செய்ய வேண்டிய காரியங்களைத் தீர்மானித்தனர் என்று பிற தேசத்தார் போதித்தனர். பல வேளைகளில் தலைவர்களும் ராஜாக்களும் கூட தெய்வங்கள் என அழைக்கப்பட்டனர். எனவே இச்சங்கீதம் இஸ்ரவேல் தலைவர்களுக்கு தேவன் கொடுத்த எச்சரிக்கையாக இருக்கலாம்.
Copyright © 2011 by Global Bible Initiative
2008 by Bible League International