A A A A A
Bible Book List

லூக்கா 3 Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

யோவானின் போதனை

அது திபேரியு இராயன் அரசாண்ட பதினைந்தாவது வருஷமாயிருந்தது. சீசருக்குக் கீழான மனிதர்களின் விவரமாவது;

பொந்தியு பிலாத்து யூதேயாவை ஆண்டான்.

ஏரோது கலிலேயாவை ஆண்டான்.

ஏரோதுவின் சகோதரனாகிய பிலிப்பு இத்துரேயாவையும்

திராகொனித்தி நாட்டையும் ஆண்டான்.

அன்னாவும், காய்பாவும் தலைமை ஆசாரியராக இருந்தனர். அப்போது சகரியாவின் மகனாகிய யோவானுக்கு தேவனிடமிருந்து ஒரு கட்டளை வந்தது. யோவான் வனாந்தரத்தில் வாழ்ந்து வந்தான். யோர்தான் நதியைச் சுற்றிலுமுள்ள எல்லாப் பிரதேசங்களுக்கும் யோவான் சென்றான். அவன் மக்களுக்குப் போதித்தான். அவர்கள் பாவங்கள் மன்னிக்கப்படும்படியாக, இதயத்தையும் வாழ்க்கையையும் மாற்றி ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுமாறு யோவான் மக்களுக்குக் கூறினான். இது ஏசாயா என்னும் தீர்க்கதரிசியின் புத்தகத்தில் எழுதிய வார்த்தைகளின் நிறைவேறுதலாக அமைந்தது:

“வனாந்தரத்தில் யாரோ ஒரு மனிதன் கூவிக்கொண்டிருக்கிறான்:
‘கர்த்தருக்கு வழியைத் தயார் செய்யுங்கள்.
    அவருக்குப் பாதையை நேராக்குங்கள்.
பள்ளத்தாக்குகள் எல்லாம் நிரப்பப்படும்.
    ஒவ்வொரு மலையும் குன்றும் மட்டமாக்கப்படும்.
திருப்பம் மிக்க பாதைகள் நேராக்கப்படும்.
    கரடுமுரடான பாதைகள் மென்மையாகும்.
ஒவ்வொரு மனிதனும் தேவனுடைய இரட்சிப்பை அறிவான்.’”

யோவான் மூலமாக ஞானஸ்நானம் பெறும்பொருட்டு மக்கள் வந்தனர். யோவான் அவர்களை நோக்கி, “நீங்கள் விஷம் பொருந்திய பாம்புகளைப் போன்றவர்கள். வரவிருக்கும் தேவனுடைய கோபத்தினின்று ஓடிப் போக யார் உங்களுக்கு எச்சரிக்கை செய்தனர்? உங்கள் இதயங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளதைக் காட்டவல்ல செயல்களை நீங்கள் செய்தல் வேண்டும். ‘ஆபிரகாம் எங்கள் தந்தை’ என்று பெருமை பாராட்டிக் கூறாதீர்கள். தேவன் இந்தப் பாறைகளில் இருந்தும் ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உருவாக்கக்கூடும் என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன். மரங்களை வெட்டும்படிக்குக் கோடாரி வைக்கப்பட்டுள்ளது. நல்ல பழங்களைத் தராத மரங்கள் வெட்டப்பட்டு நெருப்பில் வீசப்படும்” என்றான்.

10 மக்கள் யோவானை நோக்கி, “நாங்கள் செய்ய வேண்டியது என்ன?” என்று கேட்டனர்.

11 அவர்களுக்கு யோவான், “உங்களிடம் இரண்டு மேலாடைகள் இருந்தால், ஒரு மேலாடைகூட இல்லாத மனிதனுக்கு ஒன்றைக் கொடுங்கள். உங்களிடம் உணவிருந்தால் அதையும் பகிர்ந்து கொள்ளுங்கள்” என்று பதிலுரைத்தான்.

12 வரி வசூலிப்போரும்கூட யோவானிடம் வந்தனர். அவர்கள் ஞானஸ்நானம் பெற விரும்பினர். அவர்கள் யோவானிடம், “போதகரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்கள்.

