Add parallel Print Page Options

கன்னி மரியாள்

26-27 எலிசபெத் கருவுற்ற ஆறாம் மாதத்தில் தேவன் காபிரியேல் என்னும் தூதனை கலிலேயாவிலுள்ள நாசரேத் என்னும் பட்டணத்தில் வாழ்ந்த ஒரு கன்னிப் பெண்ணிடம் அனுப்பினார். தாவீதின் குடும்பத்தைச் சேர்ந்த யோசேப்பு என்ற மனிதனை மணம் புரிவதற்கு அவள் நிச்சயிக்கப்பட்டிருந்தாள். அவள் பெயர் மரியாள். 28 தூதன் அவளிடம் வந்து, “கர்த்தர் உன்னோடிருக்கிறார். அவர் உன்னை ஆசீர்வதிக்க விரும்புகிறார்” என்றான்.

29 தூதன் கூறியவற்றைக் கேட்டு மரியாள் மிகவும் குழப்பம் அடைந்தாள். “இதன் பொருள் என்ன?” என்று மரியாள் அதிசயித்தாள்.

30 தூதன் அவளிடம், “பயப்படாதே மரியாளே. தேவன், உன்னிடம் பிரியமாயிருக்கிறார். 31 கவனி! நீ கருவுறுவாய். ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுப்பாய். அக்குழந்தைக்கு இயேசு என்று பெயரிடுவாயாக. 32 அவர் பெரியவராக இருப்பார். மகா உன்னதமான தேவனுடைய குமாரன் என்று மக்கள் அவரை அழைப்பர். அவரது முன்னோராகிய தாவீதின் அதிகாரத்தை கர்த்தராகிய தேவன் அவருக்குக் கொடுப்பார். 33 சதாகாலமும் யாக்கோபின் மக்கள்மீது இயேசு அரசாளுவார். இயேசுவின் ஆட்சி ஒருபோதும் முடிவுறுவதில்லை” என்றான்.

34 மரியாள் தூதனை நோக்கி, “இது எப்படி நடக்கும்? எனக்குத் திருமணம் ஆகவில்லையே!” என்றாள்.

35 தூதன் மரியாளிடம், “பரிசுத்த ஆவியானவர் உன்னிடம் வருவார். உன்னதமான தேவனின் ஆற்றல் உன்னை மூடிக்கொள்ளும். குழந்தை பரிசுத்தமுள்ளதாக இருக்கும். அவர் தேவனுடைய குமாரன் என்று அழைக்கப்படுவார். 36 உனது உறவினளாகிய எலிசபெத்தும் கருவுற்றிருக்கிறாள். அவள் மிகவும் வயதானவள். குழந்தை பெற முடியாதவள் என அவள் நினைக்கப்பட்டாள். ஆனால் ஒரு மகனைப் பெறப்போகிறாள். இது அவளுக்கு ஆறாவது மாதம். 37 தேவனால் எந்தக் காரியத்தையும் செய்ய முடியும்” என்றான்.

38 மரியாள், “நான் கர்த்தருக்குப் பணிவிடை செய்யும் பெண். நீங்கள் சொன்னபடியே எனக்கு நடக்கட்டும்” என்றாள். பின் தூதன் சென்றுவிட்டான்.

சகரியாவையும் எலிசபெத்தையும் மரியாள் சந்தித்தல்

39 மலைநாடான யூதேயாவில் உள்ள பட்டணத்துக்கு மரியாள் எழுந்து விரைந்து சென்றாள். 40 அவள் சகரியாவின் வீட்டுக்குள் நுழைந்து எலிசபெத்தை வாழ்த்தினாள். 41 மரியாளின் வாழ்த்துதலை எலிசபெத் கேட்டதும் இன்னும் பிறக்காமல் எலிசபெத்துக்குள் இருக்கும் குழந்தை துள்ளிக் குதித்தது.

42 எலிசபெத் உரத்த குரலில் “வேறெந்தப் பெண்ணைக் காட்டிலும் அதிகமாக தேவன் உன்னை ஆசீர்வதித்துள்ளார். உனக்குப் பிறக்கவிருக்கும் குழந்தையையும், தேவன் ஆசீர்வதித்திருக்கிறார். 43 கர்த்தரின் தாயாகிய நீ என்னிடம் வந்துள்ளாய். அத்தனை நல்ல காரியம் எனக்கு நடந்ததேன்? 44 உன் சத்தத்தை நான் கேட்டதும் எனக்குள் இருக்கும் குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. 45 உன்னிடம் கர்த்தர் கூறியதை நீ நம்பியதால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறாய். இது நடக்கக் கூடியதென நீ நம்பினாய்” என்று சொன்னாள்.

Read full chapter