லூக்கா 4:22-30
Tamil Bible: Easy-to-Read Version
22 எல்லா மக்களும் இயேசுவைக் குறித்து நல்லபடியாகக் கூறினர். இயேசு பேசிய அழகான வார்த்தைகளைக் கேட்டு அவர்கள் வியந்தனர். மக்கள், “அவர் எவ்வாறு இப்படிப் பேச முடியும்? அவர் யோசேப்பின் குமாரன் அல்லவா?” என்றனர்.
23 அவர்களை நோக்கி, இயேசு, “‘மருத்துவரே, முதலில் உன்னை நீயே குணப்படுத்திக்கொள்’ என்னும் பழமொழியை நீங்கள் எனக்குக் கூறப் போகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். ‘நீங்கள் கப்பர்நகூமில் நிகழ்த்திய காரியங்களைக் குறித்துக் கேள்விப்பட்டு இருக்கிறோம். உங்கள் சொந்த நகரமாகிய இவ்விடத்திலும் அதையே செய்யுங்கள்’ என்று சொல்ல விரும்புகிறீர்கள்” என்றார். 24 மேலும் இயேசு, “நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். ஒரு தீர்க்கதரிசியை அவனது சொந்த நகரத்தார் ஏற்றுக்கொள்வதில்லை.
25 “நான் சொல்வது உண்மை. எலியாவின் காலத்தில் மூன்றரை ஆண்டுகளாக இஸ்ரவேலில் மழை பொழியவில்லை. நாடு முழுவதிலும் உணவு எங்கும் கிடைக்கவில்லை. அக்காலத்தில் இஸ்ரவேலில் விதவைகள் பலர் வாழ்ந்தனர். 26 ஆனால் இஸ்ரவேலில் உள்ள எந்த விதவையிடத்திலும் எலியா அனுப்பப்படவில்லை. சீதோனில் உள்ள நகரமாகிய சாரிபாத்தில் உள்ள விதவையிடத்துக்கே அவன் அனுப்பப்பட்டான்.
27 “எலிசா என்னும் தீர்க்கதரிசியின் காலத்தில் குஷ்டரோகிகள் பலர் இருந்தனர். அவர்களில் ஒருவரும் குணமாக்கப்படவில்லை. நாகமான் மட்டுமே குணமடைந்தான். அவன் சீரியா தேசத்தைச் சேர்ந்தவன். இஸ்ரவேல் தேசத்தைச் சேர்ந்தவன் அல்லன்” என்றார்.
28 ஜெப ஆலயத்தில் உள்ள அனைவரும் இவ்வார்த்தைகளைக் கேட்டனர். அவர்கள் மிகமிகக் கோபம் அடைந்தனர். 29 அம்மக்கள் எழுந்து இயேசுவை நகரத்தில் இருந்து வெளியேறும்படியாகக் கட்டாயப்படுத்தினர். அவர்கள் நகரம் ஒரு மலையின்மேல் நிர்மாணிக்கப்பட்டு இருந்தது. அவர்கள் இயேசுவை மலையின் விளிம்புக்குக் கொண்டு வந்தனர். விளிம்பிலிருந்து அவரைத் தள்ளிவிட அவர்கள் முனைந்தார்கள். 30 ஆனால் இயேசு அவர்களுக்கு நடுவே நடந்து, அங்கிருந்து சென்றுவிட்டார்.
Read full chapter2008 by Bible League International