A A A A A
Bible Book List

ரோமர் 16 Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

பவுலின் இறுதி வார்த்தைகள்

16 நம்முடைய சகோதரி பெபெயாளைக் கிறிஸ்துவுக்குள் பரிசுத்தவான்களுக்கு ஏற்றபடி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். கெங்கிரேயா ஊர் சபையில் அவள் விசேஷ ஊழியக்காரி. கர்த்தரில் அவளை ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். தேவனுடைய பிள்ளைகளின் வழியில் அவளையும் ஏற்றுக்கொள்க. உங்களிடமிருந்து அவளுக்கு உதவிகள் தேவையென்றால் செய்யுங்கள். அவள் எனக்குப் பலமுறை உதவி செய்திருக்கிறாள். அவள் மற்றவர்ளுக்கும் உதவியாக இருந்திருக்கிறாள்.

பிரிஸ்கில்லாவுக்கும்Ԕஆக்கில்லாவுக்கும் என் வாழ்த்துக்களைச் சொல்லுங்கள். இயேசு கிறிஸ்துவுக்குள் இவர்கள் இருவரும் என்னோடு பணியாற்றினர். எனது உயிரைக் காப்பாற்ற தங்கள் உயிரைப் பணயம் வைத்தனர். நான் அவர்களுக்கு நன்றிக் கடன்பட்டுள்ளேன். யூதரல்லாதவர்களின் அனைத்து சபைகளுக்கும் நன்றிக் கடன்பட்டுள்ளேன்.

அவர்களுடைய வீட்டிலே கூடும் சபையையும் வாழ்த்துங்கள்.

ஆசியாவிலே முதலில் கிறிஸ்துவைப் பின்பற்றியவனாகிய எப்பனெத் என்ற அந்த நண்பனையும் வாழ்த்துங்கள்.

மரியாளையும் வாழ்த்துங்கள். அவள் உங்களுக்காகப் பெரிதும் உழைத்தாள்.

அன்றோனீக்கையும் யூனியாவையும் வாழ்த்துங்கள். அவர்கள் எனது உறவினர்கள். என்னோடு சிறையில் இருந்தவர்கள். தேவனுடைய மிக முக்கியமான தொண்டர்களுள் எனக்கு முன்னரே கிறிஸ்துவை நம்பியவர்கள்.

அம்பிலியாவை வாழ்த்துங்கள். அவன் கர்த்தருக்குள் எனக்கு மிகவும் அன்பானவன். உர்பானை வாழ்த்துங்கள். அவன் என்னோடு கிறிஸ்துவுக்காகப் பணி செய்தவன்.

எனது அன்பான நண்பனாகிய ஸ்தாக்கியை வாழ்த்துங்கள். 10 அல்பெல்லேயை வாழ்த்துங்கள். அவனது உண்மையான கிறிஸ்தவ பக்தி சோதிக்கப்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது.

அரிஸ்தோபூலுவின் குடும்பத்திலிலுள்ள அனைவரையும் வாழ்த்துங்கள். 11 எரோதியோனை வாழ்த்துங்கள். அவன் எனது உறவினன்.

நர்கீசுவின் குடும்பத்திலுள்ள அனைவரையும் வாழ்த்துங்கள். அவர்கள் கிறிஸ்துவுக்குட்பட்டவர்கள். 12 திரிபேனாளையும், திரிபோசாளையும் வாழ்த்துங்கள். ஏனெனில் அவர்கள் கர்த்தருக்காகக் கடினப்பட்டு உழைத்துக்கொண்டிருக்கின்றனர்.

எனது அன்புமிக்க தோழியாகிய பெர்சியாளை வாழ்த்துங்கள். அவளும் கர்த்தருக்காகக் கஷ்டப்பட்டு உழைத்தாள்.

13 ரூபஸை வாழ்த்துங்கள். அவன் கர்த்தருக்குள் சிறந்த மனிதன். அவனது தாயையும் வாழ்த்துங்கள். அவள் எனக்கும் தாய்தான்.

14 அசிங்கிரீத்து, பிலெகோன், எர்மே, பத்திரொபா, எர்மா மற்றும் அவர்களோடு இருக்கிற சகோதரர்களையும் வாழ்த்துங்கள்.

15 பிலொலோகஸ், ஜூலியா, நேரெஸ், அவனது சகோதரி, மற்றும் ஒலிம்பாஸ் ஆகியோரையும் வாழ்த்துங்கள். அவர்களோடிருக்கிற விசுவாசிகள் அனைவரையும் வாழ்த்துங்கள்.

