Add parallel Print Page Options

அவளது குமாரர்கள் மோவாப் நாட்டிலுள்ள பெண்களை மணந்துகொண்டனர். ஒருவனின் மனைவி பெயர் ஓர்பாள், இன்னொருவனின் மனைவி பெயர் ரூத். அவர்கள் அங்கே 10 ஆண்டுகள் வாழ்ந்தனர். பின், மக்லோனும் கிலியோனும் கூட மரித்துவிட்டனர். அதன்பின் கணவனும், குமாரர்களும் இல்லாமல் நகோமி தனித்தவளானாள்.

நகோமி வீட்டிற்குத் திரும்பிப் போகுதல்

மலைநாடான மோவாப்பில் நகோமி வாழ்ந்துகொண்டிருக்கும்போது, கர்த்தர் யூதாவில் தன் ஜனங்களுக்கு உணவு கொடுத்தார் என்று அறிந்தாள். எனவே நகோமியும் மலைநாடான மோவாபை விட்டுத் தன் சொந்த நாட்டிற்குப் போக முடிவு செய்தாள். அவளது மருமகள்களும் அவளோடு புறப்பட்டனர். அவர்கள் தாம் வாழ்ந்த இடத்தை விட்டுவிட்டு யூதா நாட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.

அப்போது நகோமி தன் மருமகள்களிடம், “நீங்கள் இருவரும் உங்கள் தாய் வீட்டுக்கேத் திரும்பிச் செல்லவேண்டும். நீங்கள் என்னோடும், மரித்துப்போன எனது குமாரர்களோடும் மிக அன்பாக இருந்தீர்கள். எனவே கர்த்தரும் உங்களிடம் கருணை காட்டுமாறு வேண்டிக்கொள்வேன். உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு நல்ல கணவனும், வீடும் கிடைக்கவேண்டுமென்று நான் வேண்டுவேன்” என்றாள். நகோமி அவர்களை முத்தமிட்டபோது, அவர்கள் அழ ஆரம்பித்தனர்.

10 பிறகு அவர்கள், “நாங்கள் உம்மோடு வர விரும்புகிறோம். உம்முடைய குடும்பத்தில் சேரவே விரும்புகிறோம்” என்றனர்.

11 ஆனால் நகோமி, “வேண்டாம் குமாரத்திகளே, உங்கள் தாய் வீட்டுக்கே திரும்பிச் செல்லுங்கள். நீங்கள் என்னோடு ஏன் வரவேண்டும்? என்னால் உங்களுக்கு உதவமுடியாது. உங்களோடு கணவனாக வாழவேறு குமாரர்களும் என்னிடம் இல்லை. 12 உங்கள் வீட்டிற்குத் திரும்பிச் செல்லுங்கள்! ஒரு புதிய கணவனைப் பெறமுடியாத அளவிற்கு நானும் முதியவளாகிவிட்டேன். நான் மீண்டும் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று விரும்பினாலும், உங்களுக்கு உதவமுடியாது. இன்று இரவே நான் கர்ப்பமாகி இரண்டு ஆண் குழந்தைகளைப் பெற்றாலும் அது உங்களுக்கு உதவாது. 13 ஏனென்றால் அவர்கள் வளர்ந்து ஆளாகும்வரை நீங்கள் காத்திருக்கவேண்டும். நான் அவ்வளவு காலம் உங்களைக் காக்கவைக்கக் கூடாது. அது எனக்கு மிகவும் துக்கத்தைத் தரும்! எனக்காக கர்த்தர் செய்த பல காரியத்துக்காக நான் ஏற்கெனவே துக்கமாக இருக்கிறேன்!” என்றாள்.

14 எனவே, அந்தப் பெண்கள் மேலும் அழுதனர். பிறகு ஓர்பாள் நகோமிக்கு முத்தமிட்டு விட்டு விலகிப் போனாள். ஆனால் ரூத் அவளைக் கட்டி அணைத்துக்கொண்டு அவளோடு தங்கிவிட்டாள்.

Read full chapter