Add parallel Print Page Options

நல்ல மேய்ப்பனும் ஆடுகளும்

10 “உண்மையாகவே நான் உங்களுக்குக் கூறுகிறேன், ஒருவன் ஆட்டுத்தொழுவத்திற்குள் வாசல் வழியாகவே நுழையவேண்டும். வேறு வழியாக நுழைந்தால், அவன் ஒரு திருடன். அவன் ஆடுகளைத் திருடவே முயற்சி செய்வான். ஆனால் மேய்ப்பன் வாசல் வழியாக நுழைகிறவன். அவனே மேய்ப்பன். வாசலைக் காக்கிற காவல்காரன் மேய்ப்பனுக்காகக் கதவைத் திறந்துவிடுவான். ஆடுகள் மேய்ப்பனின் குரலுக்கு செவி கொடுக்கும். மேய்ப்பன் தன் சொந்த ஆடுகளை அவற்றின் பெயரைச் சொல்லி அழைப்பான். அவன் அவற்றை வெளியே நடத்திக்கொண்டு போவான். மேய்ப்பன் தனது ஆடுகளையெல்லாம் வெளியே கொண்டுவந்த பின் அவற்றுக்கு முன்னால் நடந்து அவற்றை நடத்திக்கொண்டு போகிறான். ஆடுகள் அவனது குரல் குறிப்புகளை அடையாளம் கண்டபடியால், அவை அவன் பின்னே செல்கின்றன. ஆனால் ஆடுகள் தாம் அறியாதவன் பின்னால் செல்வதில்லை. அவனைவிட்டு அவை விலகி ஓடும். ஏனென்றால் அவற்றிற்கு அவனது குரல் புரியாது” என்று

இயேசு மக்களிடம் இந்த உவமையைச் சொன்னார். இந்த உவமையின் உட்பொருளை அந்த மக்களால் அறிந்துகொள்ள முடியவில்லை.

இயேசுவே நல்ல மேய்ப்பர்

எனவே இயேசு மேலும் சொன்னார், “நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன், ஆடுகளுக்கு நானே வாசலாக இருக்கிறேன். எனக்கு முன்னால் வந்தவர்கள் அனைவரும் கள்ளரும், கொள்ளைக்காரர்களுமாக இருந்தார்கள். ஆடுகள் அவர்களைக் கவனிக்கவில்லை. நானே வாசல். என் மூலமாக நுழைகிறவனே மீட்கப்படுவான். அவன் உள்ளேயும் வெளியேயும் போய் மேய்ச்சலைக் கண்டடைவான். 10 திருடன் திருடுவதற்காகவே வருகிறான். அவன் ஆடுகளைக் கொல்லவும் அழிக்கவுமே செய்வான். ஆனால் நானோ ஜீவனைக் கொடுக்க வந்துள்ளேன். அந்த ஜீவன் பூரணமும், நன்மையுமானது.

11 “நானே நல்ல மேய்ப்பன். நல்ல மேய்ப்பன் தனது ஆடுகளுக்காக ஜீவனைக் கொடுப்பான். 12 கூலிக்காக ஆடுகளைக் கவனிக்கிறவன் மேய்ப்பனைவிட வித்தியாசமானவன். கூலிக்காரனுக்கு ஆடுகள் சொந்தமானவை அல்ல. ஆகையால் ஓநாய் வருவதைக் கண்டால் கூலிக்காரன் ஆடுகளை விட்டு விட்டு ஓடிப் போவான். பிறகு ஓநாய்கள் ஆடுகளை கிழித்து கொன்று சிதறடிக்கும். 13 அந்த மனிதன் ஓடிவிடுகிறான். ஏனென்றால் அவன் கூலிக்காரன். அவனுக்கு ஆடுகளைப்பற்றிய அக்கறை இல்லை.

14-15 “ஆடுகளைப்பற்றி (மக்களைப்பற்றி) அக்கறை கொண்ட நல்ல மேய்ப்பன் நான். என் பிதா என்னை அறிந்திருப்பது போலவே நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன். நான் என் பிதாவை அறிந்திருப்பது போலவே என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. நான் என் ஆடுகளுக்காக என் ஜீவனைக் கொடுக்கிறேன். 16 எனக்கு வேறு ஆடுகளும் உள்ளன. அவை இந்த மந்தையில் இல்லை. நான் அவற்றையும் அழைத்து வர வேண்டும். அவை என் குரலைக் கவனிக்கும். வருங்காலத்தில் எல்லாம் ஒரே மந்தையாகவும் ஒரே மேய்ப்பனாகவும் இருக்கும்.

Read full chapter