16 ஒருவரையொருவர் பார்க்கும்பொழுது பரிசுத்தமான முத்தத்தால் வாழ்த்துங்கள்.

கிறிஸ்துவின் சபையார் உங்களை வாழ்த்துகின்றனர்.

17 சகோதர சகோதரிகளே! பிரிவினைகளை உண்டாக்குகிற மக்களைப் பற்றி நீங்கள் மிகவும் எச்சரிக்கையாய் இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அடுத்தவர்களின் விசுவாசத்தை குலைப்பவர்களிடமும் எச்சரிக்கையாய் தூர இருங்கள். நீங்கள் கற்ற உண்மையான போதனைக்கு அவர்கள் எதிரானவர்கள். 18 அத்தகையவர்கள் இயேசு கிறிஸ்துவுக்கு சேவை செய்ய விரும்புவதில்லை. அவர்கள் தங்களைத் திருப்திப்படுத்திக்கொள்ளவே விரும்புகிறார்கள். அவர்கள் தங்கள் நாகரிகமான பேச்சுக்களாலும், இச்சகத்தாலும் நயவஞ்சகமாக சாதாரண அப்பாவி மக்களை தவறான வழியில் நடத்தி விடுகின்றனர். 19 உங்களது கீழ்ப்படிதல் அனைத்து விசுவாசிகளாலும் அறியப்பட்டுள்ளது. ஆகவே உங்களைப் பற்றி நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் நன்மையைப் பற்றி அறிந்துகொள்வதில் ஞானிகளாக இருக்க வேண்டும். தீமையைப் பற்றி அறிந்துகொள்வதில் அப்பாவிகளாய் இருக்கவேண்டும்.

20 சமாதானத்தைத் தருகிற தேவன் விரைவில் சாத்தானைத் தோற்கடித்து அவனை உங்கள் கால்களில் கீழே நசுக்கிப் போடுவார்.

நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களோடு இருப்பதாக. ஆமென்.

21 என்னோடு ஊழியம் செய்கிற தீமோத்தேயு உங்களுக்கு வாழ்த்துதல் கூறுகிறான். லூகியும், யாசோன், சொசிபத்தர் போன்ற எனது உறவினர்களும் உங்களை வாழ்த்துகிறார்கள்.

22 பவுல் சொல்லுகிற அக்காரியங்களை எழுதுகிற தெர்தியு ஆகிய நான் கர்த்தருக்குள் உங்களை வாழ்த்துகிறேன்.

23 என்னையும், எல்லா சபைகளையும் கண்காணித்து வரும் காயுவும் உங்களை வாழ்த்துகிறான். நகரத்துப் பொருளாளரான எரஸ்துவும் சகோதரனான குவர்த்தும் உங்களை வாழ்த்துகின்றனர். 24 [a]

25 தேவனுக்கு மகிமை உண்டாவதாக. அவரே உங்களது விசுவாசத்தைப் பலப்படுத்துகிறார். நான் கற்றுத்தரும் நற்செய்தியின் மூலம் தேவன் உங்களைப் பலப்படுத்துகிறார். தேவனால் வெளிப்படுத்தப்பட்ட இரகசியமான உண்மையே கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி. இது தொடக்க கால முதல் மறைக்கப்பட்டிருந்தது. 26 ஆனால் இப்போது அந்த இரகசியம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இது அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைப் பற்றி தீர்க்கதரிசிகளும் எழுதினர். இது தேவனுடைய கட்டளை. இது அனைவருக்கும் வெளிப்பட்டால்தான் அவர்கள் தேவனை நம்பி அவருக்குப் பணிவார்கள். தேவன் என்றென்றும் இருக்கிறார். 27 தாம் ஒருவரே ஞானம் உள்ளவராய் இருக்கிற தேவனுக்கு இயேசு கிறிஸ்துவின் மூலமாய் என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.

Footnotes:

  1. ரோமர் 16:24 சில கிரேக்க எழுத்துக்களில் “நம்முடைய கர்த்தராயிருக்கிற இயேசு கிறிஸ்துவினுடைய கிருபை உங்கள் எல்லோரோடும் இருக்கட்டும். ஆமென்” என்று எழுதப்பட்டுள்ளது.
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center

  Back

1 of 1

You'll get this book and many others when you join Bible Gateway Plus. Learn more

Viewing of
Cross references
Footnotes