Add parallel Print Page Options

சிறுவன் குணமாக்கப்படுதல்(A)

37 மறுநாள் மலையிலிருந்து இயேசு, பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோர் இறங்கி வந்தனர். 38 ஒரு பெரிய கூட்டம் இயேசுவை சந்தித்தது. அக்கூட்டத்தில் ஒருவன் இயேசுவை நோக்கி, “போதகரே! தயவு செய்து வந்து என் மகனைப் பாருங்கள். அவன் எனக்கு ஒரே மகன். 39 பிசாசிடம் இருந்து ஓர் அசுத்த ஆவி என் மகனைப் பற்றிக்கொள்ளும்போது அவன் கத்துகிறான். அவன் தனது நிலையை இழக்கும்போது வாயிலிருந்து நுரைதள்ளுகிறது. அசுத்த ஆவி அவனைக் காயப்படுத்தி, அவனை எப்போதும் விடாமல் துன்புறுத்துகிறது. 40 உங்கள் சீஷர்களிடம் என் மகனை விட்டு அந்த அசுத்த ஆவி நீங்குமாறு செய்யக் கெஞ்சினேன்.அவர்களால் அதைச் செய்ய முடியவில்லை” என்று உரக்கக் கூறினான்.

41 இயேசு, “இப்போது வாழும் மக்களாகிய உங்களுக்கு விசுவாசமில்லை. உங்கள் வாழ்க்கை தவறானதாகக் காணப்படுகிறது. எத்தனை காலம் நான் உங்களோடு தங்கியும், உங்களைப் பொறுத்துக்கொண்டும் இருக்கட்டும்?” என்று பதிலளித்தார். பின்பு அம்மனிதனை நோக்கி, “உனது மகனை இங்கே கொண்டு வா” என்றார்.

42 அந்தப் பையன் வந்துகொண்டிருக்கும் போது அசுத்த ஆவி அவனைக் கீழே தள்ளிற்று. அந்தப் பையன் தனது நிலையையிழந்து நடுங்கிக்கொண்டிருந்தான். ஆனால் இயேசு அந்த அசுத்த ஆவி அவனைவிட்டு வெளியேறக் கண்டிப்புடன் கட்டளையிட்டார். அப்பையன் நலம் பெற்றான். இயேசு பையனைத் தந்தையிடம் ஒப்படைத்தார். 43 தேவனின் மகத்துவத்தையும் பெருமையையும் கண்டு எல்லா மக்களும் ஆச்சரியம் அடைந்தார்கள்.

தன் மரணத்தைப் பற்றிப் பேசுதல்(B)

இயேசு செய்த எல்லா செயல்களையும் கண்டு இன்னும் மக்கள் மிகுந்த ஆச்சரியமுற்றனர். இயேசு தம்மைப் பின்பற்றுபவர்களை நோக்கி, 44 “நான் உங்களுக்கு இப்போது கூறப்போகிற செய்திகளை மறவாதீர்கள். மனிதகுமாரன் சில மனிதர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொடுக்கப்படுவார்” என்றார். 45 ஆனால் அவர்களோ அவர் கூறியதன் பொருளை உணர்ந்துகொள்ளவில்லை. அவர்கள் புரிந்துகொள்ளாதபடி அதன் பொருள் அவர்களுக்கு மறைமுகமானதாய் இருந்தது. அவர்களோ இயேசு கூறியதன் பொருளைக் கேட்டுத் தெரிந்துகொள்ளப் பயந்தார்கள்.

முக்கியமானவர் யார்?(C)

46 இயேசுவின் சீஷர்கள் தமக்குள் மிகவும் முக்கியமானவர் யார் என்பதைக் குறித்து விவாதிக்கத் தொடங்கினார்கள். 47 அவர்கள் என்ன எண்ணிக்கொண்டிருந்தார்கள் என்பதை இயேசு அறிந்திருந்தார். எனவே இயேசு ஒரு சிறிய குழந்தையை எடுத்துத் தன்னருகே, அதனை நிறுத்தினார். 48 பின்பு தனது சீஷர்களை நோக்கி, “என் பெயரினால் ஒருவன் ஒரு சிறிய குழந்தையை இதுபோல ஏற்றுக்கொண்டால் அவன் என்னையும் ஏற்றுக்கொள்கிறான். என்னை ஏற்றுக்கொள்ளும்போது அம்மனிதன் என்னை அனுப்பினவரை (தேவனையும்) ஏற்றுக்கொள்கிறான். உங்களில் மிகவும் தாழ்மையுள்ள மனிதன் எவனோ, அவனே மிகவும் முக்கியமான மனிதன் ஆவான்” என்றார்.

இயேசுவைச் சேர்ந்தவன் யார்?(D)

49 “குருவே, மனிதர்களை விட்டு வெளியேறும்படியாக உம்முடைய பெயரினால் ஒரு மனிதன் பிசாசுகளை வற்புறுத்திக்கொண்டிருந்தான். அவன் நம் கூட்டத்தைச் சாராதவனாகையால் அவன் அதைச் செய்யாதபடி நிறுத்த நாங்கள் கூறினோம்” என்றான் யோவான்.

50 இயேசு யோவானை நோக்கி, “அவனைத் தடுக்காதீர்கள். ஒரு மனிதன் உங்களுக்கு எதிராக இல்லையென்றால் அவன் உங்களைச் சார்ந்தவன்” என்றார்.

Read full chapter