Añadir traducción en paralelo Imprimir Opciones de la página

இயேசுவின் வல்லமை(A)

14 ஊமையான ஒரு மனிதனிடமிருந்து ஒரு பிசாசை ஒருமுறை இயேசு துரத்திக்கொண்டிருந்தார். பிசாசு வெளிவந்தபோது, அந்த மனிதனால் பேசமுடிந்தது. மக்கள் வியப்படைந்தனர். 15 ஆனால் சிலர் “பெயல்செபூலின் (பிசாசின்) ஆற்றலை இயேசு பயன்படுத்தி, பிசாசுகளைத் துரத்திவிடுகிறார். அசுத்த ஆவிகளுக்குத் தலைவன் பெயல்செபூல்” என்றனர்.

16 பிறரும் இயேசுவைச் சோதிக்க விரும்பினர். வானத்திருலிருந்து ஓர் அடையாளத்தைக் காட்டும்படியாக இயேசுவைக் கேட்டனர். 17 அவர்கள் எண்ணிக்கொண்டிருந்த நினைவுகளை இயேசு அறிந்திருந்தார். எனவே இயேசு மக்களை நோக்கி, “தனக்குள் ஒன்றுக்கொன்று எதிர்த்துக்கொண்டிருக்கிற எந்த இராஜ்யமும் உடைந்து சிதறும். தனக்குள் சண்டை இடுகிற எந்தக் குடும்பமும் பிரிந்து போகும். 18 எனவே சாத்தான் தனக்குள் சண்டையிட்டால், அவனது இராஜ்யம் எப்படி நிலைபெறும்? இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால் அசுத்த ஆவிகளைத் துரத்துவதற்கு நான் பெயல்செபூலின் ஆற்றலைப் பயன்படுத்துவதாக நீங்கள் கூறுகிறீர்கள். 19 நான் அசுத்த ஆவிகளைத் துரத்துவதற்குப் பெயல்செபூலின் ஆற்றலைப் பயன்படுத்தினால், உங்களைச் சார்ந்தவர்கள் அசுத்த ஆவிகளை வெளியேற்ற எந்த ஆற்றலைப் பயன்படுத்துகிறார்கள்? எனவே, உங்களைச் சார்ந்தவர்களே நீங்கள் கூறுவது தவறு என்பதை நிரூபிக்கிறார்கள். 20 அசுத்த ஆவிகளைத் துரத்த நான் தேவனுடைய வல்லமையைப் பயன்படுத்துகிறேன். தேவனுடைய இராஜ்யம் உங்களிடம் வந்திருக்கிறது என்பதை இது காட்டுகிறது.

21 “பல ஆயுதங்கள் ஏந்திய ஒரு வலிய மனிதன் தன் சொந்த வீட்டைக் காவல் காக்கும்போது அவன் வீட்டில் உள்ள பொருட்கள் பாதுகாப்பாக இருக்கும். 22 அவனைக் காட்டிலும் வலிய மனிதன் ஒருவன் வந்து அவனைத் தோற்கடிக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். தனது வீட்டைக் காக்கும் பொருட்டு முதல் மனிதன் வைத்திருந்த ஆயுதங்களை வலிய மனிதன் எடுத்துக்கொள்வான். முதல் மனிதனின் பொருட்களைக்கொண்டே வலிய மனிதன் தான் செய்ய நினைப்பதைச் செய்வான்.

23 “ஒருவன் என்னோடு இருக்கவில்லை என்றால், அவன் எனக்கு எதிரானவன். என்னோடு வேலை செய்யாதவன் எனக்கு எதிராகச் செயல் புரிகின்றான்.

வெறுமையான மனிதன்(B)

24 “பிசாசுக்குரிய அசுத்த ஆவியானது ஒரு மனிதனைவிட்டு வெளியேறும்போது, அந்த ஆவியானது வனாந்தரத்திற்குச் சென்று ஓய்வெடுக்க ஓர் இடம் தேடும். ஆனால் அதற்கு எந்த இடமும் அகப்படுவதில்லை. எனவே ஆவியானது, ‘நான் விட்டு வந்த மனிதனிடம் திரும்பிச் செல்வேன்’ என்று கூறும். 25 ஆவியானது மீண்டும் அவனிடம் வரும்போது, தனது வீடு சுத்தமானதாகவும் அழகானதாகவும் இருப்பதைக் காணும். 26 அப்போது அந்த அசுத்த ஆவியானது வெளியேபோய் தன்னைக் காட்டிலும் அசுத்த குணம்கொண்ட மேலும் ஏழு ஆவிகளைக் கூடவே அழைத்து வரும். பின்பு எல்லா அசுத்த ஆவிகளும் அவனுள்ளே சென்று வசிக்கும். முன்னே இருந்ததைக் காட்டிலும் அம்மனிதனுக்கு மிகுந்த தொல்லை உண்டாகும்” என்றார்.

மகிழ்ச்சியுள்ள மனிதர்கள்

27 இயேசு இக்காரியங்களைக் கூறியபோது, மக்களிடையே இருந்த ஒரு பெண் பேச ஆரம்பித்தாள். அவள் இயேசுவை நோக்கி, “உங்களைப் பெற்றெடுத்து தன் மார்பில் பால் ஊட்டிய உங்கள் தாய் ஆசீர்வதிக்கப்பட்டவள்” என்றாள்.

28 ஆனால் இயேசு, “தேவனுடைய போதனைகளைக் கேட்டு அதற்குக் கீழ்ப்படிகிற மக்களே உண்மையில் ஆசீர்வதிக்கப்பட்ட மனிதர்கள்” என்றார்.

Read full chapter