Add parallel Print Page Options

யோவான் மூலமாக ஞானஸ்நானம் பெறும்பொருட்டு மக்கள் வந்தனர். யோவான் அவர்களை நோக்கி, “நீங்கள் விஷம் பொருந்திய பாம்புகளைப் போன்றவர்கள். வரவிருக்கும் தேவனுடைய கோபத்தினின்று ஓடிப் போக யார் உங்களுக்கு எச்சரிக்கை செய்தனர்? உங்கள் இதயங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளதைக் காட்டவல்ல செயல்களை நீங்கள் செய்தல் வேண்டும். ‘ஆபிரகாம் எங்கள் தந்தை’ என்று பெருமை பாராட்டிக் கூறாதீர்கள். தேவன் இந்தப் பாறைகளில் இருந்தும் ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உருவாக்கக்கூடும் என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன். மரங்களை வெட்டும்படிக்குக் கோடாரி வைக்கப்பட்டுள்ளது. நல்ல பழங்களைத் தராத மரங்கள் வெட்டப்பட்டு நெருப்பில் வீசப்படும்” என்றான்.

10 மக்கள் யோவானை நோக்கி, “நாங்கள் செய்ய வேண்டியது என்ன?” என்று கேட்டனர்.

11 அவர்களுக்கு யோவான், “உங்களிடம் இரண்டு மேலாடைகள் இருந்தால், ஒரு மேலாடைகூட இல்லாத மனிதனுக்கு ஒன்றைக் கொடுங்கள். உங்களிடம் உணவிருந்தால் அதையும் பகிர்ந்து கொள்ளுங்கள்” என்று பதிலுரைத்தான்.

12 வரி வசூலிப்போரும்கூட யோவானிடம் வந்தனர். அவர்கள் ஞானஸ்நானம் பெற விரும்பினர். அவர்கள் யோவானிடம், “போதகரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்கள்.

13 அவர்களிடம் யோவான், “எந்த அளவுக்கு வரி வசூலிக்கவேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறதோ அந்த அளவுக்கு வரி வாங்குவதன்றி அதிகமாக வசூலிக்காதீர்கள்” என்று கூறினான்.

14 வீரர்கள் யோவானை நோக்கி, “எங்களைப்பற்றி என்ன? நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டனர்.

அவர்களுக்கு யோவான், “உங்களுக்குப் பணம் தரும்பொருட்டு மக்களை ஒருபோதும் நிர்ப்பந்தப்படுத்தாதீர்கள். யாரைக்குறித்தும் பொய் சொல்லாதீர்கள். உங்களுக்குக் கிடைக்கும் சம்பளத்தில் மகிழ்ச்சியாக இருங்கள்” என்று கூறினான்.

Read full chapter