அப்போஸ்தலர் 22:1-15
Tamil Bible: Easy-to-Read Version
பவுல் மக்களோடு பேசுகிறான்
22 பவுல், “எனது சகோதரர்களே! தந்தையரே! நான் கூறுவதைக் கேளுங்கள், நான் என் சார்பான நியாயங்களை உங்கள் முன்வைக்கிறேன்” என்றான்.
2 பவுல் யூத மொழியில் பேசுவதை யூதர்கள் கேட்டார்கள். எனவே அவர்கள் மேலும் அமைதியாயினர். பவுல்,
3 “நான் ஒரு யூதன், நான் சிலிசியா நாட்டிலுள்ள தர்சுவில் பிறந்தவன். இந்நகரில் வளர்ந்தவன். நான் கமாலியேலின்[a] மாணவன். நமது முன்னோரின் சட்டங்களை அவர் எனக்கு மிக நம்பிக்கையுடன் போதித்தார். நான் தேவனுடைய சேவையில், நீங்கள் எல்லோரும் இப்போது இருப்பதைப் போல், முனைந்து நின்றேன். 4 இயேசுவின் வழியைப் பின்பற்றிய மக்களைத் தண்டித்தேன். அவர்களில் சிலர் என் நிமித்தமாகக் கொல்லப்பட்டனர். நான் ஆண்களையும் பெண்களையும் கைது செய்தேன். அவர்களை சிறையில் வைத்தேன்.
5 “தலைமை ஆசாரியரும் முதிய யூதர்களின் சங்கமும் இது உண்மை என்பதை உங்களுக்குக் கூறமுடியும்! ஒருமுறை இந்த அதிகாரிகள் என்னிடம் சில கடிதங்களைக் கொடுத்தனர். அக்கடிதங்கள் தமஸ்குவிலுள்ள யூத சகோதரர்களுக்கு முகவரி இடப்பட்டிருந்தன. நான் அங்கு இயேசுவின் சீஷர்களைக் கைது செய்வதற்கும் தண்டனைக்காக அவர்களை எருசலேமுக்குக் கொண்டுவரவும் போய்க் கொண்டிருந்தேன்.
பவுலின் சாட்சி
6 “ஆனால் தமஸ்குவிற்கு நான் செல்லும் வழியில் ஏதோ ஒன்று எனக்கு நிகழ்ந்தது. நான் தமஸ்குவை நெருங்கிக்கொண்டிருந்தபோது அது நண் பகல் நேரம். தீடீரென்று என்னைச் சுற்றிலும் வானிலிருந்து மிகுந்த ஒளி பிரகாசித்தது. 7 நான் தரையில் வீழ்ந்தேன். ஒரு குரல் என்னிடம், ‘சவுலே, சவுலே, நீ ஏன் எனக்கு இத்தீய காரியங்களைச் செய்கின்றாய்?’ என்றது.
8 “நான், ‘ஆண்டவரே நீர் யார்?’ என்று கேட்டேன், அக்குரல், ‘நான் நாசரேத்தின் இயேசு. நீ கொடுமைப்படுத்துகிறவன் நானே’ என்றது. 9 என்னோடிருந்த மனிதர்கள் அக்குரலைக் கேட்கவில்லை. ஆனால் அம்மனிதர்கள் ஒளியைக் கண்டார்கள்.
10 “நான், ‘ஆண்டவரே, நான் என்ன செய்யட்டும்?’ என்றேன். கர்த்தராகிய இயேசு பதிலாக, ‘எழுந்து தமஸ்குவுக்குள் போ, நீ செய்ய வேண்டுமென நான் திட்டமிட்டுள்ள அனைத்தையும் குறித்து அங்கே உனக்கு அறிவிக்கப்படும்’ என்றார். 11 என்னால் பார்க்கமுடியாதபடிக்கு, அப்பிரகாசமான ஒளி என்னைக் குருடாக்கிற்று. எனவே என் மனிதர்கள் என்னைத் தமஸ்குவுக்கு வழி நடத்தினார்கள்.
12 “தமஸ்குவில் அனனியா[b] என்னும் பெயருள்ள மனிதன் என்னிடம் வந்தான். அனனியா பக்திமான். அவன் மோசேயின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்தவன். அங்கு வாழ்ந்த யூதர்கள் அனைவரும் அவனை மதித்தனர். 13 அனனியா என் அருகில் வந்து, ‘சகோதரனாகிய சவுலே, மீண்டும் பார்ப்பாயாக’ என்றான். உடனே என்னால் பார்க்க முடிந்தது.
14 “அனனியா என்னிடம், ‘நமது முன்னோர்களின் தேவன் அவரது திட்டத்தைத் தெரிந்துகொள்வதற்கு உன்னைத் தேர்ந்தெடுத்தார். நேர்மையானவரைக் கண்டு அவரது வார்த்தைகளை அவரிடமிருந்து கேட்பதற்காக அவர் உன்னைத் தெரிந்துகொண்டார். 15 எல்லா மக்களுக்கும் நீ அவரது சாட்சியாக இருப்பாய். நீ பார்த்ததையும் கேட்டதையும் மனிதருக்குக் கூறுவாய்.
Read full chapterFootnotes
- அப்போஸ்தலர் 22:3 கமாலியேல் பரிசேயர்களின் மிக முக்கியமான ஆசிரியர். யூதமத குரு அப்போ. 5:34.
- அப்போஸ்தலர் 22:12 அனனியா அப்போஸ்தலர் நடபடிகளில் மூன்று பேர் இதே பெயரில் உள்ளனர். அப்போ. 5:1; 23:2.
2008 by Bible League International