13 அவர்களிடம் யோவான், “எந்த அளவுக்கு வரி வசூலிக்கவேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறதோ அந்த அளவுக்கு வரி வாங்குவதன்றி அதிகமாக வசூலிக்காதீர்கள்” என்று கூறினான்.

14 வீரர்கள் யோவானை நோக்கி, “எங்களைப்பற்றி என்ன? நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டனர்.

அவர்களுக்கு யோவான், “உங்களுக்குப் பணம் தரும்பொருட்டு மக்களை ஒருபோதும் நிர்ப்பந்தப்படுத்தாதீர்கள். யாரைக்குறித்தும் பொய் சொல்லாதீர்கள். உங்களுக்குக் கிடைக்கும் சம்பளத்தில் மகிழ்ச்சியாக இருங்கள்” என்று கூறினான்.

15 எல்லா மக்களும் கிறிஸ்துவின் வருகையை எதிர்நோக்கி இருந்தனர். எனவே யோவானைக் கண்டு அவர்கள் ஆச்சரியம் கொண்டனர். அவர்கள், “இவன் கிறிஸ்துவாக இருக்கக்கூடும்” என்று எண்ணினர்.

16 அவர்கள் அனைவரிடமும் பேசிய யோவான், “நான் உங்களுக்குத் தண்ணீரால் ஞானஸ்நானம் கொடுக்கிறேன். எனக்குப் பின்னால் வருகிறவரோ நான் செய்வதைக் காட்டிலும் அதிகமாகச் செய்ய வல்லவர். அவரது மிதியடிகளை அவிழ்க்கவும் நான் தகுதியற்றவன். அவர் ஆவியானவராலும், அக்கினியாலும், உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார். 17 தானியங்களைச் சுத்தமாக்குவதற்குத் தயாராக அவர் வருவார். பதரிலிருந்து தானியத்தைப் பிரித்துக் களஞ்சியத்தில் சேர்ப்பார், பதரையோ அவர் எரிப்பார். அணைக்க முடியாத நெருப்பில் அவற்றைச் சுட்டெரிப்பார்,” என்று பதில் கூறினான். 18 யோவான் நற்செய்தியைத் தொடர்ந்து போதித்து, மக்களுக்கு உதவும்படியான மற்ற பல காரியங்களையும் சொல்லி வந்தான்.

யோவானுக்கு ஏற்பட்ட உபத்திரவம்

19 ஆளுநராகிய ஏரோதுவை யோவான் கண்டித்தான். ஏரோதுவின் சகோதரனின் மனைவியாகிய ஏரோதியாளை அவன் தகாத முறையில் சேர்த்துக்கொண்டதை யோவான் கண்டனம் செய்தான். ஏரோது செய்த பல தீய செயல்களையும் யோவான் கண்டித்தான். 20 எனவே ஏரோது இன்னொரு தீய காரியத்தையும் செய்தான். அவன் யோவானை சிறையிலிட்டான். ஏரோது செய்த பல தீய காரியங்களோடு கூட இதுவும் ஒரு தீய செயலாக அமைந்தது.

இயேசு ஞானஸ்நானம் பெறுதல்

21 யோவான் சிறையில் அடைக்கப்படும் முன்பு அவனால் எல்லா மக்களும் ஞானஸ்நானம் பெற்றனர். இயேசுவும் அப்போது அங்கு வந்து அவனிடம் ஞானஸ்நானம் பெற்றார். இயேசு பிரார்த்தனை செய்து கொண்டிருந்தபோது வானம் திறந்தது. 22 பரிசுத்த ஆவியானவர் அவர் மீது வந்தார். ஆவியானவர் ஒரு புறாவைப்போலத் தோற்றமளித்தார். அப்போது வானத்திலிருந்து ஒரு சத்தம் கேட்டது. அது “நீர் என் அன்புள்ள குமாரன். நான் உம்மில் பிரியமாக இருக்கிறேன்” என்று உரைத்தது.

யோசேப்பின் குடும்ப வரலாறு

23 இயேசு போதிக்க ஆரம்பித்தபோது ஏறக்குறைய முப்பது வயது நிரம்பியவராக இருந்தார். மக்கள் இயேசுவை யோசேப்பின் மகன் என்றே எண்ணினர்.

