Add parallel Print Page Options

36 நீங்கள் என்னைப் பார்த்திருந்தும் என்மீது நம்பிக்கையில்லாமல் இருக்கிறீர்கள் என்று நான் உங்களுக்குச் சொன்னேன். 37 எனது பிதா என் மக்களை எனக்குத் தந்திருக்கிறார். அம்மக்களில் ஒவ்வொருவரும் என்னிடம் வருவார்கள். என்னிடம் வருகிற ஒவ்வொருவரையும் நான் ஏற்றுக்கொள்வேன். 38 நான் என்ன செய்ய வேண்டும் என்று தேவன் விரும்புகிறாரோ அதைச் செய்வதற்காக நான் பரலோகத்தில் இருந்து வந்திருக்கிறேன். நான் விரும்புவதைச் செய்வதற்கு வரவில்லை. 39 தேவன் கொடுத்த மக்களில் எவரையும் நான் இழக்கக்கூடாது. நான் இறுதி நாளில் அவர்களையெல்லாம் எழுப்புவேன். என்னை அனுப்பினவர் நான் செய்யவேண்டும் என்று விரும்புவதும் இதைத்தான். 40 குமாரனைப் பார்க்கிற ஒவ்வொருவரும் அவரில் நம்பிக்கை வைத்து நித்திய ஜீவனைப் பெறுகின்றனர். நான் அந்த மனிதர்களை இறுதி நாளில் எழுப்புவேன். இதுதான் எனது பிதாவின் விருப்பமும் ஆகும்” என்றார் இயேசு.

41 பிறகு யூதர்கள் இயேசுவைப்பற்றி முறு முறுக்கத் தொடங்கினர். ஏனென்றால் “நான் பரலோகத்திலிருந்து வந்த அப்பம்” என்று இயேசு சொன்னார். 42 அதற்கு யூதர்கள், “இவர் இயேசு. நாங்கள் இவரது தந்தையையும் தாயையும் அறிவோம். இயேசு யோசேப்பின் குமாரன். அவர் எப்படி நான் பரலோகத்திலிருந்து வந்தேன் என்று சொல்லலாம்?” என்று கேட்டனர்.

43 “ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டுவதை நிறுத்துங்கள். 44 என்னை அனுப்பியவர் அந்தப் பிதாதான். அவரே மக்களை என்னிடம் அழைத்து வருகிறவர். நான் இறுதி நாளில் அவர்களை எழுப்புவேன். என் பிதா என்னிடம் மக்களை அழைத்து வராவிட்டால், எவரும் என்னிடம் வர முடிவதில்லை. 45 இது தீர்க்கதரிசிகளின் மூலம் எழுதப்பட்டிருக்கிறது, ‘தேவன் எல்லா மக்களுக்கும் கற்றுத் தருவார்.’(A) மக்கள் அப்பிதாவைக் கவனிக்கிறார்கள். கற்றுக்கொள்கிறார்கள். பிறகு அவர்கள் என்னிடம் வருகிறார்கள். 46 எவரும் பிதாவைப் பார்த்திருப்பதாக நான் கருதவில்லை. தேவனிடம் இருந்து வந்தவர் மட்டுமே அவரைப் பார்த்திருக்கிறார்.

47 “நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஒருவன் நம்பிக்கை வைத்தால் அவன் நித்திய ஜீவனைப் பெறுவான். 48 நானே ஜீவனளிக்கும் அப்பம். 49 உங்கள் மூதாதையர்கள் தேவன் கொடுத்த மன்னாவை வனாந்தரத்தில் உண்டார்கள். ஆனால் அவர்கள் மற்றவர்களைப்போன்றே மாண்டுபோனார்கள். 50 நான் பரலோகத்தில் இருந்து வந்த அப்பம். ஒரு மனிதன் இதனை உண்பானேயானால் அவன் என்றென்றைக்கும் உயிர்வாழ்வான். 51 என்னுடைய சரீரம் தான் அந்த அப்பம். நான் என் சரீரத்தைத் தருவேன். உலகில் உள்ளவர்கள் வாழ்வைப் பெறுவார்கள்” என்று இயேசு கூறினார்.

52 பிறகு யூதர்கள் தங்களுக்குள் விவாதம் செய்துகொண்டனர். “எவ்வாறு இந்த மனிதன் தனது சரீரத்தை நாம் உண்ணும்படி தருவான்?” என்றனர் அவர்கள்.

53 “நான் உண்மையைக் கூறுகிறேன். நீங்கள் மனித குமாரனின் சரீரத்தை உண்ணவேண்டும். அவரது இரத்தத்தை அருந்த வேண்டும். இதனை நீங்கள் செய்யாவிட்டால், உங்களுக்கு உண்மையான வாழ்க்கை கிடைக்காது. 54 எனது சரீரத்தைப் புசித்து, இரத்தத்தை அருந்துகிற எவனும் நித்திய ஜீவனைப் பெறுவான். நான் அவனை இறுதி நாளில் எழுப்புவேன். 55 எனது சரீரமே உண்மையான உணவு. எனது இரத்தமே உண்மையான பானம். 56 ஒருவன் எனது சரீரத்தைப் புசித்து என் இரத்தத்தை அருந்துவானேயானால் அவன் என்னிலும் நான் அவனிலும் வாழ்வதாகும்.

57 “பிதா என்னை அனுப்பினார். பிதா வாழ்கிறார். அவரால் நானும் வாழ்கிறேன். ஆகையால் என்னை உண்ணுகிறவன் என்னால் உயிர் வாழ்கிறான். 58 நமது மூதாதையர்கள் வனாந்தரத்தில் புசித்த அப்பத்தைப்போல் அல்ல நான். அவர்கள் அந்த அப்பத்தை உண்டார்கள். ஆனால், மற்றவர்களைப்போன்று அவர்கள் இறந்துபோயினர். நானோ பரலோகத்திலிருந்து இறங்கி வந்த அப்பம். இதனை உண்ணுகிற எவனும் நித்திய ஜீவனைப் பெறுவான்” என்றார் இயேசு.

59 இவை எல்லாவற்றையும் இயேசு, கப்பர்நகூமிலுள்ள யூதர்களின் ஜெப ஆலயத்தில் போதனைசெய்யும்போது கூறினார்.

Read full chapter