யோசேப்பு ஏலியின் மகன்.

24 ஏலி மாத்தாத்தின் மகன்.

மாத்தாத் லேவியின் மகன்.

லேவி மெல்கியின் மகன்.

மெல்கி யன்னாவின் மகன்.

யன்னா யோசேப்பின் மகன்.

25 யோசேப்பு மத்தத்தியாவின் மகன்.

மத்தத்தியா ஆமோஸின் மகன்.

ஆமோஸ் நாகூமின் மகன்.

நாகூம் எஸ்லியின் மகன்.

எஸ்லி நங்காயின் மகன்

26 நங்காய் மாகாத்தின் மகன்.

மாகாத் மத்தத்தியாவின் மகன்.

மத்தத்தியா சேமேயின் மகன்.

சேமேய் யோசேப்பின் மகன்.

யோசேப்பு யூதாவின் மகன்.

27 யூதா யோவன்னாவின் மகன்.

யோவன்னா ரேசாவின் மகன்.

ரேசா செரூபாபேலின் மகன்.

செரூபாபேல் சலாத்தியேலின் மகன்.

சலாத்தியேல் நேரியின் மகன்.

28 நேரி மெல்கியின் மகன்.

மெல்கி அத்தியின் மகன்.

அத்தி கோசாமின் மகன்.

கோசாம் எல்மோதாமின் மகன்.

எல்மோதாம் ஏரின் மகன்.

29 ஏர் யோசேயின் மகன்.

யோசே எலியேசரின் மகன்.

எலியேசர் யோரீமின் மகன்.

யோரீம் மாத்தாத்தின் மகன்.

மாத்தாத் லேவியின் மகன்.

30 லேவி சிமியோனின் மகன்.

சிமியோன் யூதாவின் மகன்.

யூதா யோசேப்பின் மகன்.

யோசேப்பு யோனானின் மகன்.

யோனான் எலியாக்கீமின் மகன்.

31 எலியாக்கீம் மெலெயாவின் மகன்.

மெலெயா மயினானின் மகன்.

மயினான் மத்தாத்தாவின் மகன்.

மத்தாத்தா நாத்தானின் மகன்.

நாத்தான் தாவீதின் மகன்.

32 தாவீது ஈசாயின் மகன்.

ஈசாய் ஓபேதின் மகன்.

ஓபேத் போவாசின் மகன்.

போவாஸ் சல்மோனின் மகன்.

சல்மோன் நகசோனின் மகன்.

33 நகசோன் அம்மினதாபின் மகன்.

அம்மினதாப் ஆராமின் மகன்.

ஆராம் எஸ்ரோமின் மகன்.

எஸ்ரோம் பாரேசின் மகன்.

பாரேஸ் யூதாவின் மகன்.

34 யூதா யாக்கோபின் மகன்.

யாக்கோபு ஈசாக்கின் மகன்.

ஈசாக்கு ஆபிரகாமின் மகன்.

ஆபிரகாம் தேராவின் மகன்.

தேரா நாகோரின் மகன்.

35 நாகோர் சேரூக்கின் மகன்.

சேரூக் ரெகூவின் மகன்.

ரெகூ பேலேக்கின் மகன்.

பேலேக் ஏபேரின் மகன்.

ஏபேர் சாலாவின் மகன்.

36 சாலா காயினானின் மகன்.

காயினான் அர்பக்சாத்தின் மகன்.

அர்பக்சாத் சேமின் மகன்.

சேம் நோவாவின் மகன்.

நோவா லாமேக்கின் மகன்.

37 லாமேக் மெத்தூசலாவின் மகன்.

மெத்தூசலா ஏனோக்கின் மகன்.

ஏனோக் யாரேதின் மகன்.

யாரேத் மகலாலெயேலின் மகன்.

மகலாலெயேல் கேனானின் மகன்.

கேனான் ஏனோஸின் மகன்.

38 ஏனோஸ் சேத்தின் மகன்.

சேத் ஆதாமின் மகன்.

ஆதாம் தேவனின் மகன்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center

  Back

1 of 1

You'll get this book and many others when you join Bible Gateway Plus. Learn more

Viewing of
Cross references
Footnotes